Tuesday, July 2, 2024

வ.ஐ.ச. ஜெயபாலனின் 'கள்ளிப்பலகையும், கண்ணீர்த்துளிகளும்'


சிறந்த கவிஞர்களிலொருவராக அறியப்படும் வ.ஐ.ச. ஜெயபாலன் நான் சந்தித்த காலகட்டத்தில் மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவராக, வாய்க்கு வாய் 'ராசா' என்று அழைக்குமொருவராக, ஈழத்துத் தமிழர்களின் சமூக, அரசியல் பற்றிய விடயங்களைச் சம்பாஷிப்பதில் மிகவும் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். இவ்விதமே அவர் என் நினைவினிலிருக்கின்றார்.

'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' பற்றிய ஆய்வுக்காக, ஈழத்தமிழர்களின் வரலாற்றினைக்கூறும் நூல்களிலொன்றான 'யாழ்ப்பாண வைபவமாலை'யினைப்பெறுவதற்காக இவரை முதன் முதலாகச்சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகைக்கு இவரது கவிதை வேண்டிச் சந்தித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில இவருடன் சைக்கிளில் யாழ்நகரில் திரிந்த நாள்கள் நினைவிலுள்ளன. அதன் பின்னர் கொழும்பில் சந்தித்திருக்கின்றேன். அப்பொழுது இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஏதோவொரு பாடத்திட்டத்தில் (அரசியல் சம்பந்தமானதாகவிருக்கலாம்) சேர்ந்து படித்துக்கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் லங்கா கார்டியனில் இவரது ஆங்கிலக்கட்டுரைகள் சில வெளிவந்திருந்தன. அப்பொழுது நான் கொட்டாஞ்சேனைப்பகுதியிலுள்ள நண்பரொருவரின் உறவினரின் வீடொன்றில் மேலும் சில நண்பர்களுடன் தங்கியிருந்தேன். வழக்கம் போல் இரவு நேரம், கல்கிசையில் தங்கியிருந்த நண்பர்கள் சிலரைச்சந்தித்துவிட்டு கொட்டாஞ்சேனைக்குப் பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருந்தபொழுது இடையில் இவரைச்சந்தித்தேன்.
அப்பொழுதெல்லாம் ஜெயபாலன் சம்பாஷிப்பதில் மிகுந்த ஆர்வம் மிக்கவராக விளங்கினார். தான் இறங்கவேண்டிய இடத்தையும் விட்டு என்னுடன் ஆர்மர் வீதி வரும்வரையில் சமூக, கலை, இலக்கியம் மற்றும் அரசியல் பற்றி உரையாடிக்கொண்டே வந்தார். ஆரம்ர் வீதியில் நான் இறங்க வேண்டிய இடத்திலும் இறங்கி, மேலும் பத்துப் பதினைந்து நிமிடங்கள் வரையில் உரையாடியபின்னரே சென்றார். அதன் பிறகு அவரை நான் சந்தித்தது 'டொராண்டோ',

கனடாவுக்கு வருகை தந்திருந்த அமரர் எஸ்.பொ. அவர்களுடனான சந்திப்பின்போது அவரை மீண்டுமொரு தடவை  சந்தித்தேன். அச்சமயம் அவருடன் ஓரிரு நிமிடங்கள் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது அவர் யாழ் 'ஈழநாடு' பத்திரிகையில் (எண்பதுகளில்)  'யாழ் நகரின் பழமையின் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று' நான் எழுதிய கட்டுரை பற்றிக்குறிப்பிட்டு, அக்கட்டுரை வெளியாகிய பின்னர் நான் பாதுகாக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்த கட்டடங்களிலொன்றான யாழ் பழைய சந்தையிலிருந்த கங்கா சத்திரத்தை யாழ் மாகநரசபை இடித்ததையும் நினைவு கூர்ந்திருந்தார்.

ஜெயபாலனின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதையாக இக்'கள்ளிப்பலகையும் கண்ணீர்த்துளிகளும்' கவிதையினையே கூறுவேன். இக்கவிதை நான் இதழாசிரியராக இருந்த , மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க 'நுட்பம்' இதழுக்காக (1980-1981) ஜெயபாலன் எனக்குத் தந்த கவிதை.


இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்துபோனதுக்கு இக்கவிதை கூறும் பொருளும், பாவிக்கப்பட்டிருக்கும் மொழியும் முக்கிய காரணங்கள். . அகவலோசை மிகுந்த கவிதையில் (இக்கவிதையில் அதிகமாக ஈரசைசீர்களே காணப்படுகின்றன)  மரபுக்கவிதைக்குரிய அம்சங்கள் பல அமைந்திருப்பதும், பொருத்தமாக அவை கையாளப்பட்டிருப்பதும்  (குறிப்பாக அடிகளில், சீர்களில் காணப்படும் மோனைச்சொற்கள் போன்றவை) குறிப்பிடத்தக்கது. அதனால்தான் கவிதை வாசிக்கும்போது நெஞ்சை ஈர்க்கிறது.

இக்கவிதை அக்கால இளைஞர்களின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. ஜெயபாலனின் மனநிலையை வெளிப்படுத்தும் இக்கவிதை அதனாலேயே எமக்கும் பிடித்துப்போனது.

"ஒரேஒரு முறையே வாழுமிவ் வாழ்வில்
கையா லாகாத கோழையைப் போல
கொடுமையும் சூதும் நிறைந்த உலகை
சகித்தும் ரசித்தும் பாவனை செய்தும்
சான்றோன் என்று மாலைகள் சூட
நானும் எனது நண்பரும் விரும்போம்"

சிறப்பான வரிகள். இலட்சித்தாகம் மிக்க இளைஞர்கள்தம் மனநிலையை வெளிப்படுத்தும் வரிகள். இருப்பை நன்குணர்ந்த அவ்விளைஞர்களின்  தெளிவான மனநிலையை இவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன. தாம் கொண்ட கொள்கைக்காக, யாருக்கும் துதி பாடும் தன்மையற்ற , போலிப்பெருமைக்காக வால் பிடிக்கும் மனநிலையற்ற அவ்விளைஞர்களின்  வார்த்தைகள் இவை. கோழையைப்போல் வாழவதை வெறுக்கும் அவ்விளைஞகர்கள் கொடுமைகள் சூழ்ந்த இவ்வுலகை வெறுக்கின்றார்கள். அதனை அவர்களால் தம் சுய இலாபங்களுக்காகச்  சகித்துக்கொள்ளவோ இரசிக்கவோ முடியாது.

"தடைகள் சீனப் பெரு மதிலாயினும்
தகர்க்கும் பணியினைப் பேனைக் குச்சியால்
ஆர்வமாய்ச் செய்வேன் அங்குரார்ப்பணம்.
தடைகளைத் தகர்த்தும் விலக்கியும்
தொடர்ந்து
அதிமானிடனாய் முன்சென்றிடுவோம்."


தடைகள் சீனப்பெருமதிலாயினும் அவர்கள் கலங்க மாட்டார்கள். தம் எழுதுகோலால் அத்தடைகளைத் தகர்ப்பார்கள். அவற்றைத் தகர்த்து , விலத்தித் தம் இலட்சியப் பயணத்தை அதிமானுடராய்த்  தொடர்வார்கள். அக்காலகட்டத்தில் அலையலையாய் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்ட போராளிகளின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வரிகள் இவை.

இவ்விதம் தம் இலட்சியப் பயணத்தைத் தொடரும் அவர்கள் குனிந்து நடக்கும் கூழங்கையர்கள் அல்லர். பெறுமதி கூடிய காலணி இலங்கும் கால்களைத் தேடி முத்தம் கொடுகும். கூழங்கையர்களைப் பொன் முலாமிட்ட சவப்பெட்டிப் பரிசால் உலகம்  கெளரவிக்கும். ஆனால் இவர்களுக்குக் கிடைப்பதோ வெளிப்பூச்சற்ற கள்ளிப்பலகையும், கண்ணீர்துளிகளும்தாம். ஆனால் இவர்கள் விழுமிடத்தில் இவர்களுக்கு நடுகல் எழுப்பி, இவர்களது பாதையில் இவர்களது சந்ததியினர் தொடர்வார்கள்.

