Thursday, May 15, 2025

நூலகத்தில் கிடைத்த புதையல்!

வழக்கம் போல் ஸ்கார்பரோ நூலகக் கிளைகளில் ஒன்றான , எக்ளின்டன் - கென்னடி சந்திக்கண்மையிலிருக்கும் கிளைக்கு நேற்று மாலை சென்றிருந்தேன்.  அங்கு நூல்கள் சிலவற்றை விற்பனைக்குப் வைத்திருந்தார்கள். அவற்றிலொன்று இந்த நூல்.  கற்பகம் பதிப்பக வெளியீடான (2023) பாரதியார் கவிதைகள். நூலக நூல்களில் ஒன்றல்ல. யாரோ ஒருவர் நூலகத்துக்கு இலவசமாக வழங்கியிருக்க வேண்டும். விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.  

என் அபிமானக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் , ஆளுமைகளின் அல்லது அவர்கள் பற்றிய நூல்களை கண்டால் வாங்கி விடுவேன். இதனையும் அவ்விதம் வாங்கிக்கொண்டேன்.

பிழைத்த தென்னந்தோப்பு - மகாகவி பாரதியார்

வயலிடை யினிலே - செழுநீர்
மடுக் கரையினிலே
அயலெவரு மில்லை - தனியே
ஆறுதல் கொள்ள வந்தேன்.

காற்றடித்ததிலே - மரங்கள்
கணக்கிடத் தகுமோ?
நாற்றினைப் போலே - சிதறி
நாடெங்கும் வீழ்ந்தனவே!

Tuesday, May 13, 2025

யாழ்ப்பாணம் வேறு! நல்லூர் வேறு! மேலுமொரு முக்கிய வரலாற்றுத் தகவல்! - வ.ந.கிரிதரன் -


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு என்னும் எனது நூலின் இரண்டாவது அத்தியாயம் 'நல்லூரும் யாழ்ப்பாணமும்!  இதில் நல்லூரும் ராஜதானியும்  ஒன்று என்பார்கள் கலாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர்  என்பதைச் சுட்டிக்காட்டி, ஆனால் முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா ஆகியோர் அவை இரு வேறானவை என்பார்கள்  என்பதையும் சுட்டிக்காட்டி, அவற்றில் தர்க்க நியாயங்களின் அடிப்படையில் முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா  ஆகியோரின் கருத்தான நல்லூரும், யாழ்ப்பாணமும் வேறானவை என்னும் என் கருத்தை முன் வைத்திருப்பேன்.

நான் மீண்டும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வினை  மீண்டும் கனடாவிலிருந்து எழுதிய காலகட்டடத்தில் என்னிடமும் இந்நூல் இருக்கவில்லை. ஏனயோர் எழுதிய குறிப்புகளின் அடிப்படையிலெயே என் தர்க்கத்தை முன் எடுத்திருந்தேன். அதன்படி முதலியார் செ.இராசநாயகம், கலாநிதி க.செ. நடராசா ஆகியோரின் கூற்றுக்களுக்கமையவும், அவர்களின் தர்க்கத்தின் அடிப்படையிலும், கைலையமாலையில் யாழ்ப்பாணம், நல்லூர் ஆகியவைத் தனித்தனியாகக் குறிப்பிடப்படுவதன் அடிப்படையிலும், நல்லூர் வேறு, யாழ்ப்பாணம் வேறு என்னும் முடிவுக்கு வந்திருந்தேன்.

Thursday, May 8, 2025

பயனுள்ள மருத்துவக் காணொளிகள் இரண்டு: இருதய மருத்துவ நிபுணர் எஸ். இராமசாமியுடனான (Dr. S Ramasamy) ஒரு நேர்காணல் மற்றும் Dr. Pradip Jamnadas, MD இன் காணொளி!


