Monday, November 6, 2023
வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றிய ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
எழுத்தாளரும், இலக்கியத் திறனாய்வாளருமான ரஞ்ஜனி சுப்ரமணியம் அண்மையில் ஓவியா (தமிழகம்) பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றிச் சிறப்பானதொரு விமர்சனத்தை எழுதியிருக்கின்றார். அவருக்கு என் நன்றி. பதிவுகள் இணைய இதழில் வெளியான அவ்விமர்சனத்தை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
அகவயமான வாசிப்பினை வேண்டுவதே இலக்கியம். எனினும் புற உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப அமைப்பாலும் உட்பொருளாலும் மாற்றம் காண்பது தவிர்க்க முடியாதது. மனிதகுலமே கூர்ப்பின் வழி இன்றிருக்கும் வடிவில் வந்திருக்கும் போது, இலக்கிய வடிவங்களும் அதன் இலக்கணங்களும் மாறக்கூடாது எனக் கூறமுடியுமா?
'இலக்கியம் ஒரு யானை . நம்நாட்டு இலக்கியவாதிகள் தமக்குள் குழுக்களாகப் பிரிந்து தாம் சொல்வதுதான் சரியென, யானை பார்த்த அந்தகர் போல வாதிட்டுக் கொண்டு இருக்கின்றனர்' என்கிறது நாவலில் வரும் உரையாடல் ஒன்று. உண்மை. எல்லைகள் அற்றதே இலக்கியம்.
'இலக்கியம் சமுதாய பயன் கொண்டதாக அமைய வேண்டிய அதேசமயம் அது எழுத்தின் கலைத்துவத்தை சிதைத்து விடவும் கூடாது' எனும் கருத்தும் நாவலில் கூறப்பட்டுள்ளது.
Sunday, November 5, 2023
தேடகம் (தமிழர் வகைதுறை வள நிலையம்) அமைப்பின் சமூக, அரசியல், கலை இலக்கியப்பங்களிப்புகள் பற்றிய சுருக்கமான அறிமுகப் பதிவு! - வ.ந.கிரிதரன் -
கனடாத் தமிழ்க் கலை, இலக்கிய உலகில் , சமூக,அரசியற் செயற்பாடுகளில் ஓர் அமைப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால் இதுவரை இவ்வமைப்பு பற்றிய ,விரிவான , பூரணமானதோர் ஆய்வெதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்காக இவ்வமைப்புக்கு விருதுகள் எவையும் கொடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. இருந்தாலும் இவ்வமைப்பு, எவ்விதப் பயன்களையும் கருதாமல் , இன்னும் இயங்கிக்கொண்டுதானுள்ளது. காலத்துக்குக் காலம் இவ்வமைப்புடன் இணைந்து இயங்கியவர்கள் பலர் ஒதுங்கி விட்டாலும், இன்னும் சிலர் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டுதானுள்ளார்கள். இவ்வமைப்பு பற்றிய விரிவான ஆய்வில் இதுவரை இவ்வமைப்புடன் இணைந்து இயங்கியவர்கள் பற்றிய விபரங்களும் ஆவணப்படுத்தப்படுவது அவசியம். இப்பொழுது இந்த அமைப்பு எதுவென்னும் கேள்வி உங்கள் உள்ளங்களில் எழும்பத்தொடங்கியிருக்கும். இந்த அமைப்பு தேடகம் என்று அறியப்பட்ட தமிழர் வகைதுறை வளநிலையம்.
தேடகம் அமைப்பின் இதுவரை காலப் பல்வகைப் பங்களிப்புகளையும் நோக்கினால் பின்வரும் வகைகளில் அவற்றைப் பிரித்துப்பார்க்கலாம்:
Saturday, November 4, 2023
எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியனின் புலனாய்வுக் கற்பனை! - வ.ந.கிரிதரன் -
Monday, October 23, 2023
(பதிவுகள்.காம்) மராட்டிய எழுத்தாளர் சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி"யின் அடையாளங்களைத் தேடி... - புதியமாதவி, மும்பை -
மராட்டிய எழுத்தாளர் சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி" பற்றி , பதிவுகள் இணைய இதழில் 2008இல் வெளியான கட்டுரை. 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும் பொருட்டு மீள்பிரசுரமாகின்றது.
