சமஷ்டி, சுயநிர்ணய உரிமை பற்றி ஜனாதிபதி வேட்பாளருடன் பேசத் தயார் என்று தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது. நமது அரசியல்வாதிகள் மக்களை உசுப்பேத்திக் குளிர் காய்வதில் ஆர்வமுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்தும் செய்தி.
தனி நாடு கேட்டு, அதாவது பிரிந்து தனி நாடு அமைப்பதற்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது 2009இல். இவ்விதமானதொரு சூழலில் இலங்கையில் எந்த அரசாவது சுயநிர்ணய உரிமையினை அதாவது நாடு பிரிந்து செல்லும் நிலையினை ஏற்றுக்கொள்ளுமா? தமிழரசுக் கட்சி பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையினைப் பற்றி இங்கு கூறுகிறதா அல்லது தமிழர்கள் சுயமாக ஒற்றமைக்குள் இருந்தவாறே, தம் காணி, பொலிஸ் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் சுயமாக முடிவெடுக்கும் நிலை ஏற்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றதா என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.
இந்திய மாநில அரசுகளுக்குப் பல உரிமைகள் இல்லை. நினைத்த நேரத்தில் ஆளுநர் அறிக்கையினை வைத்து , அரசியல் இலாபங்களுக்காக மத்தியில் ஆட்சியிலிருக்கும் அரசு மாநில அரசுகளைக் கலைக்கலாம். ஏற்கனவே நடந்திருக்கின்றது. அப்படி நடந்தாலும், இந்தியாவில் மாநிலங்கள் மாநில அரச அமைப்பினை ஏற்றுக்கொண்டுள்ளன. தொடர்ந்தும் மாநிலை அரசுகளின் உரிமைகளுக்காக வலியுறுத்துகின்றன. அவ்விதமானதொரு போக்கினையே இலங்கைத் தமிழர்களும் கையாளுதல் நன்மை பயக்கும் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.
அடுத்தது போரில் காணாமல் போனவர்களின் பிரச்சினை இன்னும் முற்றாகத் தீர்க்கப்படவில்லை. அவர்களைப்பற்றிய தெளிவான அரசின் பதில் பெறப்பட வேண்டும். இன்றும் மர்ம முகாம்களில் போர்க் காலகத்தில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்களோ தெரியாது. காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு உரிய நட்டஈடுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இதை முக்கிய விடயமாக முன் வைத்து ஜனாதிபதித் தேர்தலை அணுக வேண்டும்.
போரில் காயமடைந்து உடல் ஊனமுற்ற போராளிகளுக்கு, கணவன், மனைவி, குழந்தைகளை இழந்த குடும்பத்தவர்கள் இன்றும் பொருளியல்ரீதியில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள். அவர்களது பிரச்சினைகள் பேசப்பட வேண்டும்.அவர்களின் பிரச்சினைகளின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
வேலைவாய்ப்பு, வீடமைப்பு உதவி , பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் இவற்றின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் அணுகப்பட வேண்டும்.
எல்லைப்புறங்களில், தமிழ்ப்பகுதிகளில் வலிந்து திணிக்கப்படும் பெளத்த அடையாள முயற்சிகளுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலை அணுகலாம். அதே சமயம் பாரபட்டமற்ற நிலையில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படுவதை வலியுறுத்த வேண்டும். இதன் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலை அணுகலாம்.
இவ்விதமாகத் தமிழர் அரசியல் பிரச்சினைகளை மையமாக வைத்து ஜனாதிபதித் தேர்தலை அணுகும் அதே சமயம், தமிழர்கள் தமக்குள் இன்னும் நிலவும் தீண்டாமைப் பிரச்சினைகள் போன்ற சமூக அநீதிகள் பக்கமும் கவனத்தைத் திருப்ப வேண்டும். தீக்கோழிகளைப்போல் கண்களை மூடிக்கொண்டு அவ்விதமான பிரச்சினைகளே இல்லையென்பது போன்ற நிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அடுத்தது இதுவரை செய்யாமலிருக்கும் ஒன்றைச் செய்ய வேண்டும். இலங்கைத் தமிழரின் அரசியல் கட்சிகள், முன்னாள் ஆயுத அமைப்புகள் அனைத்தும் கடந்த கால அரசியல் பற்றிய பாரபட்சமற்ற சுயபரிசீலனையைச் செய்ய வேண்டும். கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடங்களைப் படிக்க வேண்டும்.
தம் அரசியல் நலன்களுக்காக இன வாத அரசியல் பேசுவதை இலங்கையின் அரசியல்வாதிகள் , அவர்கள் எவராகவிருந்தாலும், தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment