Saturday, November 1, 2025

நவீன விக்கிரமாதித்தன் (பாகம் இரண்டு) - அத்தியாயம் இரண்டு: கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலவெளிச்சுரங்க'மும் அது எழுப்பிய கேள்வியும்! - வ.ந.கிரிதரன் -


['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 

அத்தியாயம் இரண்டு: கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலவெளிச்சுரங்க'மும் அது எழுப்பிய கேள்வியும்! 

நான்:
நினைவின் வலிமை என்னை நீ உணர வைக்கும்.
நினைவின் வலிமை உன்னை நான் நினைக்க வைக்கும்.
நினைவின் வலிமையை உன்னைப்போல் 
நானும் நம்புவனடி கண்ணம்மா!
அதனால்தான் உதயத்தில் மறைந்து 
அந்தியில் முகம் காட்டும் மதியாகி
முறுவலித்தாய். இல்லையா கண்ணம்மா!
ஒளிக்கும் ஒரு வேகமுண்டு! 
ஒளி கடக்கும் தூரத்துக்குமொரு நேரமுண்டு.
ஆயின்,
மனவேகத்துக்கு ஓர் எல்லையுண்டா
கண்ணம்மா!
இருப்பின் எல்லையை நிர்ணயிப்பது
ஒளி! இலலையா கண்ணம்மா!
ஒளி எல்லை தாண்டிப் பயணித்தல் 
சாத்தியமுண்டாடி!
ஆனால்,
எண்ண வேகத்தைத் தடுக்கும் 
எல்லையென்று  ஒன்று உண்டா
என் கண்ணம்மா!
பிரபஞ்சங்கள் தாண்டிச் செல்வதை
அனுமதிப்பதில்லை ஒளி.
இல்லையா கண்ணம்மா?
ஆயின்,
எண்ணவேகத்தில் என்னால்
எத்தனை பிரபஞ்சங்களையும் தாண்டிப் 
பயணிப்பதைத் தடுப்பவர் எவருமுண்டா?
கண்ணம்மா! பதில் கூறடி 
என் செல்லம்மா?
சமாந்தரப் பிரபஞ்சங்களுக்குள் புகுந்து விளையாடும்
சாதனையை என்னால் சாதிக்க முடியுமடி
என்னால் என்றால் நம்புவதில் உனக்கு
ஏதும் தயக்கமுண்டாடி கண்ணம்மா?

'வேர்ல்ட் சீரிஸ்' (World series ) 2025: LA Dodgers vs Toronto Blue Jays


இன்று மாலை எட்டு மணிக்கு பேஸ் பால் விளையாட்டின் 2025 ஆண்டுக்குரிய 'வேர்ல்ட் சீரிஸி'ன் (World Series) இறுதிப்போட்டியான ஏழாவது போட்டி நடைபெறவுள்ளது. இம்முறை களத்தில் இருக்கும் குழுக்கள் : லொஸ் ஏஞ்செல்ஸ் டொட்ஜர்ஸ் (Los Angeles) & டொரோண்டோ புளூ ஜேய்ஸ் (Toronto Blue Jays).


இதுவரை நடந்த ஆறு போட்டிகளில் இரு குழுக்களும் தலா 3 போட்டிகளில் வென்றுள்ளதால், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டியாக இந்த ஏழாவது போட்டி நடைபெறவுள்ளதால் விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் பரபரப்பும், ஆவலும் பெருகியுள்ளன.

பேஸ் பாலின் முக்கிய அம்சம் அதன் Bases (முதலாவது பேஸ், இரண்டாவது பேஸ், மூன்றாவது பேஸ் & ஹோம் பேஸ்) அதன் காரணமாகவே விளையாட்டு Baseball என்றழைக்கப்படுகின்றது.

அணி ஒவ்வொன்றிலும் 9 வீரர்கள் இருப்பார்கள். 9 இன்னிங்ஸ் நடைபெறும். அதில் அதிக ஓட்டங்களை எடுக்கும் அணி வெற்றி அணி. பந்தடிப்பவை Batterர் என்றும், பந்தைப் பிடிப்பவரை Catcher என்றும் அழைப்பர். இவர் கிரிக்கட் விக்கட் கீப்பரை ஒத்தவர். பந்து வீசுபவரைப் பிட்சர் (Pitcher) என்றழைப்பர். வீரர்களைப் பற்றிய விபரங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. காணொளியிலும் விபரமாக விபரிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டை இரசிப்பதற்கு அது பற்றிய புரிதல் அவசியம். இதுவரை இவ்விளையாட்டு பற்றிஅறியாதவர்களுக்கு அது பற்றிய புரிதலைத் தரும் நல்லதொரு காணொளி இக்காணொளி.

இதனை முழுமையாகப் பாருங்கள். இன்றிரவு இறுதிப் போட்டியை இரசியுங்கள்.

https://www.youtube.com/watch?v=E160D9rEY0M


 

Friday, October 31, 2025

காலத்தால் அழியாத கானம்: 'காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்."


