இவ்விதமான எழுத்துகள் பற்றிய சிந்தனை மிக்க எனக்கு அக்காலகட்டத்தில் வீரகேசரி, சிந்தாமணி, தினகரன் போன்றவை புதுக்கவிதை முயற்சிகளுக்கு வழங்கிய களங்கள் முக்கியமானவை; உற்சாகத்தையூட்டின. சிந்தாமணியைப் பொறுத்தவரையில் குறைந்த வரிகளைக்கொண்ட கவிதைகளுக்குரிய களமாக அது வழங்கிய மணிக்கவிதை என்னும் பகுதி விளங்கியது. வீரகேசரி தனது உரைவீச்சு என்னும் கவிதைப்பகுதியில் வரிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்காமல் ஊக்குவித்தது. அக்காலகட்டத்தில் சிறிது காலம் வெளியாகிய ஈழமணி பத்திரிகையும் சிந்தாமணி போல் குறுகிய வரிகளைக்கொண்ட கவிதைகளுக்குக் களம் அமைத்துத்தந்தாக நினைவு. தினகரனும் தனது கவிதைச்சோலைப் (ஏ.எச். சித்தீக் காரியப்பர் நடத்திவந்தார்) பகுதியில் கவிதைகளுக்கு வரிக்கட்டுப்பாடுகள் அதிகம் விளைவிக்காமல் ஊக்குவித்ததென்பேன். நான் குறிப்பிடுவது 78 - 81 காலகட்டமாகும். இப்பத்திரிகைகள் அனைத்தும் தமது வார வெளியீடுகளிலேயே இக்கவிதைப் பகுதிகளை வெளியிட்டு வந்தன.
உண்மையில் சிறுவர் பகுதிகள் எவ்விதம் சிறுவர்களை எழுத்துலகில் ஊக்குவித்தனவோ அவ்விதமே இக்கவிதைப்பகுதிகளும் கவிதை எழுத முனைபவர்களுக்குரிய ஆரம்பக் களங்களாகத் திகழ்ந்தன. எனவே அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இப்பொழுது நான் அக்காலகட்டத்தில் வெளியான என் கவிதைகளில் என்னிடமுள்ள சிலவற்றை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகின்றேன்.
சிரித்திரன் சஞ்சிகையில் வெளியான ஒரு சிறு கவிதை இன்னும் என்னிடமுள்ளது. அதன் பெயர் 'மை'யல். புதுமைப்பெண் பற்றிச் சிரித்திரன் நடாத்திய குறுங்கவிதைப்போட்டியில் தெரிவு செய்யப்பட்டுப் பிரசுரமான கவிதை.
இவ்விதமாக எனது கவிதை முயற்சிகள் இருக்கையில் நான் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் படிப்பைத்தொடங்கியிருந்தேன். அதிக அளவில் எனது கவிதைகளை 80/81 காலகட்டத்தில் எழுதியிருக்கின்றேன்.
1. 'மை'யல்
கண் கறுக்க ஒரு மை;
கூந்தல் நரை தடுக்க
ஒரு மை;
உதட்டுச் சிவப்பை
உலகிற் கறிவிக்க
ஒரு மை;
கை நகங்களுக்குக்கும்
மை என்று
மையிட்டுச் செல்லும்
இவளைப் புது'மை'ப்
பெண்ணென அழைக்கலாமோ
* இக்கவிதையை எழுதியபோது நான் யாழ் இந்துக்கல்லூரி மாணவன். எனது சலனங்கள் சிறுகதை வெளிவந்த காலகட்டத்திறுகுச் சிறிது முன் அல்லது பின்பாக வெளிவந்திருக்கலாம். மேலும் சில ஈழநாடு மாணவர் மலர் பகுதியில் வெளியான கவிதைகள்:
2. காலை மலர்ந்திற்று!
காலை மலர்ந்திற்று பாரீர்.
காகங்கள் - பா
மாலை புனைந்திடவே காலை
மலர்ந்திற்று பாரீர்.
கிழக்கினின்றுங் கதிரவன்
கிளம்பி ஒளி பரப்பிட,
வழக்கம்போல் தாமரையும் இதழ்
விரித்தே வரவேற்றிட,
சுந்தரப் பண்ணிசைத்திட,
காலையெனும் அரசி மெல்ல
கனிவுடனே நடந்து வந்தாள்.
