Tuesday, February 27, 2024

தந்தை பெரியார் பற்றி... - தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா -


- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவரது சமூகப்பின்னணியைக் காரணமாக வைத்து விமர்சிப்பார்கள் அவரது அரசியல் எதிரிகள். ஆனால் அவரது இக்கட்டுரையைப் படித்தபோது உண்மையிலேயே வியந்துதான் போனேன். எவ்வளவு தெளிவாகப் பெரியாரின் சமூக,  சீர்திருத்தக் கருத்துகளை அவர் அறிந்து வைத்திருக்கின்றார். பெரியார் மீது எவ்வளவுதூரம் மதிப்பு வைத்திருக்கின்றார். அவரை அவரது சமூகப்பின்னணி பற்றி விமர்சித்த அரசியல் எதிரிகளுக்குக் கூட இவ்வளவு தெளிவு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. தனது அரசியல் கருத்துகளில் தெளிவாக இருந்ததனால்தான் அவரால் இறுதிவரை மாநில  உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்க முடிந்திருக்கின்றது. Kollywood Entertainment முகநூலில் பகிர்ந்திருந்த ஜெயலலிதாவின் 'தாய்' சஞ்சிகையில் எழுதிய கட்டுரை. -


ஜெயலலிதாவின் கட்டுரை கீழே;

1973-ல், நான் கதாநாயகியாக நடித்த ''சூரியகாந்தி" தமிழ்த் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த வெற்றி விழாவுக்குத் தலைமை வகித்து, கலைஞர்களுக்குப் பரிசுகளை வழங்கியவர் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களை நான் நேரில் சந்தித்தது அதுவே முதன் முறை, திரைப்படங்கள் என்றாலே அவருக்கு அவ்வளவாக விருப்பம் இருக்காது. திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட விழாக்களிலும் சாதாரணமாக அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். எப்படியோ, அன்றைக்கு அவ்விழாவுக்குத் தலைமை தாங்க தந்தை பெரியார் அவர்கள் சம்மதித்ததே என்னுடைய பேரதிர்ஷ்டம் என்று கருதுகிறேன். அதனால்தான் அவரைச் சந்திக்கவும்; அவர் கரங்களால் பரிசு பெற்றுக் கொள்ளவும், அவருடைய ஆசியைப் பெறவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தயாரிப்பாளர் - இயக்குநர் திரு.முக்தா வி.சீனிவாசன் அவர்களுக்கு அதற்காக இன்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.

நன்றாக ஞாபகம் இருக்கிறது அன்றைக்கு விழா தொடக்கத்தில், நான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடவேண்டும் என்று திரு. முக்தா சீனிவாசன் கேட்டுக் கொண்டார். அழைப்புத்தாள்களிலும் நிகழ்ச்சி நிரலில் அவ்வாறே அச்சிடப்பட்டது. அதற்காக முன்கூட்டியே வீட்டில் பல முறை நானே பாடிப்பார்த்துக் கொண்டேன்.

வீட்டில் தனியாக ஒத்திகை செய்தபோது நன்றாகவே பாடினேன். ஆனால் மேடைக்குச் சென்று, அங்கே தந்தை பெரியார் அவர்களைக் கண்டதும் என்னையும் மீறி ஒரு நடுக்கம் தோன்றி, அந்த நடுக்கம் பாடும்போதும் லேசாக என் குரலில் வெளிப்பட்டது. அது எனக்கே தெரிந்தது, என்றாலும் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பிறகு திரு. முத்துராமன் கேட்டார் - 'நன்றாகத்தான் பாடுவீர்களே? இன்றைக்கு ஏன் குரலில் அப்படியொரு நடுக்கம்?" "தனியாக மேடையில் நின்று பாட வேண்டும் என்றதும் கொஞ்சம் பயமாக இருந்தது. துணைக்கு யாராவது பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றேன்.

"முன் வரிசையில் திரு.டி.எம். சவுந்தரராஜன் உட்கார்ந்திருந்தாரே? அவரையே கேட்டிருக்கலாமே?" என்றார் திரு.முத்துராமன்.

