Tuesday, April 30, 2024

'மணிக்கொடி' தந்த ஜோதிர்லதா கிரிஜா!


கடந்த 18.04-2024 அன்று மறைந்த எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜாவின் முக்கியமான நாவல் 'மணிக்கொடி'.  இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து கல்கியின்  'அலை ஓசை' , ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' ஆகியவை ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவ்வரிசையில் வெளியான இன்னுமொரு நாவல்தான் ஜோதிர்லதா கிரிஜாவின் 'மணிக்கொடி'.  

Sunday, April 28, 2024

காலத்தால் அழியாத கானம்: 'ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்..'


எஸ்.எஸ்.ஆர் & விஜயகுமாரி, கே.வி.மகாதேவன், கவிஞர் கண்ணதாசன் கூட்டணியிலுருவான இன்னுமொரு காலத்தால் அழியாத கானமிது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் 'சாரதா' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது இப்பாடல்.

காதலின் சிறப்பை, இயல்பை அற்புதமாகச் சித்திரித்திருக்கின்றார் கவிஞர். காதலின் பல்வேறு கூறுகளையும் (உறவு, உணர்வு, பிரிவு, நினைவு என) எழுத்தில் வடிப்பதென்றால் கவிஞருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

https://www.youtube.com/watch?v=3bzUv0io7mE&list=RD3bzUv0io7mE&start_radio=1

Friday, April 26, 2024

கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி...


அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான சுதா குமாரசாமியைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது 1988இல் வெளியான அவரது கவிதைத்தொகுப்பான 'முடிவில் ஓர் ஆரம்பம்' பற்றிக்குறிப்பிட்டார். 
 
அவ்விதம் குறிப்பிடுகையில் 'கனடாவில் வெளியான முதலாவது கவிதைத்தொகுப்பாக இருக்குமென்று தான் நினைப்பதாக' அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
கனடாவில் வெளியான முதலாவது கவிதைத்தொகுப்பாக அது இருக்கக் கூடும். சுதா குமாரசாமியின் 'முடிவில் ஓர் ஆரம்பம்' தொகுப்பிலுள்ள கவிதைகளின் எண்ணிக்கை 15.  கவிதைகளை உள்ளடக்கி வெளியான முதலாவது தொகுப்பென்றால் அது ஜனவரி 4, 1987இல் வெளியான எனது தொகுப்பான 'மண்ணின் குரல்' நூலே. அது கட்டுரைகள், சிறு நாவலான மண்ணின் குரல் மற்றும் கவிதைகள் உள்ளடக்கி வெளியான தொகுப்பு. அது எனது எட்டுக் கவிதைகளையும் உள்ளடக்கியுள்ளது. அவை:

Thursday, April 25, 2024

ஜெயகாந்தன் நினைவாக.......

- எழுத்தாளர் ஜெயகாந்தனின் இளமைத்தோற்றம். -

எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த தினம் ஏப்ரில் 24.

எழுத்தாளர் ஜெயகாந்தன்  என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை.    வெகுசனப் படைப்புகளில் மூழ்கிக்கிடந்த பருவத்தில் வெகுசன ஊடகங்களினூடு, வித்தியாசமானவராக அறிமுகமாகி என்னைக் கவர்ந்தவர் ஜெயகாந்தன். இவர் பெயரை நான் முதன் முதலில் கேட்டது என் பெற்றோரின் உரையாடலொன்றின்போதுதான். அவர்கள் ஆனந்தவிகடனில் வெளியான இவரது 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', 'கோகிலா என்ன செய்து விட்டாள்' போன்ற முத்திரைக்கதைகளாக வெளியான குறுநாவல்களைப்பற்றி உரையாடியபோதுதான் முதன் முதலில் இவரது பெயரை நான் அறிந்துகொண்டேன்.

ஜெயகாந்தனின் 'கைவிலங்கு' குறுநாவல்  கல்கியில் வெளியானது. இதுவே பின்னர் 'காவல் தெய்வ'மாகத் திரைக்கு வந்தது. அதே பெயரில் ராணிமுத்து பிரசுரமாகவும் வெளியானது. எழுத்தாளர் சாவியை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'தினமணிக்கதிர்' ஜெயகாந்தனின் 'ஒரு பிடி சோறு' சிறுகதைத்தொகுப்பிலிருந்த சிறுகதைகள் பலவற்றை மீள்பிரசுரம் செய்தது.   இவரது புகழ்பெற்ற 'டிரெடில்', 'பிணக்கு', 'ஒரு பிடி சோறு', 'ராசா வந்துட்டாரு' போன்ற சிறுகதைகளை அப்போதுதான் வாசித்தேன்.

