Thursday, April 24, 2025

கவிதை: ஏ! விரிவானே! உன்னைத்தான் விரிவானே! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் AI


ஏ! விரிந்திருக்கும் விரிவானே!
நீ எப்போதும் போல் இப்போதும்
என் சிந்தையை விரிய வைக்கின்றாய்.
என் தேடலைப் பெருக வைக்கின்றாய்.

உன்னைப் புரிதல் என் தேடலின் ஊற்று.
உன் விரிவு , ஆழம், தொலைவு
என்னை எப்போதும் வியப்பிலாழ்த்துகின்றன.
வியப்பினூடு விடைகள் எவையும் கிடைக்குமா
என்று முயற்சி செய்கின்றது மனது.

விடைகள் கிடைக்கப்போவதில்லை என்பது
அயர்வினைத் தந்தாலும் உனை, உன் வனப்பை
அயராது இரசிப்பதில் ஒருபோதும் எனக்கு
அயர்வில்லை. அயர்வற்ற இரசிப்புத்தான்.

இருப்பின் இருப்பறிய இருப்பது நீ ஒன்றுதான்
என்கின்றது எப்போதும் தேடிக்கொண்டிருக்கும்
என் நெஞ்சம்.

உன்னில், உன் விரிவில் சஞ்சரித்தவாறு
கீழே பார்க்கின்றேன்.
விண்ணிலிருந்து மண்ணைப் பார்க்கின்றேன்.
எத்துணை அற்பம்! அற்பத்துக்குள்
எத்துணை அதிசயம்! படைப்பில்
எத்துணை அற்புதம்!
எத்துணை நேர்த்தி!
எத்துணை ஞானம்!

எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவாக....


பொதுவாக ஒருவரின் வாசிப்பனுபவத்தில் பால்ய பருவம், பதின்மப் பருவம், இளமைப்பருவமென்று பருவங்களுக்கேற்ப வாசிப்பனுபவமும் வளர்ந்துகொண்டே செல்லும். சிலரின் எழுத்துகள் மட்டும் அனைத்துப் பருவத்தினரையும் கவரும் தன்மை மிக்கவை. ஆனால் அவற்றின் அர்த்தங்கள் பருவங்களின் மாறுதல்களுக்கேற்ப மாறிக்கொண்டே செல்லும். உதாரணத்துக்கு மகாகவி பாரதியாரின் எழுத்துகளைக் குறிப்பிடலாம்.  

என் பால்ய பருவத்தில்  என் அப்பா வாங்கித் தந்த பாரதியாரின் கவிதைகள் பிடிக்கும். ஆனால் அப்போது நான் இரசித்த அவரது எழுத்துகளை நான் புரிந்து கொண்டதற்கும், பின்னர் வளர்ந்த பின் வாசித்தபோது அடைந்த இன்பத்திற்கும், புரிதலுக்கும் இடையில் மிகுந்த வித்தியாசமுண்டு. அப்போது அவரது சொற்களின் நேரடி அர்த்தம் , இனிமையில் மயங்கிய மனது, பின்னர் வளர்ந்ததும் அவற்றின் பின்னால் மறைந்து கிடக்கும் அர்த்தங்கள் கண்டு பிரமித்துப்போனது.

Sunday, April 20, 2025

கவிதை: துதியைத் துதிப்போரை மதிப்பேனா? மிதிப்பேனா?. - வ.ந.கிரிதரன் - (ஓவியம் -AI)


துதிபாடல், துதி நாடலால்
துவண்டு கிடக்கிறது
உலகு.

இருப்பின் தன்மை தெரிந்தால்
இதற்கொரு தேவை உண்டா?
இல்லை என்பதை உணரார்
இவர்.

பாதிப்பின் உணர்வுதனை
பரிசுத்தம் கெடாமல் பகர்வீர்.
பண்பாக்கி நடை பயில்வீர்.
பார் போற்றும். ஊர் போற்றும்.
யார்தாம் போற்றார்?

Friday, April 18, 2025

இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான புஸ்பராணி சிதம்பரி மறைந்தார்!


இலங்கைத்  தமிழர்தம் அரசியல் வரலாற்றில் புஷ்பராணி அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. எழுபதுகளில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நன்கறியப்பட்ட பெயர் அவருடையது.  தமிழ் மகளிர் பேரவையில் செயற்பட்ட முக்கியமானவர்களில் ஒருவர். தமிழர் உரிமைப்போராட்டத்தில் பல இன்னல்களை அனுபவித்தவர்களில் ஒருவர்.  அவரது போராட்ட அனுபவங்களை விபரிக்கும் 'அகாலம்' முக்கியமானதோர் ஆவணம். அவரது மறைவை முகநூல் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல்.  அவரது நினைவாக அவரது 'அகாலம்' நூல் பற்றி நான் எழுதியிருந்த கட்டுரையினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

Tuesday, April 15, 2025

கவிதை: சோக்க்ரடீசின் ஆரவாரம்! - வ.ந.கிரிதரன் -


நாம் மந்தைகள்.
மேய்ப்பர்களை எந்நேரமும் எதிர்பார்த்திருக்கும்
மந்தைகள்.
சொந்தமாகச் சிந்திக்க,
சீர்தூக்கி முடிவுகளை எடுக்க
எமக்குத் திராணியில்லை.
திராணியில்லையா
அல்லது
விருப்பு இல்லையா?

