புகலிடத்
தமிழ் நாவல்களில் உலக இலக்கியத்துக்கு வளம் சேர்த்த புனைவுகளில் ஒன்றாக
நிச்சயம் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' படைப்பினைக் கூறுவேன்.ஒரு நல்ல படைப்பானது தனது மறு வாசிப்புகள் மீதான ஆர்வத்தினை எப்பொழுதும் தூண்டிக்கொண்டேயிருக்கும். . ஒவ்வொரு வாசிப்பிலும் அது புதியதோர் அனுபவத்தினைத் தருமொன்றாக அமைந்திருக்கும். அவ்வகையான புனைவுகளிலொன்றுதான் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' நாவலும்.
முழுக்க முழுக்கப் புகலிட அனுபவங்களையே மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்கள் குறைவு. எனது 'அமெரிக்கா' , 'குடிவரவாளன்' ஆகியவை அவ்வகையானவை. இளங்கோ என்னும் இலங்கைத் தமிழ் அகதியின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வையும், அதன் பின்னரான நியூயார்க் மாநகரில் அவனது இருப்புக்கான போராட்டத்தினையும் விபரிக்கும் நாவல்கள் அவை. ஆனால் அவற்றில் கூட பிறந்த மண்ணின் சமூக, அரசியல் நிலைமைகள் விபரிக்கப்படுகின்றன. ஆனால் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் புகலிட வாழ்வினை முழுமையாக விபரிக்கும் நாவல். நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை'யும் புகலிடத் தமிழர்தம் வாழ்வினை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல்களிலொன்று.





