Friday, June 27, 2025

திறனாய்வாளர் ஈழக்கவியின் 'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்' நூல் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன்'



- பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் -

- ஜீவநதி சஞ்சிகையின் ஜூன் பதிப்பு  ஏ.எச்.எம். நவாஸ் (ஈழக்கவி ) சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. அதில்  எனது கட்டுரை  'திறனாய்வாளர் ஈழக்கவியின் 'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்'  நூல் பற்றிய சிந்தனைகள்! ' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. - 


'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்' என்னும் ஈழக்கவியின் சிறு நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது.  ஜீவநதி வெளியீடு. பேராசிரியரின் மொழியியல்ரீதியிலான  பங்களிப்பை ஆராயும் நூல். உண்மையில் பேராசிரியர் எம்,ஏ.நுஃமானின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றி எழுதும் பலரும் அவரது கவிதைப் பங்களிப்பு, திறனாய்வுப் பங்களிப்பு ஆகியவற்றையே பிரதானப்படுத்தி எழுதுவார்கள். பேராசிரியர் நுஃமானும் அவ்விடயங்களிலேயே அதிகமான கட்டுரைகளைப் பொது வாசகர்களுக்காக எழுதுவார். ஆனால் உண்மையில் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் மொழியியல் அறிஞரும் ஆவார். மொழியியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அத்துறைப் பேராசிரியராக யாழ் பல்கலைகக்ழகத்தில் பல வருடங்கள் பணி  புரிந்தவர். ஆய்வரங்குகளில் மொழியியலில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர். இந்நிலையில் அவரது மொழியியற் சிந்தனைகள், ஆய்வுப் பங்களிப்புகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இக்கவனத்தைச் செலுத்துவதற்கான தூண்டலை ஈழக்கவியின் இந்நூல்  செய்திருக்கின்றது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்க நூலாக  இதனைக் கருதலாம்.

இந்நூல் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் பற்றிய  நல்லதோர் அறிமுகத்தையும்  , குறிப்பாக அவரது, குடும்பப் பின்னணி.  கல்வித் தகைமைகள் , இலக்கியப் பங்களிப்புகள் (திறனாய்வு உட்பட), கல்விப் பங்களிப்பு  ஆகியவற்றைச் சுருக்கமாக விபரிக்கும் . அதே சமயம் மொழியியல் அறிஞராக அவரது மொழியியல் துறைப்பங்களிப்பையும் எடுத்துரைக்கின்றது.

Wednesday, June 25, 2025

கட்டடக்கலைஞர் இ. மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948) நூல் , நல்லூர் ராஜதானி பற்றிய கருத்துகள்! - வ.ந.கிரிதரன் -


கட்டடக்கலைஞர்  இ. மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு  (1621 - 1948) ' மிக முக்கியமானதொரு வரலாற்று ஆவணம்.  493 பக்கங்களைக் கொண்ட இநந நூலை  குமரன், எழுநா,ஆதிரை  பதிப்பகங்கள்  இணைந்து வெளியிட்டுள்ளன. மிகுந்த உழைப்பின் அறுவடை இவ்வாய்வு நூல்.  அதற்காக நூலாசிரியர் மயூரநாதனுக்கும், வெளியிட்ட பதிப்பகங்களுக்கும் அதன் பின்னணியில் இருந்தவர்களுக்கும் நாம் அனைவரும் நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம்.  நூலைபெறுவதற்கு உதவிய ஓராயம் அமைப்பினருக்கும் நன்றி. 

தமிழரசர் காலத்து நல்லூர் தொடக்கம், போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்  காலகட்டங்களைச் சேர்ந்த யாழ்ப்பாண நகரம் பற்றிய,  சரித்திரக் குறிப்புகள், நில வரைபடங்கள் , வெளிக்கள ஆய்வுத் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மயூரநாதன் இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்நூலை உருவாக்க மயூரநாதன் பாவித்துள்ள ஆதாரங்கள் மேலும் பலரின் ஆய்வுகளுக்கு அத்திவாரங்களாக உதவக்கூடியவை. 

- கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் -

இந்நூலின் நல்லூர் பற்றிய பகுதியில் மயூரநாதன் எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'  நூலையும் கவனத்திலெடுத்து தன் கருத்துகளை  முன் வைத்திருக்கின்றார். அதற்காக என் நன்றி அவருக்குண்டு.

Monday, June 23, 2025

இலக்கியமும் , புலம்பெயர் இலக்கியமும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அது பற்றிய கருத்தும் பற்றி....


எழுத்தாளர் அ.முத்துலிங்கம் புலம்பெயர் இலக்கியம் பற்றிக் கூறுகையில் 'எழுத்திலே புலம்பெயர்ந்த எழுத்து புலம்பெயராத எழுத்து என்ற வகைப்பாடு கிடையாது. நல்ல எழுத்து, மோசமான எழுத்து என இரண்டு பிரிவுதான்.'' என்று கூறியிருந்ததாக ஒரு கூற்றினை முகநூலில் முகநூல் நண்பர்களில் ஒருவரான Kandasamy R  பகிர்ந்திருந்தார். என்னைப்பொறுத்தவரையில் அவ்விதம் கூறுவதால புலம்பெயர் இலக்கியம் படைக்கும் ஒருவரைக் குறைத்து மதிப்பிடுவதாக, அவரை ஒரு பிரிவுக்குள் கட்டிப்போடப்படும் அபாயம் இருப்பதாக முத்துலிங்கம் அவர்கள் கருதுவதுபோல் தெரிகின்றது.

