Sunday, March 18, 2018

எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவின் தாயகம் (கனடா) புகலிடத்தமிழர்களின் முக்கியமான பத்திரிகை / சஞ்சிகைகளிலொன்று. - வ.ந.கிரிதரன்


புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. இந்தப்பத்திரிகை /சஞ்சிகையினை நடத்தியவர் எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ். விடுதலைப்புலிகள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், விடுதலைப்புலிகளை விமர்சித்து எழுதியவர். இன்று பலர் விடுதலைப்புலிகளின் ஆயுதபோராட்டம் முடிந்து, மெளனித்ததன் பின்பு ஆக்ரோஷமாக விமர்சித்து வருவதைப்போல் அல்லாமல் , விடுதலைப்புலிகளின் காலகட்டத்திலேயே விடுதலைப் புலிகளை விமர்சித்து எழுதியவர். அதேசமயம் தான் ஆசிரியராக, பதிப்பாளராகவிருந்து வெளியிட்ட தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் அனைத்து அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களுக்கும் இடம் கொடுத்தார். அவர்கள்தம் படைப்புகளைப் பிரசுரித்தார். தாயகம் (கனடா) ஆரம்பத்தில் வாரப்பத்திரிகையாக வெளியானது. பின்னர் தனது வடிவமைப்பை மாற்றி வார சஞ்சிகையாக வெளிவந்தது.

தானே ஆசிரியராகவிருந்து, பதிப்பாளராகவிருந்து, தட்டச்சு செய்பவராகவிருந்து, அச்சடிப்பவராகவுமிருந்து (இதற்காக சிறியதொரு அச்சியந்திரத்தையும் தன்னிருப்பிடத்தில் வைத்திருந்தார். ஒருவரே கைகளால் இயக்கக்கூடிய அச்சியந்திரம். வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பான 'எழுக அதிமானுடா!' தொகுப்பினை அச்சிட்ட அச்சியந்திரமும் அதுவே. அந்த அச்சியந்திரம் இன்னும் அவரிடம் ஞாபகச்சின்னமாக இருக்கக்க்கூடும்) )சுமார் ஐந்து வருடங்கள் வரையில் 'தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையினைக் கொண்டு வந்தார். முப்பது வருடங்களில் ஐம்பது இதழ்களைக்கொண்டு வருவதைப்பார்த்து மூக்கில் விரலை வைத்து வியக்கும் நம்மவர்கள் , ஐந்து வருடங்களில் இருநூறுக்கும் அதிகமாகச் தாயகம்(கனடா)வினைத் தனியொருவராக வெளிக்கொணர்ந்தவர் இவர் என்பதை அறிந்தால் வியப்பின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.

ஆனந்த் பிரசாத்தின் 'ஒரு சுயதரிசனம்' - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் ஆனந்த் பிரசாத் கவிதைகள் புனைவதிலும் வல்லவர். இவர் எழுதிய 21 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்று 'ஒரு சுயதரிசனம்' என்னும் பெயரில் 1992இல் கனடாவில் 'காலம்' சஞ்சிகையின் வெளியீடாக வெளிவந்துள்ளது. அக்காலகட்டத்தில் 'காலம்' சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும், 'காலம்' சஞ்சிகை வெளிவருவதற்கு முக்கிய காரணகர்த்தாக்களிலொருவராகவும் இவர் விளங்கியிருப்பதை நூலின் ஆரம்பத்தில் 'காலம்' சஞ்சிகை ஆசிரியர் செல்வம் எழுதிய குறிப்பிலிருந்து அறிய முடிகின்றது.

மேற்படி நூலினை அவர் சமர்ப்பித்துள்ள பாங்கு நினைவிலெப்போதும் நிற்க வைத்துவிடும் தன்மை மிக்கது. நூலுக்கான சமர்ப்பணத்தில் அவர் "அதிருஷ்ட்டங்கள் வந்து நான் அறியாமைக்குள் அமிழ்ந்து போகாது என்னைத்தடுத்தாட்கொண்ட துரதிருஷ்ட்டங்களுக்கு' என்று நூலினைத்தனக்கேற்பட்ட துரதிருஷ்ட்டங்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். நான் அறிந்த வரையில் இவ்விதம் துரதிருஷ்ட்டங்களு நூலொன்றைச் சமர்ப்பணம் செய்த எழுத்தாளரென்றால் அவர் இவராக மட்டுமேயிருப்பாரென்று எண்ணுகின்றேன்.

