Sunday, February 25, 2024

தொடர் நாவல்: மனக்கண் (1) - முதல் அத்தியாயம் - பணக்கார வீட்டுப் பிள்ளை! - அ.ந.கந்தசாமி -


- ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூலை 29, 1967 வரை வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது.  அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இந்நாவல் அமேசன் கிண்டில் பதிப்பில் மின்னூலாகவும் வெளியாகியுள்ளது. இன்னுமொரு நாவலான 'கழனி வெள்ளம்'.  எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். -


முதல் அத்தியாயம் - பணக்கார வீட்டுப் பிள்ளை

ஒருவன் ஏழை வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனால் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. ஆனால் பணக்கார வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனாலும் பிரச்சனைகளில்லாமல் இல்லை. ஸ்ரீதரைப் பல காலமாக அலைத்து வந்தப் பிரச்சினை அவன் மிகப் பெரியதொரு பணக்கார வீட்டில் பிள்ளையாய் பிறந்திருந்தான் என்பதுதான். பணக்கார வீட்டுப் பிள்ளைக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்பது அவனுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவன் அவற்றைத் தன் சின்ன வயதிலிருந்தே அனுபவித்து வந்திருக்கிறான். உதாரணமாக அவர்களது பெரிய மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பொக்கு வாய் கிழவி தட்டிக் கடை நடத்தி வந்தாள். அந்தக் கிழவியைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவனது இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த ஒளவையாரின் படம் நினைவுக்கு வராதிருப்பதில்லை. "ஒரு வேளை இந்தக் கிழவியும் ஒளவையாரைப் போலக் கவி பாட வல்லவளோ?" என்று கூட ஓரொரு சமயம் அவன் எண்ணியதுண்டு. ஆனால் அதை எப்படிக் கண்டறிவது? அந்தக் கடைக்கு போவதற்குத்தான் வீட்டிலுள்ள யாருமே அவனை அனுமதிப்பதில்லையே! ஆகவே அந்த விஷயம் என்றைக்குமே தீர்க்கப்படாத மர்மமாகவே அவன் உள்ளத்தில் புதையுண்டுவிட்டது.

 
இன்னும் கிழவியின் தட்டிக் கடையில் இன்னொரு விசேஷமும் இருந்தது. அது வேறொன்றுமல்ல, அங்கிருந்த மிக அகலமான வாயுள்ள ஒரு போத்தலாகும். அப்போத்தலில் சில சமயங்களில் ஏதோ ஒரு வகைப் பணிகாரத்தை அவள் நிரப்பி வைத்திருப்பாள். ஊரிலுள்ள ஏழைச் சிறுவர் சிறுமியர் அவற்றை விலைக்கு வாங்கி மகிழ்ச்சியுடன் உண்டுக்கொண்டு, கிராமத்தின் புழுதி படர்ந்த வீதியில் ஆடிப்பாடிச்சண்டையிட்டுக்கொண்டு செல்வார்கள். ஸ்ரீதர் அவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்பான். அவனுக்குப் பணிகாரம் சாப்பிட்டுக் கொண்டு போவதற்குப் பேராசை. ஆனால் யார் அவனை அவ்வாறு செய்ய அனுமதிப்பார்கள்.

ஒரு நாள் அவனது அப்பா சிவநேசரிடம் ஸ்ரீதர், "அப்பா அந்த போத்தலில் இருக்கும் பணிகாரத்தை எனக்கு வாங்கித் தா அப்பா" என்று கேட்டான். அதற்குச் சிவநேசர் அளித்த கண்டிப்பான பதில் என்ன தெரியுமா? "சீச்சீ, அதை அதைச் சாப்பிட்டால் நிச்சயம் நோய்கள் உண்டாகும்." இவ்வாறு கூறிய தந்தை ஸ்ரீதரை விரைவாக வீட்டுக்கு அழைத்துச் சென்று மனைவி பாக்கியத்திடம் "ஸ்ரீதருக்கு நான் நேற்று வாங்கி வந்த சொக்கிலேட்டைச் சாப்பிடக் கொடு" என்றார். பாக்கியமும் அவ்வாறே செய்தாள். ஸ்ரீதரும் சொக்கிலேட்டைச் சாப்பிட்டு முடித்த பிறகு பணிகாரத்தின் நினைவு தான் அவன் மனதில் மேலோங்கியது.

