Sunday, February 1, 2026

"அம்பிலி மாமே! ஒப மொக்கத கரண்ணே?" - ராஜு அங்கிள் நினைவுகள்!


ராஜு அங்கிளை (அம்மாவின் கடைசிச் சகோதரர்)  நினைத்ததும் என் நினைவில் வரும் முக்கிய விடயங்களிலொன்று அவரது 'ரெகோர்ட் பிளேயர் ஸ்டாண்ட்' .  மரத்தால் ஆன அழகான  'ரெகோர்ட் பிளேயர்' அமைப்பு அது. அவரை இசைப்பிரியர் என்றும் கூறலாம். மேனாட்டுப்பாடகர்களின் ஒலித்தட்டுகள் ( Records) தொடக்கம் சிங்கள  'பைலாப்' பாடல்களின் ஒலித்தட்டுகள் வரை பல பாடல்கள் அடங்கிய ஒலித்தட்டுகள் அவரிடமிருந்தன. ஜிம் ரீவ்ஸ் (Jim Reeves), எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley), பீட்டில்ஸ் (Beatles) போன்றோரின்  ஒலித்தட்டுகள் அவரிடமிருந்தன. அவர் எழுபதுகளின் ஆரம்பத்திலேயே கனடா வந்து விட்டதால் , அது வரை எட்டாக் கனியாகவிருந்த அந்த ரெகோர்ட்  பிளேயர் எமக்கும் எட்டும் கனியானது. அதன் பின் அங்குள்ள ஒலித்தட்டுகளை அவ்வப்போது ஒவ்வொன்றாகக் கேட்டு மகிழ்வதுண்டு. அவற்றிலொன்று என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு சிங்களப்பாடல். அதனைப் பாடியவர் யார் என்பது தெரியாது. ஆனால் கேட்ட முதல் தடவையே என்னைக் கவர்ந்துவிட்ட பாடல் அது. அண்மையில்தான் அப்பாடலை யு டியூப்பில் தேடிக் கண்டு பிடித்தேன். அதனைப்பாடியவர் அக்காலகட்டத்தில் புகழ்பெற்ற விளங்கிய சிங்களப்பாடகர் சி.டி.ஃபெர்ணாண்டொ என்று அப்போதுதான் அறிந்துகொண்டேன்.  அந்தப்பாடல்: "அம்பிலி மாமே! ஒப மொக்கத கரண்ணே?"

கலை, இலக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் ஊடகவியலாளரும் , கலைஞருமான கிருபா கந்தையா!


ஊடகவியலாளரும், கலைஞரும், புகைப்படப்பிடிப்பாளருமான கிருபா கந்தையா அவர்களின் 'தடயத்தார்'  'யு டியூப் சானல்' சத்தமின்றி முக்கியமானதொரு பணியினை ஆற்றி வருகின்றது. 'டொரோண்டோ'வில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகளைக் காணொளிகளாக்கி இந்தத் 'தடயத்தார்' சானலில் பதிவிட்டு வருகின்றார் கிருபா கந்தையா.  'தடயத்தார்' சானல் கலை, இலக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்வதன் மூலம் ஆவணப்படுத்தி வருகின்றது. இது அவ்வளவொன்றும் இலகுவான செயலல்ல. கடும் உழைப்பினையும் , அர்ப்பணிப்பையும் வேண்டுமொரு செயல்.

இது போன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். அது அவசியமானதும் கூட.  இதுவரை இவரது இந்தச் சானலைப் பார்க்காதவர்கள் சென்று பாருங்கள். பிடித்திருந்தால் அதைப் பாராட்டுங்கள். அதைச் 'சப்ஸ்கிரைப்' ( Subscribe) செய்யுங்கள். எவ்விதப் பணமும் கொடுக்கத்தேவையில்லை. இவ்விதம் செய்வதன் மூலம் கிருபா கந்தையா அவர்களின் உழைப்பை, ஆரோக்கியமான பணியை நீங்களும் அங்கீகரிக்கின்றீர்கள். 

Friday, January 30, 2026

காலத்தால் அழியாத கானம்: "உண்மை அன்பின் உருவாய் என் முன் வந்தாயே"




'பாக்தாத் திருடன்' திரைப்படத்துக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. எம்ஜிஆரும், வையந்திமாலாவும் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படம் என்ற முக்கியத்துவம்தான் அது.  'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' வரிசையில் அராபியச் சூழலில் பின்னப்பட்ட கதை.

என்னைப்பொறுத்தவரையில் இப்படத்துக்கு இன்னுமொரு முக்கியத்துவமுண்டு. எழுபதுகளில் கொழும்பில் மீள் வெளியீடாக வெளியானபோது இத்திரைப்படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது.  ஜெஸிமா திரையரங்காக இருக்க வேண்டும். அதே காலகட்டத்தில் 13ஆவது தடையாக வெளியான 'குலேபகாவலி' அறுபது நாட்களைக் கடந்து ஓடியது. 

தமிழில் நூலாக வெளிவந்த முதலாவது சரித்திர நாவலை எழுதிய பெண் எழுத்தாளர் சிவநயனி முகுந்தன்! - வ.ந.கிரிதரன் -



தமிழக எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் 'பாண்டிய  நெடுங்காவியம்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதியிருக்கின்றார். மூன்று பாகங்களை உள்ளடக்கிய இந்நாவலின் மூன்று பாகங்களும் வானதி பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. முதற் பதிப்பு வெளியான ஆண்டு 2015.  இந்நூலின் பின்னட்டையிலும், உள்ளே விமர்சகர் ஒருவரின் திறனாய்விலும் தமிழில் சரித்திர நாவல் எழுதிய முதலாவது பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இது உண்மையா?