இக்கவிதைத்தொகுதியிலுள்ள் இவரது கவிதைகள் பல புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வு பற்றிப்பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக 'பொறியியலாளன்',  'அகதி', 'ஒரு சுயதரிசனம்', மற்றும் 'ஒரு Academic இன் ஆதங்கம்'(நூலில் acadamic என்று அச்சுப்பிழையேற்பட்டுள்ளது) ஆகிய கவிதைகளைச்சுட்டிக்காட்டலாம். கவிஞர் கனடாவுக்கு வந்த புதிதில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதால் அக்காலகட்டத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவுமிவற்றைக்கொள்ளலாம்.

'பொறியியலாளன்' தொழிற்சாலையொன்றில், இயந்திரங்களுடன் மல்லுக்கட்டும் அனுபவங்களை விபரிப்பது. அவன் தொழிற்சாலையொன்றில் வேலை செய்கின்றான். பலவடிவங்களில் விளங்கும் இயந்திரங்களால் உருவாக்கப்படும் உற்பத்திப்பொருள்களை எண்ணி அடுக்குவதுதான் அவனது வேலை. ஆரம்பத்தில் ஐந்து டாலர்களுக்கு ஆரம்பித்தவனின் சம்பளம் எட்டு டாலர்களை எட்டிப்பிடித்துவிட்டது. தொழிற்சாலையில் எந்நேரமும் எண்ணி எண்ணி அடுக்குவதால் வீட்டிலும்  சமையலுக்காக வெங்காயத்தை உரிக்கும்போதும், நறுக்கும்போதும், சாப்பிடும்போதும், தூங்கும்போதும், கனவிலும், நனவிலும் அவன் என்ணுவதை மட்டும் நிறுத்துவதில்லை. எண்ணுவதே அவன் வாழ்வாகி விடுகிறது.

வேலணையூர் தாஸின் 'மழைக்காலக்குறிப்புகள்' பற்றி.... வ.ந.கிரிதரன் -

வேலணையூர் தாஸின் 'மழைக்காலக் குறிப்புக்கள்' நூலினை அண்மையில் பெற்றுக்கொண்டேன். வேலணையூர் தாஸ் 'யாழ் இலக்கியக் குவியம்' அமைப்பின் ஸ்தாபகர். இணைய இதழ்கள், அச்சிதழ்கள் பலவற்றில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. 'யாழ் இலக்கியக் குவியம்' அமைப்பின் அழகிய வெளியீடாக மேற்படி நூல் வெளியாகியிருப்பது திருப்தியைத்தருவது. நூலின் ஆரம்பத்தில் 'பதிவுகள்' இணைய இதழுட்பட தனது படைப்புகள் வெளிவந்த ஊடகங்களுக்கு நன்றியினை நூலாசிரியர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பல,விடயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன. யுத்தத்தில் தந்தையை இழந்த, மகனை இழந்த, கணவனைஇழந்த எனப் பல்வேறு இழப்புகளைப் பற்றிக் கவிதைகள் விபரிகின்றன. காதல், மழைக்காலத்து அனுபவங்கள், இழந்த நிலம், அன்னை மீதான அன்பு, மழை அனுபவங்கள் எனக் கவிதைகள் பன்முகத்தன்மை மிக்கவை. கவிதைகளும் சொற் சிக்கனம் மிகுந்தவை, சொற்சிக்கனம் சிறிது தளர்ந்தவை எனப்பன்முகமானவை.

நூலின் முதற் கவிதையான 'என் நிலம்' போரினால் இழந்த நிலத்துக்குத் தன் இறுதிக்காலத்தில் மீண்டவரின் அனுபவத்தை விவரிக்கும்.

'காலப் பிரளயமோ
கண்பட்டுப் போனதுவோ
போர் வந்துதான் துரத்த
பிரிந்தேன் தாய் நிலத்தை'

என்று போரின் விளைவினை விபரிக்கும் கவிதை போரின் முடிவுக்குப் பின்னர் தனது சொந்த மண்ணுக்குத் திரும்பும் ஒருவரை

'சுற்றிவர முட்கம்பி
இரும்புத்தூண் அரண்கள்,
விளங்கா மொழியினிலே
பெயர்ப்பலகை'

எனச்சொந்த மண் வரவேற்கும். சொந்த மண்ணே அந்நியமாகிப்போன சோகத்தின் பதிவு இக்கவிதை.