நான் சபிக்கிறேன்
உன்னை
உன் எழுத்துக்களை
உன் கலாச்சாரத்தை
உன் வேஷத்தை.. ( நாம்தேவ் தசள் - கோல்ப்பிதா கவிதைகளிருந்து)
மராட்டிய மாநிலத்தில் ஒரு புதிய அலை இதுவரை எழுதப்பட்டிருந்த இலக்கியத்தின் பக்கங்களைப் புரட்டி, இதுவரை நிறுவப்பட்டிருந்த சமூகத்தின் அடையாளங்களை வீசி எறிந்து ஒரு கோட்டோவியத்தை வரைந்தது. 1960களில் ஏற்பட்ட சிறுபத்திரிகைகளின் வளர்ச்சி, மும்பையில் தொழில்மயம், அந்தத் தொழில்மயத்தில் எழுந்த புதிய தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்கள், அதுசார்ந்த மார்க்சிய சிந்தனைகள் இந்தப் பின்புலத்தில் 1972ல் தலித் பைந்தர் அமைப்பு .. என்று தொடர் அலையாக எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். அந்தக் குரலைப் பதிவு செய்திருக்கும் தலித் இலக்கியங்கள். அதிலும் குறிப்பாக 1980களில் தலித் எழுத்தாளர்களின் 'தன் வரலாற்று" பாணியிலான தலித் வரலாறு மார்க்சிய சிந்தனைகளையும் சேர்த்தே புரட்டிப் போட்டது.
தலித் எழுதாளர் தயாப்வாரின் "பலுட்டா " -சமூக உரிமை (1978) லஷ்மண் மானேயின் " யுபரா"- அந்நியன் (1980) லஷ்மண் கெய்க்க்வாட்டின் "யுசல்ய -அற்பத்திருடன் (1987) பெண் தலித் எழுத்தாளர் பேபி காம்ப்ளேயின் 'ஜின் அமுச்" (இப்படியாக எங்கள் வாழ்க்கை) இவை அனைத்தும் தலித் தன் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடத்தக்கன. இக்காலக்கட்டத்தில் வெளிவந்த சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி" வெளிவந்தவுடன் மிகவும் பேசப்பட்ட ஒரு பதிவு. அக்கர்மஷி என்றால் ஜாதிபிரஷ்டம் செய்யப்பட்டவன் - THE OUTCASTE என்று பொருள். ஜாதிகளால் விலக்கிவைக்கப்பட்டவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
டொராண்டோ'வில் ஜெயமோகன்! - வ.ந.கிரிதரன் -
21.10.2023 அன்று 'தமிழ் இலக்கியத் தோட்ட'த்தின் ஏற்பாட்டில் மார்க்கம் மாநகரசபைக் கூடத்தில் நடைபெற்ற எழுத்தாளர் ஜெயமோகனின் உரையினைக் கேட்பதற்காக எழுத்தாளர் தேவகாந்தன் மற்றும் கடல்புத்திரனுடன் சென்றிருந்தேன். நிகழ்வில் கலை, இலக்கிய மற்றும் அரசியல் ஆளுமைகளைக் காண முடிந்தது. குறிப்பாக எழுத்தாளர் மொன்ரியால் மைக்கல், எழுத்தாளர் 'காலம்' செல்வம், எழுத்தாளர் க.நவம், 'அசை' சிவதாசன், எழுத்தாளர் ஊடகவியலாளருமான கனடா மூர்த்தி, எழுத்தாளர் டி.செ. தமிழன், எழுத்தாளர் குரு அரவிந்தன், எழுத்தாளர் அ.முத்துலிங்கம், எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், 'விளம்பரம்' மகேந்திரன், 'தமிழர் தகவல்' திருச்செல்வம், எழுத்தாளர் மனுவல் ஜேசுதாசன், 'உதயன்' லோகேந்திரலிங்கம் என்று பலரைக் காண முடிந்தது.
Tuesday, September 19, 2023
(பதிவுகள்.காம்) அமெரிக்கா - ஞானம் இலம்பேர்ட் -
எனது 'அமெரிக்கா' (1996) சிறுகதைத்தொகுப்பு பற்றி 'டொரோண்டோ, கனடாவில் ஒர் இலக்கியக் கலந்துரையாடல் , தேடகம் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்ணூறுகளில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு 'அமெரிக்கா' பற்றி உரையாற்றிய நாடகவியலாளரும் , கலை, இலக்கியத்திறனாய்வாளருமான ஞானம் இலம்பேட்டின் உரையின் முக்கிய பகுதிகள் இவை. பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரை. பகிர்ந்துகொள்கின்றேன்.