ஹெமிங்வேயின் 'கிழவனும் கடலும்'


ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் 'கிழவனும் கடலும்' (The Old Man and The Sea) உலக இலக்கியத்தில் முக்கியமான நாவல். இது ஒரு விரிந்து பரந்த நாவலல்ல. சிறியதொரு நாவல். இந்நாவல் ஹெமிங்வேயிற்கு புலியட்சர் பரிசைப் பெற்றுத்தந்தது. நோபல் பரிசினையும் பெற்றுத்தந்தது. ரொபின்சன் குரூசோ, மோபி டிக் போன்று கடலுடன் சம்பந்தப்பட்ட நாவல் மட்டுமல்ல , அவற்றைபோல் மானுட இருப்பின் குறியீடாக விளங்குமொரு நாவல்.

இந்நாவலில் வரும் சண்டியாகோக் கிழவன் மறக்க முடியாத பாத்திரம். இந்நாவல் முதுமையைப்பற்றிப் பேசுகிறது. நட்பைப் பற்றிப் பேசுகிறது. பாசத்தைப் பற்றிப் பேசுகிறது. சக உயிர்களைப்பற்றிப் பேசுகிறது.  உயிர்களின் விடா முயற்சி பற்றிப் பேசுகிறது. இயற்கையைப்பற்றிப் பேசுகிறது. மானுட இருப்பு பற்றிப் பேசுகிறது.

ஹெமிங்வேயின் நடை சிறப்பு மிக்கது.ம் தனித்துவமானது. வாசகர்களைக் கட்டிப்போட்டு விடுவது.

ஒரு நாவலின் வெற்றிக்கு அதன் பக்கங்களின் எண்ணிக்கை காரணமல்ல என்பதை வெளிப்படுத்தும் சிறுநாவல் 'கிழவனும்,கடலும்).

Wednesday, April 24, 2024

வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளம் தந்த வான் பாய்தல் பற்றிய சிந்தனைகள்!


மாரியில் மழை பெய்து பட்டாணிச்சுப்புளியங்குளம் நிறைந்து வழிகையில் வான் பாயுமொலி இரவின் இருளை, அமைதியைத் துளைத்துக்கொண்டு கேட்கும். குருமண்காட்டுப்பகுதி ஒற்றையடிப்பாதையுடன் கூடியதொரு பகுதி. சில வீடுகள் , நெசவு சாலை, பண்ணையுடன் கூடிய இயற்கை வளம் மலிந்த பகுதி. அப்பகுதியில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. படுக்கையில் படுத்திருந்தபடி வான் பாயும் ஒலி கேட்டுக்கொண்டிருப்பேன். விடிந்ததும் ஊரவர்கள் வான் பாயும் குளத்தைப் பார்க்கச் சென்று விடுவார்கள். நானும் சென்று பார்ப்பேன். வான் பாயுமிடத்தில் இரவெல்லாம் வெங்கணாந்திப்பாம்புகள் காத்திருந்து அவ்வழியால் சென்று விடும் விரால் மீன்களைப் பிடிக்குமாம் என்பார்கள். ஊரவர்கள் சிலரும் விரால்களைப் பிடிப்பார்கள்.

என் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த குளம் பட்டாணிச்சுப்புளியங்குளம். இக்குளம் நிறைந்து வான் பாயும் காட்சியும் அத்தகையதே.

