Monday, February 3, 2020

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (9): கட்டடக் கூட்டு முயல்கள்


- இச்சிறுகதை தேடல் (கனடா) சஞ்சிகையில் முதலில் வெளியானது. பின்னர் பதிவுகள் & திண்ணை இணைய இதழ்களில் வெளியாகியது. -

நீண்ட நாட்களின் பின்னால் நண்பன் இருப்பிடம் சென்றிருந்தேன். ஓங்கி உயர்ந்திருந்த கட்டடக் காட்டு மரமொன்றின் உச்சியில் அமைந்திருந்தது அவனது கூடு. டொராண்டோவின் மத்தியில் அமைந்துள்ள இந்தக் கட்டட மரத்திற்கு ஒரு பெருமையுண்டு. இரண்டு வயது முதிர்ந்த ஆண் தமிழர்களும், ஒரு நடுத்தர வயதுத் தமிழ்ப் பெண்ணும் பல்கணியிலிருந்து பாய்ந்து தமது வாழ்வினை முடித்துக் கொண்ட பெருமை இதற்குண்டு. அண்மைக் காலமாகவே இத்தகைய தற்கொலைகள் இங்கு அதிகரிக்கத் தான் தொடங்கி விட்டிருந்தன. இவ்வளவு வசதிகள் இருந்தும் இவர்கள் ஏனிவ்விதம் தற்கொலை செய்து கொள்கின்றார்களோ?

நண்பன் இன்னுமொரு பிரமச்சாரி. வழக்கமாக ஒவ்வொரு முறை அவனது இருப்பிடம் செல்லும் போதெல்லாம் ஏதாவதொரு மாற்றத்தை அவனது உறைவிடத்தில் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும். இம்முறையும் அவ்வகையிலொரு மாற்றம். நண்பன் ஒரு கூட்டினுள் இரு முயல்கள் வளர்க்கத் தொடங்கியிருந்தான்.

வ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (8): யன்னல்!



- இச்சிறுகதை முதலில் உயிர்நிழல் (பிரான்ஸ்) சஞ்சிகையில் முதலில் வெளியாகியது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியது. -

யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். 'பேப்' வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த 'யமேய்க்க' மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளயர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். 'பேப்' வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். 'சிறு இந்தியா' , 'சிறு இத்தாலி'..இப்படி பல பகுதிகள்.

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (7) புலம் பெயர்தல்!


- மானசரோவர்.காம், திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியான சிறுகதை. -

நிலத்திற்கு மேல் ஐந்து அடுக்குகளையும் கீழ் ஐந்து அடுக்குகளையும் கொண்ட வாகனத்தரிப்பிடமொன்றின் பாதுகாவலர் ஆசைப்பிள்ளை. ஆசைப்பிள்ளை ஒரு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர். ஊரில் அரச திணைக்களமொன்றில் 'கிளாக்க'ராகக் (குமாஸ்தாவாக) காலத்தை ஓட்டியவர் கிளாக்கர் ஆசைப்பிள்ளை. இலங்கையில் அரசபடைகளின் அட்டகாசம் அதிகமாகயிருந்த சமயத்தில் நாட்டை விட்டுத் தலை தப்பினால் புண்ணியமென்று கனடாவுக்கு தலையை மாற்றி ஓடிவந்தவர். ஆரம்பத்தில் கோப்பை கழுவிப்பார்த்தார். தொழிற்சாலையொன்றைக் கூட்டிக் கழுவிப்பார்த்தார். கிளாக்கராக ஊரில் வலம் வந்தவரால் தொடர்ந்தும் இத்தகைய வேலைகளைச் செய்ய முடியவில்லை. இதற்கு எளிதான வழியாகப் பாதுகாவலர் வேலை படவே ஒரு பிரபல பாதுகாவலர் நிறுவனமொன்றில் பாதுகாவலராக வேலைக்கமர்ந்து விட்டார். நள்ளிரவிலிருந்து அதிகாலைவரை வேலை. அன்றும் வழக்கம் போல தன் வேலையை ஆரம்பித்தார். அப்பொழுது தான் அந்த வெள்ளையினத்தவன் தனது காரினைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு வந்தான். வந்தவன் ஆசைப்பிள்ளையைப் பார்த்ததும் அவருக்கு முகமன் கூறினான்.