சமூக நிகழ்வுகளை ஒரு தளத்தில் வைத்து அந்த நிகழ்வுகளுக்கு ஓர் உருவம் கொடுப்பதிலும், அவற்றைப் பல்லின ஆக்கங்கள் செய்வதிலும் எமக்குப் பெரும் பங்குண்டு. அந்த நிகழ்வுகளுக்குக் கொடுத்த உருவம்தான் இந்த அமெரிக்கா என்ற இச்சிறு நூலாகும். இதிலுள்ள ஏழு சிறுகதைகளையும், குறுநாவலையும் படிக்கிறபொழுது Georgi Plekhanov இன் ஒரு கூற்று ஞாபகத்துக்கு வருகின்றது. அவர் சொல்கிறார்:
"மனிதன் தன்னைச் சுற்றியுள்ள யதார்த்தத்தின் செல்வாக்கில் அனுபவித்துள்ள உண்ர்ச்சிகளையும், எண்ணங்களையும் தனக்குள் மீண்டும் எழச்செய்து அவற்றைத் திட்டவட்டமாக உருவங்களில் வெளியிடும்போது கலை பிறக்கிறது"
Thursday, August 31, 2023
(பதிவுகள்.காம்) எழுத்தாளர் நா. சோமகாந்தனின் (ஈழத்துச் சோமு) அறியப்படாத நாவல் 'களனி நதி தீரத்திலே' - வ.ந.கிரிதரன் -
கதைச்சுருக்கம்: கதை சொல்லியும் அவன் நண்பன் நடராஜனும் பால்ய காலத்திலிருந்து நண்பர்கள். இருவரும் எஸ்.எஸ்.சி சித்தியடைந்து கொழும்பில் வேலை கிடைத்துச் செல்கின்றார்கள். ஒன்றாகத் தங்கியிருக்கின்றார்கள். இருவரும் களனி கங்கை நதிக்கரையில் றோசலின் என்னும் அழகியொருத்தியைச் சந்திக்கின்றார்கள். அதன் பின் ஒரு நாள் வேலைக்குச் செல்லும் நண்பர்கள் வழக்கமாகச் செல்லும் ட்ரொலி வருவதற்கு நேரமெடுக்கவே 'ராக்சி' பிடித்துச் செல்லத்தீர்மானிக்கிறார்கள். றோசலின் அன்று புதிய வேலை கிடைத்துச் செல்வதற்காக 'ட்ரொலி'யை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள். அவளுக்கும் நேரமாகிவிடவே இவர்களிடம் தனக்கும் 'ராக்சி'யில் இடம் தர முடியுமா என்று கேட்கின்றாள். இவர்களும் சம்மதித்து அவளுக்கு உதவுகின்றார்கள். அன்று முதல் மூவரும் நண்பர்களாகின்றார்கள்.
அவர்களுக்கிடையில் நட்பு வளர்கிறது. அவள் இருவருடனும் சகஜமாகப் பழகி வருகின்றாள். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் அவள் பேச்சு, செயல்களை வைத்து அவள் மீது காதல் கொள்கின்றார்கள். ஒரு சமயம் கதை சொல்லி உடல் நலம் கெட்டு ஊருக்குச் சென்று திரும்புகையில் நண்பன் நடராஜன் றோசி மேல் காதல் கொண்டிருப்பதை அறிந்து அவன் மேல் ஆத்திரமடைகின்றான். றோசியும் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதி அவள் மீதும் கோபமடைகின்றான்.
றோசி காரணமாக நண்பர்களுக்கிடையில் மோதல் முற்றி கதை சொல்லி நண்பன் நடராஜனைத் தாக்கவே , நடராஜனும் ஆத்திரமடைந்து அவனைவிட்டு விலகி, றோசியின் வீட்டுக்கே சென்று விடுகின்றான். உண்மையில் அதுவரை றோசி அவர்களுடன் சாதாரணமாகவே பழகி வந்திருக்கின்றாள். நடராஜன் அவளிருப்பிடத்துக் சென்ற பின்பே அவனது தன்மீதான தீவிர காதலை உணர்ந்து அவனைக் காதலிக்கத்தொடங்குகின்றாள்.
பின்னர் கதை சொல்லி ஊரிலிருக்கும் அவனுக்குத் தெரிந்த பெண்ணான கமலா
என்பவளை மண முடிக்கின்றான். இதற்கிடையில் நாடு தழுவி நடைபெற்ற தொழிலாளர்
வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு பேசுகையில் முற்போக்குவாதியான
கதைசொல்லிக் காடையர்களால் தாக்கப்படும் சந்தர்ப்பமுமேற்படுகின்றது., ஆனால்
இறுதியில் அத்தொழிலாளர் வேலை நிறுத்தமும் எவ்விதப் பயனுமறறு முடிவுக்கு
வந்து, தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதுடன் முடிவுக்கு
வருகின்றது.
நாவலின் இறுதி துயர் மிக்கது. நாட்டின் அரசியல் சூழலால் வெடிக்கும்
வன்முறையில் நடராஜன் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டு விடுகின்றான்.
