Thursday, December 14, 2023

எனது படைப்புகளும் அவை பற்றிய ஆய்வுகளும்! - வ.ந.கிரிதரன் -

 


எனது படைப்புகள் பற்றி வெளியான ஆய்வுகள் பற்றி நானறிந்த தகவல்கள்  இவை. தமிழகம் , இலங்கையில பட்டப்படிப்பு மாணவர்களால், பேராசிரியர்களால் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை பற்றிய விபரங்கள் கீழேயுள்ளன. இவர்கள் அனைவருமே என் படைப்புகளூடு என்னைக் கண்டடைந்தவர்கள். நான் நேரில் அறிந்தவர்கள் அல்லர். படைப்புகள் தம் வாசகர்களைக் கண்டடையும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை மிக்கவன் நான். அவ்விதமான படைப்புகளே நின்று பிடிக்கும் என்பதிலும் நம்பிக்கை மிக்கவன் நான். 
 
நம்மவர்களில் ஒரு குறைபாடு. நாடறிந்தவர்களாகத் தாம் கருதும் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் தம் படைப்புகளைப் பற்றி அல்லது ஏனையவரின் படைப்புகளைப் பற்றிக் கூறவேண்டும். அவ்விதம் கூறினாலே அவை தரமானவை என்றொரு கருத்தோட்டமும் கொண்டவர்களாக அவர்கள் இருப்பதையே இவ்விதமான உளவியற் போக்கு எடுத்துக்காட்டுகின்றது. இது தவறான நிலைப்பாடு. அண்மையில் நடந்த எனது நூல்கள் பற்றிய நிகழ்வில் கூட தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தனது உரையில் 'எனது புகலிட அனுபவக் கதைகள் முக்கியமானவை. அவை பற்றிப் பலரும் எழுதுவதில்லை. அவர்களுக்குத் தான் கூறுவது என் கதைகளைப்பற்றி எழுதுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இக்கூற்றுக்கான காரணமும் மேற்படி உளவியற் போக்கே. உண்மையில் எனது படைப்புகள் பற்றி , குறிப்பாகப் புகலிடப் படைப்புகள் பற்றி நிறையவே ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆனால் அவர் கருதும் 'இலக்கிய மேதை'களின் எழுத்துகளில் அவை பற்றிக் காணவில்லையென்பதால் ஏற்பட்ட ஜயகரனது ஆதங்கமே அது. 

Tuesday, December 12, 2023

காதலர்தம் உணர்வுகளின் வெளிப்பாடு Ye Zulf Kaisi Hai!


அனில்தாவனும் ஜெயாபாதுரியும் நடித்த இத்திரைப்படப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. காரணம் மொழியல்ல. நடிப்பு. காதல்கொண்ட உள்ளங்களின்  உணர்வுகளை, செயல்களை மிகச்சிறப்பாகத் தம் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அனில்தாவனும், ஜெயாபாதுரியும். அடுத்த வீட்டு பெண்ணைப்போல் தோற்றமளிக்கும் எளிமையான தோற்றம் மிக்க ஜெயாபாதுரி சிறந்த நடிகைகளில் ஒருவர். பாத்திர உளவியலை உள் வாங்கி , உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தி நடிப்பதில் வல்லவர். காதலர்களின் உளவியலைத் தம் நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கும் இப்பாடல் என்னை மட்டுமல்ல கேட்பவர் அனைவரையும் கவர்வதில் வியப்புண்டோ?  https://www.youtube.com/watch?v=uVFd3T6Kcdo

மகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியாரின் பிறந்ததினம் டிசம்பர் 11)


மகாகவி பாரதியார் என்னை மிகவும் கவர்ந்த தமிழ் எழுத்தாளர்களில் முதலிடத்தில் இருப்பவர். அவரது பிறந்ததினம்  டிசம்பர் 11. அதனையொட்டி ஏற்கனவே அவ்வப்போது முகநூலில் நான் எழுதிய பதிவுகள் சிலவற்றைத் தொகுத்திங்கே தருகின்றேன்.

1. மகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியாரின் பிறந்ததினம் டிசம்பர் 11)

என்னை மிகவும் கவர்ந்த, பாதித்த இலக்கியவாதியென்றால் முதலில் நான் கருதுவது மகாகவி பாரதியாரைத்தான். முரண்பாடுகளற்ற மனிதர்கள் யாருளர். பாரதியிடமும் முரண்பாடுகளுள்ளனதாம். ஆனால் அவை அவரது அறிவுத் தாகமெடுத்த உள்ளத்தின் கேள்விகளின் பரிணாம வரலாற்றின் விளைவுகள்.  குறுகிய கால வாழ்வினுள் அவர் மானுட வாழ்வின் அனைத்து விடயங்களைப்பற்றியும் சிந்தித்தார். கேள்விகளையெழுப்பினார். அவற்றுக்குரிய விடைகளைத் தன் ஞானத்துக்கேற்ப அறிய முயற்சி செய்தார். இவற்றைத்தாம் அவரது எழுத்துகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

Sunday, December 10, 2023

(பதிவுகள்.காம்) ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - என்.கே.மகாலிங்கம் -


