Thursday, August 1, 2024

கவிதை: இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

- இக்கவிதை 5/3/1983 அன்று என் குறிப்பேட்டில் எழுதப்பட்ட கவிதை. இக்கவிதையை யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=h0ZL-aFAXSk

இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்!  

ஆ...இந்த மெல்லிய இளந்தென்றல்...
இடையில் கலந்து வருமெழில் மலர்களின்
சுகந்த நறுமணம்...
பசுமை மண்டிக் கிடக்கும் வயல்வெளிகளில்
பாடிப் பறந்திடும் வானம்பாடிகளின்
இன்ப கானங்கள்...
ஆகா! ஆகா! ஆகா!
எத்துணை இனிமையானவை!
எத்துணை இன்பமானவை!

பதுங்கிக் காடுகளில் புகுந்துவரும்
நதிப்பெண்களே!
நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன்
தெரியுமா? இளமை கொஞ்சுமுங்களெழிற்
துள்ளல் நடைகண்டு மோகத்தீயாலெந்தன்
நெஞ்சம் வேகுகின்றதே! புரியவில்லையா
பெண்களே!


மெல்லிய கருக்கிருளில் ஆழ்ந்து கிடக்கும்
அதிகாலைப் பொழுதுகளில்,
தூரத்தே ஒதுங்கி நின்று கண்சிமிட்டும்
நட்சத்திரத் தோகையரே!
உங்களைத்தான் தோகையரே!
நீங்கள்தான் எத்துணை அழகானவர்கள்!
எத்துணை அழகானவர்கள்!
நான் உங்களையெல்லாம் எவ்வளவு
நேசிக்கின்றேன் தெரியுமா? என்னினிய
தோழர்களே!

இந்த மண்ணினை, இந்தக் காற்றினை,
இந்த வெளியினை, அடிவானினை,
இந்த எழில் மலர்களை, மரங்களை,
இந்தச் சூரியனை, இதன் ஒளியினை,
இவற்றையெல்லாம் நான்
மனப்பூர்வமாக நேசிக்கின்றேன்.

இதோ இங்கே வாழும் இந்த மானுடர்களை,
ஆபிரிக்கக் கறுப்பினத்தவர்களென்றாலென்ன
அமெரிக்க வெள்ளையரென்றாலென்ன,
அரபு முஸல்மானென்றாலென்ன,
ஆசிய தேசத்தவரென்றாலென்ன,
இவர்களையெல்லாம்,
இந்த மானுடர்களையெல்லாம்
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.

விரிந்த, பரந்த இப்பிரபஞ்சத்துக்
கோள்களை, கதிர்களை, பால் வீதிகளை,
ஆங்கு வாழும் தகைமைபெற்ற
உயிர்களையெல்லாம்
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.

இந்த உயிர்களிற்காகவே
இந்தப் பிரபஞ்சத்துப் புதிர்களை
விடுவிப்பதற்காகவே
என் நெஞ்சில் பொங்குமுணர்வுகளை
எழுத்தாக வடிக்கின்றேன்.
ஆமாம்! ஆமாம்! ஆமாம்!
ஆமாம்! ஆமாம்! ஆமாம்1



No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல். கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல் வாழும் வாழ்வுதனை வாழவிடு இய...

பிரபலமான பதிவுகள்