- இசை & குரல் : AI SUNO -
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=vMKKhohyGt0
கல்லுண்டாய்ப் பயணங்கள்! - வ.ந.கிரிதரன் -
கல்லுண்டாய் வீதியில்
காலையும் மாலையும்
பயணிப்பேன்.சைக்கிளில்
களிப்பூட்டும் பயணங்கள்
என்
கல்லுண்டாய்ப் பயணங்கள்.
காற்று வீசும்.
கீழ் வானின் கதிர் உதிக்கும்.
குருவிகள் காலையை வரவேற்கும்,
வாழ்த்துப்பா இசைக்கும் பொழுது
நான் பயணத்தைத் தொடங்குவேன்.
நகர் நோக்கிய பயணம்
யாழ்ப்பாண
நகர் நோக்கிய பயணம்.
அராலி வடக்கிலிருந்து
அடியேன் பயணத்தைத் தொடங்குவேன்.
வழுக்கியாறு
வந்து கடலுடன் கலக்கும்
அராலிப் பாலத்தைக் கடப்பேன்.
அங்கு கடற் தொழிலாளர்
பணி செய்து கொண்டிருப்பர்.
பயணம் தொடரும்.
மேற்கில்
கல்லுண்டாய் உப்பளம்.
கிழக்கில்
கல்லுண்டாய் வைரவர்
கோவில்.
வெளியை ஊடறுத்து
விரைவேன்.
கருக்கிருளில் தெரியும்
காக்கைதீவுக் கடலில்
இரவு முழுவதும்
மீன்பிடித்த
கடற் தொழிலாளர்
பிடித்த மீன்களுடன்.
படகுகளில் வந்து கொண்டிருப்பர்.
விரிந்திருக்கும் வயல் வெளிகள்
விரிந்திருக்கும் நவாலி நோக்கி
பசுமையில் மூழ்கிக் கிடக்கும்
பசிய நெல் வயல்கள்.
வரலாற்றை எடுத்தியம்பும்
நவாலி மண் கும்பிகள்
தவமியற்றும் முனிவர்கள்
நகர் நோக்கி, யாழ்ப்பாண
நகர் நோக்கிக் கூலித் தொழிலாளர்
பயணித்துக்கொண்டிருப்பர். கூடவே
பயணித்துக் கொண்டிருப்பேன்
நான்.
அப்போது நான் மாணவன்.
யாழ் இந்து மாணவன்.
அதிகாலைகளில்
ஆச்சி வீடு செல்வேன்.
அங்கிருந்து பள்ளி செல்வேன்.
பயணம் மீண்டும் தொடங்கும்
பகலவன் அந்தியில் சாய்கையில்.
பகலவன் அந்தியில் சாய்கையில்.
பகலவன் அந்தியில் சாய்கையில்.
ஆம்.
அந்தியில் மீண்டும்
அராலி நோக்கிய என் பயணம்
ஆரம்பமாகும்.
ஆச்சி எண்ணெய் வாங்கிய
அன்பு மிகு எண்ணெய்க்கார ஐயா!
காக்கைதீவுக் கடலை ஒட்டிய
வெளியில்
மேய்வதற்காக கால் நடைகளைக்
மெதுவாகக் கூட்டி வருவார்
எண்ணெய்க்கார ஐயா.
கடலட்டையை சூளைகளில் அவிப்பர்
கடற் தொழிலாளர்
விரிந்திருக்கும் கல்லுண்யாய்
வெளியில் விரைந்து செல்கையில்
வானில் புள்ளினங்கள் சிறகசைக்கும்.
வானில் வண்ணக்கதிர்கள் கோலமிடும்.
இன்னும் சிறிது நேரத்தில்
இருள் சூழ்ந்து விடுமென்று எண்ணி
வேகத்தை அதிகரிப்பேன்.
விரைவாக வீடு செல்லுவேன்.
எண்ணங்கள் களிப்பில் தோய்ந்திருக்கும்
என் கல்லுண்டாய்ப் பயணங்கள்
எப்பொழுதும் எனக்கு உவப்பானவைதாம்.
ஆம்.
எப்பொழுதும் எனக்கு உவப்பானவைதாம்.
No comments:
Post a Comment