"இல்லை... அழைப்புத் தாளில் அவரும் பாடுவார் என்று அச்சிடப்படவில்லை. முன் அறிவிப்பின்றி திடீரென்று மேடைக்கு அழைத்தால் தவறாக கருதுவாரோ என்று எண்ணி விட்டு விட்டேன்" என்றேன். உண்மையில் என் நடுக்கத்துக்குக் காரணம் அதுவல்ல. அதற்கு முன்பு மேடைகளில் தனியாகப் பாடியவள்தான். அன்றைக்கு முதன்முறையாக தந்தை பெரியார் அவர்களின் முன்னிலையில் பாட வேண்டும் என்றதும் அப்படியாகி விட்டது!

ஆனால் பிறகு பரிசைப் பெற்றுக் கொள்ள அருகில் சென்றதும், தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு அன்பாக புன்னகைத்து, என் தலைமீது கைவைத்து ஆசி கூறினார்கள். அப்பொழுது 'இவ்வளவு அன்பாகப் பழகும் பெரியாரைப் பார்த்து அனாவசியமாக பயந்தேனே!" என்று நினைத்தேன்.

பெரியாரைப் பற்றி நினைக்கையில், அவர் பரப்பிய கொள்கைகளைப் பற்றியும், அவர் கொண்டு வந்த சமுதாய சீர்திருத்தங்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினேன்.

* பெண்கள் விடுதலை
* விதவை மறுமணம்
* பெண்களுக்கு சொத்துரிமை
* பெண்களுக்கு சமத்துவம்.
- இந்த உயரிய லட்சியங்களைப் பரப்பினார் தந்தை பெரியார் அவர்கள்.

"பெண்களுக்கு சமத்துவம்" என்ற ஓர் அடிப்படை லட்சியத்தை எடுத்துக் கொள்வோம். இது பண்டைக் காலத்தில் தமிழர் சமுதாயத்தில் நிலவியது தான்.

"சமத்துவம்" என்றாலே மற்ற அனைத்தும் அதற்குள் அடங்கி இருப்பதாகத்தான் பொருள் கொள்ளவேண்டும்.

ஆண்களோடு பெண்களுக்கும் சமத்துவம் என்னும்போதே - பெண்கள் விடுதலை பெற்றுவிட்டார்கள் என்று தான் அர்த்தம்.


ஓர் ஆண்மகனின் மனைவி இறந்து போனால் அவன் மறுமணம் புரிய எந்தச் சமுதாயத்திலும் தடை இல்லை, எனவே பண்டைக் காலத்தில் தமிழ்ப் பெண்கள் சமத்துவம் பெற்றிருந்தார்கள் என்னும்போதே - விதவை மறுமணமும் அதில் அடங்கியதாகவே பொருள் கொள்ளலாம். பெண்களுக்கு சமத்துவம் அளித்த பண்டைக் காலத்து தமிழர் சமுதாயத்தில் பெண்களுக்கு சொத்து உரிமையும் நிச்சயமாக இருந்தது என்றே கூறலாம்.

திராவிடர் இயக்கத்தின் மறு பெயரே ''சுயமரியாதை இயக்கம்" என்பதாகும்.

"சுய மரியாதை" என்றாலே அதன் மையப் பொருள்; அடிப்படை விளக்கம் - ஒருவர் தன் விருப்பப்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். அதுவே உண்மையான 'விடுதலை'.

மனித வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம், தகுந்த வாழ்க்கைத் துணையை தேடிக் கொள்வதே ஆகும். ''ஆயிரங்காலத்துப் பயிர் திருமணம்" என்பது மிகவும் உண்மை. காலம் பூராவும் ஒன்றாக வாழப் போவது கணவனும் - மனைவியும் தானே தவிர, அவர்களுடைய பெற்றோர்களோ மற்ற சுற்றமோ நட்போ அல்ல.

கணவன் - மனைவி உறவு சரியாக அமையவில்லை என்றால், அந்த இருவரின் வாழ்வும் வீணானதாகவே கருத வேண்டும். எத்தனையோ பேர்களது வாழ்வில் மற்ற எல்லாம் இருந்தும், இந்த உறவு திருப்திகரமாக அமையாததால், எதுவுமே இல்லாதவர்களாக, எல்லாம் இழந்தவர்களாக இருப்பது போன்ற உணர்வை அவர்களே பெறுகிறார்கள்.

