Thursday, May 29, 2025

சிறந்த குணசித்திர நடிகரான நடிகர் ராஜேஷ் மறைந்தார்!


நடிகர் ராஜேஷ் மறைந்த தகவலினை  இணையம் தாங்கி வந்து அதிர்ச்சியைத்  தந்தது. அண்மையில்தான் தற்செயலாக யு டியூப்பில் அவரது நேர்காணலொன்றைப் பார்த்தேன்.  அதில் அவர் நடிகையர் திலகம் சாவித்திரியின் இறுதி நாட்கள், அவரது  'ரியல் எஸ்டேட்' வர்த்தகம் மற்றும் அவர்  கே.கே. நகரில்  வாங்கிய வீட்டில்  நடந்த  திரைப்படங்களின் படப்பிடிப்புகள்  போன்ற விபரங்களை விபரித்திருந்தார். முன்னாள் தமிழக முதல்வரும், நடிகருமான எம்ஜிஆர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர்.  கார்ல் மார்க்ஸ் இவருக்குப் பிடித்த ஆளுமைகளில் ஒருவர். இங்கிலாந்து சென்று அவரது சமாதியைப் பார்த்து வந்தவர்.   எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் ஜானகி அம்மையாரை ஆதரித்தவர்.

சின்னத்திரை,பெரிய  திரை என்று தன் கலையுலகப் பங்களிப்பை வழங்கியவர் நடிகர் ராஜேஷ். சிறந்த குணச்சித்திர நடிகர். கன்னிப்பருவத்திலே, சிறை, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை  ஆகியவை இவரை நினைத்ததுமே நினைவுக்கு வரும் திரைப்படங்கள். 'அச்சமில்லை, அச்சமில்லை' திரைப்படத்தில் உலகநாதன் என்னும் அரசியல்வாதியாக நடித்திருப்பார். மறக்க முடியாத பாத்திரம். கே.பாலச்சந்தரின் இயக்கத்திலும், அவரது குடும்பத்தினரின் 'கவிதாலயா' தயாரிப்பிலும் வெளியான 'அச்சமில்லை. அச்சமில்லை' திரைப்படம் சிறந்த தமிழ்ப்படத்துக்கான தேசிய விருதினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

 'சிறை'யில் வரும் 'நான் பாடிக்கொண்டே இருப்பேன்'  ,  'கன்னிப்பருவத்திலே' படத்தில் வரும் 'பட்டு வண்ண ரோசாவாம்', 'அச்சமில்லை' அச்சமில்லை' திரைப்படத்தில் வரும்  'ஆவாரம் பூவு. ஆறேழு நாளாய்' பாடல்களை மறக்க முடியுமா?  

அவர் நினைவாக 'அச்சமில்லை அச்சமில்லை' திரைப்படத்திலிருந்து 'ஆவாரம் பூவு' பாடலைப் பகிர்ந்து கொள்கின்றேன்.  வி.எஸ்.நரசிம்ஹன் இசையில், கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் , எஸ்.பி.பி & பி.சுசீலா குரல்களில் , ராஜேஷ் & சரிதா நடிப்பில் ஒலிக்கும் பாடல். - https://www.youtube.com/watch?v=PJxWHDkRlfE

நடிகர் ராஜேஷ் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும்  என் ஆழ்ந்த இரங்கல்.

No comments:

எம்ஜிஆரின் உணவு, கல்விக்கான பங்களிப்புகள்!

எம்ஜிஆர் தனியார் பொறியியல் , மருத்துவர் கல்லூரிகளை அனுமதித்தையொட்டி அவரது எதிர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இவர்கள் விமர்சிக்கின்ற அள...

பிரபலமான பதிவுகள்