['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG]


கவிஞர் வாலியின் கவித்துவமான வரிகளில் , பாடகர் டி.எம்.எஸ்ஸின் இன் குரலில் , மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் மனத்தை மயக்கும்  இசையில் ஒலிக்கும் காலத்தால் அழியாத கானங்களில் ஒன்று. எத்தனை தடவைகள் கேட்டிருப்பேன். இன்னும் அலுக்கவில்லை. சலிக்கவில்லை.

'நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்'

இவ்வரிகள் கேட்கும்போதே இன்பத்தைத் தரும் வரிகள். காற்று வாங்கப் போய் எத்தனை தடவைகள் இயற்கைக் கவிதையை இரசித்து திரும்பியிருப்போம். அனுபவம் உருவாக்கிய வரிகள் இவை. 

"நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை"

சங்கப் பாடல்களிலிருந்து ஊர்  துஞ்சும் இரவுகளில் துஞ்சாதிருக்கும் காதல் உள்ளங்களின் உணர்வுகளை இரசித்து வந்திருக்கின்றோம். தமிழ்த் திரைப்படப்பாடல்களாகவும் கேட்டு மகிழ்ந்திருக்கின்றோம். அதன் ஒரு வடிவம் தானிந்தப்பாடல் வரிகளும்.

"கொஞ்சம் விலகி நின்ற போதும்
என் இதயம் தாங்கவில்லை"

காதல் வயப்பட்ட உள்ளங்கள் அனுபவிக்கும்  இயற்கையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்.

"என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை...
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை"

பார்வையை மீனாகவோ அல்லது நீந்துமோர் உயிரினமாகவும், பருவத்தை ஓடையாகவும், உள்ளத்தை ஊஞ்சலாகவும், மேடையாகவும் உவமையாக்கியுள்ள கவிஞரின் கவித்துவம் சிறப்பானது.  காதலனொருவன் தன் காதலுக்குரியவளின் நினைவால் விரகதாபத்தால் வாடுவதை வெளிப்படுத்தும் சிறப்புமிக்க, அனுபவ முத்திரைகளை உள்வாங்கிய வரிகள். 

Thursday, October 30, 2025

'பைலா' மன்னன் டெஸ்ட்மண்ட் டி சில்வா (Desmond De Silva): "சூட மானி கேபலால"


'பைலா' மன்னன் டெஸ்ட்மண்ட் டி சில்வா (Desmond De Silva) பாடிய் பாடல்கள் எப்பொழுதும் பசுமை நிறைந்த நினைவுகளாக எம் நினைவில் நிலைத்து நிற்பவை. குறிப்பாகச் "சூட மானி கேபலால" துள்ளிசைப் பாடலைக் குறிப்பிடலாம்.

'பைலா' போர்த்துக்கேயரால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இசை வடிவம். இன்றுவரை உயிர்த்துடிப்புடன் நிலைத்து நிற்கும் இசை வடிவம்.

இப்பாடலைக் கேட்கும் எவரையும் உற்சாகம் பற்றிக்கொள்ளும், துள்ளியெழுந்து ஆட வைக்கும். அப்படித்தான் எம் மொறட்டுவைப் பல்கலைக்கழகக் காலகட்டத்தில் எம்மை ஆட வைத்தது.

அக்காலகட்டத்தில் பல்கலைககழகத்தில் நடந்த பல்வகைக் களியாட்ட இரவுகளிலும் , சுற்றுலாக்களிலும் தவறாது ஒலித்த பாடல்களிலொன்று இந்தப் பாடல்.

இவர் தென்னிலங்கையின் மாத்தறையில் 13 ஜூலை 1944 பிறந்தவர். பல்வேறு இசைக்குழுக்களில் பாடிப்புகழ்பெற்ற இவர் தனக்கென்றோர் இசைக்குழுவை வைத்திருந்தவர். உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியவர். ஆட்டிசம் ( Autism ) நரம்பு வளர்ச்சிக் குறையுள்ளவர்களுக்காகக் குரல் கொடுத்த பாடகர். அதற்காக ஓர் இசை நிகழ்ச்சியையும் கொழும்பில் நடத்தியவர். திரைப்படப்பின்னணிப் பாடகராக, பைலா இசைப் பாடகராக, சமூகச் செயற்பாட்டாளராக மக்கள் மனத்தில் தன் பாடல்கள் மூலம் நிலைத்து நிற்பவர் 'பைலா' மன்னன் டெஸ்மண்ட் டி சில்வா.

இறுதிக்காலத்தில் தன் மூன்றாவது மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இவர் 9 ஜனவரி 2022 அன்று மாரடைப்பால் மறைந்தார்.

"சூட மானி கேபலால" பாடலைக் கேட்டுத்துள்ளி ஆடிட - 

 https://www.youtube.com/watch?v=HCG0EBbdgI4

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப [Google Nano Banana] உதவி:VNG]

இலங்கைப் பாடகர் அமுதன் அண்ணாமலையின் 'யாழ்தேவி'ப் பாடல்!