அண்மையில் நடந்த எனது மூன்று நூல்களின் வெளியீட்டில் வெளியான கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' நூலுக்கு எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் எழுதிய விமர்சனக் குறிப்பு. உடல் நிலை காரணமாக அவரால் அன்று அந்த நிகழ்வுக்கு வரமுடியவில்லை. அதுவரை எழுதி வைத்திருந்த குறிப்பினை அனுப்பியிருந்தார். அதனை நிகழ்வில் தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் வாசித்தார். - வ.ந.கிரிதரன் -

ஒரு நகரத்து மனிதனின் பாடல் என்பது தான் இவர் இந்தத் தொகுதிக்கு வைத்த பெயர். ஆனால் எப்படியோ அது ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. (உண்மையில் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் பெயரில்தான் எழுதியிருந்தேன். காரணம் இக்கவிதை நகரமயமாதலால் ஏற்படும் சூழற் பாதுகாப்பு பற்றிய ஒருவனின் புலம்பல் என்பதால். - வ.ந.கிரிதரன் -)

இது இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. முதல் தொகுதி எழுக அதிமானுடா 1992 இல் வெளிவந்திருக்கிறது. அது எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. ஆனால் எழுக அதிமானுடா என்பது எனக்கு பேர்ணாட் ஷா வின் மான் அன்ட் சுப்பர்மான் என்ற நாடகத்தையும் கடவுள் இறந்து விட்டார் என்று கூறிய பிரெடிரெக் நீட்ஷேயின் அதிமானிடனையும் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. அவை டாவினின் உயிர் பரிணாம வளர்ச்சியில் நிகழும் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் இருக்கலாம். அரவிந்தரின் பேரறிவு நிலையாகவும் இருக்கலாம்.

அஞ்சலி: 'ஆய்வுத் தேடல்' மிக்க பேராசிரியர் செ.யோகராசா மறைந்தார்!


பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் மறைந்துவிட்டதாக முகநூல் மூலம் அறிந்தேன். மிகவும் துயர் தரும் செய்தி. நான் மதிக்கும் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவர் இவர். இவரது இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் முக்கியத்துவம் மிக்கவை.

இவரை நான் சந்தித்ததில்லை. இவரது படைப்புகளூடு மட்டுமே அறிந்திருக்கின்றேன். எனது 'அமெரிக்கா' நாவல் தனிப்பதிப்பாக, இலங்கையில் 'மகுடம்' பதிப்பாக வெளியானபோது அதற்கு சிறப்பானதோர் அணிந்துரையினை எழுதியிருந்தார். அதனை எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன்.

சென்னை வெள்ளம்: இயல்பு நிலை விரைவில் திரும்பட்டும்!



சென்னை மாநகர் மீண்டும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது. மனிதரின் சூழல் விரோத நடவடிக்கைகளால் உலகக் காலநிலை பெரிதும் மாறுதலடைந்துகொண்டு வருவதன் விளைவுதான் இத்தகைய காலநிலைச்சீர்கேடுகள்.

இவ்விதமான காலநிலைச் சீர்குலைவுகள் ஏற்படுகையில் அதிலிருந்து தப்பும் வழியில் மனிதர் தாம் வசிக்கும் நகரங்களை வைத்திருக்க வேண்டும். அமைக்க வேண்டும்.

(பதிவுகள்.காம்) அண்மையில் வெளியான வ.ந.கிரிதரனின் நூல்களைப் பற்றியதொரு சிறு குறிப்பு! - பரம்சோதி தயாநிதி -

 

- அண்மையில் வெளியான வ.ந.கிரிதரனின் நூல்களைப் பற்றிய தன் எண்ணங்களை அனுப்பி வைத்துள்ளார் கலை, இலக்கிய ஆர்வலரும், பொறியியலாளருமான  பரம்சோதி  தயாநிதி. -

நான் இலக்கியம் வாசிப்பது குறைவு. கிரிதரனின் புத்தக வெளியீட்டில் வாங்கிய புத்தகங்களின் பகுதிகளை சென்ற இரவுதான் வாசிக்க முடிந்தது. எனது மனதில் எழுந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் ”ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்” என்னும் புத்தகத்தில் உள்ள 9 கவிதைகளை வாசித்தேன். அப்பொழுதுதான் முதன் முதலாக கிரிதரனுக்குள்ளே இருக்கும் கவிஞனைக்கண்டேன். பலர் கவிதை என்ற பெயரில் எவையெல்லாமோ எழுதும்போது இக் கவிதைகள் தரம் மிகுந்தவையாகக் காணப்பட்டன.

எனினும் வாசித்த இரு கவிதைகள் எனக்கு விளங்கவில்லை. “குதிரைத் திருடர்களே …… “ என்ற கவிதையில் குதிரைகள் என்பது எதன் அடையாளம் (symbol) என்பது விளங்கவில்லை. ”ஆனை பார்த்தவர்” என்ற கவிதை குழப்பத்தை ஏற்படுத்தியது. “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்பதைத் தான் இக் கவிதையில் குழப்பமாகக் கூறுகிறாரா என்று சந்தேகம் வந்தது.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...