3, மழை
'சோ'சோ'வென்று மழையோ
சோனாமாரியாகப் பெய்கிறதே!
'சூய்ங்'கென்றே காற்றும்
சுழன்று சுழன்று வீசுடுதே!
'பளீ'ரென்று மின்னல் வெட்டிக்
கண்ணைப் பறித்து மறைந்தோடிடுதே!
'பளீரி'ட்ட மின்னலைத்தொடர்ந்து
பேரிடியும் படபடத்துருண்டிடுதே!
ஆறு, குளங்கள் பொங்கிப்பெருக
அசுர மழையும் பெய்திடுதே!
வீறு கொண்ட அசுரன் போல்
வான் மழையும் பெய்திடுதே!
4. குயிலே!
'கூ' கூ'வென்றே கூவிடும் மாங்
குயிலே! உன்
கூவலில் தொனிப்பது
கவலையா? இன்பமா?
கருங்குயிலே! உனதம்மா
கல்லூரி செல்லாது நீ அடம் பிடிக்க
பிரம்பு கொண்டு அடித்தினாலோ
பெருங் குரலில் அழுகின்றாய்?
'கல்வி'யை இளமையிற் கல்
என்று பெரியோர்
கூறியதைக்
கவனித்திருப்பாயென்றால்
பல்லவியிழுத்து இப்படி நீ
படிப்பை இகழ்ந்து புலம்புவாயோ?
சிந்தாமணிப்பத்திரிகையின் வாரவெளியீட்டில் மணிக்கவிதைகள் பகுதியில் வெளியான மணிக்கவிதைகள் சில:
5. தண்டனை
கடந்தகால வயல்களில்
நான் விதைத்த
குற்ற விதைகள் வளர்ந்து
கொடிவிட்டு,
வேதனைக் கனிகளைத்
தந்தெனை வாட்டுகின்றன.
போதைக் கடல்களில்
மூழ்கி,
நானெடுத்த தவறு
முத்துகள், இன்றைய
என்
வாழ்க்கைச் சந்தையிலே
சந்தி சிரிக்கின்றன.
15.6.80
6. பொங்கல்!
வறுமைக் குடிசைகளில்
வதங்கும் ஐந்துகள்
நாங்கள்.
பொங்கற் புதுநாளில்
நெஞ்சகப் பானைகளில்
எண்ணங்களைப்
பொங்கலாக்கி
பகலவனுக்கு
எழிலாகப் படைத்தோமே!
20.1.80
7. தெருவிளக்கு
இரவு வேளையில்
வானத்து வீதிகளில்
இருளகற்ற இறைவன்
ஏற்றிய
தெருவிளக்கு!
30.12.79
8. நவீன ஆபிரகாம் லிங்கன்.
'பவர் கட்' வந்தபோதும்
பாடங்கள் படித்திடப்
பின்வாங்கி நிற்பவர்கள்
நாங்களல்ல.
மெழுகுவர்த்திகளின் வெளிச்சங்களில்
நாங்கள் படித்திடுவோம்.
நவீன ஆபிரகாம் லிங்கன்கள்
நாங்களே!
22.6.80
9. முட்கள்
முட்களின் நடுவே
வாழும்,
ரோஜாக் கன்னியர்கள்
வடித்திடும்'
கண்ணீர்த் துளிகள்
கண்டும்
வெறிகொண்ட
வண்டுகள் இரங்குவதில்லை.
காமமுட்களால்
குற்றிவிட்டே செல்கின்றன.
31.8.80
10. ஏழைகள்!
நாங்கள் தனி நட்சத்திரங்கள்.
எங்களுக்காக
உருகிடக், கண்ணீர் உகுத்திட,
எவருமற்ற நாங்கள்
தனி நட்சத்திரங்களே!
வானக்கூரையின் கீழ்
வாழுமெங்கள்
வாழ்க்கைப்பாலைகளில்
பசுமைகள் சிரிப்பதில்லை.
சோகங்கள் படர்ந்த இதயத்தே
சஞ்சலங்கள் தீர்வதில்லை.
தனிமைகளைத் தவங்களாக்கி
வாழுமெங்கள்
வாழ்விலோ இனிமையில்லை.
17.8.80
11. சிரஞ்சீவி!
ஒருநாள் எந்தன்
உடலும் உணர்வற்று
ஓய்ந்தடங்கி விடும்.
நெஞ்சப் பூங்காவின்
நினைவு மலர்கள்
வாடி வதங்கி விடும்.
