Thursday, February 1, 2024

எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் 'தாய்வீடு'க் கட்டுரையான "'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்" பற்றி...... வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' என்னும் எனது நூல் பற்றிய விமர்சனக் குறிப்புகளை பெப்ருவரி தாய்வீடு  பத்திரிகையில் எழுதியிருக்கின்றார். இது அண்மையில் 'டொராண்டோ'வில் நடந்த எனது மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்படி கட்டுரை நூல் பற்றி அவர் வாசித்த கட்டுரையின் எழுத்து வடிவம்.  அருண்மொழிவர்மனுக்கு எனது நன்றி.  

மேற்படி விமர்சனக் குறிப்பில் அவர் பல விடயங்களைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார். அவை பற்றி விரிவாக விரைவில் என் பார்வையில் கருத்துகளை முன் வைப்பேன். இங்கு இக்கட்டுரைத்தொகுப்பை என் அபிமானக் கவி பாரதிக்குச் சமர்ப்பித்தது பற்றிய அவரது விமர்சனக் குறிப்புக்கான என் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

அருண்மொழிவர்மன் இச்சமர்ப்பணம் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

" பாரதியின் எழுத்துகளை அரசியல் பிரக்ஞை கொண்டு , கோட்பாட்டுப்  பின்னணியில் வைத்தால் குழப்பமும் தெளிவின்மையுமே ஏற்படும் . அப்படியிருக்கின்றபோது பாரதிக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கும் கிரிதரன் , பாரதி குறித்து ‘அவரது சமூக, அரசியல் , கலை, இலக்கியம் சார்ந்த தெளிவுமிகு எழுத்துகள் . அவற்றில் விரவிக்கிடக்கும் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடுகள் என்னை மிகவும் பாதித்தவை. . அவரது முரண்பாடுகளை நான் அறிவுத் தாகெமடுத்து அலையும் சிந்தைனையின் வெளிப்பாடுகளாகவே காண்கின்றேன். என்று தனது சமர்ப்பணத்தில் குறிப்பிடுவதுடன் என்னால் உடன்படமுடியவில்லை ."

'பாரதியின் எழுத்துகளை அரசியல் பிரக்ஞை கொண்டு , கோட்பாட்டுப் பின்னணியில் வைத்தால் குழப்பமும் தெளிவின்மையுமே ஏற்படும. அப்படியிருக்கின்றபோது பாரதிக்குச் சமர்ப்பணம் செய்திருப்பதைத் தன்னால் ஏற்க முடியவில்லை' என்கின்றார்.  பாரதியின் எழுத்துகளைக் கவனத்தில் கொள்ளும்போது அவரது காலகட்டத்தில் வைத்து அவரை எடை போடுவதே சாலச் சிறந்ததாகவிருக்கும். பாரதியின் எழுத்துகள் சமூகப்பிரக்ஞை மிக்கவை. அரசியல் பிரக்ஞை மிக்கவை.  பாரதியார் சமூக, அரசியல் பிரக்ஞை மிக்கவர் என்பதால்தான் அக்டோபர் புரட்சி பற்றிப் பாட  முடிந்திருக்கின்றது. மார்க்சியம் பற்றி மஞ்செஸ்டர் கார்டியனில் வெளியான ருஷ்ய சமுதாயம் பற்றி , அங்கு பெண்களின் நிலை பற்றி   அவர் கவனம் செலுத்தியிருப்பது ஆச்சரியம் தருவது.

எழுத்தாளர் அருண்மொழிவர்மன்


டிசம்பர் 11, 1982 பிறந்த பாரதி செப்டம்பர் 11, 1921 மறைந்து விட்டார். ருஷ்யப் புரட்சி நடந்து நான்கு வருடங்களில் மறைந்து  விட்டார்.  இந்நிலையில் இன்று எமக்குக் கிடைப்பது போல் மார்க்சியம் பற்றிய விரிவான நூல்கள் அக்காலத்தில் பாரதிக்குக் கிடைத்திருக்கும் சாத்தியமில்லை.  இருந்தாலும் அவரது தீவிர வாசிப்பு காரணமாக அவரது கவனம் மார்க்சியம் வலியுறுத்தும் சமுதாய அமைப்பு பற்றியதற்கு முக்கிய காரணம் அவரது சமூக, அரசியற் பிரக்ஞையே.  அவர் தனக்கு அக்காலகட்டத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் ருஷ்ய சமுதாய அமைப்பு பற்றிச் சிந்திக்கின்றார். கருத்து முதல்வாதம் , பொருள்முதல்வாதம் ஆகியவை பற்றிச் சிந்திக்கின்றார். அத்வைதம் பற்றிச் சிந்திக்கின்றார்.

