இங்குள்ள காணொளியை முழுமையாகப் பார்க்கவும். இந்த இளைஞர் கள்ள வழியில் கனடா செல்ல முற்பட்டு அழைந்த இன்னல்களை, இழந்த சொத்துகளைப் பற்றி இதில் விபரிக்கின்றார். இவ்வகையில் இது பயனுள்ள காணொளி. காணொளிக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=q4Y5Z-JdscU
ஆனால் முடிவில் இவர் கூறுகின்றார் வெளிநாடு போவதானால் சட்டபூர்வமான வழிகளில் செல்லுங்கள் என்று. அது சரியானது. ஆனால் இவ்வளவு இன்னல்களை அடைந்த பின்னும் இவருக்கு வெளிநாடு செல்லும் ஆசை நீங்கவில்லை என்பதையும் அது புலப்படுத்துகிறது.
போர்ச்சூழல் நிலவிய காலத்தில் ஒருவரின் இருப்பே கேள்விக்குரியதாக மாறிய சூழலில் மக்கள் அகதிகளாக வெளியேறினார்கள். கிடைத்த வழிகளில் வெளியேறினார்கள். அச்சூழலின் விளைவு அது.
ஆனால், இன்று அவ்விதமான சூழல் இல்லை. நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை இருந்தாலும் , வடக்கைப் பொறுத்தவரையில் வெளிநாடு சென்று எவ்விதமான தொழிலையும் செல்லத் தயாராகவிருக்கும் இளைஞர்கள் , அங்கு கட்டுமானத் தொழில்கள் போன்ற தொழில்களைக்கூடச் செய்யத் தயாராகவில்லை. தொழிற்சாலைகளில் வேலை செய்யத் தயாராகவில்லை.
இத்தருணத்தில் புகலிடத்திலிருந்து அங்கு சென்று தொழில் நடத்த முனைந்த தொழில் அதிபர் ஒருவர் கூறிய தகவல் நினைவுக்கு வருகின்றது. அவர் ஒரு தடவை கட்டுமான வேலைகளைச் செய்வதற்காக ஆட்களைத் தேடியபோது யாருமே அவ்வேலை செய்யத் தயாராகவில்லை. கடையில் அவற்றைச் செய்வதற்குத் தென்னிலங்கைத் தொழிலாளர்களே வந்து அவ்வேலைகளைச் செய்தார்கள்.
என்னைப்பொறுத்தவரையில் எம் காலத்தை விட இன்றுள்ள சமூக, அரசியல் & பொருளியற் சூழல் மாறிவிட்டுள்ளது. அரச உத்தியோகம், அல்லது வேலை கிடைக்கவில்லையென்று கவலைப்படாமல் சமூக ஊடகங்களின் உதவி கொண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. ஊடகத்துறையில் சுய தொழில் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. உலகம் முழுவதும் இலங்கைத் தமிழர்கள் பரந்து வாழ்கின்றார்கள்.இவர்களது பல் வகைத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய சுய தொழில்கள் பல உள்ளன. பெண்கள் பலர் தமிழர்கள் வாழும் நாடுகளிலுள்ள பலசரக்குக் கடைகளுக்காக ஊறுகாய், மிளகாய்ப்பொரியல், மிளகாய்த்தூள் போன்ற பல பொருட்களைச் செய்து அனுப்பும் தொழிலை வெற்றிகரமாகச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
பல்வேறு துறைகளிலும் இவ்விதம் சுய தொழில்களைச் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவற்றைப் பாவிக்க வேண்டும். தம்மைப் பொருளியல் ரீதியில் பலப்படுத்தி வெளிநாடுகளுக்குச் செல்லலாம். குழ்ந்தைகளை மேற்படிப்புக்காக அனுப்பலாம். இவ்விதம்தான் சிந்திக்க வேண்டும்.
பல்வேறு தொழிலகளையும் செய்து அங்கு அடிக்கடை பயணிக்கும் புகலிடத்தமிழர்கள் காட்டும் பந்தா கண்டு வெளிநாட்டுக் கனவுகளில் காலத்தை வீணாக்காதீர்கள். ஒரு கோடி செலவழித்து எதற்காக வெளிநாடு செல்ல வேண்டும்? அந்தப்பணத்தை வங்கியில் தவணை முறையில் வைப்பிலிட்டால் கூட வருடா வருடம் போதிய அளவில் வட்டிப்பணம் கிடைக்கும். அவ்வட்டியை அடித்தளமாகக்கொண்டு உங்கள் கல்வியை, தொழில் திறமையை உயர்த்திக்கொள்ளுங்கள். சுய தொழில்களைச் செய்யுங்கள். உங்களுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பயனளிக்கும் செயலாக அது அமையும்.
* ஓவியம் - AI
No comments:
Post a Comment