இக்காணொளியை அண்மையில் பார்த்தேன். இதில் இருதய மருத்துவ நிபுணர் இராமசாமி அவர்கள் மாரடைப்பு, அதற்கான சிகிச்சை முறைகளான 'ஆஞ்சியோ பிளாஸ்டி', 'ஸ்டென்ற்', 'பைபாஸ்' சத்திர சிகிச்சை , இரத்த அடைப்புகள் & அவற்றால் உருவாகும் இரத்தக் கட்டிகள் போன்றவற்றைப்பற்றித் தெளிவான விளக்கங்களைப் பகிர்ந்துகொள்கின்றார். இருதயத்த்யின் இரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவற்றுக்கான மருத்துவர்களின் ஆலோசனைகளை எவ்விதம் அணுக வேண்டும் என்பது பற்றிய அவரது கருத்துகளும் முக்கியமானவை. இப் பதிவு என் ஆலோசனை அல்ல. தகவலைப் பகிர்ந்து கொள்ளல் மட்டுமே. அவ்வப்போது என் கருத்துகளையும் கூறியிருக்கின்றேன். அவை மருத்துவ ஆலோசனைகள் அல்ல. என் கருத்துகள் மட்டுமே.


பொதுவாக இருதய மருத்துவர்கள் ஒருவருக்கு மூன்று இரத்தக் குழாய்களில் அடைப்புகள் 70% வீதத்திற்கு மேல் இருந்தால் , கண்ணை மூடிக்கொண்டு பைபாஸ் சத்திரசிகிச்சை க்குப் பரிந்துரை செய்வார்கள். இல்லாவிட்டால் ஆஞ்சியோபிளாஸ்டிக் முறை மூலம் ஸ்டென்ற் வைப்பதற்குப் பரிந்துரை செய்வார்கள்.

Wednesday, May 7, 2025

தனித்து வாழும் என் பாட்டி! - வ.ந.கிரிதரன் -


பாட்டியின் இல்லம் நீ!
இந்த இல்லத்திலிருந்துதான்
என் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் எதற்காக அங்கிருந்து
வடை சுட்டுக்கொண்டிருக்கின்றாள்
என்று அம்மாவைக் கேட்டேன்.
அதற்கு அம்மா சொன்னாள்:
'அவள் முன்பெல்லாம் இங்கிருந்துதான்
வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
காகங்களின் தொல்லை அதிகமாகி விட்டதால்
அங்கிருந்து சுடுகின்றாள். இப்போது
அவளுக்குக் காகங்களின் தொல்லை
இல்லையல்லவா கண்ணே!'
அம்மா சொன்னதில் உள்ள நியாயத்தை
அப்போது நானுணர்ந்தேன்.
தர்க்கரீதியாகவும் அது சரியாகத்தானிருந்தது.
புத்திசாலிப் பாட்டி என்றேன்.
'உன்னைப்போல் ' என்றாள் அம்மா.
எனக்கு அது மகிழ்ச்சியைத் தந்தது.
என் செல்ல அம்மா என்று கொஞ்சினேன்.
என் அம்மாவுக்கோ கொள்ளை மகிழ்ச்சி.
அப்பொழுதெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன்
அங்கிருந்த பாட்டியின் தனிமையைப் பற்றி.
பாட்டிக்குத்  துணையாக நானும் அங்கு செல்வேன்.
பாட்டியின் கதை கேட்டு நானும் அங்கு தூங்குவேன்.
இவ்விதமெல்லாம் அப்போது நான் எண்ணிக்கொள்வேன்.

Monday, May 5, 2025

கவிதை: குருமண்காடு! - வ.ந.கிரிதரன் -



* ஓவியம் - AI

நான் நினைவில் வைத்திருப்பது இன்றுள்ள
குருமண்காடு அல்ல.
அது ஒரு கனவுலகம் போல்தான்
இப்போது தோன்றுகின்றது.
உண்மையில் அது இருந்ததா என்றும்
சில வேளைகளில் நான் ஐயுறுகின்றேன்.
ஆனால் அவ்விதமான சந்தேகங்களுக்கான
தேவை இல்லையென்பதையும் கூடவே
நான் உணர்கின்றேன்.
அது இருந்ததா அல்லது இருக்கவில்லையா
என்பது எனக்கு முக்கியமல்ல.
அது பற்றிய நினைவுகள் இன்றும்
என் உணர்வுகளில் விரவிக்கிடக்கின்றன.
அவை முக்கியமானவை.
மாபெரும் டைனோசர்கள் ஒரு காலத்தில்
இப்புவியுலகை ஆட்சி செய்தன அல்லவா.
அவற்றை நாம் பார்த்ததில்லை.
பார்க்கப்போவதுமில்லை அல்லவா.
ஆனால் அவற்றின் தடங்கள் இன்னும்
இம்மண்ணில் புதைந்து கிடக்கின்றன.
என் நினைவுத் தடங்களில் குருமண்காடும்
புதைந்துதான் கிடக்கின்றது.
அத்தடங்களிலிருந்து அவ்வப்போது அது
உயிர் பெறுகிறது. அவ்வளவுதான்.
அது போதுமெனக்கு.

