Wednesday, August 7, 2024

ஆழ் மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள் - வ.ந.கிரிதரன் -


இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=RUxx8ili1gM

 

ஓவியம் AI

ஆழ்  மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள் - வ.ந.கிரிதரன் -

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.

என் பால்ய காலத்து  நண்பனை
நான் நேற்று சந்தித்தேன்.
நீண்ட நாட்களின் பின்பு
ஆண்டுகள் பல கடந்த பின்பு
நேற்றுத்தான் சந்தித்தேன் அவனை.

பதின்ம வயதுகளில் அவனுடன் கழித்த நினைவுகள்
படம் விரித்தன நெஞ்சில்.
யாழ் நகரத்தின் தெருக்களில் அவனுடன்
வாழ்வைக்  கழித்த பொழுதுகள் தெரிந்தன.

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.

ஒரு தடவை கீரிமலை சென்றோம்.
ஒல்லித்தேங்காய் இல்லாவிட்டால் கேணியில்
நீந்த முடியாத நிலையில் நான்.
நீந்துவதில் பேராற்றல் அற்ற நிலையில் நான்.
அவனும் இன்னுமொரு நண்பனும் நீந்தினார்கள்,
அவர்கள் நீந்துவதை வேடிக்கை பார்த்து நின்றேன்.

எதிர்பாராத தருணத்தில் அருகில் வந்தவர்கள்
என்னைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்
கேணிக்குள் வீசிச் சிரித்தார்கள்.
கணப்பொழுதில் நடந்த நிகழ்வென்பதால்
திக்குமுக்காடிப் போனேன் நான்,
தட்டுத்தடுமாறி நீந்தினேன். கரை சேர்ந்தேன்.
அணிந்திருந்த ஆடைகள் நனைந்து விடவே]
அந்திவரை அங்கிருந்தோம்.
ஆடை உலர்ந்ததும் வீடு திரும்பினோம்,
அன்று முழுவதும் அவர்கள் சிரித்தார்கள்.
அவனைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.

பதின்ம வயதில் நண்பனை முதற்காதல்
பற்றிக்கொண்டு விட்டது. நெஞ்சங் கவர்ந்தவள்
பாடசாலை விட்டு வீடு திரும்பும் பஸ்ஸில்
பாய்ந்து சென்று ஏறுவான். கூடவே எதுவும்
புரியாமல் நானும் ஏறுவேன்.
பின்னர்தான் தெரிந்தது நண்பனின்
பரிதவிக்கும் காதல் மனசு பற்றி.

நேற்று அவனைக் கண்டபோது
ஊற்றென அந்நினைவுகள் பெருகின.
மானுட வாழ்க்கையில் முதற் காதல்
முக்கியமானதோர் படிக்கட்டு.
முதற்காதல் எப்போதுமே
முடிந்த காதல்தான்.
தொடர்ந்த காதல் அல்ல.
ஆனால்
இருப்பு உள்ளவரை
இருக்கும் காதல்.
தொடரும் காதல்.

நகரில் இவனுடன் அலைந்த பொழுதுகள்,
நகரில் இவனுடன் பார்த்த படங்கள்,
நகரில் இவனுடன் ஆற்றிய உரையாடல்கள்.
நகரில் இவனுடன் அருந்திய முதற் கள்
எல்லாமே நினைவுக்கு வந்தன.
என் பால்ய , பதின்மப் பருவத்து
இன் நண்பன் இவனைக் கண்டபோது.

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.



No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்