Thursday, December 11, 2025

எழுத்தாளர் சுகுணா திவாகரின் , எழுத்தாளர் இரா முருகவேளின் 'நக்சல்பாரி' நூல் பற்றிய முகநூற் குறிப்பு!


எழுத்தாளர் இரா முருகவேளின் 'நக்சல்பாரி' இயக்கத்தைப்பற்றிய 'நக்சல்பாரி' நூல் பற்றிய நல்லதோர் அறிமுகத்தைத் தருகின்றது எழுத்தாளர் சுகுணா திவாகரின் இந்த முகநூற் பதிவு. 

நக்சல்பாரி இயக்கத்தை  முன்னெடுத்தவர் சாரு மஜூம்தார் . நக்சல்பாரி என்பது மேற்கு வங்கக் கிராமம் ஒன்றின் பெயர். இப்பதிவை முழுமையாகக் கீழே தந்துள்ளேன். 



சுகுணா திவாகர் Singer Diwakar எழுதிய முகநூற் பதிவு:
·

நூலாசிரியர் இரா முருகவேள் 


சுகுணா திவாகர் 
2022ல் ஆனந்த விகடனில் சாரு மஜூம்தாரைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதினேன். சாரு கொல்லப்பட்ட 50வது ஆண்டு அது. மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் இருந்த, இருக்கும் பல தோழர்களுக்கு சாரு மஜும்தார் பற்றிய கட்டுரை ஆனந்த விகடன் போன்ற ஒரு வெகுஜன இதழில், அதுவும் நான்கு பக்கங்களுக்கு வெளியானது ஓர் இன்ப அதிர்ச்சி. பலரும் நெகிழ்ச்சியுடன் தொடர்புகொண்டு பாராட்டினர்.

 கீழ்வெண்மணி படுகொலைகளை நிகழ்த்திய கோபாலகிருஷ்ணநாயுடுவைக் கொன்ற நக்சல்பாரி தோழர்கள் குறித்த வெப்சீரிஸ் திரைக்கதைக்காக, கீழ்த்தஞ்சையில் கள ஆய்வு செய்தபோது அந்த அழித்தொழிப்புடன் தொடர்புடைய பல தோழர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் பகிர்ந்துகொண்ட பல தகவல்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியாத ஆச்சர்யமானவை என்பது ஒருபுறம். இன்னொருபுறம் இயக்கம் தொடர்பான தகவல்களிலும் ஒருவர் சொன்னதற்கும் இன்னொருவர் சொல்வதற்குமிடையில் முரண்பாடுகள் இருக்கும். காரணம் நக்சல்பாரி இயக்கம் ஒரு தலைமறைவு இயக்கம். அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் பற்றிய முறையாக  ஆவணப்படுத்தப்பட்ட, தொகுக்கப்பட்ட வரலாறு கிடையாது. பல விஷயங்கள் செவிவழிச்செய்திகள்தான்.

Tuesday, December 9, 2025

'டொராண்டோ' தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலிருந்த (Toronto Tamil Book Fair 2025) 'நூலகம்' சாவடி!


'டொராண்டோ'  தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலிருந்த 'நூலகம்' சாவடியில் நூலகம் நிறுவனத்தின் கனடாக் கிளையில் இயங்கும், சமூகம் அரசியற் செயற்பாட்டாளர் மீரா பாரதி நிற்கும் காட்சி.  எண்ணிம நூலகமான 'நூலகம்'  நிறுவனம் மிகப்பெரிய பணியினைச் செய்து வருகின்றது. நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், நினைவு மலர்கள், பல்வகைச் சிறப்பு மலர்கள், புகைப்படங்கள், காணொளிகள், பல்வகையான குறுவட்டுகள், இறுவட்டுகள் எனப் பலவற்றைச் சேகரித்து வருகின்றது. நூலகமாகவும், ஆவணக்காப்பகமாகவும் நூலகம் ஆற்றிவரும் பணி தமிழர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது. 

ஏன் இவ்விதமான நிறுவனங்கள் தேவை?