மேலும் இத்தொகுப்பு காணாமல் போனவர்கள் பலரைப்பற்றிய குறிப்புகளை வெளிக்கொணர்கின்றது, உதாரணமாகக் 'காலம் அவளைத்தேடிக்கொண்டிருக்கிறது' கவிதை காதல் உணர்வுகள் பொங்கும் பருவத்தினளான இளம் பெண்ணொருத்தியின் கனவுகள் எவ்விதம் சிதைக்கப்பட்டன என்பது பற்றி விபரிக்கும். ஊற்றெடுக்கத்தொடங்கிய காதல் இசையில் அவள் மிதந்து கிடக்கின்றாள். இந்நிலையில்

'வானமும் நதியும் பறவைகளும்
காடும் அவள் பாடலை மீளவும் பாடின..
அந்த இசையில் மிதந்து கொண்டிருந்த

ஓர் நாளில் அவள் காணாமல் போகின்றாள். '. இங்கு 'ஒரு நாளில்' என்று வந்திருக்க வேண்டும். ஆயினும் கவிஞர் காரணத்துடன் 'ஓர் நாளில்' என்றுபாவித்திருப்பதற்குத் தர்க்கரீதியிலான காரணம் இருப்பின் அது என்னவென்று யான் அறியேன், அவர்தான் கூற வேண்டும்.

எம்.வி.வி'யின் 'வேள்வித் தீ' பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்.... வ.ந.கிரிதரன் -

- எம்.வி.வெங்கட்ராம் -
அண்மையில் எம்.வி.வெங்கட்ராமின் 'வேள்வித் தீ' வாசித்தேன். காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ள நாவலிது. மணிக்கொடி எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய படைப்பாளிகளிலொருவர். எம்.வி.வெங்கட்ராம் அப்பாவுக்குப் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். எழுபதுகளில் ஆனந்த விகடனில் மாத நாவலென்றொரு தொடர் வெளிவந்துகொண்டிருந்தது.  அதில் பல எழுத்தாளர்களின் மாத நாவல்கள் தொடராக வெளிவந்தன. நான்கு அல்லது ஐந்து அத்தியாயங்களில் முடியும் தொடர்களவை. அம்மாத நாவல்களிலொன்றினை எம்.வி.வெங்கட்ராம் எழுதியிருந்ததாக நினைவு. அத்தொடர் கோபுலுவின் ஓவியங்களுடன் வந்ததாகவும் நினைவு. அம்மாத நாவலின் பெயர் 'தேவி மகாத்மியம்' என்றிருந்ததாகவும் ஞாபகம். அந்நாவலினை அப்பா விரும்பி வாசித்ததாகவும் ஞாபகம். ஆனால் நான் அந்நாவலை வாசித்ததாக ஞாபகமில்லை என்றுமொரு ஞாபகம். அவ்விதம்தான் எனக்கு எம்.வி.வெ'யின் அறிமுகம் ஏற்பட்டதாகவும் ஞாபகம். அண்மையில் எம்.வி.வெ'யின் 'வேள்வித்தீ' நாவலை வாசித்தபொழுது எம்.வி.வெ பற்றிய , ஆழ்மனதில் ஆழ்ந்து கிடந்த மேற்படி ஞாபகப்பறவைகளெல்லாம் மெல்ல மெல்லச் சிறகடித்து மன வானில் பறக்க ஆரம்பித்தன.

இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடும் அனைவரும் இந்நாவல் செளராஷ்டிரப் பிராமணர் சமூகம பற்றியும், அவர்களது நெசவுத் தொழில் பற்றியும், அவர்களது வரலாறு பற்றியும் பல விபரங்களைப் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிடுவார்கள். அவையே இந்நாவலின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதாகவும் குறிப்பிடுவார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி இந்நாவல் முக்கியத்துவம் பெற்றிருப்பது மானுட உறவுகளின் உளவியலை அற்புதமாகப் பதிவு செய்திருப்பதில்தான் என்று எனக்குத்தோன்றுகிறது. இருப்புக்காகப் போராடும் மானுட வாழ்வை, அவர்கள் மத்தியில் நிலவும் உறவுகளை, அவற்றாலேற்படும் உளவியல் பாதிப்புகளை இவையெல்லாவற்றையும் அழகாக, கலைத்துவம் மிக்கதாக வெளிப்படுத்தியிருப்பதுதான் இந்நாவலின் வெற்றியாக எனக்குப் படுகிறது.