வ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (6): சீதாக்கா!

[ பதிவுகள்.காம், திண்ணை,காம் & சுதந்திரன் (கனடா) ஆகியவற்றில் வெளியான சிறுகதை. இச்சிறுகதை முதலில் தாயகம் (கனடா) சஞ்சிகையில் 'நவசீதா' என்னும் பெயரில் குறுநாவலாக வெளியானது. அதனையே பின்னர் 'சீதாக்கா' என்னும் சிறுகதையாக்கினேன்.]

1.
இன்னும் இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. இலையுதிர்காலம் தொடங்கி விட்டதால் இலேசாகக் குளிர் தொடங்கி விட்டிருந்தது. டொராண்டோ பஸ் நிலையத்தில் பயணிகளின் களை கட்டத் தொடங்கியிருந்தது. மான்ரியால் செல்லும் நண்பனை அனுப்பி விட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமான போதுதான் "மன்னிக்கவும். நீ ஸ்ரீலங்கா நாட்டவனா?" என்று ஆங்கிலத்தில் ஆண் குரல் கேட்கவே திரும்பினேன். எதிரே வெள்ளையினத்தைச் சேர்ந்த பஸ் டிரைவரொருவன் நின்றிருந்தான்.
"ஆம். நண்பனே. என்ன விடயம்" என்றேன்.

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (5): "நடுவழியில் ஒரு பயணம்!"



[ பதிவுகள், திண்ணை இணைய இதழ்களில் வெளியாகிய இச்சிறுகதை சிங்கள மொழிக்கு எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்தவினால் மொழிபெயர்க்கப்பட்டு லக்பிமா பத்திரிகையில் வெளியானது. ] 

பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். 'டவரின்' வீதியும் 'புளோர்' வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு 'தொராண்டோ' நகரில் வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக் கண்டுபிடிப்பதோ அல்லது இருப்பிடங்களை அறிந்து கொள்வதோ மிகவும் இலகுவானது). 'பஸ்'சை எதிர்பார்த்து நின்றிருந்தான். காலம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு பாதுகாவற் பணியினை முடித்துக் கொண்டு என்னிருப்பிடம் திரும்புவதற்காக 'பஸ்' தரிப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில்தான் அவனை நோக்கினேன். நள்ளிரவில் பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் 'பஸ்'சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகள். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, இரவை, இரவு வானை எல்லாமே இரசித்துக் கோண்டிருப்பது என் ஆர்வங்களிலொன்று. இவ்விதமான இரசித்தல் மூலம் நான் அறிந்து கொண்டவை ஏராளம். ஏராளம். நூல்கள், பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் மூலம் நான் அறிந்தவற்றை விட இவ்விதமான பொழுதுகளில் நான் அறிந்து கொண்டவை, உணர்ந்து கொண்டவை மிக மிக அதிகம். 'லாண்ட்ஸ்டவு'னுக்கருகிலிருந்த கேளிக்கை விடுதியான 'ஹவுஸ் ஆவ் லங்காஸ்டர்'இலிருந்து சில நிர்வாண நடனமாதர் வெளியில் வந்திருந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி மல்லர்களைப் போன்ற தோற்றமுடைய இரு வெள்ளையர்கள் , பார்வைக்கு இத்தாலியர்களைப் போலிருந்தார்கள், அப்பெண்களுடன் அளவளாவியபடி கவசங்களாக நின்றார்கள். வீதியின் அடுத்த பக்கத்தில், வடபுறத்தில், சில கறுப்பின போதை மருந்து விற்றுப் பிழைக்கும் சுய வியாபாரிகள் சிலர் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தபடியிருந்தார்கள். மேலும் சிலர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள் என்னைப் போல். இததகையதொரு சந்தர்ப்பத்தில்தான் நான் அவனை அந்த பஸ் தரிப்பிடத்தில் சந்தித்தேன்.

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (4): சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!