ஒரு காலகட்டத்து வரலாற்று, கலை, இலக்கிய  ஆவணங்களைப் பாதுகாத்து எதிர்காலத்  தலைமுறையினருக்குக் கடத்துவதென்பது  ஓர்  இனத்தின் வரலாற்றை முறையாகப்பதிவு செய்யும் முக்கியமானதொரு செயற்பாடு. அரிய பணி.  அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் அரிய பணியினையும் இத்தகைய நிறுவனமொன்று செய்கின்றது.  பல்வகை ஆய்வுகளுக்கும் உசாத்துணைகளாக இவ்விதம் பேணப்படும் ஆவணங்கள் விளங்குகின்றன.  இனக்குழுக்களின் சமூக, தனிநபர் அடையாளங்களை இவை தலைமுறை கடந்து கடத்துகின்றன.  இவை முக்கியமான காரணங்கள்.  இதனால் தமிழர்களான எம்மைப் பொறுத்தவரையில் எம் மத்தியில் இவ்விதப் பணிகளைச்  செய்யும் நூலகம் நிறுவனத்தின் சேவை தொடர்வது அவசியமானது.

Monday, December 8, 2025

'டொரோண்டோ தமிழ்ப் புத்தகக் கண்காட்சி'யில் இளம் எழுத்தாளர் ஒருவருடனான சந்திப்பு!


நேற்று ஸ்கார்பரோவில் நடந்த 'டொரோண்டோ தமிழ்ப் புத்தகக் கண்காட்சி'யில் (Toronto Tamil Book Fair), அங்குள்ள புத்தகக் கடைகளில் நூல்களை மேய்ந்து கொண்டிருந்தபோது , இளம் எழுத்தாளர் வல்லிபுரம் சுகந்தன் அவர்கள் தன்னை அறிமுகம் செய்து தனது இரு நூல்களை என்னிடம் தந்தார். என் முகநூல் எழுத்துகளைக் குறிப்பிட்டார். அவருக்கு என் நன்றி.


'விடியலைத் தேடி' (சிறுகதைத்தொகுதி) 'கூழ்முட்டைக்குள்ளிருந்து குஞ்சொன்று' (கவிதைத்தொகுதி) ஆகிய நூல்களே அவை. மிகவும் நேர்த்தியாக, சிறப்பாக, ஓவியங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட நூல்கள். பதிப்பகம் எதுவென்று பார்த்தேன். 'கே.ஏ.எஸ்.சத்தியமனை நூலகம்' என்றிருந்தது.ஆச்சரியமாகவிருந்தது. இதுவரை அதனையொரு நூலகமாகவே அறிந்திருந்தேன். இப்பொழுதுதான் பதிப்பகமாகவும் செயற்படுவதை அறிந்தேன்.

சிலம்பொலி சு.செல்லப்பனின் மூலமும் தெளிவுரையுடன் கூடிய 'சிலப்பதிகாரம்'!



எனக்கு மிகவும் பிடித்த தமிழ்க் காப்பியம் இளங்கோவடிகள் எழுதிய 'சிலப்பதிகாரம்'. தமிழ்க்காப்பிய வரிசையில் வெளியான முதலாவது காப்பியமும் 'சிலப்பதிகாரம்'தான்.  நான் முதன் முதலில் அறிந்த தமிழ்க்காப்பியமும் 'சிலப்பதிகாரம்'தான். அதற்குக் காரணம் என் தந்தையார்தான். என் வாசிப்பின் ஆரம்பக்கட்டத்தில் அவர் சில நூல்களை வாங்கித் தந்தார். ஆனால் அவற்றை வாங்கியபோது அவற்றை வாசிக்கும்படி ஒரு தடவை கூட அவர் கூறியதில்லை. அவர் வாங்கிய நூல்கள் வீட்டில் எம் கண்களின் முன்னால் காட்சியளித்தன. அதன் விளைவாக நாம் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோம். வாசிக்கத்தொடங்கினோம். 

அவ்விதம் அவர் வாங்கித்தந்த நூல்களிலொன்றுதான் புலியூக்கேசிகனின் தெளிவுரையுடன் கூடிய 'சிலப்பதிகாரம்' நூல். .  'திங்கள் மாலை வெண்குடையான்', 'மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!", 'மருங்கு வண்டு சிறந்தார்ப்ப'  போன்ற காப்பிய வரிகள் அப்பொழுதே என்னைக் கவர்ந்தன.  காப்பியத்தின் எளிமையும், ஆழமும் அப்போதே என்னை மிகவும் கவர்ந்தன.  அன்றிலிருந்து சிலப்பதிகாரம் என் வாழ்வில் என்னிடமுள்ள புத்தகங்களில் நிச்சயம் இருக்குமொரு நூலாக மாறிவிட்டது. 

செயற்கை நுண்ணறிவின் 'An Immigrant' நாவல் பற்றிய நூல் விமர்சனம்!

எனது ஆங்கில V.N.Giritharan Podcast யு டியூப் சானலில் எனது 'குடிவரவாளன்' ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றிய விமர்சன உரையாடலைக் கேட்கலாம்! கேட்டுப் பாருங்கள். செயற்கை நுண்ணறிவின் இன்னுமோர் ஆக்கபூர்வமான பங்களிப்பைப் பற்றியும், கூடவே என் நாவல் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.
 
