![]() |
| - C. அண்ணாமலை - |
[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
ஏப்ரல் 2005 இதழ் 64
சுவிஸ் தமிழ் நாடகம்!
சுவிட்சர்லாந்து நாட்டு இயக்குநர்களும் நடிகர்களும் நமது தமிழ்க் கலைஞர்கள் பற்றியும் கலைகள் பற்றியும் சொன்னபோது வியப்பாகவும் மகிழ்வாகவும் இருந்தது. தொடர்ந்து இருபது ஆண்டுகள் அந்த நாட்டில் தமிழர்கள் நாடகங்களை மேடையேற்றி வருகிறார்கள். குளிரும், கலாச்சாரமும், மொழியும் அந்நியமான சூழலில் தமிழ் நாடகா;கள் ஒரு சாதனையை நிகழ்த்த முடிந்திருக்கிறது. அங்கு 'எத்தனையோ இனம் அகதிக்கோலத்தில் வாழ்ந்திருந்தாலும் தமிழினத்தின் ஈடுபாடும் முயற்சிகளும் பிறரிடம் இல்லை" என்கிறார் அல்பின் பியாரி என்கிற சமூக மானுடவியல் ஆய்வாளர் மற்றும் நிதி நிறுவன அதிகாரி.
மேலும் 'தமிழர்கள் சுவிஸ் நாட்டின் பெரிய நாடகக்குழுக்கள் அரங்கேற்றும் இடங்களில் தமிழ் நாடகங்களும்; டொய்ச் - தமிழ் படைப்புகளும் மேடையேறுவது அடுத்தகட்டமாக இருக்க முடியும்' என்கிறார். எண்பதுகளின் தொடக்கம் உலகம் முழுவதும் தங்கள் விருப்பங்கட்கு மாறாய் வாழ நேர்ந்த ஈழத்தமிழர்கள், சுவிஸ் நாட்டிற்கு வந்தபோது குளிர்தான் பெரும் பிரச்னையாக இருந்திருந்தது. 'நான் நமது நாட்டுச்சூழலுக்கேற்ற உடையுடன் வந்திருந்தேன். குளிருக்கேற்ற எந்தவித உடுப்புகளுடனும் வரவில்லை. ஐஸ்கட்டிகளை எடுத்து விளையாடினேன். முதலில் ஒன்றும் தெரியவில்லை பின்னர் அதன் குணத்தை முழுதாய் உணர்ந்து நடுங்கினேன்' என்கிறார் அன்ரன் பொன்ராசா.










