Saturday, August 24, 2024

'கலைக்கதிர்' வெளியிட்ட அறிவியல் நூல்கள்! - வ.ந.கிரிதரன் -



 
என் இளமைப்பருவத்தில் நான் யாழ் பொதுசன நூலகத்தில் இரவல் பெற்று பல அறிவியல் நூல்களை வாசித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில் அறிவியல்  கட்டுரைகளைத் தாங்கி வெளியான கலைக்கதிர் சஞ்சிகையினையும் விரும்பி வாசித்திருக்கின்றேன்.  கோவையிலிருந்து ஜி.தாமோதரன் என்னும் பொறியியலாளர் வெளியிட்ட சஞ்சிகை.  பல தசாப்தங்களுக்குப் பின்னர் நினைவு கூர்கையில் எனக்கு அன்று வாசித்த அறிவியல் நூல்களை வெளியிட்ட பதிப்பகத்தின் பெயர் சரியாக நினைவுக்கு வராமலிருந்தது. அக்காலகட்டத்தில் சென்னையிலிருந்து இயங்கிக்கொண்டிருந்த சைவ சித்தாந்த நூற் பதிப்பகத்தினரும் பல மேனாட்டு செவ்வியல் படைப்புகளைச் சிறுவர்களுக்கேற்ற வகையிலான மொழிபெயர்ப்பு நடையில் வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.

இந்தக் குழப்பத்துக்கு ஒரு தீர்வு கிட்டியது. அன்று நான் வாசித்த பெரும்பாலான அறிவியல் நூல்களை வெளியிட்டது கலைக்கதிர் நிறுவனமே, அண்மையில் பழைய கலைக்கதிரொன்றினை இணையத்தில் வாசிக்கக் கிடைத்தபோது அப்பிரதியில் அவர்கள் வெளியிட்ட நூல்கள் சிலவற்றின் பட்டியலைப் பார்த்தபோதே இவ்விதம் இதனை அறிய முடிந்தது.

 மேலும் அந்நூற் பட்டியலுள்ள ஒரு நூலின் பெயர் 'நாமும் விஞ்ஞானிகளாவோம்'. அது எனக்கு மிகவும் பிடித்த நூல். அதன் பெயரையும் 'நீங்களும் விஞ்ஞானிகளாகலாம்' என்றே நினைவு கூர்கையில் எண்ணியிருந்தேன். அதன் உண்மைப்பெயர் 'நாமும் விஞ்ஞானிகளாவோம்' என்பதை இப்போது உணர முடிகின்றது.

அந்நூல் சிறுவர்களைக் கவரும் பல சித்திரங்களை உள்ளடக்கியிருந்தது. அதிலொன்று பூதக்கண்ணாடியுடன் சிறுவனொருவன் தன் வீட்டு வளவில் ஆய்வுகளை மேற்கொள்வது போன்றதொரு சித்திரம். அவ்விதமான சித்திரங்கள் எம் உள்ளத்தில் கிளர்ச்சியை, மகிழ்ச்சியை ஏற்படுத்தின. நானும் பூதக் கண்ணாடியொன்றினைப் பெற்று, வீட்டு வளவில் என்னையொரு விஞ்ஞானியாகக் கற்பனை செய்து  அலைந்து திரிந்திருக்கின்றேன். கலைக்கதிரில் நூற்பட்டியலைப் பார்த்தபோது அந்நினைவுகள் படம் விரிக்கின்றன.


No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்