கனவுப்பறவைகள்
சிறகொடிந்து வீழ்ந்திடும்.
துடிப்புள்ள செவ்விதழ்கள்
என்பீரே! அவற்றின்
துடிப்படங்கி விடுமே.
இருந்துமென்
இதயக் கோவிலில் நீர்
ஏற்றி வைத்த காதல் தீபம்
என்றென்றும்
ஒளிவீசி நிற்கும்.
19.4.81
வீரகேசரியின் உரைவீச்சுக் கவிதைப்பகுதியில் (17.2.80) வெளியான கவிதைகள் சில:
12. பயணம் தொடரும்!
நாளையென்ற
வசந்தத்தை
நாடி எங்கள் பயணம்
வாழ்க்கைப்பாலையினூடு
தொடர்கிறது.
துன்பப் புயற்காற்றுகளால்
எங்கள் தேகங்கள்
சீர்குலைந்து
துவண்டுவிட்டபோதும்
உறுதி குலையவில்லை.
கானல் நீர்களைக் கண்டு
கண்டு எங்கள் கண்கள்
பூத்து விட்ட போதும்
கண் 'பாவை'யின் ஒளி
பூத்து விடவில்லை.
நம்பிக்கைக் கோல்பற்றி
எண்ண ஒட்டகங்கள் மேல்
எங்கள் பயணங்கள்
இனியும்
தொடரும் அந்த
வசந்தத்தை நாடி.
13. தாஜ்மஹால்
மும்தாஜின் சமாதி
மட்டுமல்ல இது;
முதுகொடிந்து
மாடாகக்
கண்ணீர்ப்பயிர்
விதைத்து
கனவு மலர் கொய்து
பல ஆண்டுகளாய்ப்
பாடுபட்டு இதனைப்
படைத்திட்ட
அடிமைகள் எங்களின்
சமாதியும் கூடத்தான்.
14. பெண்கள்
சமுதாயச்
சேற்றுக்குழிகளிற்குள்
செவ்விதழ் விரித்துத்
தேன் சுரக்கும்
செந்தாமரை
மலர்கள்.
ஆடவரிதயத்தை
ஆற்றங்கரை
மணல்களாக்கிக்
காதலெனும்
மணல் வீடுகள் கட்டி
மகிழ்ந்திடும்
மழலைகள்.
17.2.80
சிந்தாமணி (அல்லது ஈழமணி) பத்திரிகையில் வெளியான மணிக்கவிதைகள்.
15. பயணங்கள்
காலப் பெருங்கடலின்
கணப் பொழுதின்
ஒரு துளியாய்
இந்த ஞாலத்தில்
நாள் தோறும்
நடைபெறும் பயணங்கள்
என்றும் தொடர்வதில்லை.
எங்கோ முடிகின்றன.
25.5.80
16. பயணத்தின் எல்லை
காலப் பெருங்கடலில்
மிதக்கும்'
வாழ்க்கைப்படகுகள்
ஒரு நாள்
காலக்கடலுள்
மூழ்கிவிடும்.
எல்லையற்ற
இக்கடலை
வெற்றிகண்டவர்
யாரோ?
13.1.80
வீரகேசரியின் உரைவீச்சுக் கவிதைப்பகுதியில் (1.6.80) வெளியான கவிதைகள் சில:
17. எதிர்பார்ப்பு
இருண்டு கொண்டிருக்கிறது.
இன்னும் சிறிது நேரத்தில்
இவ்வுலகம்
இருளால் நிறைந்து விடும்.
கூகைகளும்
கோட்டான்களும்
கொஞ்சிக் குலவத்தொடங்கி விடும்.
பனி முட்களால்
இருட்பன்று குத்தத்
தொடங்கிவிடும்.
நிலவயலைக்
கொத்திக் கிளறிவிட்டு
வயற்காரக் கதிரவன்\
வந்தவுடன்
இந்தப் பன்றியும்
ஓடி ஒளிந்துவிடும்.
ஆனாலென்
அகவுலகை மூடியிருக்கும்
அந்த மயக்க இருள்
என்றுதான் தொலையுமோ?
அவ்வுலகை ஆட்சி செய்யும்
கோபதாக் கூகைகளும்
கோட்டான்களும்
என்றுதான் அழியுமோ?
