Thursday, July 11, 2024

இருப்பு பற்றிய என் ஆரம்ப காலக் கவிதையொன்று!


இங்குள்ள தோற்றத்தில் நானிருந்த வேளையிலே , 'ஆத்மாவின் கேள்வியொன்று என்னும் தலைப்பில், எண்பதுகளில் எழுதிய கவிதை வரிகள் இவை.. 16.11.1980இல்  வெளியான வீரகேசரி வாரவெளியீட்டின் உரைவீச்சுப் பகுதியில் பிரசுரமான கவிதை. 
 
 அக்காலகட்டத்தில் வெகுசனப் பத்திரிகைகள் , சஞ்சிகைகள் கவிதையின் புது வடிவமான புதுக்கவிதையின் பக்கம் தம் பார்வையைச் செலுத்தியிருந்தன. வீரகேசரி தனது வாரவெளியீட்டில் 'உரைவீச்சு' ,சிந்தாமணி 'மணிக்கவிதை' , தினகரன் 'கவிதைச் சோலை' என்னும் பெயர்களில் இவ்வகைக் கவிதைகளை வெளியிட்டு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தன.
அப்பருவத்து என் உணர்வுகளை வெளிப்படுத்த உதவிய வடிகால்கள் இவை. இக்கவிதை அப்பருவத்திலேயே என் மனத்தில் இருப்பு பற்றிய தேடல் இருந்ததை வெளிப்படுத்தும். 
 
'வெறுமைகள் சிரிக்கும்
என்னுடலும் ஓர்
அண்டம் தானோ?
அப்படியாயின் நான்
நான் மட்டும்தானா?
நான் தான் பிரபஞ்சமோ?
பிரபஞ்சம் தான் நானோ?' 
 
என்று கவிதை முடியும். 'குவாண்டம்' இயற்பியலூடு இருப்பு பற்றிய என் தேடல் இருந்ததை இக்கவிதை வரிகள் புலப்படுத்தும். 
 
கவிதையின் முழு வடிவம் கீழே. கவிதை வெளியான பக்கத்தை எதிர்வினையாகத் தந்துள்ளேண்
 
ஆத்மாவின் கேள்வியொன்று - வ.ந.கிரிதரன் -
 
நெஞ்சைப்பாலைகளில்
சிந்தனைப்புயல்கள் வீசிப்
புழுதி பறக்கையிலே
அடிவயிற்றைக் கீறியொரு
திகில் ஊடுருவிச் செல்லும்
ஆத்துமாவின் கேள்வியொன்று
சிரித்து நிற்கும்.
"நானென்றால் நான் யார்?"
நானென்றால் இவ்வுடலோ?
நானென்றாலுடலாயின்
புழுப்பிடித்து நாறுகையில்
இந்த நானெங்கே?
நானென்றால் உள்மனமோ?
அன்றி, அம்மனத்தே
விரவி நிற்கும்
அவ்வுணர்வோ?
நானென்றால் உணர்வாயின்
நடையிழந்து , மொழியிழந்து
நிலை குலைந்து போகையிலே - இந்த
நானெங்கே?
காணுங் கனவெல்லாம்
கனன்றெரியும் சினமெல்லாம்
மெய்சிலிர்க்கும்
மயக்கமெல்லாம்,
உணர்வெல்லாம்,
உடலெல்லாம்,
'நான்' தானோ?
வெறுமைகள் சிரிக்கும்
என்னுடலும் ஓர்
அண்டம் தானோ?
அப்படியாயின் நான்
நான் மட்டும்தானா?
நான் தான் பிரபஞ்சமோ?
பிரபஞ்சம் தான் நானோ?
 
[குறிப்பு: இவ்வுடல் வெற்றிடத்துடன் கூடிய அணுக்களாலானது. எனவேதான் வெறுமைகள் சிரிக்கும் என்னுடல் என்று கூறினேன்.}
 
கவிதை வெளியான வீரகேசரிப் பக்கம் (16.11.1980 ) ;
 

 

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்