Wednesday, January 29, 2025

தமிழ் எழுத்தாளர்களும், டிஜிட்டல் தொழில் நுட்பமும், ஒரு வேண்டுகோளும்! - வ.ந.கிரிதரன் -


தமிழ் எழுத்தாளர்கள் பலர் சமூக ஊடகங்களில் வந்து மேய்கிறார்கள். முட்டி மோதுகின்றார்கள். ஆனால் இணையத்தொழில் நுட்பம் அவர்கள்தம் கலையான எழுத்துக்கலைக்கு  உதவக்கூடிய விடயங்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. தம் படைப்புகளைக்கூட வெளியிடுவதற்கு முயற்சி செய்வதில்லை. படைப்புகளை வெளியிடுவதென்றால் இன்னும் அச்சு வடிவில் தம் படைப்புகள்  வெளிவர வேண்டுமென்றுதான் நினைக்கின்றார்கள். அவ்விதம் வெளியிடப் பணமில்லையே என்று அழுது வடிகின்றார்கள். இவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் வாழும் இன்றுள்ள  உலகம் டிஜிட்டல் உலகம். எல்லாமே டிஜிட்டல் வசமாகிக்கொண்டு செல்லும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இவ்விதம் எண்ணுவது அவர்கள் காலத்தின்  இயல்பையும், அது வழங்கும் பயன்களையும் அறிந்துகொள்ளவில்லையென்பதையே காட்டுகின்றது.

Monday, January 27, 2025

காலவெளி: கண்ணம்மாக் கவிதைகள் - அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பு ,பதிவுகள்.காம் வெளியீடு!


எனது காலவெளி - கண்ணம்மாக் கவிதைகள் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது. அதற்கான இணைப்பு - https://www.amazon.com/dp/B0DV76H5BS

நான் இருப்புப் பற்றிய தேடல் மிக்கவன். அறிவியலூடு இருப்புப் பற்றிய தேடலில் ஈடுபடுவதில் எனக்குப் பெரு விருப்புண்டு. எம்மைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சக் காட்சிகள் , குறிப்பாக நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானம் இவற்றில் மெய்ம்மறந்து நிற்பதில் மிகுந்த ஈடுபாடு மிக்கவன் நான். விரிந்திருக்கும் இரவு வானும், ஆங்கு தெரியும் சுடர்களும், கோள்களும், உப கோள்களும், எரி நட்சத்திரங்களும் என் மனத்தைக் கிளர்ச்சியடைய வைக்கின்றன. இருப்புப் பற்றிய சிந்தனைகளைத்தூண்டி விடுகின்றன.

இவ்வகையில் அல்பேர்ட் ஐன்ஸ்ட்டைனின் சார்பியற் கோட்பாடுகள் என்மேல் ஏற்படுத்திய பாதிப்பும், ஆதிக்கமும் முக்கியமானது. வெளி, நேரம் , ஈர்ப்புச் சக்தி பற்றிய அவரது சார்பியற் தத்துவங்கள் அறிவியற் துறையை மட்டுமல்ல, இருப்பு பற்றிய தத்துவத்துறையையும் மாற்றியமைத்தன என்பேன். குறிப்பாகக் காலவெளி என்னும் சொற்பதம் சிறப்பான சொற்றொடர். சிந்தையை விரிவடைய வைக்கும் தன்மை மிக்க சொற்றொடர்.

எழுத்தாளர்களின் கவனத்துக்கு....


அவ்வப்போது இலக்கிய உலகில் ஆதங்கங்கள் சில எழுவதுண்டு. யாராவது பிரபலமான தமிழக எழுத்தாளர் ஒருவரின் பெயரைக்குறிப்பிட்டு ஏன் அவரது பட்டியலில் நம்மவர் பெயர் இல்லை என்று கேள்வி கேட்டு ஆதங்கப்படுவதைத்தான் குறிப்பிடுகின்றேன்.

தமிழக வெகுசனப் பத்திரிகைகளில் இடம் பெறுவதால் அல்லது பிரபல இலக்கிய ஆளுமைகளின் பட்டியல்களில் இடம் பெறுவதால் வேண்டுமானால் ஓரளவு அறிமுகம் மக்கள் மத்தியில் கிடைக்கலாம். ஆனால் வரலாற்றில் உங்களை நிலை நிறுத்தப்போவது இவ்வகையான அறிமுகங்கள் அல்ல.