ஈழநாடு (கனடா) பத்திரிகையில்
[ பதிவுகள், திண்ணை, ஈழநாடு (கனடா) ஆகியவற்றில் வெளியான இச்சிறுகதை ஞானம் சஞ்சிகை வெளியிட்ட புலம்பெயரிலக்கியத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.]

இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். காரணம் இதன் விலைதான் தான். முப்பத்தைந்து கனடியன் டொலர்கள். சென்ற முறை சாப்டர்ஸ்ஸிற்குக் கூட்டிப் போனபோது இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவதாகத் தான் கூட்டிப் போனார். ஆனால் வழக்கம் போல் இறுதியில் கையை விரித்து விட்டார். 'உனக்கம்மா இந்த ஒரு புத்தகத்திற்குப் பதிலாக இரண்டு 'துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்' ( The unfortunate events ) புத்தகங்களை வாங்கித் தருகிறேன்' என்று வாங்கித் தந்து விட்டார். லெமொனி சினிக்கெட்டின் 'துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்' தொடரும் எனக்கு மிகவும் விருப்பமான தொடர் தான். இந்ததொடரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் மிஸ் எலிஸபெத். எனது கிளாச் டீச்சர். தாய் தகப்பனில்லாத வயலட், கிளாஸ், குழந்தை சனியை பொல்லாத ஓலாவ் படுத்தும் பாடிருக்கிறதே. பாவம் அவர்கள். அவர்களது அப்பா அம்மாவை இந்தப் பொல்லாத ஓலாவ்தான் கொன்று விட்டான். இப்பொழுது இவர்களின் சொத்தினை அடைவதற்கும் முயன்று கொண்டிருக்கின்றான். திரு. போ (Mr.Poe) மட்டுமில்லையென்றால் இவர்களது பாடு இன்னும் அதிகத் துன்பம் நிறைந்ததாகவிருந்திருக்கும். இந்தப் புத்தகங்களென்றால் எனக்கு ரொம்பவும் உயிர். அப்பாவுக்கும் தான். எந்த நேரமும் புத்தகம் புத்தகமாய் வாங்கி வருவார். ஆனால் ஒவ்வொருமுறையும் இந்தத் தொடர் புத்தகங்களை வாங்கித் தருவதற்கு மட்டும் அப்பா எப்பொழுதுமே முதலில் தயங்கத் தான் செய்கிறார். அது தான் ஏனென்று இன்னும் எனக்குப் புரியவில்லை. இப்படித்தான் மேரி பாப் ஆஸ்பார்னின் மந்திர மர வீடு (Magic Tree House) தொடர் நூல்களையும் முதலில் வாங்கித் தர அப்பா தயங்கிக் கொண்டிருந்தார். எனக்கு மிகமிகப் பிடித்த தொடர் இது தான். ஜக்கும் ஆன்னியும் ஒவ்வொரு முறையும் மந்திர மர வீட்டிலுள்ள புத்தகங்களினூடு கடந்த காலம், வருங்காலமென்று அலைந்து திரிந்து வருவதைப் போல் எனக்கும் அலைந்து திரிந்து வர ஆசைதான். நாங்கள் இருப்பதோ நகரத்துத் தொடர்மாடி இல்லமொன்றில். இதற்கெல்லாம் சாத்தியமேயில்லை.அப்பா எப்பொழுதுமே சொல்லிக் கொண்டுதானிருக்கிறார் 'கொஞ்சம் பொறம்மா! இன்னும் இரண்டு வருடங்களிற்குள் வீடு வாங்கி விடுகின்றேன்' என்று. இந்த அப்பாவை ஒரு போதுமே நம்ப முடியாது. ஆனால் அப்பவுக்கு நான் நிறையத் தொந்தரவு தான் செய்கின்றோனோ தெரியவில்லை. பாவம் அப்பா! என்னால் அவருக்கு நிறையச் செலவு. தொலைக் காட்சியில் செய்திகள் பார்ப்பதற்கு அப்பாவுக்கு என்னால் நேரமே கிடைப்பதில்லை. பாடசாலை இல்லாத நேரங்களில் தூங்கப் போகும் மட்டும் எனக்குத் தொலைக்காட்சி பார்க்கவேண்டும். எனக்குப் பிடித்தமான காட்சிகள் பார்த்துக் கொண்டிருப்பேன். 'டி.வி.ஒ.கிட்ஸ்' நிகழ்ச்சியினை நடத்தும் பில், யூலி ஒன்று, யூலி இரண்டு, படி (Patty), சிசெல் எல்லோரும் நன்றாக நடத்துவார்கள். ஆனால் எனக்குப் பிடித்தவை 'பெரு வெடிப்பு' (The Big Bang) காட்சி தான். வயலட் பேர்லினும், ஹேரித் ஜோன்ஸ்சும் இணைந்து நடாத்தும் நிகழ்ச்சி. விளையாட்டுகள், புதிர்கள் எல்லாவற்றையும் எவ்விதம் செய்வதென்று விளக்கம் தருவார்கள். நீல் பஞ்சனானின் ' ஓவியத் தாக்குதலும்' (Art Attack) எனக்கு மிகவும் பிடித்தவை. வீட்டில் ப'விக்கப் படாமலிருக்கும் பொருட்களைக் கொண்டு எவ்விதம் ஓவியங்களை உருவாக்குவதென்று அழகாக நீல் செய்து காட்டுவார். மார்டின் க்ராட், கிறிஸ் கிராட் சகோதரகளின் 'சுபூமொவூ' ( Zoboomofoo) , பொம்மை லீமா எல்லாம் என்னைக் கவர்ந்தவை. இவர்களின் 'கிராட் உயிரினங்கள்' காட்சியும் நல்லதொரு காட்சி. மிருகங்களைப் பற்றிய தகவல்களைத் தரும் காட்சிகளிவை.

