Monday, October 14, 2024

சுவடிகள் திணைக்கள முன்னாள் இயக்குநர் கே.டி.ஜி. விமலரட்ன, எழுத்தாளர் காத்யான அமரசிங்க ஆகியோரின் உதவும் மனப்பான்மையும், தமிழ்ப் பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்களுக்கான ஒரு தாழ்மையான வேண்டுகோளும்


தமிழ்ப் பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்களே! உங்களுக்குத் தாழ்மையான ஒரு வேண்டுகோள். உங்கள் பத்திரிகைகளை நிச்சயம் நீங்கள் உங்கள் நிறுவன நூலகங்களில் ஆவணப்படுத்தி வைத்திருப்பீர்கள். அப்படி வைத்திருந்தால் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் சேகரித்து வையுங்கள். உங்கள் பத்திரிகைகள் , சஞ்சிகைகளில் வெளியான ஆக்கங்களைப் பற்றிய ஆய்வுகள் செய்ய விரும்பும் எவருக்கும் உறுதுணையாக இருங்கள். படைப்புகளைத் தேடி வேண்டுகோள்கள் வரும்போது நிச்சயம் உதவி செய்யுங்கள். நீங்கள் உங்கள் சேவைக்கு இலவசமாக உதவிகளைச் செய்யத்தேவையில்லை. சேவைக்குரிய நியாயமான கட்டணங்களை நீங்கள் அறவிடுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் பத்திரிகைகள் பற்றிய ஆய்வுகளை ஊக்கப்படுத்துகின்றீர்கள். உங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான படைப்புகளை எழுதியவர்கள் பற்றிய ஆய்வுகளை ஊக்கப்படுத்துகின்றீர்கள். தமிழ் இலக்கியத்தை வளப்படுத்த உதவி செய்கின்றீர்கள்.

முன்னாள் சுவடிகள் திணக்கள இயக்குநர் K.D.G.விமலரட்ன

நான் முன்பு பல தடவைகள் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மனக்கண் நாவல் பிரதிகளுக்காக தினகரன் பத்திரிகை ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதியிருந்தேன். அவை எவற்றுக்கும் பதில்  கிடைத்ததேயில்லை. பின்னர் இலங்கைச் சுவடிகள் திணக்களத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அக்காலகட்டத்தில் அதன் இயக்குநராகவிருந்த K.D.G.விமலரட்ன அவர்கள் உண்மையிலேயே சிறந்த பண்பு மிக்கவர் மட்டுமல்லர்.உதவும் மனப்பான்மை மிக்கவராகவும் இருந்தார். அதனால் அவர் எனக்குச் சுவடிகள் திணக்களத்திலிருந்து மனக்கண் நாவல் வெளியான பக்கங்களைப் புகைப்படப் பிரதிகளாக எடுத்து , நியாயமான கட்டணத்துக்கு அனுப்பி உதவினார். அதை ஒருபோதுமே மறக்க மாட்டேன்.

எழுத்தாளர் காத்யான அமரசிங்க

அவ்விதம் அவர் அனுப்பிய மனக்கண் அத்தியாயங்கள் அத்தியாயம் முப்பது மட்டும் கிடைக்கவில்லை. அதன் பிரதி சுவடிகள் திணைக்களத்தில் இல்லை.  அதன் பின்னர் அதனைத்தேடிப் பல தடவைகள் தினகரன் பத்திரிகை ஆசிரியருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பினேன். பதில்கள் வந்ததேயில்லை. பின்னர் எழுத்தாளர் காத்யான அமரசிங்கவிடம் இது பற்றிக் கூறியபோது அவர் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவருடன் தொடர்புகொண்டு, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நூலகத்திலிருந்து அந்த தேடப்பட்ட அத்தியாயத்தை எடுத்து அனுப்பினார். இவரையும் ஒருபோதுமே மறக்க மாட்டேன். இவர்கள் இருவரின் ஒத்துழைப்பால் மட்டுமே இன்று அ.ந.கந்தசாமியின் வெளியான ஒரேயொரு முக்கிய நாவலான 'மனக்கண்' நாவலை நீங்கள் யாவரும் வாசிக்க முடிகின்றது.