றோசியும் பலரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு, தாதியாகி கர்த்தரிடம்
சரணடைகின்றாள். கதை சொல்லியின் குழந்தைப்பேறுக்கும் அவளே தாதியாக உதவியும்
செய்கின்றாள். அவளது வீடு காடையர்களால் எரிக்கபப்டுகையில் அதற்குள்
சிக்கி அவளது தந்தையும் எரிந்து போகின்றார். நாட்டில் நடந்த
இனக்கலவரம்தானது. ஆனால் கதாசிரியர் அதனை மறைமுகமாகவே எடுத்துரைப்பார்.
'வடக்கில் மின்னல், தெற்கில் முழக்கம். எந்நேரமும் மழை கொட்டத்தயாராகக்
கருமேகங்கள் நாடு பூராவும் கவிந்திருந்தன.' எத்தனையோ லட்சம் ஜனங்களின்
அமைதிக்கு உலை வைப்பது போல, இலங்கை வானில் கவிந்திருந்த கரு மேகங்கள்
ஒன்றுடன் ஒன்று மோதி ஆக்ரோசமாக முட்டி அகங்காரமாக மோதி பலத்த மழையாகக்
கொட்டத் துவங்கிவிட்டன. பயங்கரப் பிரவாகம். எத்தனை உயிர்கள், உடமைகள் அதில்
அடித்துச் செல்லப்பட்டனவோ?" போன்ற சொற்றொடர்களால் நாட்டுச் சூழல்
விபரிக்கப்படுகின்றது.
நாவலில் கதை சொல்லியின் பெயர் எங்கும்
கூறப்படவில்லை. ஆனால் முற்போக்குச் சிந்தனை மிக்க எழுத்தாளன் என்னும்
அவனது ஆளுமை நண்பர்களுக்கிடையிலான உரையாடல், சம்பவங்கள் மூலம்
விபரிக்கப்படுகின்றது. நாவலின் நடை வாசகர்களைக்கவரும் எளிமையான , ஆனால்
சுவையான நடை.
இன்னுமொரு விடயம் - நாவலில் வரும் றோசி பேர்கர்
இனப்பெண்ணா அல்லது சிங்களக் கிறிஸ்தவப் பெண்ணா என்பது தெளிவாக்கப்படவில்லை.
ஆனால் றோசியும் நடராஜனும் இரு வேறு இனத்தவர்கள் என்பது
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவே எழுத்தாளர் சோமகாந்தனின் முதல் நாவல். இந்நாவல் அவரது சொந்த அனுபவத்தில் புனையப்பட்டது என்று 'புதினம்' பத்திரிகைக்கான நேர்காணலில் அவரே கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாவல் தொடராக வெளியானபோது பத்திரிகை
ஆசிரியரும், வெளியீட்டாளருமான வரதர் இன்னுமொரு விளம்பர் உத்தியையும்
பாவித்திருந்தார். டேவிட் லீனின் (David Lean) இயக்கத்தில் 1957இல் வெளியாகி 7 ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற சிறந்த படம் The Bridge on the River Kwai.
இதன் காட்சிகள் இலங்கையிலும் எடுக்கப்பட்டிருந்தன. இதில் கொட்டாஞ்சேனையில்
நிறுவனமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த அழகான தோற்றமுள்ள லிண்டா என்னும்
பெண்ணும் நடித்திருந்தார். அவரை நாவலின் றோசி பாத்திரமாக்கி
புகைப்படப்பிடிப்பாளர் சிவம் என்பவரைக்கொண்டு புகைப்படங்கள் எடுத்து
வெளியிட்டிருந்தார்.
- நாவலாசிரியர் நா.சோமகாந்தன் (ஈழத்துச் சோமு) -
நாவல்: 'களனி நதி தீரத்திலே' - நா. சோமகாந்தன் (ஈழத்துச் சோமு)
அத்தியாயம் 1 - (20.8.1961)அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5 - றோசியும் றோசாவும்
அத்தியாயம் 6 - இரண்டு மலர்களும் ஒரு வண்டும்
அத்தியாயம் 7 - மோகவலை
அத்தியாயம் 8 - மண் கோட்டையா? மதிற் கோட்டையா?
அத்தியாயம் 9 - பாவ விமோசனம்
அத்தியாயம் 10 - கருமுகில்
அத்தியாயம் 11 - அஞ்சலி (29.10.1961)
கலாமோகனின் 'துவாரம்' சிறுகதைத்தொகுப்புப் பற்றி....
நேற்று எழுத்தாளர் கற்சுறாவிடமிருந்து எழுத்தாளர் கலாமோகனின் 'துவாரம' சிறுகதைத்தொகுப்பினைப் பெற்றுக்கொண்டேன். அதனை வெளிப்படுத்தும் புக...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...





