உண்மையைக் கூறப்போனால் என் பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ", 'ஏ தாழ்ந்த தமிழகமே' போன்ற நூல்கள் பலவற்றை வாசித்திருக்கின்றேன். கலைஞர் மு.கருணாநிதியின் 'ரோமாபுரிப்பாண்டியன்', 'வெள்ளிக்கிழமை' போன்ற புதினங்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அவரது சிலப்பதிகாரத்தை மையமாகக்கொண்ட நாடகத்தினை வாசித்திருக்கின்றேன். அவ்வப்போது பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான கட்டுரைகள், கவிதைகளை வாசித்திருக்கின்றேன். பெரியாரின் நூல்களைப் பெரிதாக வாசித்திருக்காவிட்டாலும் அவரைப் பற்றிய அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி போன்றோரின் எழுத்துகளூடு அவரை அறிந்திருக்கின்றேன்.
அண்மைக்காலமாகத் தமிழகத்தில் 'நாம் தமிழர்' கட்சியினரின் பெரியார், திராவிடம்,கலைஞர் ஆகியோர் பற்றிய கடுமையான விமர்சனங்கள் பெரியாரின் எழுத்துகள், கலைஞரின் எழுத்துகள், அறிஞர் அண்ணா போன்ற ஏனையோரின் எழுத்துகள் பக்கம் என் கவனத்தைத் திருப்பின.
இவ்வகையில் கலைஞரின் சுயசரிதையான 'நெஞ்சுக்கு நீதி' யை வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இன்று இவ்வளவு 'நாம் தமிழர்' கட்சியினரின் தூற்றுதல்களுக்கு உள்ளாகியிருக்கும் கலைஞரின் கடந்த கால வாழ்க்கை எப்படியிருந்தது? எவ்விதம் அவர் தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமைகளில் ஒருவராக உருவானார் என்பதை அதன் மூலம் அறியலாம் என்று தோன்றியது. 'நெஞ்சுக்கு நீதி' பல பாகங்களை உள்ளடக்கிய சுயசரிதை.
கலைஞரின் நாட்டுடமையாக்கப்பட்ட படைப்புகள் 'தமிழி டிஜிட்டல் நூலகம்' இணையத்தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் வாசிப்பதற்காக 'நெஞ்சுக்கு நீதி' இணைய இணைப்பினை இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.
நெடிய சுய சரிதைத்தொகுப்பென்பதால் நேரம் கிடைக்கும்போது வாசிப்பதாக முடிவெடுத்துள்ளேன். இப்பொழுது 'நெஞ்சுக்கு நீதி' யின் முதற் பகுதியை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். இதில் கலைஞர் தன் குடும்பம், இளமைப்பருவம், அரசியல் ஆர்வம், எழுத்தார்வம், ஆரம்ப கால அரசியற் செயற்பாடுகள், பாதித்த அரசியல் ஆளுமைகளான பெரியார், அண்ணா & அழகிரி போன்றவர்களைப் பற்றி விபரித்துள்ளார். அவருக்கேயியுரிய சுவையான மொழியில் சுயசரிதை விரிகின்றது.
கலைஞரை விமர்சிப்பவர்களைக் கேட்பவர்கள் கலைஞரின் தந்தையார் ஆந்திராவிலிருந்து வந்தவர் என்று ஊகித்து விடுவார்கள். 'நெஞ்சுக்கு நீதி'யின்படி கலைஞரின் தந்தை, கலைஞரின் தாத்தா எல்லோரும் திருவாரூர் திருக்குவளையில் பிறந்தவர்கள், ஆக திருக்குவளையில் பிறந்த ஒரு தமிழரைத்தான் அவரது எதிரிகள் தெலுங்கர் என்று விமர்சிக்கின்றார்கள். என்னைப்பொறுத்தவரையில் இரண்டு மூன்று தலைமுறைகளாக வாழும் குடும்பத்தில் பிறந்த ஒருவர் எந்த மண்ணில் , எந்த மொழி பேசி வாழ்கின்றாரோ அம்மண் அவரின் தாய் மண். அம்மொழி அவரின் தாய்மொழி.
நெஞ்சுகு நீதி பாகம் ஒன்று
No comments:
Post a Comment