Tuesday, July 23, 2024

கவிதை; மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - வ.ந.கிரிதரன் -



         - இசை & குரல்: AI SUNO -

இக்கவிதை பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான எனது கவிதைத்தொகுதியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பில் உள்ள கவிதை. யு டியூப்பில் கேட்டு மகிழ -
https://www.youtube.com/watch?v=kH9QQ9Q1G_0


 

கவிதை; மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?  - வ.ந.கிரிதரன் -

 உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
கண்ணம்மா! கூறு கண்ணம்மா!

நான் பார்ப்பது,
நீ இருப்பது
இதுவெல்லாம்
உண்மையென்று
எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல் கண்ணம்மா!

நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று
.உண்மையாக
நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக
எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.
கண்ணம்மா!
எவ்விதம் நம்புவது?

ஆயிரம் மில்லியன் வருட ஒளிக்கதிர்களுக்கும்
உன்னிலிருந்து வரும் ஒளிக்கதிர்களுக்கும்
இடையிலென்ன வித்தியாசம் கண்ணம்மா!
நேரம் தவிர.

உனக்கும் எனக்குமிடையில்
எப்பொழுதுமே ஒரு தூரம்
இருக்கத் தானே செய்கிறது கண்ணம்மா!
அது எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதிலும்.

எப்பொழுதுமே ஒரு நேரம்
இருக்கத் தானே செய்கிறது
கணத்தினொரு சிறுபகுதியாக என்றாலும்.
கண்ணம்மா! கூறு கண்ணம்மா!

நீ இருப்பதாக நீ சொல்லுவதைக் கூட
நான் அறிவதற்கும்
புரிவதற்கும்
எப்பொழுதுமே இங்கு
நேரமுண்டு.
தூரமுமுண்டு
இல்லையா கண்ணம்மா!

காண்பது எதுவென்றாலும் கண்ணம்மா!
அதனை அப்பொழுதே
காண்பதற்கு வழியென்றுண்டா ?

காலத்தைக் கடந்தாலன்றி
ஞாலத்தில் அது
நம்மால் முடியாதன்றோ ?

கண்ணம்மா! கூறு கண்ணமா!

தூரமென்று ஒன்று உள்ளவரை
நேரமொன்று இங்கு இருந்து தானே தீரும் ?
அது எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதும்.
இல்லையா கண்ணம்மா!

வெளிக்குள்
காலத்திற்குள்
கட்டுண்டதொரு இருப்பு
நம் இருப்பு கண்ணம்மா!

காலத்தினொரு கூறாய்
உன்னை நான் காண்பதெல்லாம் இங்கு
உன்னை நான் அறிவதெல்லாம்
மின்னலே! மின் பின்னியதொரு பின்னலா ?
உன்னிருப்பும் இங்கு மின் பின்னியதொரு
பின்னலா ? என் கண்ணே!
என் கண்ணம்மா!



No comments:

கிடைத்தது 'முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்' நூல். நன்றி!

நண்பர் ஊடகவியலாளர்  கே.பொன்னுத்துரை (பொன்னுத்துரை கிட்ணர்) இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே.கணேஷின் நூற்றாண்...

பிரபலமான பதிவுகள்