Saturday, October 18, 2025

எழுத்தாளர் மற்றும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர் தமிழினியை நினைவு கூர்வோம்!




 ['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 

தமிழினி ஜெயக்குமாரனின் நினைவு தினம் அக்டோபர் 18.  அதனையொட்டி முகநூலில் முன்பு எழுதிய பதிவொன்றினையும், அதற்கு எழுதப்பட்ட எதிர்வினைகள் சிலவற்றையும் அவர் நினைவாக இங்கு பதிவு செய்கின்றேன். 

பெண் போராளியான தமிழினியை யாருமே, அவருடன் இணைந்து போராடியவர்கள் உட்பட , அவர் மதிப்பு வைத்திருந்த எழுத்தாளர்கள் உட்பட , எவருமே நினைவு கூர்வதில்லை. எழுத்தாளர் ஒருவர் மட்டும் புகழ்பெற்ற தமிழகச் சஞ்சிகையொன்றில் அவரை மிகவும் கீழ்த்தரமாகச் சித்திரித்து புனைகதை எழுதியிருந்தார். இது துரதிருஷ்ட்டமானது.
 
ஆனால் தமிழினி அவரது எழுத்துகளூடு நினைவு கூரப்படுவார். அவரது எழுத்துகள் நிலையானவை. அவரது எழுத்துகள் அவருடன் போராடி மறைந்த வீராங்கனைகளை நினைவு கூர்பவை. அவர் ஈடுபட்ட போராட்ட வரலாற்றை நினைவு கூர்பவை. காலத்தின் கட்டாயமான சுயவிமர்சனத்தைச் செய்பவை அவரது எழுத்துகள். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கவை. சுயவிமர்சனமில்லாமல் மானுட இருப்பு ஒருபோதுமே முன்னேற்றம் அடைவதில்லை. வரலாற்றுப் பாதையில் கடந்த காலம் பற்றிய சுய விமர்சனங்களே மானுடரை அடுத்த நிலைக்கு உயர்த்திச் செல்பவை. அவ்வகையில் வரலாற்றுப்பங்களிப்பைச் செய்பவை. வரலாற்று முக்கியத்துவம் மிக்கவை.
இப்பதிவு நானறிந்த எழுத்தாளரும், சமூக,அரசியற் செயற்பாட்டாளருமான தமிழினியை நினைவு கூர்பவை.

தமிழினிக்கும் எனக்குமிடையிலான தொடர்பு அரசியல்ரீதியிலானதல்ல. சக எழுத்தாளர்களுக்கிடையிலான தொடர்பு, இணைய இதழ் ஆசிரியருக்கும், எழுத்தாளருக்குமிடையிலான தொடர்பு. உண்மையில் அவருடன் தொடர்பு ஏற்பட்டதற்குக் காரணம் இணையம் மற்றும் முகநூலே. அவரது கணவர் ஜெயக்குமாரன் ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழுக்கு அறிமுகமானவர். அவரது ஆக்கங்கள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியிருக்கின்றன. முகநூலிலும் என் நண்பராக இருப்பவர். அவர்தான் தமிழினியின் கணவர் என்னும் விடயமே  தமிழினியின் மறைவுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.

தமிழினி ரொமிலா ஜெயன் என்னும் பெயரிலும் முகநூலில் கணக்கு வைத்திருந்தார். ஆனால் அது எனக்குத் தெரியாது. எனக்கும் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அந்தபெயர் எனக்கு அறிமுகமில்லாததால் நீண்ட காலமாக அந்த நட்பு அழைப்பினை ஏற்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. பின்னர் அந்தப்பெயரில் சிறுகதையொன்று 'அம்ருதா' (தமிழகம்) சஞ்சிகையில் வெளியான பின்னர்தான் அந்தப்பெயரில் கவனம் செலுத்தினேன். ரொமிலா ஜெயன் சக எழுத்தாளர்களிலொருவர் என்பது விளங்கியதால், அவரது நட்புக்கான அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். அதன்பின்னர் தமிழினி தனது சொந்தப்பெயரிலேயே முகநூலில் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அப்பொழுதும் ரொமிலா ஜெயனும், தமிழினியும் ஒருவரே என்பது தெரிந்திருக்கவில்லை. அவரது மறைவுக்குப் பின்னரே இருவரும் ஒருவரே என்பதும் புரிந்தது.
தமிழினி என்ற பெயரில் முகநூல் அழைப்பு அனுப்பியபோது அவரது முகநூலில் அவர் பாவித்திருந்த படம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது.  பல்வேறு கைகள் இணைந்து நிற்கும் காட்சி அது. பல்வேறு கருத்துள்ளவர்களுடனும் நட்புக்கரம் கோர்த்து, ஒன்றுபட்டுச் செயற்பட அவர் விரும்பியதை வெளிப்படுத்தும் படம் அது. அதனால்தான் அவரது முகநூல் நண்பர்களாகப் பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கிவர்களும் இணைந்திருக்க முடிந்தது.  படத்திலுள்ள கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அளவுகளில் வேறுபட்டவை. அவை அனைத்தும் ஒன்றுபட்டு ஆக்கபூர்வமாக இயங்குவதைப்போல், முரண்பட்ட கருத்துள்ளவர்களாலும் ஒன்றுபட்டு , முரண்பாடுகளுக்குள் ஓர் இணக்கம் கண்டு இயங்க முடியும். சமூக ஊடகமான முகநூலில் அவரது செயற்பாடுகள் இதனைத்தான் எமக்குக் கூறி நிற்கின்றன. பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கியவர்களெல்லாரும் அவருடன் முகநூலில் கைகோர்த்திருந்தார்கள். அனைவருடனும் அவர் நிதானமாக, உணர்ச்சிவசப்படாமல் கருத்துகளைப் பரிமாறியிருக்கின்றார். அதனால்தான் அவரது மறைவு அனைத்துப்பிரிவினரையும் பாதித்திருக்கின்றது.

Friday, October 17, 2025

தமிழ்ச் சொற் புணர்ச்சிக் குழப்பம் பற்றி , பேராசிரியர் எம்.ஏ.நுஃமானுடன் ஓர் உரையாடல்! ['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]


அண்மையில் நூல் பற்றிய விமர்சனமொன்றில் பாவிக்கப்பட்டிருந்த 'கூற்றை' என்னும் சொல் பற்றி எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி பின்வருமாறு தன் எதிர்வினையில் பதிவு செய்திருந்தார் "மனித வாழ்வின் ஒரு கூற்றை - என உள்ளது. மனித வாழ்வின் கூறு ஒன்றை எனச் சொல்லியிருக்கலாம்." என்று.


அதற்கு நான் "கூறு என்பதுடன் ஐ உருபினைச் சேர்த்து எழுதும்போது கூற்றை என்று எழுதலாம். இதுபோல் ஆறு + ஐ = ஆற்றை என்றுதானே எழுதுகின்றோம். ஆறு என்னும் எண் பெயருடன் மட்டும் ஆறை என்று எழுதுவதுண்டு. கூற்று என்னும் சொல்லையும் கூற்றை (நேற்று, நேற்றைப் போல) , கூற்றினை என்று எழுதுவதால் பொருள் மயக்கமுண்டுதான். இருந்தாலும் 'மனித வாழ்வின் ஒரு கூற்றை' என்பதில் எந்தக் கூற்றை அச்சொல் குறிக்கின்றது என்பதில் பொருள் மயக்கமில்லை." என்று எதிர்வினையாற்றியிருந்தேன்.

அதற்குப் பதிலளித்த ஶ்ரீரஞ்சனி "உருபன் இணைப்புச் சூழல் – ஆற்றை (ஆறு + ற்+ ஐ) ஆறை (ஆறு+ஐ) மேல் கூறப்பட்டதில் முதலாவது ஆறு ஆற்றினையும் இரண்டாவது ஆறு இலக்கத்தையும் குறிக்கின்றன. 'இதேபோல் கூறு வரின் 'கூறு' என்பது 'கூற்றை' அல்லது 'கூறை' என வருவது சரிதான். ஆனால் 'கூறு' என்பது ஒரு பொருளின்/விடயத்தின் ஒரு பகுதி அல்லது அம்சம், அதே சமயம் 'கூற்றை' என்பது ஒரு கூற்றின் செயப்படுபொருள் வடிவம். அவை வெவ்வேறு சொற்கள். அதுதான் குழப்பமாக இருந்தது. தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் கூறட்டும். கற்றுக்கொள்வோம்." என்று குறிப்பிட்டிருந்தார்.

Wednesday, October 15, 2025

தமிழ்நதியின் 'மெத்தப் பெரிய உபகாரம்'


* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana )உதவி; VNG


அண்மையில் நான் வாசித்த சிறுகதைகளில் நினைவில் நிற்கும் சிறுகதைகளில் ஒன்று தமிழ்நதியின் 'மெத்தப் பெரிய உபகாரம்'.  அவரது 'மாயக்குதிரை' தொகுப்பிலுள்ள  இறுதிச் சிறுகதை. இந்தக் கதை ஏன் என்னை மிகவும் கவர்ந்திருந்தது? அதற்கான காரணங்களைக்  கூறுவதற்கு முன் கதை பற்றிய சுருக்கம்.  