Saturday, June 21, 2025

எழுத்தாளர் நடேசனின் புலம்பெயர் இலக்கியம் பற்றிய கருத்துகள் பற்றி....

எழுத்தாளர் நடேசன் தனது முகநூல் பக்கத்தில் புலம்பெயர் இலக்கியம் பற்றியொரு பதிவினை இட்டிருக்கின்றார். அதில் அவர் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்: 

1. புலம்பெயர் இலக்கியம் - இலக்கியம் புலம் பெயர்வது இல்லை. இந்த சொற்றொடர் தவறாகும்.

2. புலம் பெயர்ந்தோர் இலக்கியம் படைத்தால் அதை புலம்பெயர் பெயர்தோர் இலக்கியம் எனலாம். ஆனால்  பெரிய முக்கியமான விடயம் இல்லை. 

3. தமிழ் நாட்டில் அக்காலத்தில் பிராமணர் இலக்கியம் படைத்தார்கள்  இப்பொழுது மற்றைய சாதியினரும் படைக்கிறார்கள். அவை எல்லாம் எனக்கு தமிழ் நாட்டில் இருந்து வந்த தமிழ் இலக்கியமே.  

4. யாராவது மாகாபாரதம், இராமாயணம்த்தை போரிலக்கியம் என்றால் எப்படி இருக்கும்?

5. இலங்கையில் இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்கள் எழுதுவது மட்டுமே தமிழ் இலக்கியம் ஆகாது . நீங்கள் எழுதுவது டயஸ்போரிக் இலக்கியம்,  என்றால் என்ன நியாயம்?

6. இந்த டயஸ்போரிக் வார்த்தை யூதர்களினால் உருவாக்கப்பட்டது . 

7. வெளிநாடுகளில் இருந்து சிங்கள மொழியில் எழுதும் சிங்களவர்கள் இந்த சொல்லடையை பாவிப்பதில்லை.

8. எனது அசோகனின் வைத்தியசாலை,  பண்ணையில் ஒரு மிருகம்,   வாழும்சுவடுகள் டயஸ்போரிக் இலக்கியவகையை அல்ல .தமிழ் இலக்கியத்தில் எவரும் தொடாத  ஒரு பகுதி என சொல்கிறேன்.

விதவைத்திருமணத்தை வலியுறுத்தும் வவுனியூர் இரா. உதயணனின் 'வலியின் சுமைகள்' ! - வ.ந.கிரிதரன் -


வவுனியூர் இரா. உதயணன் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினை  'விதி வரைந்த பாதையிலே'  என்னும் நாவலுக்காகவும், 'பனிநிலவு' நாவலுக்காக எழுத்தாளர் கு,சின்னப்பபாரதி  விருதினையும் பெற்றவர். இவரது நாவல்கள், சிறுகதைகள் நூலுருப்பெற்றுள்ளன. தினகரம், வீரகேசரி பத்திரிகைகளில் தொடர்களாக இவரது நாவல்கள் வெளிவந்துள்ளன. இவ்விதம் வீரகேசரியில் 54 அத்தியாயங்கள் தொடராக வெளியான நாவலான 'வலியின் சுமைகள்' நாவல்  ஓவியங்களுடன் கூடிய அத்தியாயங்களுடன் 'இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம்'  வெளியீடாக , 2015இல் வெளிவந்துள்ளது. நூலுக்கான் ஓவியங்களை வரைந்திருப்பவர் ஓவியர் கெளசிக். இந்நாவலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. 

வன்னியூர் இரா. உதயணனின் எழுத்து சரளமானது. வாசிப்புக்கு எவ்வித தடங்கலும் தராத தெளிந்த நீரோடை போன்றது. ஆங்காங்கே மண் வாசனை தெறிக்கும் இயற்கை வர்ணனைகளை உள்ளடக்கியது.  வாசிப்பைத்தூண்டும் கதைப்பின்னல்களைக்கொண்டது. மானுட சமுதாயத்துக்கு பயன் தரும் சமுதாயப் பிரக்ஞை  மிக்க முற்போக்குக் கருத்துகளை உள்ளடக்கியது.  'வலியின் சுமைகள்' நாவலிலும் இப்பண்புகள் அனைத்தையும் காணலாம்.