"விழுமிடத் தெமக்கோர் நடுகல் நிமிர்த்தி
எமது பிள்ளைகள் பெண்டுகள் தொடர்வார்...
குனிந்து நடக்கும் கூழங்கையர்கள்
பெறுமதி கூடிய காலணி இலங்கும்
கால்களைத் தேடி முத்தம் கொடுப்பர்.
பொன்முலா மிட்ட சவப்பெட்டிப் பரிசால்
உலகம் அவர்களைக் கெளரவம் செய்யும்.
வெளிப் பூச்சற்ற கள்ளிப் பலகையும்
வெம்மை நிறைந்த கண்ணீர்த் துளிகளும்
எங்களுக்காக இருக்கவே செய்யும்."


******************************************************************************************
முழுக்கவிதையும் வாசிப்புக்காக கீழே:

 

கள்ளிப் பலகையும் கண்ணீர்த் துளிகளும் - வ.ஐ.ச.ஜெயபாலன் -

முரட்டு மேதை என்பர் மேலோர்
'இங்கிதம் அறியான் அறியான்' என்பர்
கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்
ஓயாது துரத்தும் சவக்குழி விழுங்குமுன்
ஒரேஒரு முறையே வாழுமிவ் வாழ்வில்
கையா லாகாத கோழையைப் போல
கொடுமையும் சூதும் நிறைந்த உலகை
சகித்தும் ரசித்தும் பாவனை செய்தும்
சான்றோன் என்று மாலைகள் சூட
நானும் எனது நண்பரும் விரும்போம்.
வீணையோடும் தூரிகையோடும்
மூலைமட்டம் ஸ்டெதஸ்கோப் அரிவாள்
சம்மட்டி போன்றவை பழகிப் போன
கைகளை உயர்த்தி நெஞ்சுகள் நிமிர்த்தி
எனது தோழர் புடை சூழ்வார்கள்.
பொன்னாய் அழகு பொழியினும் விலங்கை
அப்பிய மலமாய் அருவறுத் தெறிவோம்.
வெடி மருந்துகள் தோய்ந்த எம்நாவு
ஓய்ந்திருக்காது.
தடைகள் சீனப் பெரு மதிலாயினும்
தகர்க்கும் பணியினைப் பேனைக் குச்சியால்
ஆர்வமாய்ச் செய்வேன் அங்குரார்ப்பணம்.
தடைகளைத் தகர்த்தும் விலக்கியும்
தொடர்ந்து
அதிமானிடனாய் முன்சென்றிடுவோம்.
விழுமிடத் தெமக்கோர் நடுகல் நிமிர்த்தி
எமது பிள்ளைகள் பெண்டுகள் தொடர்வார்.
கடலின் மணலை எண்ணித் தீர்ப்பினும்
மானிடர் எமது வம்சக் கொடியை
சவக்குழி உனக்கு
விழுங்கித் தீர்த்திடல் முடியுமோ?
விலங்கும் சிறையும் வளைத்திடல் கூடுமோ?
விடுதலை பெற்ற தோழியரோடு
கட்டாந் தரையின் வாழ்வே உவப்பு.
பெரிய இடத்துச் சீமை நாய்களாய்
கார்ப்பவனி வரும் இல்லறக் கனவில்
எமது தோழர் தோழியர் தேயார்.
கொடிய உலகம் சான்றோன் என்னவும்
இளம் சீமாட்டிகள் இனியவன் என்னவும்
குனிந்து நடக்கும் கூழங்கையர்கள்
பெறுமதி கூடிய காலணி இலங்கும்
கால்களைத் தேடி முத்தம் கொடுப்பர்.
பொன்முலா மிட்ட சவப்பெட்டிப் பரிசால்
உலகம் அவர்களைக் கெளரவம் செய்யும்.
வெளிப் பூச்சற்ற கள்ளிப் பலகையும்
வெம்மை நிறைந்த கண்ணீர்த் துளிகளும்
எங்களுக்காக இருக்கவே செய்யும்.


- நன்றி:  நுட்பம் 1980-1981, மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடு.


 

No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்