Friday, August 9, 2024

நூலகர் என்.செல்வராஜாவின் 'ஈழத்தின் தமிழ் நாவலியல் ஓர் ஆய்வுக் கையேடு' முக்கியமானதோர் ஆய்வுக் கையேடு! - வ.ந.கிரிதரன் -


பதிவுகள் இணைய இதழில் வ.ந.கிரிதரன் (நான்) எழுதிய குறிப்பு.


ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும், ஆய்வகமும் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஆய்வுக் கையேடு. இவ்வாய்வுக் கையேடு இலங்கைத் தமிழ் நாவல்களைப்பற்றிய முக்கியமானதோர் ஆய்வுக் கையேடு. 1856 தொடக்கம் 2019 வரையில் வெளியான நாவல்களை உள்ளடக்கிய ஆய்வுக் கையேடு இத்துறை பற்றிய ஆய்வாளர்கள் பலருக்கும் பல்வகைகளிலும் உறுதுணையாகவிருக்கும்.

இக்கையேடு  பற்றிய தனது 'நுழைவாயிற்' குறிப்பில் இக்காலகட்டத்தில் வெளியான ஈழத்தின் கணிசமான தமிழ் நாவல்களை இவ்வாய்வுக் கையேட்டில் காணலாம் என்கின்றார் நூலகர் என்.செல்வராஜா.

இந் 'நுழைவாயிற்' குறிப்பின் இறுதியில் நூலகர் என்.செல்வராஜா அவர்கள் பின்வருமாறு கூறுவார்: "ஈழத்தித் தமிழ் நாவல்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள முனையும் அறிமுக ஆய்வாளர்களுக்கும் ஆய்வுத்துறை மாணவர்களுக்கும் இலக்கிய  ஆய்வாளர்களுக்கும் தமக்குரிய பின்புலத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள இப்பட்டியலில் உள்ள நூல்கள் உதவக்கூடும். இந்நூல் ஒரு தனிமனித முயற்சியாகும். வரையறுக்கப்பட்ட சொந்த முதலீட்டுடன் லாபநோக்கின்றி ஆய்வாளர்களின் நலன்கருதி வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் இருப்பினைப் பலருடனும் பகிர்ந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன்.'
நூலகர் என்.செல்வராஜா

நூலகராக இருந்த இவரது அனுபவம் இவர் வெளியிடும் ஆய்வுத் தொகுதிகளில் தெரியும்.  இலகுவாகத்  தகவல்களைத் தேடியறியும் வகையில் பிரிக்கப்பட்டிருக்கும். இத்தொகுதியும் அதற்கு விதிவிலக்கல்ல. தொகுதியிலுள்ள நாவல்கள் 1. ஈழத்து நாவல்கள், குருநாவல்கள், 2. மொழிபெயர்ப்பு நாவல்கள், குறுநாவல்கள், 3. சிறுவர் நாவல்கள், சிறுவர் கதை நூல்கள், 4. சிறுவர் மொழிபெயர்ப்பு நாவல்கள், சிறுவர் கதைகள், 5. இவ்வாண்டில் வெளிவந்ததாகக் கருதப்படும் நாவல்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன. தகவற் தேடலை இலகுவாக்கும் பிரிவுகள் இவை.

இலங்கைத் தமிழர் வரலாற்றில் போதிய தெளிவற்று இருக்கும் நிலைக்கு முக்கிய காரணம் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதில்  ஆவணப்படுத்தலில் காட்டும் அசிரத்தை.  வரலாற்றுச் சின்னங்கள் என்னும்போது நூல்களையும் உள்ளடக்கியே கூறுகின்றேன். ஆனால் இந்நிலை அண்மைக்காலமாக மாறிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிப்பது. ஆரோக்கியமானது. வரலாற்று ஆய்வாளர்களின் கவனம் இலங்கைத் தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்கள், அவை பற்றிய ஆய்வுகளில் திரும்பியிருக்கின்றது. எண்ணிம நூலகமான நூலகம் தளத்தில் பல் துறைகளிலும் வெளியான தமிழ் நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன; சேகரிக்கப்படுகின்றன. நூலகர் என். செல்வராஜா தனி ஒருவராகப் பெரும் நிறுவனங்கள் செய்யும் வேலையினைச் செய்திருக்கின்றார். நூலகரான தனது அனுபவத்தை உள்வாங்கி அதனடிப்படையில் அவர் ஆவணப்படுத்தியிருக்கும் 'நூல் தேட்டம்' தொகுதிகள், மற்றும் ஏனைய நூல்கள் பிரமிக்க வைக்கின்றன. தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பாக அவரது ஆவணப்படுத்தல் இருக்கும். அதற்காகத் தமிழ் இலக்கிய உலகு எப்பொழுதும் நன்றியுடனிருக்கும்.