இலங்கைப் பாடகர் அமுதன் அண்ணாமலை யாழ்தேவி பற்றியொரு பாடல் பாடியிருக்கின்றார். அது: "இரயில் ஓடுது யாழ் இரயில் ஓடுது"
 
பாடலை ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், யாழ்தேவியில் பயணித்த உணர்வைப் பெறுவீர்கள். இசை, பாடல் வரிகள், காணொளியில் காட்டப்படும் காட்சிகள் , பாடகரின் குரல் இவையே அவ்வுணர்வுக்கான காரணங்கள்.
 
[Digiat Art (Google Nano Banana) help: VNG ]
 

பாடகர் ஏ.ஈ.மனோகரனின் 'யாழ்தேவி'ப் பாடல்!


இலங்கைப் பாடகர் ஏ.ஈ.மனோகரனும் 'யாழ்தேவி' பற்றியொரு பாடல் பாடியுள்ளார். அது "உத்தரதேவி யாழ்தேவி ஓடுது எங்கள் சீதேவி"
 
இப்பாடல் பாடகர் ஏ.ஈ.மனோஹரனை, எம் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த யாழ்தேவியையும் நினைவூட்டுகின்றது. 
 
வாருங்கள். சிறிது நேரம் யாழ்தேவியில் பயணித்து வருவோம்.
 
[Digiat Art (Google Nano Banana) help: VNG ]
 

Tuesday, October 28, 2025

கூகுள் ஏஐ ஸ்டுடியோவுக்கு நன்றி!


இங்குள்ள பெண்ணின் உருவம் கூகுள் ஏஐ ஸ்டுடியோ மூலம் உருவாக்கப்பட்டது. இங்கு கீழுள்ள எழுத்து வடிவத்திலான பதிவுக்கான குரல் அதே தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இதனை இப்பெண் பேசுவது போல் காணொளியாகவும் ஆக்க முடியும். நான் தற்போது பாவிப்பது இலவச சேவையென்பதால் அதற்கான வசதிகள் இல்லை.

குரல் உருவாக்கப்பட்ட பாவிக்கப்பட்ட பதிவு:
 
என் பால்யப் பருவத்து அனுபவங்களைப் பற்றி நிறையவே பதிவுகள் எழுதியிருக்கின்றேன். அவற்றில் வவுனியா பட்டாணிச்சுப் புளியங்குளத்தின் , வான் பாயும் அணைப் பகுதியை என்னால் மறக்கவே முடியாது.குருமண்காடு என்னும் பகுதியை அண்மித்திருக்கும் குளம் பட்டாணிச்சுப் புளியங்குளம். மன்னார் வீதியிலுள்ளது.
மாரிகளில் குளம் நிறைந்து வான் பாயும். இரவு முழுவதும் பெய்யும் மழையின் ஒலியினை இரசித்தபடியே தூங்கிக் கிடக்கும் நாம் விடிந்ததும் வான் பாயும் குளக்கட்டை நோக்கி ஓடுவோம்.
 
அக்கிராமத்து மக்கள் பலரையும் அங்கு அச்சந்தர்ப்பத்தில் காணலாம்.
வான் பாயும் நீருடன் வழுகிச் செல்லும் விரால் மீன்களைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். வெங்கணாந்திப் பாம்புகளும் அவ்விதம் விரால் பிடிப்பதுண்டு. அவ்விதமான ஒரு பாம்பையும் ஒரு தடவை பார்த்திருக்கின்றேன். இரவு முழுவதும் விரால் பிடித்து உண்ட மயக்கத்தில் அசைவற்றுக் கிடந்தது. 'தொண்டனுக்கு உண்ட களை' என்றொரு சொலவடை உண்டல்லவா. அதுதான் அப்போது நினைவுக்கு வந்தது.
 
என் பால்ய பருவத்து அழியாத கோலங்களில் இந்தப் பட்டாணிச்சுப்புளியங்குளத்தின் 'மாரி வான்பாய்தலு'க்கும் அழியாத ஓரிடமுண்டு.
 
இந்தக் குளத்தின் வான் பாயும் நீரொலியைக் கேட்கும்பொழுதெல்லாம் நினைவில் வரும் வரிகள் இவை:
 
"உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!'
 
அப்பொழுதே அப்பா வாங்கி தந்திருந்த தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்று 'புலியூர்க் கேசிக'னின் உரையுடன் வெளிவந்திருந்த சிலப்பதிகாரம் (மூலமும், உரையும் தொகுதி). அதன் பக்கங்களைப் புரட்டுகையில் அப்பொழுதே என் மனத்தில் பதிந்து விட்ட கானல் வரி வரிகள் இவை. முழு நூலையும் படிக்கும் ஆற்றல் இல்லாதிருந்த சமயத்திலும் கவிஞர் இளங்கோவின் எளிமையான இது போன்ற வரிகள் சில கண்ணில் பட்டன. அவை மனத்தில் நிலையாகப் பதிந்து விட்டன. மதகு ஓதை, உடைநீர் ஓதை என்னும் சொற்கள் என் மனத்துக்குப் பிரியமான சொற்கள். அச்சொற்களை நினைத்த மாத்திரத்தில் பெருமழை பெய்து , கட்டுடைத்துப் பாயும் வெள்ளமும், அதன் ஒலியும் நினைவுக்கு வந்து விடும்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...