Tuesday, April 15, 2025

கவிதை: சோக்க்ரடீசின் ஆரவாரம்! - வ.ந.கிரிதரன் -


நாம் மந்தைகள்.
மேய்ப்பர்களை எந்நேரமும் எதிர்பார்த்திருக்கும்
மந்தைகள்.
சொந்தமாகச் சிந்திக்க,
சீர்தூக்கி முடிவுகளை எடுக்க
எமக்குத் திராணியில்லை.
திராணியில்லையா
அல்லது
விருப்பு இல்லையா?

எப்பொழுதும் எமக்காக
யாரோ ஒருவர் எடுக்கும் முடிவுகளை
ஏற்றுக்கொள்வதில் எமக்கும்
தயக்கமெதுவுமில்லை.
தாராளமாக அவற்றை ஏற்றுக்கொள்ளும்
தாராளவாதிகள்
நாம் தாம், வேறு எவர்தாம்?

கருத்துகள் , மேய்ப்பர்களின் கூற்றுகள்
எம்மை உணர்ச்சி வெறியில்
துள்ளிக் குதிக்க வைக்கின்றன.
துள்ளிக் குதிக்கின்றோம்.
இன்பவெறியில் கூத்தாடுகின்றோம்.

ஆயிரம் வருடங்களுக்கு
முன்
சோக்கிரடீசு சொன்னான்:
'சுயமாகச் சிந்தியுங்கள்.
சீர்தூக்கிப் பாருங்கள்.
ஏன் என்று எதிர்க்கேள்வி கேளுங்கள்'
நாம் சிந்தித்தலை இழந்ததை
சோக்கிரடீசு இருந்திருந்தால்
அறிந்திருப்பான்.
அறியாமை கண்டு
ஆரவாரம் செய்திருப்பான்.

No comments:

குறிப்பேடாக விளங்கிய 'சி.ஆர்.கொப்பி' (CR)

எண்பதுகளில் என் உணர்வுகளின் வடிகால்களாக இருந்தவை எழுத்துகளே. அப்பொழுதுதான் மார்க்சிய நூல்களை  வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஒரு வித வெறியுடன்...

பிரபலமான பதிவுகள்