இத்தருணத்தில் இன்னுமொரு விடயத்தையும் பதிவு செய்ய வேண்டும். அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது 'தணியாத தாக'த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். அவரும் அ.ந.கந்தசாமியும் இளமைப்பருவத்திலிருந்து நண்பர்கள். அ.ந.க.வின் படைப்புகளைச் சேகரித்து வைத்திருந்தார். அ.ந.க.வின் மதமாற்றம் தேசிய கலையிலக்கியப் பேரவை வெளியீடாக வெளிவரக் காரணம் அவர் அதனைச் சேகரித்து வைத்திருந்ததால்தான். அவரையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.

Sunday, October 13, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - சிந்திப்பீர் மானுடரே!


 இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI

சிந்திப்பீர் மானுடரே!

சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.

கேட்பவற்றை அப்படியே நம்பாதே.
காண்பவற்றையும் அப்படியே நம்பாதே.
கேட்பவை, காண்பவை அனைத்தையுமே
கவனத்தில் எடுத்தே சிந்திப்பாய்.

சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.

மந்தையாக மாறிக் கிடக்காதே.
மனத்தில் இருத்தி சிந்திப்பாய்.
விந்தைமிகு இருப்பின் அர்த்தம்
விளங்கிக் கொள்ளச் சிந்திப்பாய்.

சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.

Saturday, October 12, 2024

தென்கொரிய எழுத்தாளர் ஹான் கங்குக்கு இலக்கியத்துக்கான நோபல் விருது !


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மேனாட்டு நூல்கள் பலவற்றை வாசித்து அவை பற்றீய எண்ணப்பதிவுகளை அடிக்கடி எழுதுபவர். அவை பல தொகுப்புகளாக  வெளிவந்துள்ளன. ஒரு தடவை அவர் புக்கர் விருது பெற்ற நாவலொன்றைப் பற்றிச் சிறு குறிப்பொன்று 'உணவை மறுத்தவள்' என்னும் தலைப்பில்  எழுதியிருந்தார். அவர் அந்த நாவலை வாசித்ததற்கு முக்கிய காரணம் அதற்கு புக்கர் விருது கிடைத்ததுதான் என்பதை அப்பதிவை வாசிக்கும் எவரும் புரிந்துகொள்வர். அவரை அந்த நாவல் கவரவில்லையென்பதை அப்பதிவின் இறுதி வரிகள் வெளிப்படுத்தின. அவ்வரிகள் வருமாறு;


'எளிமையான  இந்த நாவலுக்கு மேன் புக்கர் விருது கிடைத்திருப்பது குருட்டு அதிர்ஷ்டம் என்றே  கருதத்தோன்றுகிறது.'


அந்த நாவலை எழுதியவருக்கு 2024ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்துள்ளது. அவருக்கு இந்த விருது கிடைக்க அந்த நாவலும் ஒரு காரணம். அவருக்கு நோபல் விருது கிடைக்க முக்கிய காரணங்கள் இந்நாவலிலுள்ள அவரது கவித்துவமான நடையும், வரலாற்றுத் துயரங்களை எதிர்கொண்ட தன்மையும், நொருங்கக்கூடிய மானுட வாழ்க்கையினை வெளிப்படுத்திய போக்கும் என்று கூறப்படுகின்றது.

வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்


 

 


இசை & குரல்; AI SUNO | ஓவியம் - AI]

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

என்று சொன்னான் மகாகவி பாரதி
நன்றாய் நாளைக் கழித்திட வேண்டி.
என்றும் இருப்பில் இன்பம் நாடி.
நன்று சொன்னான் என்று சொல்வேன்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்!



இசை & குரல்; AI SUNO | ஓவியம் - AI

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

என்று சொன்னான் மகாகவி பாரதி
நன்றாய் நாளைக் கழித்திட வேண்டி.
என்றும் இருப்பில் இன்பம் நாடி.
நன்று சொன்னான் என்று சொல்வேன்.