உங்களை வரலாற்றில் நிலைநிறுத்தப்போவது உங்கள் எழுத்துகளே.கணியன் பூங்குன்றனாரின் வரிகள்தாம் இன்று அவரை எமக்கு அறியத்தருகின்றன. சிலப்பதிகாரம்தான் இளங்கோவடிகளை எமக்கு அறியத்தருகின்றது. அவர்கள்தம் எழுத்துகளே நிலைத்து நிற்கின்றன. அவர்களைப்பற்றிய ஏனையோர் புகழுரைகள் அல்ல. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Sunday, January 26, 2025

காலத்தால் அழியாத கானம் - 'ரோஜா மலரே ராஜகுமாரி'


கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், பி.பி.ஶ்ரீனிவாஸ் & பி.சுசீலா குரலில், மெல்லிசை மன்னர்கள் இசையில்  ஒலிக்கும் இந்தப்பாடல் தமிழ்த் திரையுலகின் முக்கியமான பாடல். காலத்தைக் கடந்தும் வாழும்  கானம் என்பதற்கு நல்லதோர் உதாரணமாக நிற்கும் பாடல். இந்தப்பாடல் ஒலிக்கும் படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. ஆனால் இந்தப்பாடலை எத்தனை தடவைகள் கேட்டு இரசித்திருப்பேன் என்பது தெரியாது. காதலின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல் இளவரசி ஒருத்திக்கும் , சாதாரண போர் வீரன் ஒருவனுக்குமிடையிலான காதலை வெளிப்படுத்தும்.

இந்தப்பாடல் - 'ரோஜா மலரே ராஜகுமாரி'.  நடிகர் சி.எல்.ஆனந்தனும், குமாரி சச்சுவும் நடித்திருக்கும் வீரத்திருமகன் திரைப்படத்தில் அவர்கள் பாடுவதாக அமைந்திருக்கும் பாடல். இருவருமே திரையிலகில் அவர்கள் எதிர்பார்த்தவாறு பிரகாசிக்க முடியவில்லையென்பது திரதிருஷ்ட்டமானது, ஆனால் இப்பாடல் ஒன்றின் மூலம் அவர்கள் இருவரும் தமிழ்த்திரையுலகின் வரலாற்றில் நிலைத்து நின்று விட்டார்கள்.

Friday, January 24, 2025

ஓவியர் மாயாவின் மாயாலோகம்!


எங்கள் பால்ய, பதின்ம வயதுகளில் எம் வெகுசன வாசிப்பு வெறி மிகுந்திருந்த காலத்தில் எழுத்தாளர்களைப்போல் அவர்களின் கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்த ஓவியர்களும் எம்மை மிகவும் கவர்ந்திருந்தார்கள். வினு, கோபுலு, மாருதி, வர்ணம், லதா, ஜெயராஜ், மாயா, கல்பனா, விஜயா என்று ஓவியர்களின் பட்டாளமேயிருந்தது. அவர்களில் மாயாவின் ஓவியங்களும் முக்கியமானவை. ஓவியர் மாயாவின் இயற்  பெயர் மகாதேவன். ஜனவரி 22 அன்று தனது தொண்ணூற்றெட்டாவது வயதில் முதுமையின் காரணமாக ஓவியர் மாயா மறைந்த செய்தியினை அறிந்தபோது மாயாவின் ஓவியங்கள் சிந்தையில் நிழலாடின. என் பால்ய, பதின்மப் பருவத்து வாசிப்பு அனுபவத்தில் ஓவியர் மாயாவின் ஓவியங்களுக்கும் முக்கிய பங்குண்டு.  அவரது வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டிய வாழ்வு.

Wednesday, January 22, 2025

தத்துவம் அறிவோம்: இமானுவல் கான்டின் (Immanuel Kant): அனுபவம் கடந்த கருத்தியல்வாதம் ( Transcendental Idealism )

 
இமானுவல் கான்டின் கருத்தியல்வாதக்சிந்தனைகள் ஈர் உலகங்களைப்பற்றி விபரிக்கின்றது. உண்மையாக எமக்கு வெளியில் இருக்கும் உலகம். அதனை அவர் Noumenon என்றழைத்தார். அடுத்தது எம் அனுபவங்களுக்கு உட்பட்ட உலகம். இதனை அவர் Phenomenon என்றழைத்தார்.

