Friday, June 6, 2025

மருத்துவர் கதிரவேலு சந்தரின் (Kathiraveloo Santher) வெளிவரவுள்ள மனநல நூல் பற்றிய சிந்தனைகள்! -


நயகரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் கடந்த ஐம்பதாண்டுகளாக மனநல மருத்துவராகப் பணியாற்றி வருபவர் மனநல் மருத்துவர் கதிரவேலு சந்தர் (Kathiraveloo Santher). மருத்துவர் கென் சந்தர் (ken Santher) என்று அறியப்பட்டவர்.  இவர் 2015ஆம் ஆண்டில் 'நம்பிக்கை விருது ( Hope Award) குழந்தைகளுக்கான மனநலச்சேவைக்காக இவ்விருதினைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் இவரை இவரது இல்லத்தில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது.  அந்தச்சந்திப்பின்போது அவர் தன் மகள் கல்யாணி சந்தருடன் இணைந்து எழுதிக்கொண்டிருக்கும் மனநலத்தைப் பற்றிய ஆங்கிலப் புத்தகம் குறித்து அறியும் சந்தர்ப்பம் கிட்டியது. கல்யாணி சந்தரும் உடல நலத்துறையில் பணியாற்றுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மகிழ்ச்சியின் மீதான அழுக்குகள் , அவை யாவை?, அவற்றை எவ்வாறு நீக்கி வாழ்வில் மகிழ்ச்சியை அடைவது ? சிந்தனைகள் என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன? போன்ற தலைப்புகளில் நூல் அமைந்திருப்பதை மேற்படி உரையாடலின்வாயிலாக அறிந்துகொண்டேன். தனது இதுவரை கால மனநல மருத்துவத்துறை அனுபவங்களின் அடிப்படையில் அவரது எண்ணங்களைப் பிரதிபலிக்கும் நூலாக இந்நூல் அமையவிருப்பதைப் புரிந்து கொண்டேன். உரையாடலின்போது உரையாடுபவரின் உரையினை முழுமையாக உள் வாங்கித் தன் கருத்துகளை அவர் வெளிப்படுத்தும் பாங்கினை இரசித்தேன். நம்மில் பலரும்  உரையாடலை முழுமையாக உள் வாங்காமல் முண்டியடிப்பதைப் பார்த்திருந்த எனக்கு இவரது கூறப்படுபவற்றை உள் வாங்கி உரையாடும் பாங்கு மகிழ்ச்சியைத்தந்தது.

'டொரோண்டோ'க் காட்சி: உயர்ந்த கோபுரங்கள்!


'டொரோண்டோ' அகநகரின் (Downtown)ஃப்ரொண்ட் வீதி, யுனிவெர்சிட்டி வீதி, யங் வீதி, குயீன் வீதி,  இவற்றை உள்ளடக்கிய பகுதியைக் கனடாவின் நிதி மையம் என்பார்கள் (Financial Center). இந்நிதி மையத்தையும், ஒண்டாரியோ வாவியையும் ஊடறுத்தபடி கார்டினர் நெடுஞ்சாலை செல்லும். நிலத்திலிருந்து உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை இது.

இவ்விதம் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை என்பதால் , ஒண்டாரியோ வாவியை நகரத்திலிருந்து பிரித்து விடுகின்றது. மிகவும் முக்கியமான , நில மதிப்புள்ள பகுதியை இந்நெடுஞ்சாலை வீணாக்குகின்றது என்று விமர்சனங்களும் அவ்வப்போது எழுவதுண்டு. அது ஒருவகையில் உண்மைதான். ஆரம்பத்தில் கிழக்கில் லெஸ்லி வீதியிலிருந்து ஆரம்பமாகிய இந்நெடுஞ்சாலை இப்போது டொன்வலிப் பார்க் வே நெடுஞ்சாலையிலிருந்து ஆரம்பமாகின்றது. லெஸ்லி தொடக்கம்  டொன்வலிப் பார்க் வே நெடுஞ்சாலை வரையிலான பகுதி நீக்கப்பட்டு, அப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டு விட்டது. 

இது போல் கார்டினர் நெடுஞ்சாலை முழுவதுமாக நீக்கப்பட்டு, அதை நிலத்துக்குக் கீழ் செல்லும் வகையில் அமைப்பதனால் நன்மையுண்டு என்று அவ்வப்போது இது பற்றி அரசியல்வாதிகள் சிலர் கருத்துகள் கூறுவதுண்டு.

இது ஒருவிதமிருக்க, எனக்கு இந்நெடுஞ்சாலையூடு இரவு கவிந்திருக்கும், போக்குவரத்து குறைந்து அமைதியிலாழ்ந்திருக்கும் பொழுதுகளில் பயணிப்பது மிகவும் பிடிக்கும். அதுபோல் அதிகாலை, அந்திப்பொழுதுகளில் , போக்குவரத்து குறைவாகக் காணப்படும் பொழுதுகளிலும்  பயணிப்பதும்  பிடிக்கும்.  முக்கிய காரணம், சுற்றிவர நெடியதாக, உயர்ந்திருக்கும் கட்டட்டங்களை ஊடறுத்து, காற்றினூடு பறப்பது போன்றதோர் உணர்வினை , நிலத்திலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் இந்நெடுஞ்சாலை தருவதுதான்.