இந்நாவல் ஆய்வுக்கையேட்டில் என்னைக் கவர்ந்த ஒரு விடயம். தன்னைத் தொகுப்பாசிரியர் என்று அடக்கமாகத் தன்னைக் கூறிக்கொண்டாலும் இவர் வெறும் தொகுப்பாசிரியராக மட்டும் செயற்படவில்லை. திறனாய்வாளராகவும் செயற்பட்டிருப்பதை இத்தொகுதி வெளிப்படுத்துகின்றது. நூல்களைப்பற்றிய விபரங்களை மட்டும் இவர் தரவில்லை. பல இடங்களில் நாவல்கள் பற்றி, நாவலாசிரியர்கள் பற்றிய சுருக்கமான விமர்சனக் குறிப்புகளையும் தருகின்றார். அவை மிகவும் பயனுள்ளவை/ அவற்றைத் தனியாகத் தொகுத்து நூலாக வெளியிடலாம். மிகவும் பயனுள்ளதாகவிருக்கும்.

இதுவரை வெளியான எந்தவொரு இலங்கைத் தமிழ் நாவல் ஆய்வு நூல்களிலும் இல்லாத சிறப்பான விடயமொன்றினை இத்தொகுதியில் கண்டேன். அது: பொதுவாக நமது ஆய்வாளர்கள் நூல்களாக வெளியான நாவல்களை மட்டுமே  கவனத்திலெடுத்துத் தம் ஆய்வுகளை ஆற்றியிருப்பார்கள். முக்கியமான எழுத்தாளர்களின் நூலுருப்பெறாத , பத்திரிகைகள், சஞ்சிகைகளில் தொடர்களாக வெளியான நாவல்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் இவர் அவ்விதம் செய்யவில்லை. உதாரணத்துக்கு இதுவரை நூலுருப்பெறாத, பதிவுகள் இணையத்தில் தொடராக வெளியான எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' பற்றிய இவரது விமர்சனக் குறிப்பினைக் குறிப்பிடலாம். நல்லதோர் ஆய்வாளருக்குரிய பண்பு இது. இதனை நாவல்கள் பற்றிய ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

'கடுகு சிறிது.காரம் பெரிது' அதற்கொப்ப வெளியாகியுள்ள சிறப்பான தொகுதி நூலகர் என்.செல்வராஜின் 'ஈழத்தின் தமிழ் நாவலியல் ஓர் ஆய்வுக் கையேடு'  கடுகு சிறிது காரம் பெரிது என்பதில் வரும் காரத்தைப் பலரும் தவறாக உறைப்பைக் குறிக்கும்  காரம் என்றே கருதுவார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் அவ்வாறு கருதுவதில்லை. கடுகு உறைப்பான, காரச் சுவையினைத் தரும் ஒன்றல்ல. ஆகாரத்துக்குச் சுவையூட்டும் தன்மை மிக்கது கடுகு. 'கடுகு சிறிது. காரம் பெரிது' என்பதில் வரும் காரத்தை நான் எப்போதுமே ஆகாரத்தைக் குறிப்பதாகவே எண்ணிக்கொள்வேன். ஆம். கடுகு சிறுத்தாலும், அது ஆ'காரத்'துக்கு ஆற்றும் பணி முக்கியமானது. பெரியது.  அதுபோன்றதுதான் இச்சிறுநூலும்.

இந்நூலை 'நூலகம்' தளத்தில் வாசிக்கலாம் - https://noolaham.net/project/1000/100000/100000.pdf

girinav@gmail.com

நன்றி; https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/8675-2024-08-09-17-40-16

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல். கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல் வாழும் வாழ்வுதனை வாழவிடு இய...

பிரபலமான பதிவுகள்