ஏ.வி.எம் தயாரிப்பான 'குழந்தையும் தெய்வமும்' சிறந்த தமிழ்த்திரைப்படத்துக்கான தேசிய விருதினைப் பெற்ற திரைப்படம். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பேபி பத்மினியின் இரட்டை வேட நடிப்பு. The Parent Trap என்னும் அமெரிக்கத்திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். ஜேர்மன் நாவலான Lisa and Lottie என்னும் நாவலின் திரை வடிவம்தான் ' The Parent Trap'. கிருஷ்ணன்-பஞ்சுவின் (பஞ்சு அருணாசலமென்று தவறாக எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டிய நண்பர் கணேஷ்வரன் வீரகத்திக்கு நன்றி) இயக்கத்தில் வெளியான திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியிருப்பவர் எழுத்தாளர் ஜாவர் சீதாராமன்.
டி.எம்.எஸ். பி.சுசீலா குரலில் , ஜெய்சங்கர் , ஜமுனா நடிப்பில் , எம்.எஸ்.வி இசையில் ஒலிக்கும் இப்பாடலுக்கான வரிகளை எழுதியிருப்பவர் கவிஞர் வாலி. கவிஞரின் சிறந்த தமிழ்த்திரைப்படப்பாடல்களில் ஒன்று.
ஜெய்சங்கரின் ஆரம்பக் காலத்துத்திரைப்படமென்பதால் ஜெய்சங்கரின் வசீகரிக்கும் தோற்றத்தை இத்திரைப்படத்தில் காணலாம். இளம் பெண்கள் ஜெய்சங்கர் போல் மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த காலம். ஜெய்சங்கரின் ஆரம்ப காலத்திரைப்படங்கள் பல குடும்பப்பாங்கான கதையம்சம் மிக்கவை. 'குழந்தையும், தெய்வமும்' அவற்றில் ஒன்று. 'பெண்ணே நீ வாழ்க', 'பஞ்சவர்ணக்கிளி' ஆகியவை ஏனையவற்றில் சில.
நம்மவர்களுக்குக் காதல் கடிதங்களை எழுதத்தூண்டிய பாடல்களில் ஒன்று 'அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்'. இன்னுமொன்று 'நான் அனுப்புவது கடிதம் அல்ல, உள்ளம்'
வவுனியா நியூ இந்திரா டாக்கீஸில் பார்த்த திரைப்படங்களில் ஒன்று 'குழந்தையும் தெய்வமும்'.
பாடலைக் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=Cztbvbk-tNM
No comments:
Post a Comment