வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவில்
படுக்கையில் புரண்டபடியும்,
சுவர்ப் பல்லிகளின் அசைவுகளைப்
பார்த்தபடியும், சிந்தித்தபடியும்,
நானிருக்கின்றேன்.
வெளிச்சம் நாடி வந்தமர்ந்து
இரையாகும் பூச்சிகளைப்
பார்க்கும்போதெழும் பல்வகை
சிந்தனைகளில் மூழ்கிக்கிடக்கின்றேன்.
நோக்கலில் இரக்கம்!
பல்லிகள்தம் பார்வையில்
நான் பார்க்கவில்லை.
இதனை நான் உணர்ந்துதானிருக்கின்றேன்.
உண்டு முடித்த ஏப்பம் மிக
அவை மீண்டும் அடுத்த இரைக்காய்த்
தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்கின்றன.
அவதானித்துக்கொண்டுதானிருக்கின்றேன்.
பல்லிகளை அவதானித்தல் ஒருகாலத்தில்
ஆம்! படுக்கையில் படுத்திருந்தபடிதான்,
பல்லிகளை அவதானித்தல் ஒரு காலத்தில்
என் பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது.
நன்கு கவனிக்கவும் பொழுதுபோக்கு என்னும்
சொற்பதத்தை.
இன்று என் அவதானிப்பு
பொழுதுபோக்குக்கு உரியதல்ல.
இருப்புக்கான தப்பிப்பிழைத்தல் பற்றியது.
இருப்பென்னும் படைப்புத்திறனில்
பொதிந்துள்ள தவறு பற்றியது.
இவ்விதமான தருணங்களில்
இருப்பில் ஏன் துயரங்கள் கவிந்துள்ளன
என்பது புரிவது போல் தெரிந்தாலும்
உண்மையில் புரிவதில்லை.
இடையில் கோடிழுக்கும் மின்னலை
சன்னலூடு நோக்குகின்றேன்.
இடியெனத் தொடரும் பேரோசை
கேட்டு நான் படுத்திருக்கின்றேன்.
மாகவிஞர் பலரைப் பாதித்த இயற்கை நிகழ்வு!
அவர்கள்தம் வரிகளில் இளகியிருந்திருக்கின்றேன்.
அவற்றையும் கூடவே எண்ணிக்கொள்கின்றேன்.
வயற்புறத்து மண்டூகங்களின் வாய்ப்பாட்டு
தொடங்கி விட்டது.
விடிய விடிய நடக்கும் இசைக்கச்சேரி.
இந்த மழை பொழியும் நள்ளிரவில்
நான்
துஞ்சாதிருக்கின்றேன்.
நெஞ்சார மழை பற்றிய
நினைவுகளில் மூழ்கிக்கிடக்கின்றேன்.
நள்மழை இன்று
நீண்டநேரம் பெய்யப்போகுதென்ற
உணர்வு.
நெடுமழை!
கடுமழை!
அடைமழை!
மண்டூகங்களே! நீவிர் உம்
மழைக்கச்சேரியை நிறுத்திவிடாதீர்.
இரசிகன் நானிருக்கின்றேன்
நள்மழை பற்றிய நும் கச்சேரியை
நெஞ்சில் வைத்து இரசிப்பதற்கு.
ஆம்! நானிருக்கின்றேன்.
விடிய விடிய இரசிப்பதற்கு
விடியும்வரை நானிருப்பேன்
மண்டூகங்களே!
வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவில்
நான் படுக்கையில் புரண்டபடியும்,
சிந்தித்தபடியும்,
சுவர்ப் பல்லிகளின் அசைவுகளைப்
பார்த்தபடி நானிருக்கின்றேன்.
girinav@gmail.com
நன்றி: வ.ந.கிரிதரன் பக்கம் - https://vngiritharan230.blogspot.com/2024/07/blog-post_3.html#more
girinav@gmail.com
No comments:
Post a Comment