Friday, July 5, 2024

கவிதை: கண்ணம்மாவுடனோர் உரையாடல் காலவெளிப்புள் பற்றி... - வ.ந.கிரிதரன் -



கண்ணம்மா!
காலவெளிப்புள்!
ஆம்! நீ ஒரு புள்தான் என்றேன்.
காலவெளிபுள்தான் என்றேன்.
அதற்கு நீ
'கொல்'லென்று நகைத்தாய்.
'பல்'லென்று முறுவலித்தாய்.
புள்ளென்றெனை அழைத்தாய்.
கள்ளா உனக்கென்ன துணிவென்றாய்.
கள்ளா என்றெனை அழைப்பதில்
கண்ணம்மா எனக்கும் சம்மதம்
என்றேன்.
ஏன் என்றாய்.
உள்ளங் கவர் கள்ளன் அதனால்
என்றேன்.
யார் உள்ளம் என்றாய்.
கண்ணம்மா,
உன் உள்ளம் என்றேன்.
மீண்டுமொரு
பல் தெரியக்
கொல்.  காலவெளி வானில்
சிறகடிக்கும்
காலவெளிப் புட்கள்!
நாம்
கண்ணம்மா.

நாம், வான், வரை,
வெள்ள நதி அனைத்துமே
புட்கள்தாம்.
காலவெளிப் புட்கள்
கண்ணா!

கண்ணும் காலவெளி.
காதும் காலவெளி.
காயமே காலவெளி.
கண்ணம்மா! இக்
காயமே காலவெளி.
காயமே காலவெளி.
காயமே காலவெளி.

கண்ணா?
உருவம் காலவெளி. சரிதான்.
உணர்வு?

கண்ணம்மா!
உன்னுடன் உரையாடல்
என்னில் எப்போதும்
இன்பமே.
வினாக்கள் மிகு
உரையாடல்களை,
நான் மிகவும் மதிக்கின்றேன்.

கண்ணா! போதும் உன்
பசப்பல்.
பகன்றிடு
பதிலை
என் கேள்விக்கு.

உன் கேள்விக்கு
என் பதில்
எதுவுமில கண்ணம்மா.
ஏன் எனில்
பரிமாணச் சிறைக்கைதிகள்
நாம் அதனால்.

ஆனால்... மேலே சொல் கண்ணா?

சக்தி = பொருள்.
உணர்வு = உருவம்.

கண்ணா! பதிலொன்றிருந்தும்
பதிலில்லை என்றாய். அது
பசப்பல் தானே. இல்லையா?

கண்ணம்மா!
இல்லையென்று நான் கூறின்
நீ
ஏற்கவா போகின்றாய்?
இல்லைதானே?

இவ்விதம் தொடரும் உரையாடல்கள்
கண்ணம்மாவுடன் என்றால்
இனிக்கத்தானே செய்யும்.

girinav@gmail.com

* ஓவியம் - பொன்னடா மூர்த்தி (Ponnada Mourty)


No comments:

'பதிவுகள்.காம்': 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'

எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்  கொண்டு , 2000ஆம் ஆண்டிலிருந்து , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத...

பிரபலமான பதிவுகள்