கதை இதுதான். கதை சொல்லி  'டொரோண்டோ', கனடாவில்  வாழும் தமிழ்ப்பெண்.  தாயைப்பார்ப்பதற்காக ஊருக்குச் செல்லும் பெண். ஃபிராங்க்பேட் அல்லது இலண்டன் வழியாகச் செல்வதற்கு டிக்கற் கிடைக்காததால் , சூரிச் வழியாகச் செல்லும் பயணி. சூரிச்சில்  டிரான்சிட்டில் எயார் லங்கா விமானத்துக்காகக் காத்து நிற்கின்றாள். அப்போதுதான் அங்குள்ள விமான நிலைய அதிகாரியொருவர் மொழிதெரியாத ஒரு மூதாட்டியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பதைக்  காண்கின்றாள்.  அவ்வதிகாரி பல் மொழிகளில் அம்மூதாட்டியை அவளது கடவுச்சீட்டை, போர்டிங் பாஸைக்  கேட்டுக் கேள்விகள் கேட்டுக  களைத்துப் போயிருந்தார். அம்மூதாட்டியோ அவரது கேள்விகளுக்கெல்லாம்  'ஊருக்குப் போறன்' என்று பதிலிறுத்துக் கொண்டிருந்தார்.

கதை சொல்லியான கனடாப் பெண்ணுக்கு அம்மூதாட்டி தமிழ்ப்பெண் என்பது தெரியும். உதவியிருக்கலாம். ஆனால் உதவவில்லை. பிரயாணக்களைப்பு, உறக்கமின்மை, கவலை, பொறுப்பேற்றலின் மீதான பின்வாங்கல் போன்ற காரணங்களில் ஏதாவதொன்றுடன் அங்கு தமிழ்ச் சாயல் கொண்ட  இன்னுமோர் இளம் பெண் இருந்ததும் காரணமாகவிருக்கலாம்  கதை சொல்லியே தன் நிலைக்கான காரணத்தை இவ்விதம் சுய விமர்சனம் செய்கின்றாள்.

Tuesday, October 14, 2025

தொல்லியல் அறிஞர் , அமரர் நடன காசிநாதன் மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!


 

தொல்லியல் அறிவ்ஞர் நடன காசிநாதன் 6 அக்டோபர் 202 அன்று  மறைந்தார். இவரது மறைவுச் செய்தியைத் தாமதமாகவே அறிந்தேன். இவரது மறைவு இத்துறைக்குப் பேரிழப்பு. இவரை நான் எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன். எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஸ்நேகா பதிப்பக வெளியீடாகத்  தமிழகத்தில் வெளிவந்தபோது , ஸ்நேகா பதிப்பக அதன் நூல்களுக்கான வெளியீட்டு நிகழ்வொன்றினை நடத்தியது. அப்போது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலினை வெளியிட்டு வைத்தவர் தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன். அதனைப் பெற்றுக்கொண்டவர் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்கள். இவரது மறைவால்  துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பகிர்ந்துகொள்கின்றேன்.
 
இவரை நான் எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன். எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஸ்நேகா பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவந்தபோது , ஸ்நேகா பதிப்பக அதன் நூல்களுக்கான வெளியீட்டு நிகழ்வொன்றினை நடத்தியது. 

எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் விருது.....


எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் விருது ரூபா 5 இலட்சம் , அவர் மறைவுக்குப் பின்னர் ஐவருக்குப் பிரித்து வழங்கப்பட்டதாக அறிகிறேன். விருது வழங்கப்பட்டது ரமேஷ் பிரேதன் என்னும் எழுத்தாளரின் இலக்கியப் பங்களிப்புக்காக. பலருக்கு அவர்கள்தம் பல்துறைப் பங்களிப்புகளுக்காக அவர்கள் மறைந்த பின்னரும் விருதுகள் வழங்கப்படுகின்றன.  இந்நிலையில் உயிருடன் இருக்கும்போது ஒருவருக்கு வழங்கப்பட்ட விருது, அவரது மறைவுக்குப்பின்னர் வேறு சிலருக்கு வழங்கப்படுவது ஆச்சரியமளிக்கிறது. 

ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விருது திருப்பி எடுக்கப்படாமல், அவரது படைப்புகளின் தொகுப்புகளை வெளியிடப் பயன்படுத்தியிருக்கலாம்.அல்லது  அவரது பெயரில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கப்பயன்படுத்தியிருக்கலாம். அதுலிருந்து கிடைக்கும் வங்கி வட்டியிலிருந்து வருடா வருடம் இலக்கியப் போட்டிகள் நடத்தியிருக்கலாம். அல்லது விருதுகள் வழங்கியிருக்கலாம். 