Friday, June 20, 2025

தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்' பற்றி... - வ.ந.கிரிதரன் -


 

'சாம்பரில் திரண்ட சொற்கள்'  எழுத்தாளர் தேவகாந்தனின் அண்மையில் வெளியான நாவல்.  'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவல் 'தாய்வீடு' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. சிறப்பான வடிவமைப்புடன், ஓவியர் ஜீவாவின் அழகான ஓவியங்களுடன் வெளிவந்துள்ள நூல். ஒரு காலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான  தொடர்கதைகளின் வெற்றிக்கு அவற்றில் வெளியான ஓவியங்களும் ஒரு காரணம். 'பொன்னியின் செல்வன்' நாவலில் எம்மையெல்லாம் கவர்ந்த பாத்திரமான  வாணர் குலத்து வீரனான வல்லவரையன் வந்தியத்தேவனை .  அவனை உயிர்த்துடிப்புடன் வரைந்த் ஓவியர்களான மணியம், வினு, மணியம் செல்வன், பத்மவாசன் ஆகியோரின் ஓவியங்கள் வாயிலாகத்தான்  நினைவில் வைத்திருக்கின்றோம்.  'கடல்புறா' நாவலின் நாயகன் இளையபல்லவன் என்றழைக்கப்படும் கருணாகரத்தொண்டைமானை ஓவியர் லதாவின் ஓவியங்கள் மூலம்தான் நினைவில் வைத்திருக்கின்றோம்.  'ராணிமுத்து' வெளியீடாக வெளிவந்த மாத நாவல்களும் ஓவியங்களை உள்ளடக்கியே வெளிவந்தன. நாவல்களின் ஓவியங்களும் முக்கியமானவை. மேற்படி நாவலும் இவ்விதமே ஓவியங்களுடன் வெளியாகியிருப்பது வடிவமைப்புக்கு வனப்பைத்தருவதுடன், வாசிப்புக்கும் வளத்தைத்தருகின்றது..

Tuesday, June 17, 2025

த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் அல் - புனைவுக்கான (2024) விருது!


'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான  த.பிச்சாண்டி எழுதியிருக்கின்றார். எம்ஜிஆரினுடனான தன் அனுபவங்களை அந்நூலில்  அவர் பகிர்ந்திருக்கின்றார். இந்நூல் பற்றி அந்தமழை.காம் தளத்தில் வெளியாகியுள்ள மதிமலர் என்பவரின் நூல் அறிமுகக் குறிப்பு என் கவனத்தை ஈர்த்தது. எம்ஜிஆர் என்னும் மனிதரின், முதல்வரின் மனிதாபிமானம் மிக்க ஆளுமையை வெளிப்படுத்தும் அறிமுகம். நூலை முழுமையாக வாசிக்கும் ஆர்வத்தைத்தரும் அறிமுகம்.

இந்நூலுக்கு இம்முறை தமிழ் இலக்கியத்தோட்டம் வழங்கும் அல்- புனைவுக்கான இயல் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  அந்திமழை.காம் தளத்தில் வெளியான நூல் அறிமுகக் குறிப்பினை இங்கு பகிர்ந்துள்ளேன்.

நூல்: எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள், த.பிச்சாண்டி இ.ஆ.ப(ப.நி), பிவி பதிப்பகம், கலைஞர் கருணாநிதி நகர், சென்னை-78. கைபேசி: 9884980760 விலை ரூ 860.

************************************************************************************************
(அந்திமழை.காம்) நூல் அறிமுகம்: என்ன செய்தார் எம்.ஜி.ஆர்.? எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள்!  - மதிமலர் -

திண்டுக்கல் மாவட்டத்தில் 1977-இல் நில உச்சவரம்பு அலுவலராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார் அந்த இளம் அதிகாரி. அச்சமயம் அங்கே குடகனாற்றில் வெள்ளம் வந்து ஏராளமான பேர் இறந்துவிட்டனர். எக்கச் சக்க சேதம்.


முதலமைச்சர் வந்து பார்வையிடும் வழியில் ஓர் இடத்தை நிர்வகிக்கும் வேலைதான் அந்த அதிகாரிக்கு. முதலமைச்சர் கையால் சேலைகள் வழங்கலாம் என விரும்பி உள்ளூர் பிரமுகர் ஒருவர் சேலைகளை அடுக்கி வைக்க, அவரை இவர் அனுமதிக்க மறுத்துவிட்டார். முதல்வரின் பயணத் திட்டத்தில் இது இடம் பெறவில்லை. உடைந்த அணையைப் பார்த்துவிட்டு, இந்த இடத்துக்கு வருகையில் பெரும் பெண்கள் கூட்டம் கூடிவிட்டது. அங்கே இறங்கும் திட்டம் இல்லை என்றாலும் மகளிர்கூட்டத்தைப் பார்த்து இறங்கினார் அவர். எங்களுக்கு சேலை கொடுக்கும் திட்டத்தை இவர் நிறுத்திவிட்டார் என இளம் அதிகாரி மீது அங்கிருந்த பெண்கள் புகார் கூறினர். முதலமைச்சர் இவரை முறைத்தார். நாளைக்கு மதுரைக்கு வந்து என்னைப் பாருங்க. எனக்கு கெட்ட பேர் வாங்கித்தருவதற்காகவே இருக்கீங்களா? என்றவாறு அவர் புறப்பட்டார். உடன் வந்திருந்த மாவட்ட கலெக்டரும் மூத்த அதிகாரிகளும் உனக்கு தண்ணியில்லா காடுதான் என்று சொன்னார்கள்.

வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான். வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5 ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வ...