Friday, October 11, 2024

புலம்பெயர் தமிழ் இலக்கியம் - வ.ந.கிரிதரனின் அமெரிக்கா நாவலை முன்வைத்துச் சில குறிப்புகள்! , - அப்தான் நிஷான், மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -



அண்மையில் கிழக்குப் பல்கலைககழகத்தின் கலை, கலாச்சாரப் பீடத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்கும் மூன்றாம் வருட மாணவன் அப்தான் நிஷான் Abdhan Nishan எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் புலம்பெயர் இலக்கியங்கள் என்னும் பாடத்துக்காக எனது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவலைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையினைத் தான் சமர்ப்பித்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். இதுவே தனது முதலாவது ஆய்வு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் 'தொடர்ந்து புலம்பெயர் சிறுகதைகளில் அந்நியமாதல் (தனிமைப்படுத்தப்படல்) என்ற  விடயம் வெளிப்படுமாற்றினை ஆய்வு செய்யுமாறு கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறையினால் பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தங்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்று சிறுகதைத் தொகுப்பை ஆய்வுக்காக தெரிவு செய்துள்ளேன்.' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முதலில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும். மாணவர்களை இதுபோன்ற விடயங்களில் கவனத்தைச் செலுத்துமாறு தூண்டுவது ஆரோக்கியமான விடயம். மேலும் போர்ச்சூழலை அடுத்து ஆயிரக்கணக்கில் இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். இன்றும் புலம்பெயர்கின்றார்கள்.  இன்றுள்ள தலைமுறையினருக்குப் புகலிட வாழ்க்கை பற்றிய விபரங்களை, புலம்பெயர்ந்ததற்கான காரணங்களைப் புகலிட இலக்கியப் படைப்புகள் எடுத்துக்காட்டுகின்றன., அவ்வகையில் புகலிடத் தமிழ் இலக்கியம் நோக்கியும் மாணவர்களின் கவனத்தைத் திருப்பியிருப்பதும் ஆரோக்கியமானது. இத்தருணத்தில் எண்பதுகளில் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பேராசிரியர் நா. சுப்பிரமணியன் , பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோர் மாணவர்களை இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றியும் கவனத்தைத் திருப்ப ஊக்குவித்தது நினைவு வருகின்றது. அதன் பயனாக இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுகள் வெளிவந்தன.

அப்தான் நிஷானின் ஆய்வு முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்.

************************************************************************

தமிழிலக்கிய வரலாற்றில் 'புலம்பெயர்வு, 'புலம்பெயர்தல்" ஆகிய சொற்கள் பற்றிய கருத்துக்களைப் பரவலாகக் காணமுடிகின்றது. மனிதநாகரிகத்தின் வளர்ச்சிநிலைகளில் புலம்பெயர்வு தொடர்ச்சியாகவே இடம்பெற்று வந்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ்விலக்கியத்துக்கூடாகப் பேசப்படுகிறது. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை, உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.

Thursday, October 10, 2024


எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 20 கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுதி 'எதிர்காலச்சித்தன் பாடல்' என்னும் தலைப்பில் அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது. அதனை வெளியிட்டிருப்பது பதிவுகள்.காம். 

அத்தொகுப்புக்  கவிதைகளை இங்கு தருகின்றோம்.  'அறிமுகம்: கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு!;' என்னும் தலைப்பில் தொகுப்பின் முன்னுரையினை எழுதியிருப்பவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரன். அ.ந.க.வின் படைப்புகள் சிறுகதைகள்,கவிதைகள், கட்டுரைகள் பல பல்வேறு சஞ்சிகைகள்,பத்திரிகைகளில் வெளிவந்தவை இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை. இவற்றைத் தேடியெடுப்பது முக்கியமானது.


அறிமுகம்: கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு!  வ.ந.கிரிதரன் -

"ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால்பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது" என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...