Sunday, May 4, 2025

வெகுசனப் படைப்புகளின் முக்கியத்துவம் பற்றி....


ஒருவரின் வாசிப்புப் படிக்கட்டில் அம்புலிமாமாக் கதைகளுக்கும் ஒரு தேவையுண்டு. அது போன்றதுதான் வெகுசனப் படைப்புகளின் முக்கியத்துவமும். யாரும் நேரடியாகத் தீவிர வாசிப்புக்குள் குதித்து விடுவதில்லை. எல்லோருமே திருஞானசம்பந்தராக இருந்து விடுவதில்லை.

சுஜாதாவின் முக்கியத்துவம் அவரது மொழி, அறிவியலை எளிய மொழியில் தமிழுக்குள் கொண்டு வந்தது, தமிழில் மர்மக்கதை இலக்கியப் பிரிவுக்கான அவரது பங்களிப்பு எனக் கூறலாம். வெவ்வேறு வாசிப்புப் படிக்கட்டுகளில் உள்ள வாசகர்களுக்கான தேவைகளை இவ்விதமான வெகுசனப் படைப்புகள் பூர்த்தி செய்கின்றன.

நம் படைப்பாளிகள் பலருக்கு ஒரு குணம் உண்டு. அவர்கள் தம் பால்ய, பதின்மப் பருவங்களில் வெகுசனப் படைப்புகளில் மூழ்கிக் கிடப்பார்கள். அவற்றினூடு வளர்ந்து வந்திருப்பார்கள். வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கு வந்ததும் , தம்மை வளர்த்த இவ்வகையான வெகுசனப் படைப்புகளைப் பற்றிக் கூறுவதைத்தவிர்த்து விடுவார்கள். பதிலாக இவ்வகையான படைப்புகளைப் பற்றி இளக்காரமாகப் பேசத்தொடங்கி விடுவார்கள். அது அவர்களது பெருமை அல்ல சிறுமை என்பேன்.

Monday, April 28, 2025

வானியலில் ஆர்வம் மிக்க வழக்கறிஞர் செந்தில்நாதனும், அவரது வானியல் பற்றிய நூலும்!


எனக்கு  இவருடன் நேரில் பழக்கமில்லை. ஆனால் என் பதின்ம வயதுகளில்  என் கவனத்தை ஈர்த்த ஆளுமைகளில் இவரும் ஒருவர்.  அதற்குக் காரணம் இவரது வானியல் மீதான ஆர்வம்தான். 

இவரது வீடு கஸ்தூரியார் வீதியில், நாவலர் வீதிக்குச் சிறிது தெற்காக இருந்தது. மாடி வீடு. மொட்டை மாடியில் ஒரு தொலைக்காட்டி எப்பொழுதும்  விண்ணை ஆராய்வதற்குரிய்  வகையில் தயாராகவிருக்கும். அதுதான் என் கவனத்தை இவர் ஈர்க்கக் காரணம்.  அதனால் அந்த வீடு அக்காலகட்டத்தில் யாழ்ப்பாண நகரில் முக்கியமானதொரு நில அடையாளமாக விளங்கியது.  

கலாமோகனின் 'காதல் கதைகளும், சில காதலிகளும்' சிறுகதை பற்றி.....

 எழுத்தாளர் க.கலாமோகன்  கடந்தவாரம் ஸ்கார்பரோவில் நடைபெற்ற 'துவாரம்'  சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டில் உரையாற்றியவர்கள் தொகுப்பிலுள்...