Saturday, June 21, 2025

எழுத்தாளர் நடேசனின் புலம்பெயர் இலக்கியம் பற்றிய கருத்துகள் பற்றி....

எழுத்தாளர் நடேசன் தனது முகநூல் பக்கத்தில் புலம்பெயர் இலக்கியம் பற்றியொரு பதிவினை இட்டிருக்கின்றார். அதில் அவர் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்: 

1. புலம்பெயர் இலக்கியம் - இலக்கியம் புலம் பெயர்வது இல்லை. இந்த சொற்றொடர் தவறாகும்.

2. புலம் பெயர்ந்தோர் இலக்கியம் படைத்தால் அதை புலம்பெயர் பெயர்தோர் இலக்கியம் எனலாம். ஆனால்  பெரிய முக்கியமான விடயம் இல்லை. 

3. தமிழ் நாட்டில் அக்காலத்தில் பிராமணர் இலக்கியம் படைத்தார்கள்  இப்பொழுது மற்றைய சாதியினரும் படைக்கிறார்கள். அவை எல்லாம் எனக்கு தமிழ் நாட்டில் இருந்து வந்த தமிழ் இலக்கியமே.  

4. யாராவது மாகாபாரதம், இராமாயணம்த்தை போரிலக்கியம் என்றால் எப்படி இருக்கும்?

5. இலங்கையில் இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்கள் எழுதுவது மட்டுமே தமிழ் இலக்கியம் ஆகாது . நீங்கள் எழுதுவது டயஸ்போரிக் இலக்கியம்,  என்றால் என்ன நியாயம்?

6. இந்த டயஸ்போரிக் வார்த்தை யூதர்களினால் உருவாக்கப்பட்டது . 

7. வெளிநாடுகளில் இருந்து சிங்கள மொழியில் எழுதும் சிங்களவர்கள் இந்த சொல்லடையை பாவிப்பதில்லை.

8. எனது அசோகனின் வைத்தியசாலை,  பண்ணையில் ஒரு மிருகம்,   வாழும்சுவடுகள் டயஸ்போரிக் இலக்கியவகையை அல்ல .தமிழ் இலக்கியத்தில் எவரும் தொடாத  ஒரு பகுதி என சொல்கிறேன்.


 எழுத்தாளர் நடேசன் 

1. ///இலக்கியம் புலம் பெயர்வது இல்லை. இந்த சொற்றொடர் தவறாகும். // 

இதில் தவறெதுவும் இருப்பதாக நான் கருதவில்லை. பல்லின மக்களும் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்கின்றார்கள். புலம்பெயர் இலக்கியம் என்பது புலம்பெயர் மக்கள் படைக்கும் இலக்கியம். புலம்பெயர் தமிழர் இலக்கியம் அல்லது புலம்பெயர் தமிழ் இலக்கியம், புலம்பெயர் சீனர் இலக்கியம் அல்லது புலம்பெயர் சீன இலக்கியம் , புலம்பெயர் இந்தியர் இலக்கியம் அல்லது புலம்பெயர் இந்திய இலக்கியம் என்று மேலும் பிரித்துக் கூறலாம்.  புலம்பெயர் இலக்கியம் என்பது புலம்பெயர் மக்கள் படைக்கும் இலக்கியத்தையே குறிக்கும்.  புலம்பெயர் இலக்கியம் என்ன்னும் சொற்றொடர்  இலக்கியம் புலம்பெயர்கிறது என்னும் அர்த்தத்தில் பாவிக்கப்படவில்லை.  புலம்பெயர் மக்கள் படைக்கும் இலக்கியம் என்பதையே சுருக்கமாக இவ்விதம் குறிப்பிடுகின்றார்கள்.

2. // புலம் பெயர்ந்தோர் இலக்கியம் படைத்தால் அதை புலம்பெயர் பெயர்தோர் இலக்கியம் எனலாம். ஆனால்  பெரிய முக்கியமான விடயம் இல்லை. // 

புலம்பெயர்பவர்கள் பல்வேறு காரணங்களுக்காகப்  புலம்பெயர்கின்றார்கள். கல்விக்காக, வேலைக்காக, நாட்டுச் சூழல் காரணமாகப் புகலிடம் நாடி எனப் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்கின்றார்கள். எல்லோர் அனுபவங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. புகலிடம் நாடி ,சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்து, பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் , வாழ்க்கையின் சவால்களை எதிர்த்துத் தம்மைப் புதுமண்ணில் நிலை நிறுத்துவது என்பது முக்கியமான விடயம். அதனை முக்கியமான விடயம் இல்லையென்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.  அவர்கள் அனுபவங்களை, எண்ணங்களை, பாதிப்புகளைப் பிரதிபலிப்பதால இவ்வகையான புலம்பெயர் இலக்கியம் முக்கியமானது.

