Monday, June 16, 2025

எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணனுடன் ஒரு மாலைப்பொழுது!


இன்று கனடாவுக்குக் குடும்ப நிகழ்வு ஒன்றுக்காக வருகை தந்திருக்கும் எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதற்குக் காரணமான என் பால்ய காலத்து நண்பன் திருநாவுக்கரசுக்கு (வவுனியா) நன்றி.

உதயணன் அவர்களுடனான இச்சந்திப்பில் எழுத்தாளர் தேவகாந்தன், சமூக,அரசியற் செயற்பாட்டாளர் எல்லாளன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

'ஸ்டூஃப்வில்' (Stouffville) நகரில் அமைந்துள்ள 'சந்தோஷ் ஸ்பைஸ் பலஸ்' (Santhosh Spice Palace) உணவகத்தில் அனைவரும் கலந்துரையாடினோம். 

எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணன், நான் , சமூக, அரசியற் செயற்பாட்டாளர் எல்லாளன்.

புகலிட அனுபவங்கள், எழுத்துலக அனுபவங்கள், வவுனியா பற்றிய நனவிடை தோய்தல்கள், ஈழநாடு பத்திரிகையுடனான எழுத்துலக அனுபவங்கள்  எனப் பல்வேறு விடயங்களைத் தொட்டுச் சென்றது உரையாடல். எம் வெளியான நூல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டோம்.

வவுனியூர் இரா.உதயணன் நாடறிந்த எழுத்தாளர்களில்  ஒருவர்.  நாவல், சிறுகதை என இவரது இலக்கியப்பங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது. ஏப்ரில் மாத ஜீவநதி சஞ்சிகை 'வவுனியூர் இரா. உதயணன்' சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளில் இவரது நாவல்கள் தொடர்களாக வெளியாகியுள்ளன.  'விதி வரைந்த பாதையிலே' நாவலுக்காக இலங்கைச் சாகித்திய மண்டல விருதினையும், 'பனி நிலவு' நாவலுக்காக எழுத்தாளர் கு,சின்னப்பபாரதி விருதினையும் பெற்றவர். 

இடமிருந்து வலமாக - எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணன், நான் , எழுத்தாளர் தேவகாந்தன்.

எழுத்தாளர் வவுனியூர் இரா. உதயணனுடனான மாலைப்பொழுது இனிமையாகக் கழிந்தது.  இச்சந்திப்பில் எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் சிலவற்றையே இங்கு காண்கின்றீர்கள். 

'முத்தமழை' பாடல் பாடகி Dhee யின் குரலில்...


'முத்தமழை' பாடலின் பாடகி Dhee யின் குரலுக்கான காணொளியினையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.  

பாடகி டீ யின் குரல் நவகாலத்துக்குரியது. பாடகி சின்மயியின் குரல் தொண்ணூறுகளுக்கு உரியது.  இருவர் குரல்களும் தனித்துவமானவை. ஆனால் இருவர் குரல்களிலும் பாடலைக் கேட்டு விட்டு, மீண்டும் ஒரு  தடவை நினைவு கூர்ந்தால், முதலில் நினைவுக்கு வருவது பாடகி டீயின் குரல்தான். காரணம் அதன் தனித்துவம். 
பாடகி சின்மயிக்கு இப்பாடல் திரையுலகில் அவரது இரண்டாவது ஆட்டத்தை ஆட வழி வகுத்துள்ளது.  அது வரவேற்கத்தக்கது. அவர் ஆணாதிக்கத் திரையுலகில் இதுவரை அடைந்த துயர் இனியாவது ஒழியட்டும். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதி கிடைக்கட்டும். 

'தக லைஃப்' திரையில் எதிர்பார்த்த வெற்றியை அடையாவிட்டாலும், அது எழுப்பிய சர்ச்சைகளால் , இயக்கத்தால், ஒளிப்பதிவால், இசையால் முக்கியமானதொரு திரைப்படமாக நிலைத்து நிற்கும். ஏ.ஆர்.ரகுமான் , மணிரத்தினம் கூட்டணியில் உருவான முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும். நடிகை திரிஷா,  நடிகர் சிலம்பரசனின் திரையுலக வாழ்க்கையிலும் முக்கிய படிகளாக அமையும்.

பாடலைக் கேட்க

Sunday, June 15, 2025

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.


இன்று தந்தையர் தினம். அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள். (ஓவியம் - AI )

எந்தையின் நினைவுகள் கூடவே
அன்னையின்  நினைவுகள்!
அன்னையின் நினைவுகள் கூடவே
அன்னை மண்ணின் நினைவுகள்!
இந்நாளில் எந்தையரை ,
இந்நாளில் அன்னையரை,
இந்நாளில் அன்னை மண்ணை 
நினைவில் வைப்போம்.
நினைவில் வைப்போம்.

எந்தையும் தாயும்... மகாகவி பாரதியார் - பாடகர் டி.என்.சேசகோபாலன்
https://www.youtube.com/watch?v=yiMVXlvVa8k

கவிதை;  எந்தையும் தாயும்... மகாகவி பாரதியார்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

Saturday, June 14, 2025

'தக் லைஃப்' 'முத்தமழைப் பாடலின் பாடகி சின்மயி பாடும் காணொளி!