கும்மிருளில்
நீக்கியெழும்
குளிர்நிலவொன்றை நாடிச்
செல்லும் வழி காட்டிடத்
துருவ நட்சத்திரமொன்றை
நோக்கி நானிங்கு
காத்திருக்கின்றேன்.
வீரகேசரியின் உரைவீச்சுக் கவிதைப்பகுதியில் (16.3.80) வெளியான கவிதைகள் சில:
18, ஏழைகள்
பாலைகளில்
விதைப்பதனால்
பயிரொன்றும்
வளர்வதில்லை;
அவை
சோலைகள்
ஆவதில்லை.
எங்கள் வாழ்க்கைப்
பாலைகளில்
விதைப்பவரோ
யாருமில்லை. கதிர்
அறுப்பவர்தான்
யாருண்டோ?
நாங்கள்
மூடுபனி
பெய்யுமிரவுகளில்
மல்லாந்து
கிடப்பவர்கள்.
எங்கள் நாசிகள் விடும்
பெருமூச்சுகள்
பல கதைகளை
நவின்றிடக் கூடும்.
எம்
இதயத்து வானங்களிலே
வீசிடும்
துன்பக் காற்றுகளின்
குளிர்மையை
அவை
உணர்த்திடக் கூடும்.
வயிற்றிற்காய்
வதங்குமெம்மை
வீதிகளில் வாடிட
வைத்தவன்
மஞ்சத்தில் துயில்பவர்
மடிகளிலேன்
மாணிக்கங்களை
அள்ளி வைத்தனனோ?
வர்க்கங்கள் மாறியதனால்
சொர்க்கங்கள்
இழந்தவர்கள்
நாங்கள்.
19. காடு
ஒன்றுபட்டாலுண்டு
வாழ்வென்ற
தத்துவத்தை
ஒழுகி வாழ்ந்திடும்
ஓங்கிய விருட்சங்களின்
ஒன்றிய சமூகம்.
இயற்கையன்னை
மிருகபட்சிக் குழந்தைகளை
ஈன்றெடுத்திட்ட
மடி.
20,. விலைமகள்
காதலித்த கதிர்க்
கணவனவன்
கைவிட்டுப் போனதனால்
வெறிகொண்ட
வண்டுகளுக்குத்
தன்னுடலை
விலையாக்கும்
தாமரையும் ஒரு
விலைமகளே.
வீரகேசரியின் உரைவீச்சுக் கவிதைப்பகுதியில் (16.11.80) வெளியான கவிதை.
21. ஆத்மாவின் கேள்வியொன்று
நெஞ்சைப்பாலைகளில்
சிந்தனைப்புயல்கள் வீசிப்
புழுதி பறக்கையிலே
அடிவயிற்றைக் கீறியொரு
திகில் ஊடுருவிச் செல்லும்
ஆத்துமாவின் கேள்வியொன்று
சிரித்து நிற்கும்.
"நானென்றால் நான் யார்?"
நானென்றால் இவ்வுடலோ?
நானென்றாலுடலாயின்
புழுப்பிடித்து நாறுகையில்
இந்த நானெங்கே?
நானென்றால் உள்மனமோ?
அன்றி, அம்மனத்தே
விரவி நிற்கும்
அவ்வுணர்வோ?
நானென்றால் உணர்வாயின்
நடையிழந்து , மொழியிழந்து
நிலை குலைந்து போகையிலே - இந்த
நானெங்கே?
காணுங் கனவெல்லாம்
கனன்றெரியும் சினமெல்லாம்
மெய்சிலிர்க்கும்
மயக்கமெல்லாம்,
உணர்வெல்லாம்,
உடலெல்லாம்,
'நான்' தானோ?
வெறுமைகள் சிரிக்கும்
என்னுடலும் ஓர்
அண்டம் தானோ?
அப்படியாயின் நான்
நான் மட்டும்தானா?
நான் தான் பிரபஞ்சமோ?
பிரபஞ்சம் தான் நானோ?
[குறிப்பு: இவ்வுடல் வெற்றிடத்துடன் கூடிய அணுக்களாலானது. எனவேதான் வெறுமைகள் சிரிக்கும் என்னுடல் என்று கூறினேன்.}
22. மும்மூர்த்திகள்
பரிசோதனைக் குழாய்களில்
புதுப் புதுச் சோதனைகள்
பல செய்து பாப்பாக்களைப்
பிரசவித்த நாங்கள் தாம்
கூடவே
'நியூட்ரன்' குண்டுகளையும்
ஆக்கிச் சாதனை
புரிந்தவர்கள்.