இங்குள்ள புகைப்படம் , இவ்விதம் எழுத்தாளர் கடல்புத்திரனின் வாகனத்தில் பயணியாகப் பயணிக்கையில் நான் எடுத்த புகைப்படம். 'டொரோண்டோ'  அகநகரத்தின் உயர்மாடிக் கட்டடங்களையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள். இவை சாய்ந்து இருப்பதுபோல் தெரிந்தாலும், இவை சாய்ந்த கோபுரங்கள் அல்ல. ஐபோன் கமராவின் மூலம் புகைப்படத்தை எடுத்த கோணத்தின் விளைவு அது.

Tuesday, June 3, 2025

இலக்கணமும், இலக்கண மீறல்களும், வழக்கும்!


தமிழ் இலக்கணம் தெரியாத பலர் இணையத்தில்  நிறைந்து கிடக்கின்றார்கள். வழக்கில் இலக்கண முரண்பாடுகள் நிறைய உள்ளன. வழக்கில் பாவிக்கப்படுவதால் அதுவே சரியென்று நினைத்து விடுகின்றோம். வழக்கில் நீண்ட காலமாகப் பாவிப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை. 

ஆனால் ஒருவர் அம்முரண்பாடுகளை நீக்கி , இலக்கணம் மீறாமல் பாவிக்கும் சமயங்களில், அது உண்மை இலக்கணம் என்பது தெரியாமல் சரி, பிழை கண்டு பிடிக்க வந்து விடுகின்றார்கள். இதை என்னவென்று சொல்வது?

உதாரணத்துக்குக் கைமாறு, மெய்ஞானம், விஞ்ஞானம் என்று வழக்கில் பாவித்து வருகின்றோம். உண்மையில் இது இலக்கணரீதியாகப் பிழையென்றாலும், வழக்கில் நீண்ட காலமாகப் பாவிக்கப்பட்டு வருவதால், இவற்றை ஏற்பதில் எனக்குத் தயக்கமில்லை. உண்மையில் நானும் கூட விஞ்ஞானம் என்றுதான் பாவித்து வருகின்றேன். ஆனால் சில சமயங்களில் இலக்கணம் மீறாமலும் பாவிக்க நான் விரும்புவதுண்டு. 

அண்மையில் மெய்ம்மறந்து என்று என் முகநூற் பதிவொன்றில் பாவித்திருந்தேன். இலக்கணரீதியாக மெய்ம்மறந்து என்று பாவிக்க வேண்டுமென்றாலும், நானும் வழக்கமாக மெய்மறந்து என்றுதான் பாவிப்பதுண்டு. ஆனால் மேற்படிப் பதிவில் மெய்ம்மறந்து என்று பாவித்திருந்தேன். அவ்விதம் ஒரு காட்சியில்  என்னை இழந்திருந்தததன்  ஆழத்தை, அளவினை மெய்ம்மறந்து என்னும் உச்சரிப்பு காட்டுவதாக எனக்குத் தென்பட்டதால் அவ்விதம் பாவித்திருந்தேன். 

இலக்கணம் மீறல்கள் பற்றிய உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள். 

இவ்விலக்கண விதி பற்றிய ஆறுமுகநாவரின்  'இலக்கணச் சுருக்கம்' நூலின் பக்கமொன்றினையும் கீழே பகிர்ந்திருக்கின்றேன்.



நயாகரா நீர்வீழ்ச்சிச் சாரலில் மெய்ம்மறந்து நின்றபோது...


எனக்கு முன்னிரவுப் பொழுதொன்றில் நயகாரா நீர்வீழ்ச்சியை இரசிப்பதில் பெரு விருப்புண்டு.  நேற்று அத்தகையதொரு சந்தர்ப்பம் வாய்த்தது. 

போக்குவரத்து ஆரவாரம் அற்ற தருணமொன்றில் , நீர்வீழ்ச்சிச் சாரலை, வர்ணங்களில் கணத்துக்குக் கணம் நிறம் மாறும் நீர் வீழ்ச்சியின் அழகை, அவ்வர்ண ஒளியை ஊடறுத்து ஒளித்துண்டுகளாக ஒளிர்ந்து மறையும் கடற்பறவைகளின் சிறகடிப்புகளை , உலக மானுடர் பலரின் ஒன்று கூடலை, வாண வேடிக்கையின் வர்ணஜாலத்தின் பேரழகினை  இரசிப்பதென்றால் அது இத்தகைய பொழுதுகளில்தாம்.

அத்தகையதொரு பொழுதில் எடுத்த புகைப்படங்கள் சில இவை. கண்டு களியுங்கள்.