தாமரைச்செல்வியின் படைப்புகள் பற்றி..... வ.ந.கிரிதரன் -

ஈழத்துப்பெண் எழுத்தாளர்களில் தாமரைச்செல்வியின் கதைகளுக்கு முக்கிமானதோரிடமுண்டு. அந்த இடத்துக்கு முக்கிய காரணங்களிலொன்று இவர் தான் வாழ்ந்த காலகட்டத்து சமூக, அரசியல் பின்புலத்தில் தன் கதைகளைப்புனைந்திருப்பதுதான். இவரது கதைகள் பலவற்றில் தொண்ணூறுகளில் ஏற்பட்ட ஈழத்துத்தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள், நிலவிய போர்க்காலச்சூழல் மற்றும் இயற்கை அழிவுகள் அதிக அளவில் விபரிக்கப்படுகின்றன. இவரது கதைகள் பொதுவாக பரந்தன், கிளிநொச்சி மட்டும் வன்னிபிரதேசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்டவை. போர்ச்சூழல் மக்களுக்கு, பல்வேறு வயதினருக்கும் ஏற்படுத்திய பாதிப்புகள், குறிப்பாக உளவியற் பாதிப்புகள் பற்றியெல்லாம் வெளிப்படுத்துபவை. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து , ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துத் தமிழ் மக்களின் இருப்பினை, அவர்கள காலகட்டத்துச் சமூக, அரசியற் சூழல் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவும் இவரது படைப்புகள் இருக்கின்றனவென்றும் கூறலாம்.

அண்மையில் என் சேகரிப்பிலிருந்த புத்தகங்கள் மத்தியில் தேடிக்கொண்டிருந்தபொழுது இவரது 'வீதியெல்லாம் தோரணங்கள்' குறுநாவல் மற்றும் 'வன்னியாச்சி' (சிறுகதைத்தொகுப்பு) ஆகியவை மீள அகப்பட்டன. அவற்றை வாசித்தபொழுதே மேற்படி எண்ணங்கள் முகிழ்த்தன. மேற்படி 'வீதியெல்லாம் தோரணங்கள்' குறுநாவல் வீரகேசரி நிறுவனம் யாழ் இலக்கிய வட்டத்துடன் இணைந்து நடாத்திய கனகசெந்திநாதன் குறுநாவல் போட்டியில் இரண்டாவது இடத்தைப்பெற்ற குறுநாவல்.

இந்தக் குறுநாவல் கூறும் கதை இதுதான்: வெளிநாட்டில் வாழும் தமிழ் இளைஞனொருவனுக்கு ஊரில் தாயார் சீதனத்துடன் திருமணம் பேசுகின்றார். இரு குடும்பத்தாரும் சம்மதிக்கின்றார்கள். மணப்பெண்ணின் சகோதரன் வெளிநாட்டு இளைஞனின் நண்பன் கூட. யாழ்நகரில் நடைபெற்ற இராணுவத்தாக்குதலொன்றில் அந்த நண்பன் இறந்து விடுகின்றான். அவன் இறந்ததால் இனி யாரும் அந்த மணப்பெண்ணுக்குரிய சீதனத்தைத்தரமாட்டார்கள் என்பதால் வெளிநாட்டு இளைஞனின் தாயார் அந்தத்திருமணத்தை நிறுத்திவிடத்திட்டமிடுகின்றார். இன்னுமொரு காரணமும் உண்டு. படையினரின் தேடுதல்கள் அந்த மணப்பெண்ணிருந்த பகுதியில் நடைபெற்றதால் அந்த மணப்பெண்ணுக்கு என்னவெல்லாமோ நடந்திருக்கலாம் என்று வேறு சந்தேகத்தைக்கிளப்பி விடுகின்றாள் அந்தத்தாயார். ஆனால் ஊர் திரும்பும் வெளிநாட்டு இளைஞனோ இவ்விதமான சூழலில்தான் நண்பனின் குடும்பத்துக்குக் கை கொடுக்க வேண்டுமென்று கைவிடக்கூறிய தாயாரிடம் கூறிவிட்டு, நண்பனின் வீடு செல்வதுடன் குறுநாவல் முடிவடைகின்றது.

மணி வேலுப்பிள்ளையின் 'மொழியினால் அமைந்த வீடு' - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான மணி வேலுப்பிள்ளை தற்போது டொராண்டோவில் வசித்து வருகின்றார். எழுத்தாளர் மணி வேலுப்பிள்ளை நல்லதொரு மொழிபெயர்ப்பாளரும், கட்டுரையாளருமாவார். சிலிய ஜனாதிபதி அலந்தே, டெங் சியாவோ பிங், அம்மாவின் காதலன் மாயாகோவஸ்கி மற்றும் ரோசா லக்சம்பேர்க் போன்ற கட்டுரைகளும், தமிழ் மொழிபெயர்ப்பு (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு..) பற்றிய மொழிபெயரியல்பு, மொழியினால் அமைந்த வீடு, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, விபுலானந்த அடிகளின் கலைச்சொல்லாக்க வழிமுறைகள் போன்ற கட்டுரைகள் அதனையே வெளிப்படுத்துகின்றன.

