கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் நூலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததது. குமரன் புத்தக இல்லம்' பதிப்பகத்தினரால் தமிழகத்தில்; 2009இல் வெளியான நூலது. இதுவரையில் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிப் பலர் எழுதியிருக்கின்றார்கள். இரசிகமணி கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராசன் என்று பலர், அவர்களது நூல்கள் பெரும்பாலும் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய பொதுவான அறிமுக நூல்களாகத்தான் அமைந்துள்ளன. அவற்றின் முக்கியம் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றீய தகவல்களை வழங்குகின்றன என்பதில்தான் தங்கியுள்ளது. ஆனால் கலாநிதி நா.சுப்பிரமணியனின் மேற்படி நூல் அவற்றிலிருந்தும் பெரிதும் வேறுபடுவது நூலாசிரியரின் ஈழத்து நாவல்கள் பற்றிய திறனாய்வில்தான். ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய தகவல்களை வழங்கி நல்லதோர் ஆவணமாக விளங்கும் அதே சமயம் ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய நல்லதொரு திறனாய்வு நூலாகவும் இந்நூல் விளங்குகின்றது. அந்த வகையில் இந்த நூலின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது. இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களிலொன்று: நூலாசிரியரின் இந்த நூலானாது அவர் தனது முதுகலைமானிப் பட்டப்படிப்புக்காக, இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத்தில் , ஈராண்டுகள் (1970- 1972) நடாத்திய ஆய்வின் விளைவாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும். வெறும் ஆய்வுக்கட்டுரையாக இல்லாமல் அவரது கடும் உழைப்பினால் நல்லதொரு திறனாய்வு நூலாகவும் மேற்படி கட்டுரை வளர்ச்சியுற்றிருக்கின்றது.
இந்நூல் 1885ஆம் ஆண்டில் வெளியான அறிஞர் சித்திலெப்பையின் 'அசன்பேயினுடைய கதை' லிருந்து 1977ஆம் ஆண்டுவரை வெளிவந்த ஞானரதனின் 'ஞானபூமி' வரை சுமார் 450 நூல்களை ஆராய்கிறது. இந்நூலின் முதல் பதிப்பு 1978இல் வெளியானது. நான் வாசித்தது திருத்தி, விரிவாக்கப்பட்ட அண்மைய பதிப்பு, குமரன் புத்தக இல்லத்தினால் 2009இல் வெளியான பதிப்பு. அதில் 1977ற்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களை உள்ளடக்கிய பின்னிணைப்புகளுமுள்ளன.