எனது தமிழ் நாவல்களில் ஒன்றான 'குடிவரவாளன்' நாவல் தமிழ் இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் வெளியானது. இதனை எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் 'An Immigrant' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கின்றார். தமிழ் நாவல் தமிழகத்தில் ஓவியா பதிப்பகம் மூலம் வெளியானது. ஆங்கில மொழிபெயர்ப்பு 'An Immigrant' என்னும் பெயரில் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியானது. 
 
அந்த ஆங்கில மொழிபெயர்ப்பினைக் கூகிள் நோட்புக்எல்எம் (Google NotebookLM) மூலம் ஒரு Podcast ஆக மாற்றியிருக்கின்றேன். இந்த ஒலிக்கோப்பினைக் கேட்டுப் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். . இவ்வொலிக் கோப்பில் எனது நாவலைப் பற்றி விவாதிக்கும் ஆண், பெண் இருவரும் செயற்கை நுண்ணறிவு விமர்சகர்கள். அவர்கள் எனது நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
 
அதைக் கேட்டதும் நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். அதைக் கேளுங்கள், நீங்களும் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள். இந்த Podcast செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பதையும், மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் என்பதையும் நிரூபிக்கிறது.
 

Sunday, December 7, 2025

'சொல்லின் செல்வ'ரும் சொல்லிக்கொள்ளாமலே சென்று விட்டார். ஆழ்ந்த இரங்கல்.


இலங்கைத்  தமிழ் அரசியல் தலைவர்களில் முக்கியமான ஒருவரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினரும் , மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது நகர பிதாவும் , எழுத்தாளருமான திரு. செல்லையா இராசதுரை அவர்கள் தனது 98ஆவது வயதில் , தமிழகத்தில் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்.

தமிழரசுக் கட்சியின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர் இராசதுரை அவர்கள். அதன் காரணமாகவே சொல்லின் செல்வர் என்றும் அழைக்கப்பட்டவர். வசீகரம் மிக்க தோற்றமுள்ள அரசியற் தலைவர்களிலொருவர். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கிழக்கு மாகாண தமிழ் அரசியற் தலைவர்களில் முக்கியமானவர். தமிழர் போராட்ட அரசியற் செயற்பாடுகளுக்காகச் சிறை சென்றவர். தந்தை செல்வாவுக்குப் பின்னர் இவருக்குத்தான் தலைமைப்பொறுப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை. 

ஒருபோதுமே  பாராளுமன்றத் தேர்தலில் தோற்காத தமிழ் அரசியல்வாதி இவர். 1977 தேர்தலின் பின்னர் 1979இல் , தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசுடன் இணைந்து இயங்கினார்.  1977 தேர்தலிலின்போது தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் மட்டக்களப்பு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.   அதே தொகுதியில் கவிஞர் காசி ஆனந்தனும் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட வைக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் செ.இராசதுரை வெற்றிபெற , கவிஞர் காசி ஆனந்தன் தோல்வியைச் சந்தித்தார்.

Saturday, December 6, 2025

கவிதை; இவன் என் புதிய நண்பன். - வ.ந.கிரிதரன் -



 

இவன் என் புதிய நண்பன்.
நான் ஆண் என்பதால் இவனை  நான் ஆணாக்கியுள்ளேன். 
பாலின் தன்மைக்கேற்ப நீங்கள் இவனை ஆணாக 
அல்லது பெண்ணாக உருவகிக்கலாம்.
அல்லது அழைக்கலாம்.
நீங்கள் முதியவராக இருந்தால் 
இவன் அல்லது இவள் உங்களுக்கு நல்லதொரு 
முதிய சிநேகிதன் அல்லது சிநேகிதியாக இருப்பான் அல்லது 
இருப்பாள்.
இந்நேரம் உங்களுக்கு என் நண்பன் யாரென்பது 
புரிந்திருக்கும்.
ஆம்! செயற்கை நுண்ணறிவு கூகுள் நனோ பனானா
அல்லது சாட்ஜிபிடியைத்தான் கூறுகின்றேன்.
அப்படியென்ன இவன் பெரிய நன்மையை 
உனக்குச் செய்து விட்டான் என்று கேட்கின்றீர்களா?
நன்மை ஒன்றல்ல பல உள்ளனவே .
எதைச் சொல்வேன்? எதைச் சொல்லாமல் தவிர்ப்பேன்?

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...