 

Sunday, June 1, 2025

'புலம்பெயர் தமிழ்ப் படைப்புகள் - அடையாளத்திற்கான தேடல்' - கலாநிதி சு.குணேஸ்வரன்


புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர் இலக்கியம் பற்றி ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர் கலாநிதி சு.குணேஸ்வரன். திறனாய்வு, கவிதை என அவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது. புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியவர். 
 
அண்மையில் 'ரொரன்றோ தமிழ்ச் சங்க'த்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற , இணைய வழிக் கலந்துரையாடலில் 'புலம்பெயர் தமிழ்ப் படைப்புகள் - அடையாளத்திற்கான தேடல்' என்னும் தலைப்பில் அவர் ஆற்றிய உரை இது. இதனை 'இலக்கியவெளி டிவி' யு டியூப் சானலில் பகிர்ந்திருந்தார்கள். இதன் முக்கியத்துவம் கருதி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
 

யாழ் பொதுசன நூலக நினைவுகள்....


ஜூன் 1, 1981. யாழ் பொது சன நூலகம் எரிக்கப்பட்ட நாள். யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். நாகரிகத்தின் உச்சியிலிருப்பதாகக் கூறிப் பெருமிதமுறும் மனித இனமே நாணித்தலை குனிய வேண்டிய தினம். நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதிகளெல்லாம் நெருப்போடு நெருப்பாக அழிந்தே போய்விட்டன. இவற்றின் அழிவினைத் தாங்க மாட்டாத பாதிரியார் ஒருவரும் (தாவீது அடிகள்) மாரடைப்பால் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். 

 பொதுவாக  அவ்வப்போது யாழ் பொதுசன நூலகம் பற்றிய நினைவுகள் தோன்றுவதுண்டு. இந்த நூலகத்துடனான எனது உறவு பின்னிப்பிணைந்ததொன்று. என்  மாணவப்பருவத்துத் தோழர்களில் முக்கியமான தோழனாக விளங்கிய நூலகம். பன்முகப்பட்ட அறிவினை அள்ளி வழங்கிய சிறந்த நண்பன். எவ்வித எதிர்பார்ப்புகளுமற்று அதனை வாரி வழங்கிய நண்பன். யாழ் பொது நூலகத்தை எண்ணியதும் எப்பொழுது முதன் முதல் அதனுடனான எனது தொடர்பு ஏற்பட்டது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.

என் பால்யகாலத்தில் நான் என் ஆரம்பக் கல்வியை வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் எட்டாம் வகுப்பிலிருந்து கல்விப்பொதுத்தராதர உயர்தர வகுப்பு வரை யாழ் இந்துக்கல்லூரியில் தொடர்ந்தது. வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் பாடசாலை விடுமுறையின்போது என் அம்மாவின் சகோதரியொருவரின் பிள்ளைகள் வவுனியா வருவார்கள். அல்லது நாம் யாழ்ப்பாணத்துக்கு ஆச்சி வீடு செல்வோம். அவ்விதம் செல்கையில் அக்கா முறையிலான எனது ஒன்று விட்ட சகோதரியொருவர் , என்னைவிட சுமார் ஏழு வயது மூத்தவர், யாழ் நூலகத்துக்கு செல்கையில் என்னைத் துணைக்கழைத்துச் செல்வார். காற்சட்டையும் , சட்டையுமாக நானும் அவருடன் செல்வேன். அக்காலகட்டத்தில் நான் பொதுவாக நடக்கும்போது மிகவும் விரைவாக நடந்து செல்வேன். என்னைத் துணைக்கழைத்துச் செல்லும் அக்காவுக்கோ என் நடை வேகத்துடன் ஈடு கட்டி நடப்பதற்குச் சிரமமாயிருக்கும். இருந்தாலும் அவரும் இயலுமானவரையில் ஈடு செய்தபடி என்னுடன் நடந்து வருவார். ஆயினும் அவ்விதம் நடந்து வருகையில் 'ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே. மெதுவாப் போடா. மூச்சு வாங்குது 'என்னும் அர்த்தப்பட  வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டுதான் கூட நடந்து வருவார். அவருடன் யாழ் நூலகத்துச் சென்றதுதான் முதற் தடவை. 

Saturday, May 31, 2025

"இணையக் காப்பக'த்தில் எனது ஆக்கங்கள்!


வணக்கம் நண்பர்களே! இணையக் க் காப்பகத்தில் (Archive.org) என்னுடைய பல படைப்புகள் , பதிவுகள் இணைய இதழில் வெளியான படைப்புகளின் தொகுப்புகள் உட்பட மேலும் பல படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
 
இணையக் காப்பகத்தில் சகல வகையான குறுவட்டுகள், இறுவட்டுகள், நூல்களின் பிடிஃப் பிரதிகள் என பலவற்றையும் ஆவணப்படுத்த முடியும். படுத்துங்கள். பயனடையுங்கள்.பலர் பயனடைவார்.
 

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...