Saturday, July 27, 2024

யாழ் பொதுசன நூலக நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=mQe0kdQxu9Y


யாழ் பொதுசன நூலக நினைவுகள்!  - வ.ந.கிரிதரன் -

யாழ் பொதுசன நூலகத்தில்
வாழ்நாளில் கழித்த பொழுதுகளை
எப்படி மறப்பேன். எப்படி மறப்பேன்.

என்றும் என்னுள் இருக்கும் நினைவுகள்,

இன்று நினைக்கையில் அங்கு
அன்று நான் கழித்த தருணங்கள்
அலையலையாக எழுகின்றன.

எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.

ஒன்று விட்ட அக்கா ஒருத்தியுடன்
அன்று நான் சென்றதுதான் முதல் தடவை.
எட்டி எட்டி விரைந்து நடப்பேன்.
என்னுடன் ஈடு கொடுக்க முடியாத
அக்கா கத்துவாள். அக்கா கத்துவாள்.
''ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே.
எட்டிப் போகாதேடா. மெதுவாப் போடா.
மூச்சு வாங்குது' என்பாள் அவள்.

எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.

வாரத்தில் பல தடவைகள் அங்கு செல்வேன்.

நான் வணங்கும் ஆலயங்கள்
நூலகங்களே.

யாழ் பொதுசன நூலகமும்
வாழ்வில் நான் வணங்கும்
ஆலயங்களில் ஒன்று.

வீணையும் கையுமாக வாசலில்
வரவேற்கும் சரஸ்வதி சிலை.
காற்று சிலு சிலுக்கும் சூழல்.
கனிவு மிகு உணர்வொன்றில்
இனிமையை உணர்வோம்.

எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.

நூலகம் என் ஆசான்.
நூலகம் என் நண்பன்.
நூலகத்தில் படித்த நூல்கள்.
நினைவில் நிலைத்து நிற்கின்றன.

பெளதிகத்தின் வரலாறு.
பறவைகளின் வரலாறு.
நீங்களும் விஞ்ஞானிகள் ஆகலாம்.
வாசித்து
நாங்களும் விஞ்ஞானிகள் ஆவோம்.

அறிவியல் நூல்கள் பற்பல.
அறிவியல் நூல்கள்  பற்பல.

அனைத்தையும் வெளியிட்டது
அன்று சென்னயின் பதிப்பகம்
ஒன்று.

கல்கியின் பொன்னியின் செல்வன்,
கள்வனின் காதலி, அலையோசை
சிவராம் காரந்தின் மண்ணும் மனிதரும்,
சாண்டில்யனின் கடல் புறா
சிந்திக்க வைக்கும் போரும் அமைதியும்
டால்ஸ்டாயின் போரும் அமைதியும்
வாண்டுகள் எம்மை மகிழ்வித்த
வாண்டுமாமாவின் சிறுவர் நூல்கள்

பல நூல்கள். இப்படிப்
பல நூல்கள்.

எப்படி நான் மறப்பேன்.
எப்படி நான் மறப்பேன்.

அருகில் முற்றவெளி.
அதனருகில் பண்ணைக் கோட்டை.
சிறிது தொலைவில்
சுப்பிரமணியம் பூங்கா.
திறந்த வெளி அரங்கு.
தந்தை செல்வா நினைவுத்  தூபி.

நடுவில் அமைந்திருக்கும் நூலகம்.
நான் வணங்கும் நூலகம்.

நூலகம் எரிந்த நாட்கள்.
நான் நிலை குலைந்த நாட்கள்.

இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை.
வரலாற்று ஆவணங்கள்.
வரலாற்றுச் சுவடிகள்.

நூலகத்தை நினைக்கையில்
நெஞ்சில் பற்பல உணர்வுகள்.
 
என்றும் என் ஆசான் நீ.
என்றும் என் நண்பன் நீ.

உன்னுடன் கழித்த நாட்கள்.
உன்னுடன் வளர்ந்த நாட்கள்.

நூலகமே உனக்கு என் நன்றி.
நூலகமே உனக்கு என் நன்றி.

No comments:

கிடைத்தது 'முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்' நூல். நன்றி!

நண்பர் ஊடகவியலாளர்  கே.பொன்னுத்துரை (பொன்னுத்துரை கிட்ணர்) இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே.கணேஷின் நூற்றாண்...

பிரபலமான பதிவுகள்