அதேசமயத்தில் இன்னும் எத்தனையோ பேர்களது வாழ்வில், இந்த உறவு சரியாக அமைந்துவிட்டதால் லௌகீக ரீதியாக வேறு எதுவுமில்லை என்றாலும் எல்லாம் பெற்று விட்டவர்களாகத் தங்களையே கருதிக் கொள்கிறார்கள். இன்னும் பலரது வாழ்க்கையில் கணவன் - மனைவி உறவு அர்த்தமுள்ளதாக, ஸ்திரமானதாக, பலமானதாக, முழுமை பெற்றதாக அமைந்து விடுவதால், அதுவே அவர்கள் உலகில் பல வியக்கத்தக்க சாதனைகள் புரிய அஸ்திவாரமாக, தூண்டுகோலாக விளங்கியிருக்கிறது.


ஓர் ஆணுக்குத் தன் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணைவியைத் தேடிக் கொள்ளவும்; ஒரு பெண்ணுக்கு தன் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணைவரைத் தேடிக் கொள்ளவும் உரிமை அவசியம் இருந்தாக வேண்டும்.

அந்தச் சுதந்திரத்தைப் பறி கொடுத்தோமானால் - ''சுயமரியாதை" என்று பேசிக் கொள்வதில் அர்த்தம் இல்லை. நமக்குப் பிடித்த, நமக்கு உகந்த வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை நமக்கு இல்லை என்றால், அந்த அடிப்படை உரிமையை விட்டுக் கொடுத்தோமானால், சுய மரியாதையை இழந்து விட்டதாகத்தான் கருதவேண்டும்.

சங்க காலத்துத் தமிழர் சமுதாயம் இதை நன்கு உணர்ந்திருந்தது. இந்த அடிப்படை உரிமை சங்க காலத்தில் தமிழர்களுக்கு இருந்தது.

அகம், புறம் என்ற தமிழர் வாழ்வில் அகம் என்பது களவு, கற்பு என்று இரண்டு வகைப்படும். ''களவு" என்பது தலைவர் கல்வியைக் காதலிப்பதே ஆகும். 'கற்பு' என்பது தலைவன் தலைவியை மணந்து கொண்டு நெறி பிறழாது நிற்பது.

சங்க காலத்தில் பல்வேறு திருமண முறைகள் இருந்தன. பொதுவாக, எவரும் அறியாமல் தலைவியைக் காதலிக்கின்ற தலைமகன் ஊரார் அறியாமல், உற்றவருக்குத் தெரியாமல் தலைவியின் விருப்பத்தோடு, அவள் சம்மதத்தோடு அவளை அழைத்துச் சென்று விடுவான். இந்த வழக்கம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய எல்லா நிலங்களிலும் பொதுவான வழக்கமாக இருந்தது.

தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் காதலிப்பது ஊரார் தெரிந்து கொண்டு அது பற்றிப் பேசுகிற போது அதற்கு ''அலர் தூற்றல்" என்று பெயர்.

தலைவன், தலைவியை அழைத்துச் செல்வது ''உடன் போக்கு" என்று பெயர். இப்படியான தலைவனும், தலைவியும் தாமே விரும்பி ஒருவரை ஒருவர் மணந்து கொள்ளுவதற்கு இலக்கியம் சம்மதம் இருந்திருக்கிறது.

இதிலேயே ஆணும், பெண்ணும் சமம் என்பதும் தெளிவாகிறது. அப்பொழுது, ''வரதட்சணை' என்ற பேச்சுக்கே இடம் இருக்கவில்லை. இவ்வகை திருமணங்களுக்கு சாதியோ, சமயமோ குறுக்காக நின்றதில்லை.
-ஜெ.ஜெயலலிதா அவர்கள்  - தாய் இதழில் எழுதிய தொடரின் ஒரு பகுதி


No comments:

எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதும் சார்பானது!

எழுத்தாளர் சுவிஸ் பா.ரவி தன் முகநூற் பதிவொன்றில் 'எழுத்தாளரைக் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுவதை எப்படி அணுகுவது என குழப்பமாக இருக்கிறது...

பிரபலமான பதிவுகள்