Sunday, June 1, 2025
யாழ் பொதுசன நூலக நினைவுகள்....
ஜூன் 1, 1981. யாழ் பொது சன நூலகம் எரிக்கப்பட்ட நாள். யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். நாகரிகத்தின் உச்சியிலிருப்பதாகக் கூறிப் பெருமிதமுறும் மனித இனமே நாணித்தலை குனிய வேண்டிய தினம். நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதிகளெல்லாம் நெருப்போடு நெருப்பாக அழிந்தே போய்விட்டன. இவற்றின் அழிவினைத் தாங்க மாட்டாத பாதிரியார் ஒருவரும் (தாவீது அடிகள்) மாரடைப்பால் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
பொதுவாக அவ்வப்போது யாழ் பொதுசன நூலகம் பற்றிய நினைவுகள் தோன்றுவதுண்டு. இந்த நூலகத்துடனான எனது உறவு பின்னிப்பிணைந்ததொன்று. என் மாணவப்பருவத்துத் தோழர்களில் முக்கியமான தோழனாக விளங்கிய நூலகம். பன்முகப்பட்ட அறிவினை அள்ளி வழங்கிய சிறந்த நண்பன். எவ்வித எதிர்பார்ப்புகளுமற்று அதனை வாரி வழங்கிய நண்பன். யாழ் பொது நூலகத்தை எண்ணியதும் எப்பொழுது முதன் முதல் அதனுடனான எனது தொடர்பு ஏற்பட்டது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.
என் பால்யகாலத்தில் நான் என் ஆரம்பக் கல்வியை வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் எட்டாம் வகுப்பிலிருந்து கல்விப்பொதுத்தராதர உயர்தர வகுப்பு வரை யாழ் இந்துக்கல்லூரியில் தொடர்ந்தது. வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் பாடசாலை விடுமுறையின்போது என் அம்மாவின் சகோதரியொருவரின் பிள்ளைகள் வவுனியா வருவார்கள். அல்லது நாம் யாழ்ப்பாணத்துக்கு ஆச்சி வீடு செல்வோம். அவ்விதம் செல்கையில் அக்கா முறையிலான எனது ஒன்று விட்ட சகோதரியொருவர் , என்னைவிட சுமார் ஏழு வயது மூத்தவர், யாழ் நூலகத்துக்கு செல்கையில் என்னைத் துணைக்கழைத்துச் செல்வார். காற்சட்டையும் , சட்டையுமாக நானும் அவருடன் செல்வேன். அக்காலகட்டத்தில் நான் பொதுவாக நடக்கும்போது மிகவும் விரைவாக நடந்து செல்வேன். என்னைத் துணைக்கழைத்துச் செல்லும் அக்காவுக்கோ என் நடை வேகத்துடன் ஈடு கட்டி நடப்பதற்குச் சிரமமாயிருக்கும். இருந்தாலும் அவரும் இயலுமானவரையில் ஈடு செய்தபடி என்னுடன் நடந்து வருவார். ஆயினும் அவ்விதம் நடந்து வருகையில் 'ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே. மெதுவாப் போடா. மூச்சு வாங்குது 'என்னும் அர்த்தப்பட வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டுதான் கூட நடந்து வருவார். அவருடன் யாழ் நூலகத்துச் சென்றதுதான் முதற் தடவை. இந்த யாழ் பொதுசன நூலகம் என்னைப் பொறுத்தவரையில் என் வாழ்க்கையில் ஓர் அங்கமே என்று கூறிக்கொள்ளும் வகையில் ஆகிவிட்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் பல தடவைகள் அங்கு செல்வதுண்டு. என்னைப் பொறுத்தவரையில் நான் வணங்கும் ஆலயங்கள் என்றால் அவை நூலகங்களே. அதிலும் இந்த யாழ் நூலகத்துக்குத் தனி முக்கியத்துவமுண்டு. சிறுவர் நூல்கள், அறிவியல் நூல்கள், வெகுசன நாவல்கள், கவிதைகள், நாடகங்கள், இலக்கிய நூல்கள் ... என எத்தனை வகையான நூல்கள். நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இந்த நூலகத்தில் எத்தனையோ அறிவியல் நூல்களைப் படித்திருக்கின்றேன். மிகவும் அழகாக விஞ்ஞானத்தின் பல்வேறு பிரிவுகளிலும் நூல்களை அக்காலகட்டத்தில் சென்னையிலுள்ள பதிப்பகமொன்று வெளியிட்டுக்கொண்டிருந்தது. 'பெளதிகத்தின் வரலாறு', 'கடலின் வரலாறு', 'உயிரினங்களின் வரலாறு',.. என்பது போன்ற தலைப்புகளிருக்கும்.