இவ்விதமாகத் தனது சிந்தனையை இவ்விடயங்களில் செலுத்திய பாரதியாரின் கருத்துகளில் காணப்படும் முரண்பாடுகளை நான்  அவரது அறிவித்தாகமெடுத்தலையும் சிந்தனையின் வெளிப்பாடுகளாகவே காண்கின்றேன். அவர் பொதுவுடமையை ஆதரிக்கின்றார் என்பதை அவரது எழுத்துகள் வெளிப்படுத்துகின்றன. பெண்களின் சம உரிமையினை ஆதரிக்கின்றார்.  இதனால்தான் ஐரோப்பிய சமுதாய அமைப்பில் பெண்களின் நிலை பற்றியெல்லாம் அவரால் கட்டுரைகளை எழுத முடிந்திருக்கின்றது.  இதனால்தான்  'புதிய ருஷ்யா' என்னும் கவிதையில்  "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு/ மேன்மையுறக் குடிமை நீதி/கடியொன்றெழுந்தது பார் குடியரசென்று/உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது /அடிமையில்லை அறிக என்றார்/இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்/ கிருதயுகம் எழுக மாதோ" என்று பாட  முடிகின்றது.

என்னை அவரது இந்த அறிவுத் தேடலே மிகவும் கவர்ந்தது. அத்துடன் அவர் சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் இருந்திருக்கின்றார். இந்தியரின் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் பங்களித்திருக்கின்றார்.  தான் வாழ்ந்த காலகட்டத்தை மீறிச் சிந்தித்தவர் பாரதியார். செயற்பட்டவர் பாரதியார்.  அந்த  அவரது ஆளுமைதான் என்னை மிகவும் கவர்ந்தது. அதற்காகவே என் கட்டுரைத் தொகுப்பினை அவருக்குச் சமர்ப்பணம் செய்தேன்.  மானுடர்கள் யாவருமே குறை,நிறைகளுடன் உள்ளவர்கள்தாம். கார்ல் மார்க்சும் இதற்கு விதிவிலக்கானவர் அல்லர். பாரதியாரின் குறை நிறைகளுடன் அவரது சமுதாயப் பிரக்ஞை மிக்க எழுத்துகள் காரணமாக, அவரது சமூக,அரசியற் செயற்பாடுகள் காரணமாக அவரை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

இவ்விதமாகப்  பாரதியின் அறிவுத் தாகமெடுத்து அலையும் மனதில் ஏற்பட்ட தர்க்கப் போராட்டத்தின் விளைவுகளே அவனது மேற்கூறப்பட்ட முரண்பாடுகளே தவிர வேறல்ல. இத்தகைய முரண்பாடுகள் அவனது மாபெரும் மேதைமையின் வளர்ச்சிப் படிக்கட்டுக்களே.

"வெ..சா, மார்க்ஸ் மீ தும் எங்கல்ஸ் மீ தும் அவர்களது கோட்பாடுகள் மீ தும் நன்கு மதிப்பு வைத்திருப்பவர் , ஆனால் அவை உருவான காலகட்டத்திற்குரியவை. , இன்று நிலவும் சமுதாயப் பொருளியிற் சூழலுக்கேற்ப அவற்றிலும் மாறுதல்கள் செய்ய்யப்படேவண்டுமென்பைதயும் அவர் வலியுறுத்துபவர் ’ என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது .  வெ.சா கொண்டாடிய, முன்மொழிந்த அழகியலும் கலை மரபுகளும் கருத்தியல் தளத்திலும் , உள்ளடக்கத்திலும் சமூகப் பிரக்ஞை இல்லாதவை. , சமூக நீ தி குறித்த அக்கைறக்கு எதிரானவை, ஆர் .எஸ் .எஸ் கருத்தியைல முன்னெடுக்கும் அரவிந்தன் நீலகண்டனைக் கொண்டாடவும்  முடிந்தது . வெங்கட் சாமிநாதனிடம் ஆழமாகக் குடிகொண்டிருந்த திராவிடம் / மார்க்சிசம் மீதான வெறுப்பு அல்லது ஒவ்வாமை அரசியலின் பின்னணியே அவரது மதிப்பீடுகளிலும் வெகுவாகத் தாக்கம் செலுத்தியது."