சில சமயங்களில் சோனாவாரியாக மழை கொட்டிக் கொண்டிருக்கும்போது ஸ்ரீதர் வீதியில் தாய் தந்தையருடன் காரில் வந்திருக்கிறான். அப்பொழுது கிராமத்துச் சிறுவர்கள் அம்மணமாகக் கொட்டும் மழையில் கும்மாளமடிப்பதையும், வெள்ளத்தில் துள்ளித் துள்ளி விளையாடுவதையும் பார்த்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் அவனுக்கும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டுமென்று ஆசை தோன்றும். ஆனால் இவை எல்லாமே அவன் பணக்கார வீட்டுப் பிள்ளை என்பதால் நிறைவேறாத நிராசைகளாகவே முடிந்துவிட்டன.

இவை பால்ய ஸ்ரீதரின் அனுபவங்கள். இன்றோ ஸ்ரீதர் பெரியவனாகிவிட்டான். வயதும் இருபத்துமூன்றாகிவிட்டது. கொழும்பில் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த அவன் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக வளர்ந்திருந்தான். செக்கச் செவேலென்ற சருமம்; கன்னங்கரேலேன்ற தலைமயிர்; கருவண்டுகள் போன்ற விழிகள். பொதுவாக எவரையும் கவர்ந்திழுக்கும் கம்பீரம் நிறைந்த தோற்றம். இன்னும், படிப்பிலும் அவன் கெட்டிதான். அத்துடன் கலைகளில் ஈடுபாடுள்ளவன். சித்திரம், சிற்பம், நாடகம் ஆகிய மூன்று துறைகளிலும் தான் தனது ஓய்வு நேரத்தை அதிகமாக செலவிட்டு வந்தான் அவன்.

ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளை என்ற பிரச்சினை இன்றும் அவன் வாழ்க்கையைப் பாதிக்கத்தான் செய்த்தது. பணத்தை அடிப்படையாக் கொண்டு உயர்வு தாழ்வு கற்பிக்கப்படும் சமுதாயத்தில் இப்பிரச்சினை என்றுமே தீராது. உண்மையில் ஸ்ரீதர் அன்றிரவு வெகு நேரம் வரை சுரேஷிடம் பேசிக் கொண்டிருந்தது இந்தப் பிரச்சினையைப் பற்றித் தான்.

ஜன்னலூடாக வானத்து மதியைப் பார்த்த வண்ணம் "சுரேஷ்! அப்பா பெயரைச் சொல்லியதும் என்னுடன் நெருங்கிப் பழக எல்லோரும் அஞ்சுகிறார்களே ஏன்?" என்று கேட்டான் ஸ்ரீதர்.