எப்பொழுதும் எமக்காக
யாரோ ஒருவர் எடுக்கும் முடிவுகளை
ஏற்றுக்கொள்வதில் எமக்கும்
தயக்கமெதுவுமில்லை.
தாராளமாக அவற்றை ஏற்றுக்கொள்ளும்
தாராளவாதிகள்
நாம் தாம், வேறு எவர்தாம்?

கருத்துகள் , மேய்ப்பர்களின் கூற்றுகள்
எம்மை உணர்ச்சி வெறியில்
துள்ளிக் குதிக்க வைக்கின்றன.
துள்ளிக் குதிக்கின்றோம்.
இன்பவெறியில் கூத்தாடுகின்றோம்.

ஆயிரம் வருடங்களுக்கு
முன்
சோக்கிரடீசு சொன்னான்:
'சுயமாகச் சிந்தியுங்கள்.
சீர்தூக்கிப் பாருங்கள்.
ஏன் என்று எதிர்க்கேள்வி கேளுங்கள்'
நாம் சிந்தித்தலை இழந்ததை
சோக்கிரடீசு இருந்திருந்தால்
அறிந்திருப்பான்.
அறியாமை கண்டு
ஆரவாரம் செய்திருப்பான்.

எழுத்தாளரும், நடிகருமான சோபாசக்தி மீதான பெண்ணிய அமைப்பின் அறிக்கை பற்றி...



'அதற்கமை பெண்ணியக் குழு / Adhoc Feminist Collective'  வெளியிட்ட  'ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை' அறிக்கை பார்த்தேன். அதன் கீழ் நன்கறியப்பட்ட ஆளுமையாளர்கள் பலர் கையொப்பமிட்டிருந்ததையும் பார்த்தேன். இவ்வறிக்கை பற்றிச் சமூக ஊடகங்களில் பலர் காரசாரமாக விவாதிப்பதையும் பார்க்கின்றென்.  பெண்ணியக் குழு / Adhoc Feminist Collective  வெளியிட்ட  'ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை - https://adhocfeministcollective.blogspot.com/2025/04/blog-post.html

இது முக்கியமான பல குற்றச்சாட்டுகளை எழுத்தாளரும் , நடிகருமான சோபாசக்தி மீது  முன் வைக்கும் அறிக்கை. அவர் சொன்னார், இவ்வறிக்கை பற்றிப் பலரும் தம் கருத்துகளைத்  தெரிவித்து வருகின்றார்கள். சிலர் இதிலுள்ள குற்றச்சாட்டுகளை அப்படியே உண்மைகளாக  ஏற்றுக்கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இவ்விதமாக ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை அணுகும் மனப்பான்மை பல மனித உரிமை மீறல்களை உருவாக்க வல்லது. போராட்டக்  காலத்தில் துரோகிகளாக்கப்பட்ட பலர் மீது, அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவற்றின் விளைவுகளை நாம் அறிவோம்.

Sunday, April 13, 2025

கனடாவில் வெளியான முதலாவது தமிழ்ச் சஞ்சிகை 'நிழல்'!


கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவிலிருந்து வெளியான முதலாவது சஞ்சிகை பற்றிப் பலரும் பலவாறு எழுதி வருகின்றார்கள். இவ்விதமான தவறான தகவல்கள் காலப்போக்கில் உண்மையான தகவல்களாகக் கருதப்பட்டு வரலாறு தவறாக எழுதப்பட்டு விடும் அபாயமும் உண்டு.

நானறிந்தவரை கனடாவில் வெளியான சஞ்சிகைகளைக்  கையெழுத்துச் சஞ்சிகைகள், அச்சு வடிவில் வெளியான சஞ்சிகைகள், இரண்டையும் உள்ளடக்கி, வெட்டி ஒட்டல்களுடன் வெளியான சஞ்சிகைகள் எனப் பிரிக்கலாமென்று கருதுகின்றேன்.

தமிழீழ மக்கள்  விடுதலைக்கழகத்தின் கனடாக் கிளை மொன்ரியாலிலிருந்து வெளியிட்ட 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகை   15.09.1984 தொடக்கம் 15.06.1985 வரை பத்து இதழ்கள் வெளியாகியுள்ளன. ஓரிரு  இதழ்களில் பத்திரிகைச் செய்திகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தாலும், சஞ்சிகை பெரும்பாலும் கையெழுத்துச் சஞ்சிகையாகவே வெளிவந்தது.  எனது மண்ணின் குரல் நாவல், கவிதைகள் சில, கட்டுரைகள் சிலவும் இச்சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. ரவி அமிர்தன், கோமகன், செங்கோடன் எனப் பலரின் படைப்புகளும் இச்சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன.  அடிப்படையில் இது ஒரு போராட்ட அமைப்பின் சஞ்சிகை என்றாலும் தமிழ் இலக்கியத்துக்கும் நாவல், கவிதை, கட்டுரை & கேலிச்சித்திரமெனப் பங்களிப்பு செய்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.

வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான். வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5 ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வ...