Friday, April 11, 2025

எழுத்தாளர் க.அருள் சுப்பிரமணியத்தின் 'அக்கரைகள் பச்சையில்லை'


எழுத்தாளர் க.அருள் சுப்பிரமணியம் அவரது 'அவர்களுக்கு வயது வந்து விட்டது' நாவல் மூலம் நன்கறியப்பட்டவர். மானுட அனுபவங்களைச் சுவையாக , அனுபவபூர்வமாக விபரிப்பதில் வல்லவர். உதாரணத்துக்கு ஒருவர் குடிக்கும் அனுபவத்தை விபரிக்க வேண்டுமானால், அவ்வனுபவத்தை அனுபவ பூர்வமாக, உயிர்த்துடிப்புடன் விபரிப்பார். அதை வாசிக்கையில் அவ்வனுபவம் நமக்கும் வந்து விடும்.


இந்நாவல் பல அக்காலகட்டத்தகவல்களையும் தருகின்றது. உதாரணத்துக்கு ஒன்று - திருகோணமலைத் துறைமுகத்திலுள்ள மாதவன் நாயரின் தேநீர்க் கடை பற்றி வருகின்றது. கதை கற்பனைக் கதையானாலும் அக்காலத்தில் கேரளத்து நாயர்களும் அங்கு தேநீர்க் கடை போன்ற வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதனால்தான் மாதவன் நாயர் என்னும் பாத்திரமும் நாவலில் வருகின்றது என்றே நான் கருதுகின்றேன். இது தவறென்றால் அறிந்தவர்கள் அறியத் தரவும்.'அக்கரைகள் பச்சையில்லை' என்னும் இந்நாவல் இன்றைய இளைஞர்களுக்கு ஆரோக்கியமான அறிவுரை கூறும் நல்லதொரு நாவல். திருகோணமலைத் துறைமுகத்தை மையமாகக்கொண்ட் நாவலில் , அங்கு பணிபுரியும் ஒருவரது மகன் படித்து விட்டு வேலை வாய்ப்பற்ற நிலையில் கப்பலில் வேலை செய்வதற்காகப் புலம் பெயர்கின்றான். அவனது கசப்பான கப்பல் அனுபவங்கள் காரணமாக , அவன் மீண்டும் நாடு திரும்புகின்றான். வெளிநாட்டுக் கனவுகளுடன் புறப்பட்டவனின் கனவுகள் எவ்விதம் நொருங்குகின்றன என்பதை விபரிக்கும் நாவல்.


இன்று நம் இளைஞர்கள் பலரும் புலம் பெயர
வேண்டுமென்ற கனவுகளில் மூழ்கிக்கிடக்கின்றார்கள். அவர்களுக்கும் அக்கரைகள் பச்சையில்லை என்பதை நாட்டை விட்டு நீங்கினால் மட்டுமே புரிந்து கொள்வார்கள்.

இந்தக் கதை விகடன் நடத்திய பொன்விழா நாவல் போட்டியில், 'தூரத்து ஓவியங்கள்' என்னும் பெயரில், முதற் பரிசு பெற்றது. பின்னர் ஏற்கனவே 'அக்கரைகள் பச்சையில்லை' என்னும் பெயரில் வீரகேசரி பிரசுர்மாக வெளியான காரணத்தினால் தகுதியிழந்தது. ஆனால் இவர் பின்னர் அதே ஆனந்த விகடனில் 'சூரசம்ஹாரம்' என்னும் பெயரில் இன்னுமொரு தொடர்கதையையும் எழுதியிருக்கின்றார்.

நாவலை வாசிக்க - https://noolaham.net/project/876/87599/87599.pdf

No comments:

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்