Sunday, April 13, 2025

கனடாவில் வெளியான முதலாவது தமிழ்ச் சஞ்சிகை 'நிழல்'!


கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவிலிருந்து வெளியான முதலாவது சஞ்சிகை பற்றிப் பலரும் பலவாறு எழுதி வருகின்றார்கள். இவ்விதமான தவறான தகவல்கள் காலப்போக்கில் உண்மையான தகவல்களாகக் கருதப்பட்டு வரலாறு தவறாக எழுதப்பட்டு விடும் அபாயமும் உண்டு.

நானறிந்தவரை கனடாவில் வெளியான சஞ்சிகைகளைக்  கையெழுத்துச் சஞ்சிகைகள், அச்சு வடிவில் வெளியான சஞ்சிகைகள், இரண்டையும் உள்ளடக்கி, வெட்டி ஒட்டல்களுடன் வெளியான சஞ்சிகைகள் எனப் பிரிக்கலாமென்று கருதுகின்றேன்.

தமிழீழ மக்கள்  விடுதலைக்கழகத்தின் கனடாக் கிளை மொன்ரியாலிலிருந்து வெளியிட்ட 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகை   15.09.1984 தொடக்கம் 15.06.1985 வரை பத்து இதழ்கள் வெளியாகியுள்ளன. ஓரிரு  இதழ்களில் பத்திரிகைச் செய்திகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தாலும், சஞ்சிகை பெரும்பாலும் கையெழுத்துச் சஞ்சிகையாகவே வெளிவந்தது.  எனது மண்ணின் குரல் நாவல், கவிதைகள் சில, கட்டுரைகள் சிலவும் இச்சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. ரவி அமிர்தன், கோமகன், செங்கோடன் எனப் பலரின் படைப்புகளும் இச்சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன.  அடிப்படையில் இது ஒரு போராட்ட அமைப்பின் சஞ்சிகை என்றாலும் தமிழ் இலக்கியத்துக்கும் நாவல், கவிதை, கட்டுரை & கேலிச்சித்திரமெனப் பங்களிப்பு செய்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.

Friday, April 11, 2025

கவிதை: முகநூல்! - வ.ந.கிரிதரன் -



முகநூல் எனக்குப் பலரின் ஆளுமையினைத்
தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.
புரட்சிகரமான கருத்துள்ளவர்கள் என்று
நான் நம்பிய பலரின் உண்மைச் சொரூபத்தினை
வெளிப்படுத்தியிருக்கின்றது.
சமூகத்தையே மாற்றிவிடப் போவதாகக்
கூக்குரல் இட்டவர்கள்
அவர்கள்தம் உண்மைச் சொரூபத்தை
முகநூல் வெளிப்படுத்தியபோதும்
நாணவில்லை. ஓடி ஒளியவில்லை.
இன்னும் அவ்வாறே கூக்குரல் இட்டுக்
கொண்டுதானிருக்கின்றார்கள்.
பலர் அற்ப ஆசைகளுக்குள்,
போலிப் பெருமைக்குள்,
மூழ்கிக் கிடப்பதையும் முகநூல்
முற்றாக வெளிப்படுத்தியிருக்கின்றது.
கோழைகள் அடையாளங்களை மறைத்து
வீரராக ஆட்டம் போடுகின்றார்கள்.
முகத்தைக் காட்டுவதற்கு அஞ்சும் கோழைகளை
முகநூல் வெளிப்படுத்தியிருக்கின்றது.
நண்பர் என்ற போர்வையில் உலா வந்த பலரை
நட்பின் ஆழத்தைப் புரிய வைத்திருக்கின்றது
முகநூல்.
உள்ளே விடத்தையும்
வெளியில் இனிக்கும் புன்னகையையும்
காட்டும் நல்ல பாம்புகளையும்
முகநூல் சுட்டிக் காட்டியிருக்கின்றது.

கவிதை: ஒரு நூலகத்தின் கனவும், எண்ணத்தோய்தலும்! - வ.ந.கிரிதரன் -

இந்த அற்புதமான நீலவண்ணக் கோள்
எந்தத்திக்கினை நோக்கினும்
மோதல்களினால் பற்றி எரிகின்றதைப் பார்க்கின்றேன்.
நீங்கள் வெளியில் ஒருவருக்கொருவர்
முட்டி மோதிக்கொண்டிருக்கின்றீர்கள்.
இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுகிறதைப்
பார்க்கின்றேன்.
குழந்தைகள், பெண்கள், முதியவர் எவருமே
உங்களுக்கு ஒரு பொருட்டல்ல
என்பதையும் உணர்ந்து கொள்ள வைக்கின்றது
வெளியில் நீங்கள் போடும் வெறியாட்டம்.
உங்களை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன்.
நீங்கள்தான் இப்பிரபஞ்சத்தின் தலைவர் என்பதுபோல்
உங்கள் கூத்திருக்கின்றதைப் பார்த்து நகைக்கின்றேன்.
உங்களுக்கு வெளியில் விரிந்து கிடக்கின்றது
பெரு வெளி.
விரி பெரு மெளனத்தில் புதைந்து கிடக்கும்
உங்களைப் பார்க்கையில்
உங்கள் தனிமையைக் கவனிக்கையில்
எனக்கு உங்கள் மேல் பரிதாபம்தான் வருகின்றது.
 