வஞ்சனையற்ற ஸ்ரீதர் தன் பிரச்சினைகளைப் பற்றி எப்பொழுதும் ஒளிவு மறைவின்றிச் சுரேஷிடம் கேள்விகள் கேட்பது வழக்கம். சுரேஷ் ஸ்ரீதரை விட இரண்டு வயது மூத்தவன். வைத்தியக் கல்லூரியில் டாக்டருக்குப் படித்துக் கொண்டிருந்தான். அனுபவத்திலும் அறிவிலும் ஸ்ரீதரை விட மேம்பட்டவன். இன்றும் ஸ்ரீதரைப் போலல்லாமல் உலகம் என்ன என்பது அவனுக்கு ஓரளவு தெரியும். அதற்குக் காரணம் அவன் ஓர் ஏழை மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையொடு மல்லடித்துப் பழகியிருந்ததுதான். அவன் தந்தை கிராமத்தில் ஒரு நெல் வியாபாரியாயிருந்து இறந்து போய் விட்டார். தாய் மிகுந்த கஷ்டப் பட்டு கணவன் விட்டுப் போன பதினைந்து பரப்பு நெற்காணியையும், ஐந்து பரப்புத் தோட்டக் காணியையும் மூலத்தனமாக வைத்து எப்படியோ குடும்பச் செலவைச் சமாளித்துக் கொண்டிருந்தாள். பெயருக்கு அவளுக்கு ஓர் அண்ணனும் ஒரு தம்பியும் இருந்தபோதிலும், அவர்களால் எவ்வித உதவியும் இருக்கவில்லை. ஆனால் சுரேஷின் தந்தைக்கு ஒரு தங்கை இருந்தாள். அந்த மாமியால் தான் சுரேஷுக்கும் ஓரளவு உதவி இருந்தது. சுரேஷின் மாமா பிரபல புகையிலை வியாபாரி. அவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்தார்கள். மகளுக்கு எப்படியும் சுரேஷை மணம் செய்துவிட வேண்டுமென்பது அவரது திட்டம். அதனால் தான் அவர் சுரேஷின் படிப்புக்கு வேண்டிய பண உதவிகளை அவ்வப்பொழுது மறுக்காது செய்து வந்தார். வைத்தியப் படிப்பில் ஈடுபட்டிருந்த சுரேஷ் பரீட்சையை எடுத்திருந்தான். அநேகமாக இன்னும் சில மாதங்களிலே அவன் டாக்டராகிவிடுவான். டாக்டர் மாப்பிள்ளைக்கு எங்குதான் கிராக்கியில்லை! அந்தக் கிராக்கியின் பலனைச் சுரேஷ் அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும், ஏழ்மையின் துன்பமும் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தின் தன்மைகளும் அவனுக்கு நன்றாகத் தெரிந்துதான் இருந்தன.

ஸ்ரீதரும் சுரேஷ¤ம் எவ்வாறு சந்தித்தார்கள், எவ்வாறு ஒரே வீட்டில் ஒரே அறையில் குடியிருக்க ஆரம்பித்தார்கள் என்பது சுவாரஸ்யமான விஷயம். ஸ்ரீதரின் தந்தைக்குக் கொழும்பில் இருந்த பல வீடுகளில் ஒன்றுதான் அவன் இப்பொழுது வசித்துவந்த "கிஷ்கிந்தா" என்னும் வீடு. தனது மற்ற வீடுகளை எல்லாம் வாடகைக்கு விட்டிருந்த சிவநேசர், இந்த வீட்டை மட்டும் வாடகைக்கு விடவில்லை. இதற்குக் காரணம் அரசாங்க **அலுவலகங்களுடனும்** கொழும்பிலுள்ள வங்கிகள், தாம் பங்குதாரராயிருந்த கம்பெனிக என்பவற்றுடனும் அவருக்கு அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் காரணமாக அவர் கொழும்புக்கு வரும் நாட்களில் தங்குவதற்கு வசதியான இடம் ஒன்று வேண்டியிருந்ததுதான். ஸ்ரீதர் மேற்படிப்புக்காகக் கொழும்புக்கு வந்தபொழுது அவனையும் அங்கு குடியேற்றினார்.

"கிஷ்கிந்தா" விசாலமானா தோட்டத்தின் நடுவே அமைந்திருந்த சுமாரான பெரிய வீடு. கீழ் வீட்டில் இரண்டறைகளும் மேல் வீட்டில் மூன்றறைகளும் கொண்ட அவ்வீட்டில் ஆரம்பத்தில் ஸ்ரீதரும் சமையல்காரனும், தோட்டக்காரனும், டிரைவருமே இருந்தார்கள். இரவு வேளைகளில் வேலைக்காரர்கள் கீழே உறங்கிவிட ஸ்ரீதர் மட்டுமே மேல் மாடியில் உறங்குவது வழக்கம். தனியே படுக்க ஸ்ரீதருக்குப் பயம். அதனால் ஒரு நாள் அவன் தந்தையிடம் தன்னால் அவ்வீட்டில் தனியாகக் குடியிருக்க முடியாது என்று கூறிவிட்டான். அதைக் கேட்ட சிவநேசருக்கு ஒரு யோசனை தோன்றியது. பத்திரிகைகளில் தமது வீட்டில் ஒரு அறை காலியாக இருப்பதாகவும் மேல் படிப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு அது வாடகைக்கு விடப்படும் என்றும் அவர் விளம்பரம் செய்தார். அதன் பயனாக வந்து சேர்ந்த பலரில் ஸ்ரீதரால் பொறுக்கியெடுக்கப்பட்டவனே சுரேஷ். ஆரம்பத்தில் சுரேஷ் வெறுமனே அறையில் வாடகைக்கிருக்கும் "ஆரோ எவரோ" என்ற முறையில் தான் நடத்தப்பட்டான். ஆனால் நாளடைவில் இருவரும் இணை பிரியாத நண்பர்களாகி விட்டார்கள். சிவநேசருக்கும் சுரேஷை நன்கு பிடித்திருந்தது.