நாம் எம் ஐம்புலன்களால் எம்மைச் சுற்றியுள்ள இப்பிரபஞ்சத்தை உள்வாங்குகின்றோம். எம் சிந்தனையின் விரிவு, புலன்களின் மூளைக்குக்கொண்டு செல்லும் உணர்வுகள், காட்சிகள், சப்தங்கள் போன்றவற்றின் மூலம் நாம் எம்மைச்சுற்றியுள்ள பிரபஞ்சத்தைப்பற்றிய வடிவினை, அதன் இயல்பினைப்பற்றிய சித்திரமொன்றினை உருவாக்கிக்கொள்கின்றோம்.

இவ்விதமாக எமக்குத்தெரியும் யதார்த்தம் அல்லது  உண்மை (Reality)) என்பது எம்மால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால் அது உருவாக்கப்பட்டதற்குக் காரணமாக எமக்கு வெளியில் இருக்கும் உண்மையான உலகத்தினை நாம் ஒருபோதுமே பார்க்க முடியாது. உணர முடியாது. ஏனென்றால் அது எம் புலன்களுக்கு, எம் சிந்தைக்கு அப்பாற்பட்டது. உண்மையில் அவ்விதமிருக்கும் உண்மையான உலகு எம்மில் ஏற்படுத்தும் விளைவே நாம் அறிந்திருக்கும், புரிந்திருக்கும் இந்தப் பிரபஞ்சம்.

சிறந்த கவிதை பற்றிச் சில சிந்தனைகள்....




கவிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றொரு கூற்றின் அடிப்படையில் ஒரு சர்ச்சை தற்போது கிளம்பியுள்ளது. இது புதிய சர்ச்சை அல்ல. மாற்றங்கள் நிகழ்கையில் இது போன்ற சர்ச்சைகள் ஏற்படுவதும் இயல்புதான். ஒரு காலத்தில் கவிதையென்றால் அது மரபுக் கவிதைதான். மரபுக்கவிதை எழுதுவதற்கு யாப்பிலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். அதன் காரணமாகக் கவிஞர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.

மரபை மீறிப் புதுக்கவிதை பிறந்தபோது புற்றீசல்களாகப் புதுக்கவிஞர்கள் பிறந்தனர். இன்றுள்ள முன்னணிக் கவிஞர்கள் பலரும் அவ்விதம்  படையெடுத்த கவிஞர்களிலிருந்து உருவானவர்கள்தாம். அப்பொழுதும் மரபில் கோலோச்சிக்கொண்டிருந்த மரபுக்கவிஞர்கள் புதுக்கவிஞர்களை ஏளனத்துடன் பார்த்தனர். யாப்பு தெரியாதவரெல்லாம் கவிதை எழுத வந்து விட்டார்கள் என்று எள்ளி நகையாடினார்கள். அன்றிலிருந்து இன்று வரை உலகின் எப்பாகங்களிலிருந்தும் வெளியாகும் பத்திரிகை, சஞ்சிகையின் கவிதைப் பக்கங்களைப் பாருங்கள். இலட்சக்கணக்கில் தமிழ்க் கவிதைகளை, கவிஞர்களைக் காணலாம். இவர்களில் பலரைத்  தமிழ் இலக்கிய உலகு அறிந்திருக்காது. ஆனால் இவர்களில் பலர் முகங்களை நாம் அறிந்திருக்காதபோதும் இவர்களின் படைப்புகள் வரலாற்றில் நிலைத்து நிற்குமா என்பதைப்பற்றி நாம் எதுவும்  கூற முடியாது. இன்று டிஜிட்டல் தொழில் நுட்பம் காரணமாக இவர்களது படைப்புகள் பலவும் வெளியான பத்திரிகை, சஞ்சிகைகளின் ஆவணப்படுத்தல் மூலமாக வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகின்றது. இன்னும்  பல நூறு ஆண்டுகளின் பின்னர் இவர்களின் பலரின் கவிதைகள் ஒரு காலகட்டக் கவிதைகளாக  இனங்காணப்படும் சாத்தியங்களும் உண்டு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...