2012ற்கு முன்பே இவர் சரித்திர நாவல் அல்லது நாவல் எழுதியிருந்தால் அக்கூற்றினை ஏற்றுக்கொள்ளலாம். அப்படி நடந்த மாதிரித்தெரியவில்லை.  உண்மையில் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் சிவநயனி முகுந்தன் தற்போது கனடாவில் வசிக்கின்றார்.  இவர் ஒரு 626 பக்கங்களைக் கொண்ட சரித்திர நாவலொன்றை எழுதியிருக்கின்றார். இவர்  கனடாவில் 'வேல்விழியாள் மறவன்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்.  வெளிவந்த ஆண்டு 2012. வெளியிட்ட பதிப்பகம் - 'வித்தக விருட்சம்'. இதன் படி தமிழில் சரித்திர  நாவல் எழுதிய பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் அல்லர். பின் யார்? எழுத்தாளர் சிவநயனி முகுந்தனே.  [அனுஷா வெங்கடேஷ் என்னும் பெண் பெயரிலும் 'காவிரி மைந்தன்' என்னும் சரித்திர நாவலும், வேறு சில நாவல்களும் வெளியாகியுள்ளன. இவற்றை எழுதியவர் ஆண் எழுத்தாளரான ஆர்.வெங்கடேஷ்]

Thursday, January 29, 2026

'தி பாஸ்' புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனின் 'மினியாபோலிஸ் தெருக்கள்'!


https://www.youtube.com/watch?v=GDaPdpwA4Iw

பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் (Bruce Springsteen) 'மினியாபோலிஸ் தெருக்கள்' (Streets of Minneapolis) என்னும் பாடலை வெளியிட்டிருக்கின்றார். உண்மைக் கலைஞர்கள் தாம் வாழும் சூழலில் நிலவும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் தம் கலையின் வாயிலாகக் குரல் கொடுப்பார்கள். அதனைப் பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் செய்திருக்கின்றார். காலத்தின் கட்டாயமான செயலினைச் செய்ததற்காக அவருக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

அமெரிக்கப் பாடகரான இவரை இரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் 'தி பாஸ்' (The Boss) என்று அழைப்பார்கள். பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளரான இவர் 'ரொக் அன் ரோல்' (Rock and Roll) இசையில் முக்கிய பங்களிப்புச் செய்த பாடகர். சமூக, அரசியல் விமர்சனங்களாகத் திகழும் பாடல்கள் பலவற்றை  இவர் பாடியுள்ளார். தொழிலாளர் நலன்களுக்காக, உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர். தற்போது அமெரிக்க அதிபர் தன் தனிப்பட்ட அடக்குமுறை இராணுவமாக உருவாக்கியிருக்கும் ICE அமைப்பின் மினியாபோலிஸ்  நகரில் இடம் பெற்று வரும் மனித  உரிமை மீறல்களுக்கு எதிராக இப்பாடலின் மூலம்  குரல் கொடுத்திருக்கின்றார்.

அவரது 'மினியாபோலிஸ் தெருக்கள்' என்னும் பாடலின் கூகுள் AI வழித்  தமிழாக்கத்தையும், ஆங்கில மூலத்தையும் கீழே தந்திருக்கின்றேன்.

Streets of Minneapolis by Bruce Springsteen (கூகுள் AI தமிழாக்கம்)

மினியாபோலிஸ் தெருக்கள்! - புரூஷ் ஸ்பிரிங்ஸ்டீன் Bruce Springsteen0

[பாடல் 1]
குளிர்கால பனி மற்றும் கடுமையின் ஊடாக
நிக்கோலெட் அவென்யூவில் கீழே
ஒரு நகரம் தீயையும் பனியையும் எதிர்த்துப் போராடியது
ஒரு ஆக்கிரமிப்பாளரின் காலணிகளின் கீழ்
DHSஸில் இருந்து கிங் டிரம்ப்பின் தனிப்பட்ட இராணுவம்
அவர்களின் கோட்டுகளில் துப்பாக்கிகள் கட்டப்பட்டிருந்தன
மினியாபோலிஸுக்கு சட்டத்தை அமல்படுத்த வந்தனர்
அவர்கள் கதை அப்படித்தான் சொல்கிறது

காலத்தால் அழியாத கானம்: 'கட கட லொட லொட வண்டி'


 https://www.youtube.com/watch?v=cklW1BKPgeQ

'சம்சாரம்' திரைப்படம் 1950ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைப்படம். ஜெமினி தயாரிப்பான இத்திரைபடத்தின் இயக்குநர்களிலொருவர் தயாரிப்பாளரான எஸ்.எஸ்.வாசன். அடுத்தவர் சந்துரு. இத்திரைப்படத்தின் இசை - ஈமணி சுந்தர சாஸ்திரி. பாடல்களை எழுதியவர் : கொத்தமங்கலம் சுப்பு. 

இத்திரைப்படத்தில் வரும் 'கட கட லொட லொட வண்டி' மிகவும் புகழ்பெற்ற தமிழ்த்திரைப்படப்பாடல்களிலொன்று. இப்பாடலைப்பாடியிருப்பவர்கள் ஏ.எம்.ராஜா மற்றும் ஜிக்கி.

Wednesday, January 28, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.


வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.


இசை & குரல்:  SUNO AI    ஓவியம்: AI

நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.

எண்ணங்கள் இல்லையென்றால் என்ன உண்டு?
எண்ணங்கள் எம்மை வழிநடத்தும் பாதைகள்.
எண்ணங்களை மீறி ஒன்றும் இல்லையா புறத்தே.
எண்ணங்களே எம் வாழ்வின் ஆதாரங்கள்.

நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...