ஸ்ரீதரும் சுரேஷ¤ம் இரவு படுக்கைக்குப் போன பின்னர் ‘லைட்’டை அனைத்து விட்டு இருட்டிலே சிறிது நேரமாவது சம்பாஷித்துக் கொண்டிருப்பது வழக்கம். அந்நேரத்தில் தான் நண்பரிருவரும் தங்கள் சொந்தப் பிரச்சினைகள் பற்றியும், அன்று பகல் தங்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் பேசிக் கொள்வார்கள். அன்றிரவும் அப்படிப் பேசிக் கொண்டிருந்த போதுதான் ஸ்ரீதர் முன்னர் கூறிய கேள்வியைச் சுரேஷிடம் கேட்டான்.

வானத்தில் முழுமைத் தோற்றத்துடன் பவனி வந்துகொண்டிருந்த வெண்ணில ஜன்னலூடாக ஸ்ரீதரின் அறைக்குள் நிலவுப்பாலை ஊற்றிக்கொண்டிருந்தது. அவ்வெளிச்சத் ‘ தீ ’யில் நண்பர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் ஓரளவு பார்க்கக் கூடியதாயிருந்தது.

ஸ்ரீதரின் கேள்விக்குச் சுரேஷ் விவரமாகப் பதிலளித்தான். உண்மையில் ஒரு குட்டிப் பிரசங்கமே செய்துவிட்டான் அவன்.

"ஸ்ரீதர்! உன் அப்பா சாதாரண மனிதரல்லவே!" என்று ஆரம்பித்த அவனை ஸ்ரீதர் இடைமறித்து "ஏன், அவருக்கு மூன்று கால்களோ, கொம்போ முளைத்திருக்கிறதா?" என்று கேட்டான்.

சுரேஷ் அதற்கு "ஸ்ரீதர்! சந்தேகமில்லாமல் அவர் கொம்பு முளைத்த பேர்வழிதான். அதுவும் ஒன்றிரண்டு கொம்புகளல்ல, பல கொம்புகள் அவருக்கிருக்கின்றன!" என்றான்.

ஸ்ரீதர் "அப்படியானால் எங்க அப்பாவை நீ மாடென்று சொல்கிறாய். அப்படித்தானே! வரட்டும். நான் அவரிடம் இதைச் சொல்கிறேன்" என்று சிரித்தான். சுரேஷ்

"உனது அப்பா ஜாதியில் உயர்ந்தவர், அந்தஸ்தில் உயர்ந்தவர், பணம் படைத்தவர் படிப்பிலும் உயர்ந்தவர். உண்மையில் இலங்கை பூராவும் எல்லா வகையிலும் புகழ்பெற்ற பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்படிப்பட்டவரின் மகன் நீ. நான் இப்பொழுது சொன்ன பண்புகள் ஒவ்வொன்றும் உண்மையில் ஒவ்வொரு கொம்புக்குச் சமமானது. இவை போதாவென்பதுபோல் நீயும் பார்ப்பதற்கு வாட்டச்சாட்டமாக இராஜகுமாரன் போல் இருக்கிறாய். ஹோர்ட்டன் பிளெனில் பெரிய பங்களாவில் வசிக்கிறாய். டிரைவரோடு கூடிய ‘பிளிமத்’ கார் வேறு. அது மட்டுமல்ல. நீ கல்லூரிக்கு உடுத்திச் செல்லும் உடைகளை என்னைப் போன்றவர்கள் ஒரு கல்யாணத்துக்குக் கூட உடுத்திச் செல்வதில்லை. இந்த நிலையில் உன்னைப் பார்ப்பவர்கள் இயற்கையாகவே ஒரு தாழ்மை உணர்ச்சி தோன்றிவிடுகிறது. அதனால்தான் உன்னோடு தாராளமாகப் பேசவும் பழகவும் அஞ்சுகிறார்கள். இதில் நாம் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது!"