3. //தமிழ் நாட்டில் அக்காலத்தில் பிராமணர் இலக்கியம் படைத்தார்கள்  இப்பொழுது மற்றைய சாதியினரும் படைக்கிறார்கள். அவை எல்லாம் எனக்கு தமிழ் நாட்டில் இருந்து வந்த தமிழ் இலக்கியமே.  // 

தமிழ் இலக்கியம் என்றாலும், ஆய்வாளர் ஒருவர் இவ்விதம் பிரித்துப் பார்ப்பதில் தவறில்லை. பிராமணர் படைக்கும் இலக்கியத்தில் பாவிக்கப்படும் உரையாடல்கள், அணியும் ஆடை போன்ற விபரங்கள் தனித்துவமானவை.  அதுபோல் தலித் மக்கள், ஏனைய சமூக மக்களின் பண்பாட்டுக் கூறுகள் வித்தியாசமானவை. தமிழ் இலக்கியத்தில் காணப்படும் இவ்வகைப்பிரிவுகளைப் பிரித்துப் பார்ப்பதில் தவறில்லை. இப்பிரிவுகள் பற்றிய மேலதிகப் புரிதல்களுக்கு அவை வழி வகுக்கும். பிராமணர் படைக்கும் தமிழ் இலக்கியம் வேறானது. தலித் தமிழ் இலக்கியம் வேறானது. ஏனென்றால் மக்களின் அனுபவங்கள் வேறானவை. இவை அனைத்தும் தமிழ் இலக்கியத்தின் பிரிவுகள். தமிழ் இலக்கியம் என்பது இவ்வகையான பிரிவுகளை உள்ளடக்கியதுதான்.

4. // யாராவது மாகாபாரதம், இராமாயணம்த்தை போரிலக்கியம் என்றால் எப்படி இருக்கும்?// 

இராமாயணம், மகாபாரதத்தில் போர்கள் முக்கிய இடங்களை வகிக்கின்றன. ஆனால் இக்காவியங்கள் முழுவதும் போர்ச்சூழலில் நிகழ்ந்த சம்பவங்களை மட்டும் விபரிப்பவை அல்ல. இக்காவியங்களில் நிகழும் போர்கள் குறுகிய காலத்தில்  முடிந்து விடுபவை. நீண்ட காலம் நிகழ்ந்த  போர்கள் அல்ல. போர் இலக்கியமென்பது தவறுதான்.

5. // இலங்கையில் இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்கள் எழுதுவது மட்டுமே தமிழ் இலக்கியம் ஆகாது . நீங்கள் எழுதுவது டயஸ்போரிக் இலக்கியம்,  என்றால் என்ன நியாயம்?//

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் எழுதும் இலக்கியம் மட்டுமே தமிழ் இலக்கியம் என்று யாரும் கூறவில்லை. இல்ங்கைத்தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் படைக்கும் இலக்கியமும் பார்க்கப்படுகின்றது. புலம்பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியத்தைப் புலம்பெயர் தமிழர் இலக்கியம் என்று கூறுவதில் தவறில்லை. இலங்கைத் தமிழர்கள் தாம் நாட்டின் அரசியல் நிலை காரணமாகப் புகலிடம் நாடி புலம்பெயர்ந்தவர்கள். அவர்கள் படைக்கும் இலக்கியத்தைப் புகலிட இலக்கியம் என்றும் கூறலாம். 

6. //இந்த டயஸ்போரிக் வார்த்தை யூதர்களினால் உருவாக்கப்பட்டது . //

தவறு . ஆரம்பத்தில் யூதர்களின் பலவேறு நாடுகளையும் நோக்கிய சிதறலைக்  குறிக்கப் பயன்பட்டது. தற்போது சீனர்கள், தமிழர்கள், பாலஸ்தீனியர்கள் எனப் பல்வேறு நாட்டினரின் புகலிடம் நாடிய  புலம்பெயர்தலைக் குறிக்கவும் பயன்படுகின்றது. பல நாடுகளில் பல்கலைக்கழகங்களில்  இப்பிரிவில் ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

7. // வெளிநாடுகளில் இருந்து சிங்கள மொழியில் எழுதும் சிங்களவர்கள் இந்த சொல்லடையை பாவிப்பதில்லை.//

அவர்கள் பாவிக்கவில்லை என்பதால் , அவ்விதம் பாவிக்கக்கூடாது என்பதில்லை. ஆனால் பாவிக்கின்றார்கள். 

https://sangam.org/out-of-sri-lanka-tamil-sinhala-english-poetry-from-sri-lanka-its-diasporas/

https://www.tandfonline.com/doi/full/10.1080/00856401.2016.1111125

8. //எனது அசோகனின் வைத்தியசாலை,  பண்ணையில் ஒரு மிருகம்,   வாழும்சுவடுகள் டயஸ்போரிக் இலக்கியவகையை அல்ல .தமிழ் இலக்கியத்தில் எவரும் தொடாத  ஒரு பகுதி என சொல்கிறேன்.//

உங்கள் படைப்புகள் தமிழ் இலக்கியப் படைப்புகள். அதே சமயம் புலம்பெயர் இலங்கைத் தமிழர் படைக்கும் இலக்கியமும் உள்ளடக்கும் படைப்புகள். சல்மான் ருஷ்டி போன்றவர்களின் படைப்புகளும் ஆங்கில இலக்கியப்படைப்புகளாகக் கருதப்படும் அதே சமயம், அவை புலம்பெயர் இந்தியரின் இலக்கியப்  படைப்புகளாகவும் கருதப்படுகின்றன. 

புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் கனடாச் சிறுகதைகளின் வகிபாகம் குறித்து.. - வ.ந.கிரிதரன் -  https://vngiritharan230.blogspot.com/2024/11/1.html

No comments:

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்