கலாமணி பரணீதரனை ஆசிரியராக, 'அறிஞர் தம் இதய ஓடை, ஆழ நீர் தன்னை மொண்டு, செறி தரும் மக்கள் எண்ணம் , செழித்திட ஊற்றி ஊற்றி, புதியதோர் உலகம் செய்வோம்' என்னும் பாரதிதாசனின் பாடல் வரிகளைத் தாரகமந்திரமாக் கொண்டு அல்வாயிலிருந்து வெளிவரும் ஜீவநதி கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 48வது இதழான புரட்டாதி 2012 இதழ் கனடாச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கின்றது. இது பற்றிய ஆசிரியத் தலையங்கத்தில் 'ஜீவநதியின் கனடாச் சிறப்பிதழும் முழுமையாகக் கனடா வாழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மாத்திரமே தாங்கி வருகின்றது என்பது பதிவு செய்யப்பட வேண்டியதொன்றாகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்மாவட்டத்திலிருந்து ஆஸ்திரேலிய, கனேடியச் சிறப்பிதழ்களை வெளிக்கொண்டுவந்ததன்மூலம் ஜீவநதி மேற்படி நாடுகளிலுள்ள படைப்பாளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதுடன், ஈழ மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு மேற்படி நாடுகளின் கலை, இலக்கிய முயற்சிகளையும் அறிமுகம் செய்கின்றது. இது பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். மேற்படி ஆசிரியத் தலையங்கத்தில்2011 வருட சிறந்த சஞ்சிகைக்கான கு.சின்னப்பபாரதி விருது கிடைத்த விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராட்டுகள்.
மேற்படி கனடாச்சிறப்பிதழ் கட்டுரை, கவிதை, சிறுகதை, நேர்காணல் ஆகியவற்றைத் தாங்கி வெளிவந்துள்ளது. அ.முத்துலிங்கம், வீரகேசரி மூர்த்தி, மணி வேலுப்பிள்ளையுட்பட எழுவரின் கட்டுரைகளையும், தேவகாந்தன், ஸ்ரீரஞ்சனி, மெலிஞ்சி முத்தன், த.மைதிலி, வ.ந.கிரிதரன் ஆகியோரின் சிறுகதைகளையும், திருமாவளவ்ன், தமிழ்நதி, மயூ மனோ, சேரன், டிசெதமிழன் (மொழிபெயர்ப்புக் கவிதைகள்), ஆனந்த பிரசாத், கறுப்பி, நிவேதா ஆகியோரின் கவிதைகளையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கின்றது 'ஜீவநதி' கனடாச்சிறப்பிதழ். முதலாவது கட்டுரையான 'கனேடியத் தமிழர்களின் கலை இலக்கிய வாழ்வியல்' என்னும் சுல்பிகாவின் கட்டுரை ஆழமானது. ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கூறும் பொருள்பற்றி ஆராய்கிறது. மணி வேலுப்பிள்ளையின் 'நொறுங்குண்ட இதயம் ஓர் அரிய நாவல்' என்னும் கட்டுரை மங்களநாயகம் தம்பையாவினால் எழுதப்பட்டு 1914இல் வெளிவந்த 'நொறுங்குண்ட இருதயம் ஓர் அரிய நாவல்' என்னும் தேடி எடுத்த நாவல் பற்றி பதிவு செய்கின்றது. பொருளாசையினால் துட்டர்கள் கையில் தம் பெண் பிள்ளைகளைக் கொடுக்கும் பொருளாசையெனும் கொடிய நோய்க்காளாகியுள்ள தந்தையர்மேல் பரிதாபப்பட்டு அதற்குத் தீர்வாக அரிய சற்போதமென்னும் (நற்போதனையென்னும்) மருந்தினை வழங்குவதே நாவலின் கரு என்பதைக் கட்டுரையாளர் நாவலின் பாத்திரமொன்றின் உரையாடலினூடு எடுத்துக் காட்டுகின்றார். நாவலின் பிரதான பாத்திரங்களெல்லாம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகின்றார்கள். சந்தோசமாக வாழ்கின்றார்கள். 'நாவலாசிரியர் கூறும் பரிகாரம் வேறானதாகவிருந்தபோதும் மனச்சாட்சியே இந்நாவலின் பிரதானமான மையக்கரு. அதுவே நாவலின் மாந்தர் அனைவரையும் கொண்டு நடத்துன்றது. பரிகாரம் எதுவாயினும் இது அரியதொரு நாவலெ'ன்ற தனது கருத்தினையும் முன் வைக்கின்றார் கட்டுரையாசிரியர். அத்துடன் நாவலாசிரியரின் ஆங்கிலப் புலமை காரணமாக அவர் பல ஆங்கில மொழியில் கையாளப்படும் கூற்றுகளைத் தமிழ் மயப்படுத்தி ஆங்காங்கே பாவித்துள்ளதையும், பாத்திரங்கள் நல்ல தமிழில் உரையாடும் பண்பினையும் அவதானித்துக் கட்டுரையாளர் பதிவு செய்துள்ளார். இக்கட்டுரையின் முக்கியமான பயன்களிலொன்று இந்த நாவல் பற்றி இன்றைய தலைமுறைக்கு அறிவித்ததுதான். இக்கட்டுரைவாயிலாகத்தான் நானே இந்த நாவல் பற்றி அறிந்துகொண்டேன்.