இவ்விதமும் மேற்படி கட்டுரையில் அருண்மொழிவர்மன் கூறியிருக்கின்றார். மேற்படி எனது கூற்றுக்கு மறுப்புத்தெரிவிக்கையில் அருண்மொழிவர்மன் வெங்கட் சாமிநாதனின் எழுத்துகளை ஆதாரங்களாக முன்வைத்து தர்க்கம செய்திருக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் பொதுவாகக் கூறிச் செல்கின்றார். இப்பொழுது நான் ஏன் இவ்விதமான வெங்கட் சாமிநாதன் பற்றிய முடிவுக்கு வந்தேன் என்பதை வெங்கட் சாமிநாதனின் எழுத்துகளை ஆதாரங்களாக முன் வைத்து எடுத்துக்காட்டலாமென்று நினைக்கின்றேன். மேற்படி எனது கட்டுரைத் தொகுப்பிலுள்ள அருண்மொழிவர்மன் குறிப்பிடும் இக்கட்டுரையிலேயே விரிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றேன்.

'வெ..சா, மார்க்ஸ் மீ தும் எங்கல்ஸ் மீதும் அவர்களது கோட்பாடுகள் மீ தும் நன்கு மதிப்பு வைத்திருப்பவர் , ஆனால் அவை உருவான காலகட்டத்திற்குரியைவ , இன்று நிலவும் சமுதாயப் பொருளியிற் சூழலுக்கேற்ப அவற்றிலும் மாறுதல்கள் செய்ய்யப்படேவண்டுமென்பைதயும் அவர் வலியுறுத்துபவர் என்னும் எனது கூற்றுக்கு ஆதாரங்களாக நான் முன்வைத்திருக்கும் வெ.சா.வின் கூற்றுகள் வருமாறு:


1. 'மார்க்சின் முடிவுகள், மனித சிந்தனை வளத்திற்கு அளித்த பங்கு உண்மையிலேயே அதிகம்தான்' என்று வெ.சா அவரது  'விவாதங்கள், சர்ச்சைகள்' தொகுப்பு நூலில் பக்கம் 88இல் குறிப்பிட்டிருக்கின்றார்.
 

2. 'அவர்களது மேதைமையையோ, புரட்சிகரமான சிந்தனைகளையோ குறை கூறுவதாகாது. அவர்கள் காலத்தில் அவர்களின் எதிராளிகளின் கருத்து நிலையை அறிந்து அதற்கு எதிராக வாதாடியவர்கள். அவர்கள் காலம் மாறி விட்டது. கருத்து நிலைகள் மாறி விட்டன. மார்க்ஸ்-எங்கெல்ஸின் வாதங்கள் இன்று நமக்கு உதவுவதில்லை...  லெனினோ, ஸ்டாலினோ மார்க்ஸ்- எங்கெல்ஸின் கருத்துகளை அவர்கள் அளித்த ரூபத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைய சோவியத் ரஷ்யாவும் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. மா-ஸே-துங்கும் ஏற்றுக்கொள்ளவில்லை' ( விவாதங்கள், சர்ச்சைகள்'; பக்கம் 80)

3. '19-11ம் நூற்றாண்டில் முதலாளித்துவ வர்க்கம் இருந்த திசையைச் சரியாகக் கணித்துத்தான் மார்க்ஸும் எங்கெல்ஸும் தங்கள் சித்தாந்த பீரங்கிகளைக் குறிபார்த்துக் கொடுத்துள்ளார்கள். முதலாளித்துவம் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டது. அதற்கேற்ப உங்கள் பீரங்கிகளின் குறியையும் மாற்றிக்கொள்ள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மார்க்ஸும் எங்கெல்ஸும் குறிவைத்துக் கொடுத்த இடத்தையே சுட்டுக்கொண்டிருப்பதால்தான் உலகம் முழுதும், எங்கிலும் இருக்கும் முதலாளித்துவத்தை நீங்கள் எதுவும் செய்ய முடியவில்லை' (விவாதங்கள் சர்ச்சைகள்; பக்கம் 80)

மேலே நான் சுட்டிக்காட்டியுள்ள மார்க்சியம் பற்றிய வெங்கட் சாமிநாதனின் கூற்றுகள் 'வெ..சா, மார்க்ஸ் மீ தும் எங்கல்ஸ் மீ தும் அவர்களது கோட்பாடுகள் மீ தும் நன்கு மதிப்பு வைத்திருப்பவர் , ஆனால் அவை உருவான காலகட்டத்திற்குரியைவ , இன்று நிலவும் சமுதாயப் பொருளியிற் சூழலுக்கேற்ப அவற்றிலும் மாறுதல்கள் செய்யப்படேவண்டுமென்பைதயும் அவர் வலியுறுத்துபவர்' என நான் என் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள என் கருத்துகளுக்கு  ஆதாரங்கள்.  இவற்றின் அடிப்படையில்தான் நான் வெ.சா.வின் மார்க்சியம் பற்றிய முடிவுகளுக்கு வந்துள்ளேன்.  அருண்மொழிவர்மன் தன் கருத்துகளுக்கு ஆதாரங்களாக இவற்றை மறுக்கும் வெ.சா.வின் கூற்றுகளை முன் வைப்பது பொருத்தமாகவிருக்கும்.

