Tuesday, August 20, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!


                                           - இசை  & குரல் - AI SUNO | ஓவியம்: AI -

எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. மேற்படி தொகுப்பில் எனது இககவிதையான . "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'"  கவிதையும் இடம் பெற்றுள்ளது.

வ.ந.கிரிதரன் பாடல்: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.

விரிவெளியில் படர்ந்து கிடக்கும்
உன் நகைப்போ ,
நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ
எனக்கொன்றும் புதியது அல்லவே.

இரவுவானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திரச் சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கின்றேன்.

எப்பொழுதுமே இறுதி வெற்றி
உனக்குத்தான்.
எப்பொழுதுமே உன்காட்டில்
மழைதான்.
அதற்காக
மனந்தளர்வதென் பண்பல்ல.
ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலும் என்
பேரவாவன்று.பின்
உனைப் புரிதல்தான்.

ஓர் எல்லையினை
ஒளிச்சுடர் உனக்குத்
தந்துவிடும் பொருள் அறிந்த
எனக்கு
அவ் எல்லையினை மீறிடும்
ஆற்றலும், பக்குவமும்
உண்டு; புரியுமா?

வெளியும், கதியும், ஈர்ப்பும்
உன்னை, உன் இருப்பினை
நிர்ணயித்து விடுகையில்
சுயாதீனத்துடன்
பீற்றித் திரிவதாக உணரும்
உன் சுயாதீனமற்ற,
இறுமாப்புக்கு
அர்த்தமேதுமுண்டா?

இடம்,
வலம் ,
மேல்,
கீழ்.
இருதிசை, நோக்கு கொண்ட
பரிமாணங்களில் இதுவரையில்
நீ
ஒருதிசையினைத் தானே காட்டி
புதிருடன் விளங்குகின்றாய்?

உன் புதிரவிழ்த்துன்
மறுபக்கத்தைக் காட்டுதலெப்போ?

இரவி ,
இச் சுடர் இவையெலாம்
ஓய்வாயிருத்தலுண்டோ? பின்
நான் மட்டுமேன்?

நீ எத்தனை முறைதான்
உள்ளிருந்து
எள்ளி நகைத்தாலும்
மீண்டும் மீண்டும்
முயன்று கொண்டேயிருப்பேன்.

நீ
போடும் புதிர்களுக்கு
விளக்கம் காணுதற்கு
முயன்று கொண்டேயிருப்பேன்.

வேதாளங்களின் உள்ளிருந்து
எள்ளி நகைத்தல் கண்டும்
முயற்சியில்
முற்றுந் தளராதவன் விக்கிரமாதித்தன்
மட்டும்தானா?

No comments:

'பதிவுகள்.காம்': 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'

எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்  கொண்டு , 2000ஆம் ஆண்டிலிருந்து , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத...

பிரபலமான பதிவுகள்