ஸ்ரீதர் பெருமூச்சு விட்டான்: "சுரேஷ்! இதனால் எனக்கு எவ்வளவு சிக்கலான பிரச்சினைகள் ஏற்படுகின்றனவென்று தெரியுமா? சில சமயம் ‘கண்டீனில்’ யாருடனாவது பேசிக்கொண்டிருக்கலாம் என்று போனால் யாருமே என்னுடன் பேசிக்கொண்டிருக்க விரும்புவதில்லை. கேட்ட கேள்விக்கு டக்கென்று ஏதோ பதில் சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள். என்னைப் பார்த்து அவர்களுக்குத் தாழ்மை உணர்ச்சி ஏற்படுகிறது என்று நீ கூறுகிறாய். அதை நான் நம்பவில்லை. எனக்குத்தான், அவர்கள் என்னுடன் பழகுவதற்கு இவ்வளவு கிராக்கி வைக்கிறார்களே என்பதை நினைத்ததும் கடுமையான தாழ்மை உணர்ச்சி ஏற்படுகிறது. "என்னில் என்ன குறைபாடு?" என்று எனது நெஞ்சத்தையே நான் குடைய ஆரம்பித்து விடுகிறேன்... உண்மையில் சுரேஷ்! இதனால் எனக்கேற்படும் தனிமை உணர்ச்சியை உனக்கு எவ்வாறு எடுத்துக் கூறுவது என்று எனக்கு விளங்கவில்லை. உண்மையின் நீயுமில்லாவிட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும். நீ ஒருவன் தான் அம்மாவுக்கு அடுத்தபடி என்னுடன் தாராளமாக பழகும் ஒரே ஒருவன்."

ஸ்ரீதரின் வார்த்தைகள் சுரேஷின் இதயத்தைத் தொட்டன. அவனுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயமேயாயினும் இவ்வளவு தூரம் அவன் தன் மீது மனமார அன்பு செலுத்துகிறான் என்பது அவனுக்கு முன்னர் தெரியாது. சொந்த அன்னையோடு தன்னை ஒப்பிடும் அளவுக்கு அவன் தன்னை நேசிக்கிறான் என்பதை யோசித்த போது அவனுக்குப் பெரும் அதிர்ச்சியே ஏற்பட்டு விட்டது. அந்த அதிர்ச்சியில் ஒரு கணம் அவன் மெளனமாக இருந்து விட்டுப் பின் எதையோ நினைத்துக்கொண்டவன் போய், "ஸ்ரீதர்! நீ தீடீரென இந்த விஷயத்தை இவ்வளவு விரிவாகப் பேச வேண்டிய காரணமென்ன! கல்லூரியில் இன்று பகல் நடைபெற்ற சம்பவம் எதுவும் அதற்குக் காரணமா?" என்று கேட்டான்.

ஸ்ரீதர் "அப்படி ஒன்றுமில்லை. ஆனால் ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். ஆண்களை விடப் பெண்கள்தான் என்னைக் கண்டு அதிகம் அஞ்சுகிறார்கள். வெகு அவசியமான நேரங்களில் கூட அவர்கள் மற்ற மாணவர்களிடம் பேசுவதுபோல என்னிடம் பேச முன் வருவதில்லை. அதற்குக் காரணமென்ன!" என்று தயக்கத்துடன் கேட்டான்.