அடுத்து 'வெ.சா கொண்டாடிய, முன்மொழிந்த அழகியலும் கலை மரபுகளும் கருத்தியல் தளத்திலும் , உள்ளடக்கத்திலும் சமூகப் பிரக்ஞை இல்லாதவை. என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இதனையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.  இவ்விதமான கருத்துடையவராக அவர் இருந்திருந்தால் மார்க்சியரான ஓவியர் தாமோதரனின் படைப்புகளைக் கலைத்துவம் மிக்க படைப்புகளாகக் கண்டிருக்க முடியாது.  தாமோதரனுடன் மார்க்சியம் பற்றி விவாதித்தாகத் தனது கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கின்றார் வெ.சா.  கம்யூனிஸ்ட் நாடாகவிருந்த செக்கோஸ்லோவேகியாவிலிருந்து உருவான ஓவியங்களைக் கலைத்துவம் மிக்க படைப்புகளாகக் கண்டிருக்க முடியாது.  

'இன்னமும் குறிப்பாக, மிலாஸ் போர்மன் என்ற பெயரைக் கவனித்தீர்களானால் இன்னுமொன்று விளங்கும். மிலாஸ் போர்மன், கம்யூனிஸ்டுகள் அரசு செலுத்தும் செக்கோஸ்லோவேகியாவிலிருந்து வந்தவர். அங்கு இருந்தவரின் அவரது படைப்புகள் , கலைப்படைப்புகளாக இருந்தன.' (விவாதங்கள் சர்ச்சைகள்; பக்கம் 73)

எனது விஷ்னுபுரம் நாவல் பற்றிய கருத்துகளைப் பற்றிய தனது கருத்தில் அருண்மொழிவர்மன் பின்வருமாறு கூறுகின்றார்:

"இதுபோல விஷ்ணுபுரம் பற்றி எழுதும்ேபாது ‘ஜெயமோகனின்  விஷ்ணுபுரம் , இருப்பு பற்றிய ஞானத்தேடல் தானென்று  அவர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளபோது , அந்த ஞானத்தேடலுடன் ஒப்பிடும்போது வெகு சாதாரண விடயங்களைப் பெரிசு ‘இல்லை  இந்த அற்ப விடயங்கைளத்தான் இந்நாவல் கூறுகின்றது ’ எனச் சிலர் வலிந்து பொருள் கூற முனைவதை என்னெவன்பது . அது மூன்றாண்டுகளாக அலைந்து திரிந்த ஜெயமாகனின் தேடலிைனக் கொச்சைப்படுத்துவதாகும் ’ என்பதைப் படிக்கின்றேபாது அதிர்ச்சியே ஏற்படுகின்றது. முதலில் இப்படியான வாதம் வாசகரின் சுதந்திரத்துக்கும் வாசிப்புக்கும் தடையாக இருக்கின்றது . அதற்கு மேலாக, ஜெயேமாகனின் மூன்றாண்டு உழைப்பு , ஞானத்தேடல் என்பவற்றை ‘சலுகைகளாக’ அல்லது கேடயங்களாகப் பயன்படுத்தி ஜெயேமாகனின் எழுத்துகள் / விஷ்ணுபுரம் எப்படி இந்துத்துவ எழுத்துகளாக சமூகநீதிக்கு   எதிரானைவயாக இருக்கின்றன என்கிற விமர்சனங்கைள /  குரல்களை நிராகரிக்கின்றன."

முதலில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் எப்படி இந்த்துவ எழுத்துகளாக , சமூக நீதிக்கு எதிரானவையாக இருக்கின்றன  என்கிற விமர்சனங்களை, குரல்களை நிராகரிக்கின்றன என்று கூறுகையில் அந்த விமர்சனங்களை, குரல்களை அருண்மொழிவர்மன் இங்கு பட்டியலிட்டிருக்க வேண்டும். அவர் விஷ்ணுபுரம் நாவலில் கண்ட கருத்துகளை முதலில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதன் பின்னர் அவற்றுக்கு வலுச்சேர்ப்பதற்காக ஏனையவர்களின் விமர்சனக் கருத்துகளைத் துணைக்கு அழைத்திருக்க வேண்டும். அவற்றைச் செய்யாமல் பொதுவாக இவ்விதம் கூறுவது ஏற்கும்படியாக இல்லை.

