Friday, April 11, 2025

தாமரைச்செல்வியின் முதல் நாவல் 'சுமைகள்'


எழுத்தாளர் தாமரைச்செல்வியின் முதல் நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளியான 'சுமைகள்'. தற்போது அந்நாவலும் நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

வேலை வெட்டி இல்லாமல், இளமைக் கனவுகள் பல நிறைவேறாத நிலையில் வாழும் செந்தில் என்னும் இளைஞன், தன்னை நம்பி வந்திருக்கும் தீபா என்னும் பெண்ணையும் தன்னுடன் அழைத்து வீட்டுக்கு வருகின்றான். அவ்விதம் வருபவன் அச்சுமையுடன் , வீட்டுச் சுமைகளையும் துணிவுடன் ஏற்றுக்கொள்கின்றான். வீட்டுச் சுமைகளைத் தீர்த்தவுடனேயே தீபாவுடனான வாழ்க்கை ஆரம்பமாகுமென்று உறுதி செய்துகொள்கின்றான்.

புலமும், நிலமும் பற்றி..


 

"எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்.
யானும் நீயும் எவ்வழி அறிதும்.
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."

(இக்காட்சியினைப் பிரதிபலிக்கும் ஓவியத்தை வரைந்தது AI)

எழுத்தாளர் அருண் செல்லப்பா தன் முகநூற் பதிவில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். "புலம் பெயர்தல் இதன் எதிர்ப் பதம் எதுவாக இருக்கும்.?"

இதற்கு நான் பதிலளித்திருந்தேன்: "புலம் திரும்புதல்."

புலம் மீளல் என்றும் கூறலாம்.

அதற்கு அவர் எதிர்வினையாற்றியிருந்தார் : "நான் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தேன்;; எனவே கனடாதான் எனக்குப் புலம். இதன் மறுவளம் என்ன என்பதே கேள்வி."]

இதற்கு நான் இவ்வாறு பதிலளித்திருந்தேன்: 'புலம் என்றால் அர்த்தம் நிலம். தன் நிலத்தை விட்டுப் பெயர்தலே புலம் பெயர்தல். சங்கப் பாடல்களில் புலம் என்பது நிலம் என்னும் அர்த்தத்திலேயே கையாளப்பட்டுள்ளது.'

அதனை ஏற்று அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்: "உண்மைதான். நில புலம் வைத்திருப்போர், நிலச் சுவாந்தார் என்று தமிழில் சொல்லாடல் வருகின்றது. எனவே எனக்குக் கனடா புலம் அல்ல. புரிகிறது;; நன்றி"

இவர் இவ்விதம் ஆரம்பத்தில் கேட்பதற்குக் காரணம் புலம் என்றால் அது நிலத்துக்கு எதிர் என்று கருதியதால்தான். பலர் அவ்வாறே கருதுவதை நான் அவதானித்திருக்கின்றேன். பலர் கட்டுரைகளில் கூட அவ்வாறே கருதிக் கையாண்டுள்ளதையும் அவதானித்திருக்கின்றேன்.

எழுத்தாளர் க.அருள் சுப்பிரமணியத்தின் 'அக்கரைகள் பச்சையில்லை'


எழுத்தாளர் க.அருள் சுப்பிரமணியம் அவரது 'அவர்களுக்கு வயது வந்து விட்டது' நாவல் மூலம் நன்கறியப்பட்டவர். மானுட அனுபவங்களைச் சுவையாக , அனுபவபூர்வமாக விபரிப்பதில் வல்லவர். உதாரணத்துக்கு ஒருவர் குடிக்கும் அனுபவத்தை விபரிக்க வேண்டுமானால், அவ்வனுபவத்தை அனுபவ பூர்வமாக, உயிர்த்துடிப்புடன் விபரிப்பார். அதை வாசிக்கையில் அவ்வனுபவம் நமக்கும் வந்து விடும்.