இப்பொழுது 'தக் லைஃப்' 'முத்தமழை' பாடலைப் பாடகி சின்மயி பாடுவதாக அமைந்துள்ள காணொளியை வெளியிட்டிருக்கின்றார்கள் படக்குழுவினர். நடிகை திரிஷா கிருஷ்ணனை நினைவில் வைத்திருக்கும் முதலிரு வேடங்கள் 'பொன்னியின் செல்வன்' குந்தவைப் பிராட்டியார். அடுதத்து 'தக் லைஃப்' இந்திராணி. இரு படங்களையும் இயக்கியிருப்பவர் மணிரத்தினம். இது போல் நடிகை ஐஸ்வர்யா ராயை நினைவில் நிறுத்தி வைத்திருக்கும் வேடம் 'பொன்னியின் செல்வன்' பழுவூர் ராணி நந்தினி. 
 
என்றும் பதினாறு மார்க்கண்டேயரைப்போல் திரிஷாவும் என்றும் இருபது மார்க்கண்டேயணிதான். இன்னும் பல வருடங்களுக்குத் தமிழ்த்திரையுலகில் கொடி கட்டிப் பறக்கும் சாத்தியங்கள் உள்ள நடிகை. 
 
நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட காலம் நாயகியாக நிலைத்திருந்தார். ஆனாலும் அவரது இரண்டாவது வருகையின்போது அவர் உடல் பருத்திருந்தார். ஆனால் இரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். திரிஷாவோ இன்னும் அதே உடல் வாகுடன் இருக்கின்றார். இது அவரது எதிர்கால வெற்றிக்கு வழி வகுக்கும்.
 
இயக்குநர் மணிரத்தினம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 
 

Friday, June 13, 2025

நோபல் பரிசினை ஏற்ற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான எழுத்தாளர் மிகையில் ஷோலகாவும் , நிராகரித்த எழுத்தாளர் சார்த்தரும்!


எழுத்தாளர் சுகன்  பின்வரும் எழுத்தாளர் அம்பையின் கூற்றை முகநூலில் பகிர்ந்திருந்தார்:

"1964 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஜீன்-பால் சார்த்தர் மறுத்துவிட்டார், ஏனெனில் அதை ஏற்றுக்கொள்வது தன்னை ஒரு நிறுவனமாக மாற்றும், ஒரு எழுத்தாளராகவும் அறிவுஜீவியாகவும் சுயாதீனமாக செயல்படும் திறனைக் கட்டுப்படுத்தும் என்று அவர் நம்பினார். மேலும், அவர் எப்போதும் அதிகாரப்பூர்வ வேறுபாடுகளை மறுத்து வருவதாகவும், "நிறுவனமயமாக்கப்பட" விரும்பவில்லை என்றும் கூறினார். கூடுதலாக, நோபல் பரிசு பெரும்பாலும் "மேற்கத்திய எழுத்தாளர்கள் அல்லது கிழக்கின் கிளர்ச்சியாளர்களுக்கு" மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அந்த வார்ப்புருவில் பொருந்தக்கூடியவராகக் கருதப்படுவதை அவர் விரும்பவில்லை என்றும் அவர் கவலைப்பட்டார். ( அம்பை)"

Thursday, June 12, 2025

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடகி டீ (dhee) : முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ?


'தக் லைஃப்' படத்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடலைப் பாடியிருப்பவர் பாடகி டீ. 'ஆடியோ லோஞ்ச்'இல் மேடையில் பாடியிருப்பவர் பாடகி சின்மயி. இருவர் குரல்களிலும் இப்பாடலைக் கேட்டேன். இருவரிலும் என்னை மிகவும் கவர்ந்தவர் பாடகி டீ. இவரது குரலில் ஒலிக்கும், தென்படும் உணர்வு வெளிப்பாடுகள் பாடகி சின்மயியின் குரலில் இல்லைபோல் உணர்ந்தேன். டீயின் குரல் நவகாலத்துக்குரியது.
 

Tuesday, June 10, 2025

தமிழ் இலக்கியத் தோட்டம் 25 ஆண்டு விருதுகளின் கொண்டாட்டம்! - தகவல்: அ.முத்துலிங்கம் -


தமிழ் இலக்கியத் தோட்டம்  25 ஆண்டு விருதுகளின் கொண்டாட்டம்! 
 

2025ல் வழங்கப்படும் 2024ம் ஆண்டுக்கான விருதுகள்


இயல் விருது
- சச்சிதானந்தன் சுகிர்தராஜா (பேராசிரியர், விளக்கவியலாளர், எழுத்தாளர்)
இயல் விருது - யுவன் சந்திரசேகர் (எழுத்தாளர், கவிஞர்)

புனைவு – இரவி அருணாசலம்
நூல் – பம்பாய் சைக்கிள்- (காலச்சுவடு பதிப்பகம்)

அல்புனைவு – த.பிச்சாண்டி
நூல் – எனக்குள் மணக்கும் எம்.ஜி.ஆர் நினைவுகள் ( பி.வி.பதிப்பகம்)

கவிதை -ரவி சுப்பிரமணியன் – நூல்: அருகிருக்கும் தனியன்- (போதிவனம் பதிப்பகம்)
கவிதை - றியாஸா எம் ஸவாஹிர்- நூல்: நிலங்களின் வாசம்- (வேரல்புக்ஸ் பதிப்பகம்)

மொழிபெயர்ப்பு :  நீட்ரா ரொட்ரிகோ   நூல்: கனவுச் சிறை (பாலா தேவகாந்தன்)
Prison of Dreams (5 Parts) - Published by Mawenzi House (author Bala Devakanthan) 

வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான். வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5 ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வ...