[டிஜிட்டல் ஓவியத் தொழில்  நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]

Monday, October 13, 2025

போர் இலக்கியம் படைத்த போர்ச் செய்தியாளர் எர்னெஸ்ட் டெய்லர் பைல் (Ernest Taylor Pyle)


அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தைச் சேர்ந்த எர்னெஸ்ட் டெய்லர் பைல்  ஆரம்பத்தில் பயணக்கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தவர். அவரது பயணக் கட்டுரைகள் வெறும் தகவற் பெட்டகங்களாக இருந்ததில்லை. அவற்றில் அவர் பயணங்களில் சந்தித்த மானுடர்களின் வாழ்க்கை இருக்கும். அவர்கள்தம் துயரம் இருக்கும். மானுட நேயம் மிக்க அவரது இந்த எழுத்துப்போக்கு பின்னர் அவர் போர்ச் செய்தியாளராகப் பயணித்தபோது பெற்ற அனுபவங்களிலும் இருந்தது.

இரண்டாம் உலகப்போரின்போது இவர் அமெரிக்கப் படையினருடன் வட ஆபிரிக்கா, சிசிலி, இத்தாலி, பிரான்ஸ், பசுபிக் தீவுகள் போன்ற இடங்களுக்கு முன்னணிச் செய்தியாளராகப் பயணித்திருக்கின்றார். 

போர் இலக்கியம் , போர் பற்றிய இலக்கியம் , புகலிட இலக்கியம் பற்றி....


அண்மையில் டொராண்டோவில் நடந்த எழுத்தாளர் தமிழ்நதியின் நூல்களின் வெளியீட்டில் கவிஞர் சேரன் ஆற்றிய உரையினைத்  தனது முகநூற் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் கவிஞர் போர் இலக்கியம் பற்றிப் பின்வருமாறு குறிபிட்டிருந்தார்:

" தமிழ்நதியினுடைய எழுத்துக்கள் அல்லது நான் எழுதுகிற கவிதைகள், எங்களுடைய போராட்டம் தொடர்பான அனுபவங்களுக்கூடாக வருகிற படைப்புகளை எல்லாம் போரிலக்கியம் அல்லது போராட்ட இலக்கியம் என்று என ஒருவகையாக எல்லைப்படுத்தப்பட்ட முத்திரை குத்திப் பார்க்கிற ஒரு விமர்சனப் போக்கு வந்திருக்கிறது. அது பொருத்தமானதன்று. போரிலக்கியம் என்று சொல்வது போதுமென்று சொன்னால் - உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள் - போர் நடந்துகொண்டிருக்கிறபொழுது ஒவ்வொரு அரசாங்கமும் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் போர்முனைக்கு அனுப்பும். வன்னியில், முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தபொழுது 'The Hindu Group ', 'The Front line ஆகிய நிறுவனங்கள் இரண்டு, மூன்று பத்திரிகையாளர்களையும் எழுத்தாளர்களையும் அதை ஆங்கிலத்தில் Embedded Journalist, Embedded Writers என்று சொல்வார்கள். தமிழில் சரியாகச் சொல்வதென்று சொன்னால் (சிரிக்கிறார்) 'உடன்படு' எழுத்தாளர்களை அனுப்பியிருந்தன.  அதுபோல, ஆப்கானிஸ்தானில் சண்டை நடந்துகொண்டிருந்தபொழுது சில முக்கியமான கனடிய கவிஞர்களை கனடிய அரசாங்கம் அந்தப் போர்முனைக்கு அனுப்பியிருந்தது. சில கட்டுப்பாடுகள்... அங்கே இராணுவம் சொல்வதைத்தான் எழுதவேண்டும். அதையும் போரிலக்கியமென்றுதான் பார்க்கிறார்கள். அதுபோல, போரிலே கொடுமைகள் செய்த ஏராளமான படையினர், அவர்களை வழிநடத்தியவர்கள் எழுதிய கட்டுரைகளையும் கதைகளையும் போரிலக்கியம் என்றுதான் பார்க்கிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள், கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் எழுதுவதற்கும் பாதிப்பை நிகழ்த்தியவர்கள், கொலையாளிகள் எழுதுவதற்குமிடையிலான வித்தியாசத்தை நான் பார்க்கிறேன். எப்படிப் பார்க்கிறேனென்று சொன்னால், வெறுமனே போரிலக்கியம், போர்க்கால இலக்கியம் என்று சொல்லி எங்களுடைய படைப்புகளை முத்திரை குத்திவிட முடியாது. "

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...