'பெளதிகத்தின் வரலாறு' என்னுமந்த நூலில் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற சக்திக்கும், பொருளுக்குமிடையிலான தொடர்பினை வெளிப்படுத்தும் சூத்திரத்தை, ஒளித்துகளுக்கு உந்தம் மற்றும் இயக்கச்சக்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய சூத்திரங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நிறுவியிருந்தது இன்னும் பசுமையாக மனதிலுள்ளது. 'நீங்களும் விஞ்ஞானியாகலாம்' என்றொரு நூல் மிகவும் அழகான சித்திரங்களுடன் வெளியாகியிருந்தது. அக்காலகட்டத்தில் மிகவும் பிடித்த புத்தகங்களில் அதுவுமொன்று. அதில் உருப்பெருக்கும் கண்ணாடியுடன் சிறுவர்கள் வீட்டின் பின்புறத்தே ஆய்வில் ஈடுபட்டிருக்கும் காட்சியினைச் சித்திரிக்கும் வகையில் சித்திரங்களிருந்தன. மாணவர்களுக்கு விளங்கும் வகையில் விஞ்ஞானப் பரிசோதனைகள் பல அந்நூலில் விபரிக்கப்பட்டிருந்தன. அப்போது வெளியாகிக்கொண்டிருந்த அறிவியற் சஞ்சிகையான 'கலைக்கதிர் சஞ்சிகை 'யினை வெளியிட்ட நிறுவனம் வெளியிட்டிருக்க வேண்டும். இவ்வகையான அறிவியல் நூல்கள் எங்கள் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. மேற்படி விஞ்ஞான நூல்களில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் பிரசுரமான அறிவியல் நூல்களின் தரமான மொழிபெயர்ப்புகளே.
தமிழ் இலக்கியத்தின் புகழ்பெற்ற வெகுசன நூல்கள் பல அந்த நூலகத்திலிருந்தன. கல்கியின் பொன்னியில் செல்வன் , அலையோசை தொடக்கம் சாண்டில்யனின் கடல்புறா போன்ற நூல்கள் வரை அந்நூலகத்திலிருந்தன. இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாடமி வெளியிட்ட நூல்கள் பலவற்றின் மொழிபெயர்ப்புகள் அங்கிருந்தன. சிவராம் காரந்தின் புகழ்பெற்ற நாவலான 'மண்ணும் மனிதரும்' நாவலை முதன் முதலில் அங்குதான் வாசித்தேன். பேர்ல் பக்கின் 'நல்ல நிலம்' நாவலினையும் அங்குதான் முதலில் படித்தேன்.
யாழ்ப்பாண நூலகம் என்றதும் எனக்கு நினைவில் வரும் இன்னுமொரு முக்கியமான விடயம். அது அமைந்துள்ள சூழல். பண்ணைக்கடல், திறந்த வெளிகளை உள்ளடக்கிய யாழ் முற்ற வெளி, திறந்த வெளியரங்கு, சுப்பிரமணியப்பூங்கா, சரித்திரம் கூறி நிற்கும் யாழ் டச்சுக் கோட்டை, முனியப்பர் கோயில்.. இவற்றுக்கு மத்தியில் வீணையும் கையுமாக வரவேற்கும் சரஸ்வதி தேவியின் சிலையுடன் அமைந்த யாழ்பொது நூலகம் அமைந்திருந்தது. காற்று எப்பொழுதும் சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருக்கும். யாழ் நூலகத்தை நெருங்கையிலேயே ஒருவித அமைதியை, இனிமையை உணரத்தொடங்கிவிடுவோம். நூலகத்தைச் சுற்றியுள்ள அமைதி கலந்த சூழலே அங்கு செல்லுமொருவருக்கு அங்கு சென்று வாசிப்பதற்குரிய உணர்வினை ஏற்படுத்தி விடும். யாழ் நூலகத்தில் வாசிப்பது மட்டுமல்ல அதனை நோக்கிச் செல்வது கூட இன்பமானதோர் உணர்வுதான்; அனுபவம்தான். அபிவிருத்தி என்னும் போர்வையில் அப்பகுதிச் சூழலைச் சிதைத்து விடாமல் , நகர அமைப்பாளர்கள் எதிர்காலத்திலும் யாழ் நகர அபிவிருத்தித்திட்டங்களை வடிவமைப்பது மிகவும் அவசியம்.
நூலகத்தின் வடிவமைப்பும் கூட எளிமையானது ஆனால் அதே சமயம் நூலகமொன்றுக்குரிய சூழலை ஏற்படுத்தித்தரும் வகையில் அமைந்துள்ளதொன்று. உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் நூல் இரவல் பெறும் பகுதி, வலது பக்கம் பத்திரிகை, சஞ்சிகைகள் வாசிப்பதற்குரிய கூடம். யாழ் பொதுசன நூலகம் மட்டுமல்ல அது பற்றிய நினைவுகளும் பசுமையானவை; இனிமையானவை.
Subscribe to:
Post Comments (Atom)
ஆகஸ்ட் 2026இல் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள்!
ஆகஸ்ட் மாதம் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள், அவர்கள் பார்த்த பக்கங்கள் பற்றிய விபரங்கள் இவை! வருகை தந்தவர்கள் (Unique Visitors) - 5...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...

No comments:
Post a Comment