இந்தக் கேள்விக்குச் சுரேஷ் சாதுரியமாகப் பதிலளித்தான். "உனக்கேற்பட்டிருக்கும் இப்பிரச்சினை மன்னாதி மன்னர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. மகாமன்னனான துஷ்யந்தன் வேட்டைக்குச் சென்றபோது முதன்முதலாகச் சகுந்தலையைக் காண்கிறான். அவனை ஒரு வண்டு துரத்துகிறது. துஷ்யந்தன் வண்டை விரட்டிச் சகுந்தலையைக் காப்பாற்றுகிறான். அப்பொழுது சகுந்தலையின் தோழி அநசூயை "நீங்கள் யார்?" என்று துஷ்யந்தனை வினவுகிறாள். அதற்கு அவன் அளித்த பதில் என்ன தெரியுமா? மன்னனால் தேவாலயங்களைக் கண்காணிக்கப்படுவதற்காக நியமிக்கப்பட்ட தர்மாதிகாரி தான் என்று பொய் கூறுகிறான் அவன். அவன் மட்டும் அவ்வாறு சொல்லாமல் உண்மையைச் சொல்லியிருந்தால் சாகுந்தலம் நாடகமே காளிதாசனால் எழுதப்பட்டிருக்க முடியாது. தன்னைக் காப்பாற்றியவன் துஷ்யந்த மன்னன் என்று சகுந்தலைக்குத் தெரிந்திருந்தால் அவள் அச்சத்தால் நடுங்கியிருப்பாள். மன்னர் மன்னன் காலில் விழுந்து வணங்கி  'மன்னவா! நீ நீடுழி வாழ்க!' என்று கூறிவிட்டுப் போயிருப்பாள். காதல் ஏற்பட்டிருக்காது" என்றான்.

அதற்கு ஸ்ரீதர் "சகுந்தலையின் கதையில் அப்படி ஒரு சம்பவமிருக்கிறதா? அது எனக்கு நினைவில்லை. ஆனால் இது போன்ற அனுபவம் ஒன்று எனக்கும் இவ்வாரம் ஏற்பட்டது. நானும் உன் துஷ்யந்தனைப் போல் ஒரு பெண்ணிடம் நான் யார் என்பதைப் பற்றி ஒரு பெரிய பொய் கூறிவிட்டேன். பார்க்கப் போனால் நான் செய்தது தவறில்லை போலல்லவா தெரிகிறது. *** துஷ்யந்தன் செய்ததைத் தானே நானும் செய்திருக்கிறேன்!" என்றான்.

சுரேஷ் வேடிக்கையாக "அட சக்கை! அப்படியா காரியம்! இப்பொழுது நான் ஒன்றைத் தெரிந்துகொண்டேன். நீ துஷ்யந்தன். ஆனால் துஷ்யந்தன் மனதைக் கவர்ந்த அந்தச் சகுந்தலை யாரோ? எந்த ஊரோ? என்ன பேரோ?" என்று கேட்டான்.

ஸ்ரீதர் "அந்தப் பெண் எனது வகுப்பு மாணவியல்ல. விஞ்ஞானப் பிரிவில் படிக்கிறாள். என்னைப் பற்றி அவளுக்கு முன்பின் தெரியாது. நான் ஒரு நாடகக் கவிஞன் என்பது மட்டுமே அவளுக்குத் தெரியும். பல்கலைக் கழக நாடக மன்றத்துக்கு அவளும் என்னோடு கூட்டுக் காரியதரிசியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறாள். இவ்வருடம் சொபாக்கிளிஸ் என்ற கிரேக்கப் புலவன் எழுதிய "எடிப்பன் ரெக்ஸ்" என்னும் நாடகத்தை நாங்கள் தமிழில் அரங்கேற்றவிருக்கிறோம். அது பற்றிய வேலைகளுக்காக என்னிடம் இரண்டு மூன்று தடவை பேச வந்த அவள் என்னுடன் சற்றுத் தாராளமாகவே பழக ஆரம்பித்து விட்டாள். அவள் இளைப்பாறிய ஒரு வாத்தியாரின் மகள். கொட்டாஞ்சேனையில் வசிக்கிறாள். அவள் என்னிடம் என்னுடைய குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள். நான் எப்படி சிவநேசரின் மகன் என்று கூறுவேன்! அவ்வாறு கூறினால் அவள் மிரண்டு விடுவாள் என்று நினைத்து என் தகப்பனார் பெயர் செல்லையா பிள்ளை என்றும் அவரும் அவளுடைய தந்தையைப் போல இளைப்பாறிய ஒரு வாத்தியாரே என்றும் கூறிவிட்டேன் என்றான். பின் திடீரென்று "சுரேஷ்! நான் பொய் சொல்வதில் தப்பில்லையே!" என்று நண்பனை வினவினான்.