மொழிபெயர்ப்பாளர்கள் பலர் மொழிபெயர்ப்புகளுடன் நின்று விடுகையில், இவர் மொழிபெயர்ப்பு பற்றிய ஆழமான கட்டுரைகளைத் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இவை படைப்புகளை மொழிபெயர்க்க விரும்பும் எழுத்தாளர்களுக்கு பயன் மிக்க ஆலோசனைகளை வழங்குகின்றன.

ஆழமான கட்டுரைகளைச் சுவையாக எழுதுவதில் வல்லவர் இவர். உதாரணத்துக்கு 'மொழியினால் அமைந்த வீடு' கட்டுரை கீழுள்ளவாறு முடிவதைப்பாருங்கள்:

"உள்ளதை உள்ளபடி உரைப்பதற்கு மொழி ஒரு போதும் தடையாய் இருக்கப் போவதில்லை. உள்ளதை உள்ளபடி உரைக்க முற்படாதவர்களுக்கே மொழி தடங்கல் விளைவிக்கும். ஆதலால்தான் ஆட்சியாளரும், அரசியல்வாதிகளும் , விமர்சகர்களும், அவர்களுக்கு உடந்தையாய் விளங்கும் செய்திமான்களும் மொழியைத் திரித்து வருகின்றார்கள். மொழித் திரிபுவாதிகள் கட்டியெழுப்பிய வீட்டிலேயே பரந்துபட்ட பாமர மக்கள் வாடகைக் குடிகளாய் வாழ்ந்து வருகின்றார்கள்."

றியாஸ் குரானாவின் தமயந்தி பற்றிய குறிப்பு பற்றி.... - வ.ந.கிரிதரன் -

அண்மையில் றியாஸ் குரானா தமயந்தியின் படைப்புகளைப்பற்றிப்பின்வருமாறு தன் முகநூல் குறிப்பொன்றில் கூறியிருந்தார்:

"சில விசயங்கள் ஆச்சரியமானதுதான். அவ்வப்போது உதிரியாக இதழ்களில் சில கதைகளைப் படித்திருக்கிறேன். ஓரிண்டு கவிதைகளும் அதிலடங்கும். ஆனால், அவர் ஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கியமானவர்தான். ஆர்வமூட்டும் கதைசொல்லி. அவருடைய கதைகள், கவிதைகள் தொகுப்பாக்கம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஈழத்து இலக்கிய வெளியில் தொகுப்பாக்கம் செய்வதே பெரும் சவாலான விசயம். சிலர் அதை அவ்வளவாக பொருட்படுத்துவதே இல்லை. "

இங்கு விமர்சகர்கள் என்ற பெயரில் உலா வருபவர்களில் பலர் தம் அங்கீகாரத்துக்காக தம் சிஷ்யகோடிகளாகச்சிலரைத்தூக்கிப் பிடிப்பார்கள். சிஷ்யகோடிகளும் அவர்களைத்தூக்கிப்பிடிப்பார்கள். ஒருவரையொருவர் முதுகு சொறிந்து கொள்வதில் குளிர்காய்வார்கள். இவர்கள் வெளியிடும் தொகுப்புகளும் அவ்விதமாகவே இருப்பதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் யாருக்கும் அடி பணியாத, வளைந்து கொடுக்காதவர்களை இந்த முதுகு சொறியும் கூட்டம் கண்டு கொள்வதில்லை. மேலும் அவர்களும் இவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில்லை. மேலும் வளைந்து கொடுக்காதவர்களைப்பற்றி அங்கீகாரத்தை நாடுமொரு விமர்சகர்  தூக்கி வைத்து எழுதினாலும், தம்மை அவ்விதம் எழுதி விட்டார்களே என்று வளையாதவர்கள் பதிலுக்கு அவர்களைத்தூக்கி வைப்பதில்லை வழக்கமான சிஷ்யகோடிகளைப்போல். இதனால் அவ்வகை விமர்சகர்களுக்கு எந்தவித ஆதாயமுமில்லை. ஆனால் உண்மையான படைப்பாளிகளை அவர்களது படைப்புகளினூடு தரமான வாசகர்கள் கண்டு கொள்வார்கள். இன்று நீங்கள் கண்டு கொண்டதைப்போல. அவ்விதமான படைப்புகள் கால ஓட்டத்தில் நின்று பிடிக்கும்.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...