இந்நாவல் பல அக்காலகட்டத்தகவல்களையும் தருகின்றது. உதாரணத்துக்கு ஒன்று - திருகோணமலைத் துறைமுகத்திலுள்ள மாதவன் நாயரின் தேநீர்க் கடை பற்றி வருகின்றது. கதை கற்பனைக் கதையானாலும் அக்காலத்தில் கேரளத்து நாயர்களும் அங்கு தேநீர்க் கடை போன்ற வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதனால்தான் மாதவன் நாயர் என்னும் பாத்திரமும் நாவலில் வருகின்றது என்றே நான் கருதுகின்றேன். இது தவறென்றால் அறிந்தவர்கள் அறியத் தரவும்.

இளைஞர்களே! சிந்திக்கச் சில சிந்தனைகள்!


இங்குள்ள காணொளியை முழுமையாகப் பார்க்கவும். இந்த இளைஞர் கள்ள வழியில் கனடா செல்ல முற்பட்டு அழைந்த இன்னல்களை, இழந்த சொத்துகளைப் பற்றி இதில் விபரிக்கின்றார். இவ்வகையில் இது பயனுள்ள காணொளி. காணொளிக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=q4Y5Z-JdscU

ஆனால் முடிவில் இவர் கூறுகின்றார் வெளிநாடு  போவதானால்  சட்டபூர்வமான வழிகளில் செல்லுங்கள் என்று. அது சரியானது. ஆனால் இவ்வளவு இன்னல்களை அடைந்த பின்னும் இவருக்கு  வெளிநாடு செல்லும் ஆசை நீங்கவில்லை என்பதையும் அது புலப்படுத்துகிறது.

போர்ச்சூழல் நிலவிய காலத்தில் ஒருவரின் இருப்பே கேள்விக்குரியதாக மாறிய சூழலில் மக்கள் அகதிகளாக வெளியேறினார்கள். கிடைத்த வழிகளில் வெளியேறினார்கள். அச்சூழலின் விளைவு அது. 

Thursday, April 10, 2025

ஸ்டார் வெளியிட்ட Brand New Planet சிறுவர் பத்திரிகை!


என் மூத்த மகள் தமயந்தி எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த  சமய்ம் டொராண்டோவிலிருந்து வெளியாகும் டொராண்டோ ஸ்டார் பத்திரிகை Brand New Planet என்னுன் சிறுவர்களுக்கான பத்திரிகையை வாரந்தோறும் வெளியிட்டு வந்தது. அதில் அவர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அதற்கான ஊதியத்தையும் பத்திரிகை நிறுவனம் அனுப்பி வைத்துக்கொண்டிருந்தது, ஒரு தடவை அவரை வைத்துக் Cover Story  செய்ய வேண்டுமென்று ஸ்டார் பத்திரிகை விரும்பியது. அதற்காக ஒரு புகைப்படக்காரரையும் அனுப்பி வைத்தது.  

Monday, March 31, 2025

தன் கருத்துகளைச் சுதந்திரமாகக் கூறும் உரிமை சவுக்கு சங்கருக்குண்டு!


நான் சவுக்கு சங்கரின் அபிமானி அல்லன். அவ்வப்போது அவரது சவுக்கு மீடியாக் காணொளிகளைப் பார்ப்பவன். ஆனால் சனநாயக நாடான இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஊடகவியலாளர்  ஒருவர் தன் கருத்துகளைச் சுயமாக எடுத்துரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. அவரது கருத்துகளை, அவை எவ்வளவு எதிரானவையாக இருந்தாலும் அவற்றைக் கூறும் உரிமை அவருக்குண்டு. கருத்தைக் கருத்தால்தான் எதிர்க்க வேண்டும். வன்முறையால் அல்ல. எம் போராட்ட வரலாற்றில் கருத்துகளை வன்முறை கொண்டு அடக்கினோம். அதன் விளைவுகளை நாம் அறிவோம்.