சுரேஷ் "அதில் தப்பொன்றுமில்லை. அதுதான் துஷ்யந்தன் கூட அவ்வாறு பொய் சொல்லியிருக்கிறான் என்று முன்னமே கூறினேனே!" என்றான்.

ஸ்ரீதர் அதைக் கேட்டுவிட்டுச் சிறிது நேரம் ஜன்னல் வழியாக மேகமந்தைகளூடே சஞ்சரித்துக் கொண்டிருந்த சந்திரனைப் பார்த்துக் கொண்டு பேசாமலிருந்தான்.

சற்று நேரம் சென்றதும் சுரேஷ் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு, "ஸ்ரீதர்! நான் உன்னிலும் பார்க்க வயதிற் கூடியவன். ஆகவே உன்னுடைய சகுந்தலை விஷயமாக நான் உன்னை எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். காதல் என்பது கதைகளுக்குத்தான் சரி. வாழ்க்கைக்கு ஒத்து வராது. உன் தகப்பனார் அவளை ஒரு பொழுதும் தன் மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதை நீ மறந்துவிடாதே!" என்றான்.

ஸ்ரீதர் "சுரேஷ்! நீ தெரியாமல் பேசுகிறாய். நீ அப்பாவைப் புரிந்து கொள்ளவில்லை. அவர் முற்போக்கான கருத்துகள் கொண்டவர். பத்து வருடங்களின் முன்னர் அவர் தமிழில் எழுதி வெளியிட்ட 'நமது சமுதாயப் பிரச்சினைகள்' என்ற நூலை நான் உனக்குக் காட்டியிருக்கிறேனல்லவா! அதில் அவர் காதல் திருமணத்தை ஆதரித்து எழுதியிருக்கிறார். அப்படிப்பட்டவர் எப்படி நான் பத்மாவைத் திருமணம் செய்வதை எதிர்க்க முடியும்! நிச்சயம் அவர் எங்கள் திருமணத்தை ஆதரிப்பார்" என்று கூறினான்.

சுரேஷ் "அதை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது இரவு வெகு நேரமாகிவிட்டது. நாங்கள் நித்திரை கொள்ள வேண்டாமா? காதலைப் பற்றிப் பேசினால் யாருக்கும் ருசிதான். என்றாலும் நாளைக்கு வகுப்புக்கும் போக வேண்டுமல்லவா!" என்றான்.

ஸ்ரீதர் தனது கட்டிலுக்குப் பக்கத்திலுருந்த மின்சார விசையை அழுத்தினான். வெளிச்சம் மின்னிக்கொண்டு அறை முழுவதும் வியாபித்து, ஜன்னலூடாகப் பரவியிருந்த நிழலையும் விழுங்கியது. மேசையிலிருந்து மணிக்கூடு மணி பன்னிரண்டு என்பதைக் காட்டியது.

"ஓ! மணி பன்னிரண்டாகி விட்டது!" என்று கூறிக் கொண்டே ஸ்ரீதர் எழுந்து மேசையிலிருந்த வெந்நீர்ப் போத்தலிலிருந்த தேநீரை இரு கோப்பைகளில் ஊற்றி ஒரு கோப்பையைச் சுரேஷிடம் நீட்டினான். சுரேஷ் அதை ஒரே மடக்காகக் குடித்துவிட்டுக் கட்டிலில் படுத்துக்கொண்டு போர்வையில் தன் உடலை மட்டுமல்ல. முகத்தையும் மூடிக் கொண்டான்.

ஸ்ரீதர் ‘லைட்’டை அணைத்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றான். ஆனால் நித்திரை வரவில்லை. பத்மாவின் நினைவுமுகம் ஜன்னலூடாகத் தெரிந்த சந்திரனுடன் போட்டியிட்டுக் கொண்டு அவன் மனதை இன்ப நிலவால் நிறைத்தது. அன்று அவன் நித்திரை போன போது அதிகாலை நாலு மணியிருக்கும். அவனது கிராமத்திலென்றால் அப்பொழுது கோழி கூவியிருக்கும்!

[தொடரும்]


No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்