படைத்தல்,
காத்தல்,
அழித்தல்
புரியும் மும்மூர்த்திகள்
நம்மில் அடக்கம்.
23. யுகமாற்றம்
'அன்ரோமீடாக்க'ள்
திகழும்
அண்டம் முழுவதையும்
சுற்றி வந்தே
அன்பேயுனை
மணப்பேனென்று
ஒளியின் வேகத்தில்
ஓயாது சிற்றியலைந்து
மீண்டபோது ஏழை
அவளிருந்த மண்ணிலோ
புட்கள் முளைத்து யுகங்கள்
பலவந்து போயிருந்தன.
தினகரன் கவிதைச் சோலையில் வெளியான மூன்று கவிதைகள். இப்பகுதியை நடத்தியவர் எழுத்தாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர். இப்பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஒரு கவிஞர் அறிமுகப்படுத்தப்படுவார். என்னையும் என் அழிவு கவிதையுடன் அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.
24. எதிர்பார்ப்பு
என் நெஞ்சத்துலைகளில்
கொதித்திடும்
சிந்தனை அணுக்கருக்கள்
ஒரு நாள் ஒன்று திரண்டு
ஆக்க அணுகுண்டுகளாக
வெடித்தெழும்
அவ்வேளை - சீறியெழும்
செயற் கதிர் வீச்சுகள்
முன்னால் சமுதாயத்தின்
பொய்மைக்கரங்கள்
பொசுங்கிக் கருகும்
எழும் அனற்காற்றில்
ஏற்றத்தாழ்வரக்கர்
நிலைகுலைந்து போவர்
தோன்றிடும் ஆற்றலில்
எழுந்து நிற்கும் ஏற்றமொன்றில்
இவ்வுலகம் பொங்கிச் சிரிக்கும்.
10.8.80
25. சீடர்கள்
நாங்கள் கவிகள்
புல்லின் நுனிகளில்
பொலிந்திடும் எழிலினில்
மெல்லிய முருங்கைகளில்
தொங்கிடும்
தூக்கணாங் குருவிக் கூடுகளின்
இனிமையான அழகுகளில்
மெய்ம்மறந்திடும் எங்கள்
நெஞ்சங்கள்;
சோகங்கள் கண்டு நகருகையில்
அமைதி அடைவதில்லை.
வாழ்க்கைக் காடுகளில்
வழிமாறித் துடித்திடும்
மனித ஜீவன்களுக்கு
வழிகாட்டுதற்காய், கவி
வடித்திடும் வழிகாட்டிகள்
நாங்களே!
அவலங்கள் கண்டு
சிந்தைகள் கனன்று
துடிக்கையிலே
புயலாகச் சீறியெழும்
நாங்கள் மிகவும்
அமைதியானவர்கள்
இயற்கையாசானின்
இரகசியங்களை அறிந்திட்ட
சீடர்களே நாம்.
1.9.80
26. அழிவு!
கொப்புகள் தாவித் தோப்புக் கரணங்கள்
சில போட்டுச்
செல்லுமிந்த
அணிலுமோர் நாள் இங்கு
அழுகி, வீழ்ந்துபோம்.
அதன்மேல் முளைக்கும் புல்மேல்
மீண்டுமொரு
அணில் வந்து விளையாடி செத்து
அழுகி அழிந்துபோம்.
இங்கே விரிந்து கிடக்கும்
இந்த மண் மேல்
அந்த நாளில் எத்தனை அழகிகள்
சிந்து பாடி, மெல்ல நடை பயின்றிருப்பர்.
எத்தனை இளந் தம்பதியர்
சித்தம் மறந்து திளைத்திருப்பர்.
கற்பனை கொடி கட்டிப் பறந்த
சிற்பிகளெத்தனைபேர் செத்திருப்பர்.
செத்தொழிந்தவரெல்லாம்
செல்வது தானெங்கே?
நிர்ச்சலனமற்று அங்கே
நீண்டு கிடக்கும் ஆகாயத்து வெளிகளின்
ஆழங்களொரு பதில் சொல்லக் கூடுமோ?
* இக்கவிதை மொறட்டுவைப்பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடான நுட்பம் (79/80) சஞ்சிகையிலும் வெளியானது.
No comments:
Post a Comment