சவுக்கு சங்கர் தன் நிறுவனத்தின் செயற்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அவரது வீட்டின் மீது அவரது கருத்துகள் திரிக்கப்பட்டு,  துப்புரவுத் தொழிலாளர்கள் சிலரை அவருக்கெதிராகத் திசை திருப்பி அவர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் குறிப்பிட்டிருக்கின்றார்.  சட்டம் தன் கடமையினைச் செய்தால் இதன் உண்மை நிலை வெளிப்படும். உண்மையில் அவரது வீட்டைத் தாக்கியவர்கள் துப்புரவுத்  தொழிலாளர்களா அல்லது அப்போர்வையில் வந்த அடியாட்களா என்பதைப் பாரபட்சமற்ற விசாரணைகள்தாம் வெளிப்படுத்தும். நிரூபிக்கும். இச்சந்தேகம் அவருக்கும் இருப்பதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்த அவருடனான நேர்காணற் காணொளியொன்றில் பார்த்தேன்.

சவுக்கு சங்கர் தன் குரலைச் சுதந்திரமாக ஒலிப்பதற்குரிய உரிமை நிலைநாட்டப்பட வேணடும். மீண்டும் அவர் தனக்குப் பிடித்த ஊடகத்துறையில் சுதந்திரமாக ஈடுபடும் நிலை ஏற்படுமென்று எதிர்பார்ப்போம்.

மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும்  தமிழக் கலை, இலக்கிய & அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் என்ன நிலையினை எடுக்கப்போகின்றார்கள் என்பதை அறிய ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.

Tuesday, March 25, 2025

நடிகர் மனோஜ் மறைந்தார்!


முகநூல் எதிர்பாராத செய்திகளைத்  தாங்கி வர ஒரு போதும் தவறுவதில்லை. அவ்விதம் இன்று  முகநூல்  தாங்கி வந்த செய்திதான் நடிகர் மனோஜின் மறைவுச் செய்தி.  நான் இவரது தீவிர இரசிகன் அல்லன். உண்மையில் இவரது திரைப்படங்களைக்கூட இதுவரையில் பார்த்ததாக நினைவில்லை. ஆனால் நான் இவர் நடித்த திரைப்படப்பாடல்களின் காணொளிகள் பலவற்றை அதிகமாகப் பார்த்திருக்கின்றேன். இரசித்துக்கொண்டிருப்பவன். குறிப்பாக இவரது 'வருசமெல்லாம் வசந்தம்' திரைப்படப்பாடல்கள் மிகவும் பிடித்தவை. குறிப்பாக உன்னிமேனன் குரலில் ஒலிக்கும் 'எங்கே அந்த வெண்ணிலா'  பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். இப்பாடல்களில நடித்திருக்கும் மனோஜின் இயல்பான தோற்றம், நடிப்பு குறிப்பாக மனத்தைக் கவரும் அந்தப் புன்சிரிப்பு இவற்றினை நான் இரசிப்பவன்.

கதாநாயகனாக  இவரால் ஏனைய  திரைப்பட வாரிசுகளைப்போல் சுடர் விட முடியாமற் போயிருந்தாலும் , நடிகர் ரகுவரன் போல்  தனித்துவம் மிக்க, குணச்சித்திர நடிகராக  நிலைத்து நிற்கக் கூடிய ஒருவர் இவர் என்று நினைப்பதுண்டு.

நடிப்பு தவிரத் திரைப்பட  இயக்கத்திலும் இவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்னும் சாதிப்பதற்கு இவருக்குக் காலம் இருந்த நிலையில் ,இந்த வயதில் இவர் மறைந்திருப்பது துயரமானது. இருப்பின் நிலையற்ற தன்மையினை மீண்டுமொரு தடவை எமக்கு உணர்த்தி நிற்பது. ஆழ்ந்த இரங்கல்.

இவரது நினைவாக, இவர் நடிப்பில் என்னைக் கவர்ந்த சில பாடல்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

எங்கே அந்த வெண்ணிலா - https://www.youtube.com/watch?v=knkNX-_Zp5w
முதன் முதலாய் உன்னைப் பார்க்கிறேன் - https://www.youtube.com/watch?v=Cph4grc2l_U
சொல்லாதே சோலைக்கிளி  - https://www.youtube.com/watch?v=rDzFFHdEoEA
எந்த நெஞ்சில் - https://www.youtube.com/watch?v=kg4uCisk_2Q
ஈச்சி எலுமிச்சி - https://www.youtube.com/watch?v=Iklj9CFFmEw

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...