வ.ந..கிரிதரன் புகலிடச் சிறுகதைகள் (3): தப்பிப் பிழைத்தல்!



[ நண்பர்களே! என் புதிய நண்பர்களுக்காகவும், ஏற்கனவே வாசிக்காத பழைய நண்பர்களுக்காகவும் புகலிட வாழ்வனுபவத்தை விபரிக்கும் எனது சிறுகதைளை அறிமுகப்படுத்தலாமென்று நினைக்கின்றேன். புகலிடம் நாடிப் புலம் பெயரும் ஒருவர் எதிர்கொள்ளும் அனுபவங்கள் பல் வகையின. அவற்றை வெளிப்படுத்தும் கதைகள் பலவற்றை எழுதியுள்ளேன். அவற்றைப் படிப்படியாக அறிமுகப்படுத்துவேன். வாசியுங்கள். உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.] 


அந்தக் கழிவுகள், குப்பைகளைச் சேகரிப்பதற்கான தாங்கி அல்லது பெட்டி நாங்கள் குடியிருந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கருகாக சென்று கொண்டிருந்த வீதியில் மாநகராட்சியினால் அமைக்கப் பட்டிருந்தது. இவ்விதமான குப்பை சேகரிக்கும் பெட்டிகளை மேற்கு நாடுகள் பலவற்றில் ஆங்காங்கே வைத்திருப்பார்கள். மூன்றாம் உலகத்து நாடுகள் பலவற்றில் இவற்றைக் காண்பதே அரிது. இத்தகைய பெட்டிக்குள் குப்பைகளைக் கழிவுப் பொருட்களைப் போடவேண்டுமென்றால் போடுவதற்கு வசதியாக கைகளால் உட்புறமாகத் தள்ளக் கூடியமூடியுடன் கூடியதொரு துவாரம் வைக்கப் பட்டிருக்கும். மனிதர்களால் மட்டும் தான் குப்பைகளைல் இதற்குள் போட முடியும். ஏனெனில் கைகளைப் பாவித்து மூடியை உட்புறமாகத் தள்ளுவதற்குரிய திறமையுள்ள உயிரினத்தால் தான் இது முடியும். ஒருவேளை நன்கு பழக்கப் பட்ட மனிதக் குரங்கான சிம்பான்ஸி அல்லது கொரில்லாக் குரங்குகளால் முடியக் கூடும்.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...