Friday, April 11, 2025

புலமும், நிலமும் பற்றி..


 

"எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்.
யானும் நீயும் எவ்வழி அறிதும்.
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."

(இக்காட்சியினைப் பிரதிபலிக்கும் ஓவியத்தை வரைந்தது AI)

எழுத்தாளர் அருண் செல்லப்பா தன் முகநூற் பதிவில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். "புலம் பெயர்தல் இதன் எதிர்ப் பதம் எதுவாக இருக்கும்.?"

இதற்கு நான் பதிலளித்திருந்தேன்: "புலம் திரும்புதல்."

புலம் மீளல் என்றும் கூறலாம்.

அதற்கு அவர் எதிர்வினையாற்றியிருந்தார் : "நான் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தேன்;; எனவே கனடாதான் எனக்குப் புலம். இதன் மறுவளம் என்ன என்பதே கேள்வி."]

இதற்கு நான் இவ்வாறு பதிலளித்திருந்தேன்: 'புலம் என்றால் அர்த்தம் நிலம். தன் நிலத்தை விட்டுப் பெயர்தலே புலம் பெயர்தல். சங்கப் பாடல்களில் புலம் என்பது நிலம் என்னும் அர்த்தத்திலேயே கையாளப்பட்டுள்ளது.'

அதனை ஏற்று அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்: "உண்மைதான். நில புலம் வைத்திருப்போர், நிலச் சுவாந்தார் என்று தமிழில் சொல்லாடல் வருகின்றது. எனவே எனக்குக் கனடா புலம் அல்ல. புரிகிறது;; நன்றி"

இவர் இவ்விதம் ஆரம்பத்தில் கேட்பதற்குக் காரணம் புலம் என்றால் அது நிலத்துக்கு எதிர் என்று கருதியதால்தான். பலர் அவ்வாறே கருதுவதை நான் அவதானித்திருக்கின்றேன். பலர் கட்டுரைகளில் கூட அவ்வாறே கருதிக் கையாண்டுள்ளதையும் அவதானித்திருக்கின்றேன்.

உண்மையில் புலம் என்பது நிலத்தைக் குறிக்கும்., நிலத்தை விட்டு நீங்குவதையே புலம் பெயர்தல் என்று குறிப்போம். நிலம் என்னும் அர்த்தத்திலேயே புலம் என்னும் சொல் தமிழில் கையாளப்பட்டுள்ளது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையில் வரும் செம்புலப்பெயனீரார் (குறிஞ்சித்திணை) எழுதிய மேலுள்ள கவிதையிலும் இவ்வாறே கையாளப்பட்டுள்ளது.

இங்கு செம்புலப் பெயல் நீர் போல என்னும் வரியில் புலம் என்னும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் 'பெய்த மழை நீரானது செம்மண்ணுடன் ஒன்றாகக் கலந்து விடுவது போல் . அதாவது பெய்த மழை நீரானது செந்நிலத்துடன் ஒன்றாகக் கலந்து விடுவது போல் என்று பொருள்.

புலம் என்னும் சொல்லை வேறு அர்த்தத்திலும் தமிழில் பாவிக்கின்றோம். காந்தப்புலம், மின் புலம் (இங்கு சக்தி தொழிற்படும் பரப்பு என்னும் அர்த்தத்தில்) , தென் புலம் (திக்கு, திசை என்னும் அர்த்தத்தில்).



No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...