ஃபியதோர் தத்யயேவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' மகத்தான உலக நாவல்களில் முதல் வரிசையில் இருக்கும் நாவல்களில் ஒன்று. டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு' நாவலும் , என்னைப்பொறுத்தவரையில் , இத்தகைய நாவல்களில் ஒன்றே. இவ்விரண்டு நாவல்களுமே பல இடங்களில் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. செய்துவிட்ட குற்றச் செயல்களுக்காக  மனம் வருந்தும் கதாநாயகர்களை வைத்துப் பின்னப்பட்ட நாவல்களிவை. இவற்றின் முடிவுகளும் ஒரே மாதிரியானவை. மனிதரின் சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடியது மதமே என்று போதிக்கும் முடிவுகளைக் கொண்ட நாவல்கள் இவை. ஆனால் அம்முடிவுகளைக் கொண்டு இவர்களை மதவாதிகளாக மட்டம் தட்டி, பிற்போக்குவாதிகளாக்கி, மேற்படி மகத்தான நாவல்களை யாரும் ஒதுக்கி விடுவதில்லை.

நாவல்கள் எவ்விதம் உயிர்த்துடிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன, அவை வெளிப்படுத்தும் அக்காலகட்ட ருஷ்ய சமுதாய அமைப்பு, அதன் சமூக, அரசியல் மறும் பொருளாதார நிலை, அவை  மானிடர்மீது ஏற்படுத்தும் பல்வகையான தாக்கங்கள், உளவியல்ரீதியிலான தாக்கங்கள் உட்பட,  நடை, உரையாடல்கள், கதைப்பின்னல், இயற்கை வர்ணனை எனப் பல்வேறு விடயங்களைக் கவனத்திலெடுக்கையில் மேற்படி நாவல்களின் முடிவுகள் வற்புறுத்தும் மதத்தீர்வை யாரும் பொருட்படுத்துவதில்லை.

இதுபோல்தான் பாரதியாரின் எழுத்துகளும், சக்தியை, கணபதியை என்று  அவர் பாடிய பக்திப்பாடல்களை வைத்து அவர் எழுத்துகளை மதிப்பிடுவதில்லை. தேசிய , வர்க்க விடுதலை, பெண் உரிமை, சமூகத்தில் நிலவிய மூட நம்பிக்கைகளுக்கெதிராக ஒலித்த அவரது குரல் , இருப்பு  பற்றிய தேடல், பாவித்த மொழியழகு எனப் பல்வேறு விடயங்களைக் கவனத்திலெடுத்தே அவரை அணுகுகின்றோம். இவ்விதமே எழுத்தாளர் ஜெயமோகனையும் நான் அணுகுகின்றேன். அவர் எழுத்துகளில் ஒலிக்கும் ஓரம்சத்தை மட்டும் வைத்து நான் அவரை அணுகுவதில்லை.

மேற்படி விஷ்ணுபுரம் நாவல் பற்றிப் பலருக்குப் பல்வேறு கருத்துகள் இருக்கலாம். என் கருத்துகளை நான் எழுதினேன். என்னைப்பொறுத்தவரையில் அந்நாவல் வெளிப்படுத்தும் தத்துவங்கள் பற்றிய தர்க்கங்கள் முக்கியமானவை.  அத்தர்க்கங்கள் அவரது ஞானத்தேடலை வெளிப்படுத்துபவை.  அருண்மொழிவர்மன் ஏன் விஷ்ணுபுரம் நாவல் இந்துத்துவ எழுத்தாக,  சமூகநீதிக்கு   எதிரானதாக இருக்கின்றது என்பது பற்றிய அவரது கருத்துகளை , அவர் குறிப்பிடும் ஏனைய விமர்சனக் குரல்களுடன் அறியத்தந்தால் அது பற்றி மேலும் தர்க்கிப்பதற்கு உதவியாகவிருக்கும்.

அருண்மொழிவர்மனின் எதிர்வினையின் அடிப்படையில் இத்தர்க்கம் தொடரும்.

பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய எனது விஷ்ணுபுரம் நாவல் பற்றிய கட்டுரையை வாசிக்க - https://geotamil.com/index.php/2021-02-14-02-16-26/65-2011-03-20-16-51-13
 

 

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்