தொடர் நாவல்: மனக்கண் (5) - சலனம் - அ.ந.கந்தசாமி -


ஐந்தாம் அத்தியாயம்: சலனம்



பார்க்கப் போனால் மனித வாழ்க்கை எவ்வளவு அதிசயமானது? சில சமயம் மிகச் சிறிய சம்பவம் கூட நமது வாழ்க்கையை எவ்வளவு பெரிய அளவில் பாதித்து விடுகிறது? பத்மாவின் வாழ்க்கையிலே, பஸ் தரிப்பில் அவள் கொட்டாஞ்சேனை பஸ்ஸிற்காகக் காத்திருந்த அந்த இருபது முப்பது நிமிஷங்களில் ஒரு பெரிய நாடகமே நடந்து முடிந்துவிட்டது! சில சமயம் ஓடும் ரெயிலில் தற்செயலாக ஏற்படும் ஒரு சந்திப்பு, திருவிழாக் கூட்டத்தில் ஏற்படும் ஒரு பரிச்சயம், வீதியில் இரண்டு விநாடியில் நடந்து முடிந்துவிடும் ஒரு சம்பவம், சில போது வாழ்க்கையின் போக்கையே புதிய திசையில் திருப்பிவிட்டு விடுகிறது. உலகப் பெரியார் என்று போற்றப்படும் காந்தி அடிகளின் வாழ்க்கையில், அவர் தென்னாபிரிக்காவில் ஒரு ரெயில் பெட்டிக்குள் புகும்போது ஒரு வெள்ளை வெறியனால் தடை செய்யப்பட்டதால் ஏற்பட்ட சில நிமிஷ நேர நிகழ்ச்சி அவருக்கு ஏகாதிபத்தியத்தின் தன்மையை நன்குணர்த்தி, அவர் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியதோடு, ஒரு தேசத்தின், ஏன் ஒரு கண்டத்தின், அரசியல் போக்கையே முற்றாக மாற்றிவிடவில்லையா? ஆள்வோனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இருக்கும் தாரதம்மியத்தை அந்த ரெயில் பெட்டியில் அவர் அன்று அனுபவ ரீதியில் கண்டதுதான், அவரை ஆசியாவின் சார்பிலே சுதந்திர முழக்கம் செய்யும்படி ஊக்கியது!

சில நிமிஷ நேரங்களில் நடந்து முடிந்துவிட்ட ஒரு சிறிய சம்பவம் -- ஆனால் அதன் பலனோ மிக பெரியது. பஸ் தரிப்பில் எல்லோரையும் போல், பஸ்சுக்காகக் காத்துக்கிடக்கும் சலிப்பைப் போக்குவதற்காகப் பத்மாவும் தங்கமணியும் ஆரம்பித்த உரையாடல் இவ்வாறு தனது உள்ளத்தையே பிழிந்தெடுத்து வெம்ப வைக்கும் ஒரு பெரும் அதிர்ச்சி சம்பவமாக முடிவுறும் என்று பத்மாவால் எண்ணியிருக்க முடியுமா? தங்கமணி ஸ்ரீதரின் சமூக அந்தஸ்தைப் பற்றிக் கூறிய தகவல்கள், அதைத் தொடர்ந்து அங்கே வந்த ஸ்ரீதரின் கார் டிரைவர் கூறிய விவரம் - எல்லாம் சேர்ந்து பத்மாவின் உள்ளத்தை ஒரே கலக்காகக் கலக்கிவிட்டன.

பஸ்ஸில் ஏறி வசதியாக ஒரு ஜன்னலண்டை உட்கார்ந்து நண்பகலின் சூரிய வெளிச்சத்தில் வெண் புறாவின் ஒளி வீசும் சிறகுகளைப் போன்ற பளபளப்போடு வானத்தில் ஓடிக்கொண்டிருந்த முகில்களைப் பார்த்துக் கொண்டிருந்த பத்மாவின் உள்ளத்தில் “ஸ்ரீதர் ஏன் இப்படிப்பட்ட பொய்யை எனக்குச் சொல்ல வேண்டும்? ஏன் என்னை இவ்வாறு ஏமாற்ற வேண்டும்?  இதில் ஏதோ பெரிய மோசடி இருக்கிறது. இவ்விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால், அவர் என்ன நினைப்பார்?” என்பது ஒன்றன்பின்னொன்றாக வந்துக்கொண்டிருந்தன.

ஒருவனுக்குக் கவலை ஏற்பட்டால் அந்தக் கவலையின் அமுக்கத்திலிருந்து தனது மனதை விடுவித்துக்கொள்ள, அவன் எங்காவது ஒரு மூளையில் ஆறுதலாக உட்கார்ந்து கண்ணீர் கொட்டி அழுவதற்கு விரும்புகிறான். ஆனால் அதற்குக் கூட வசதியான இடம் கிடைக்க வேண்டுமே! அவ்வித வசதியான இடம் கிடைத்ததும் அவன் சந்தோஷத்துடன் அங்கே உட்கார்ந்துகொண்டு தன் துயரம் முற்றிலும் போகும் வரை கண்ணீர் விட்டு அமைதி காண்கிறான்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...