வெளியில் பேயாட்டம் ஆடும் நீங்கள்
எவ்விதம் இங்கே மெளனமாக,
எவ்வித மோதல்களுமற்று
அருகருகே அமர்ந்திருக்கின்றீர்கள்?
ஆச்சரியம்தான்.

தாமரைச்செல்வியின் முதல் நாவல் 'சுமைகள்'


எழுத்தாளர் தாமரைச்செல்வியின் முதல் நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளியான 'சுமைகள்'. தற்போது அந்நாவலும் நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

வேலை வெட்டி இல்லாமல், இளமைக் கனவுகள் பல நிறைவேறாத நிலையில் வாழும் செந்தில் என்னும் இளைஞன், தன்னை நம்பி வந்திருக்கும் தீபா என்னும் பெண்ணையும் தன்னுடன் அழைத்து வீட்டுக்கு வருகின்றான். அவ்விதம் வருபவன் அச்சுமையுடன் , வீட்டுச் சுமைகளையும் துணிவுடன் ஏற்றுக்கொள்கின்றான். வீட்டுச் சுமைகளைத் தீர்த்தவுடனேயே தீபாவுடனான வாழ்க்கை ஆரம்பமாகுமென்று உறுதி செய்துகொள்கின்றான்.

புலமும், நிலமும் பற்றி..


 

"எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்.
யானும் நீயும் எவ்வழி அறிதும்.
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."

(இக்காட்சியினைப் பிரதிபலிக்கும் ஓவியத்தை வரைந்தது AI)

எழுத்தாளர் அருண் செல்லப்பா தன் முகநூற் பதிவில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். "புலம் பெயர்தல் இதன் எதிர்ப் பதம் எதுவாக இருக்கும்.?"

இதற்கு நான் பதிலளித்திருந்தேன்: "புலம் திரும்புதல்."

புலம் மீளல் என்றும் கூறலாம்.

அதற்கு அவர் எதிர்வினையாற்றியிருந்தார் : "நான் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தேன்;; எனவே கனடாதான் எனக்குப் புலம். இதன் மறுவளம் என்ன என்பதே கேள்வி."]

இதற்கு நான் இவ்வாறு பதிலளித்திருந்தேன்: 'புலம் என்றால் அர்த்தம் நிலம். தன் நிலத்தை விட்டுப் பெயர்தலே புலம் பெயர்தல். சங்கப் பாடல்களில் புலம் என்பது நிலம் என்னும் அர்த்தத்திலேயே கையாளப்பட்டுள்ளது.'

அதனை ஏற்று அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்: "உண்மைதான். நில புலம் வைத்திருப்போர், நிலச் சுவாந்தார் என்று தமிழில் சொல்லாடல் வருகின்றது. எனவே எனக்குக் கனடா புலம் அல்ல. புரிகிறது;; நன்றி"

இவர் இவ்விதம் ஆரம்பத்தில் கேட்பதற்குக் காரணம் புலம் என்றால் அது நிலத்துக்கு எதிர் என்று கருதியதால்தான். பலர் அவ்வாறே கருதுவதை நான் அவதானித்திருக்கின்றேன். பலர் கட்டுரைகளில் கூட அவ்வாறே கருதிக் கையாண்டுள்ளதையும் அவதானித்திருக்கின்றேன்.

எழுத்தாளர் க.அருள் சுப்பிரமணியத்தின் 'அக்கரைகள் பச்சையில்லை'


எழுத்தாளர் க.அருள் சுப்பிரமணியம் அவரது 'அவர்களுக்கு வயது வந்து விட்டது' நாவல் மூலம் நன்கறியப்பட்டவர். மானுட அனுபவங்களைச் சுவையாக , அனுபவபூர்வமாக விபரிப்பதில் வல்லவர். உதாரணத்துக்கு ஒருவர் குடிக்கும் அனுபவத்தை விபரிக்க வேண்டுமானால், அவ்வனுபவத்தை அனுபவ பூர்வமாக, உயிர்த்துடிப்புடன் விபரிப்பார். அதை வாசிக்கையில் அவ்வனுபவம் நமக்கும் வந்து விடும்.


இந்நாவல் பல அக்காலகட்டத்தகவல்களையும் தருகின்றது. உதாரணத்துக்கு ஒன்று - திருகோணமலைத் துறைமுகத்திலுள்ள மாதவன் நாயரின் தேநீர்க் கடை பற்றி வருகின்றது. கதை கற்பனைக் கதையானாலும் அக்காலத்தில் கேரளத்து நாயர்களும் அங்கு தேநீர்க் கடை போன்ற வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதனால்தான் மாதவன் நாயர் என்னும் பாத்திரமும் நாவலில் வருகின்றது என்றே நான் கருதுகின்றேன். இது தவறென்றால் அறிந்தவர்கள் அறியத் தரவும்.

இளைஞர்களே! சிந்திக்கச் சில சிந்தனைகள்!


இங்குள்ள காணொளியை முழுமையாகப் பார்க்கவும். இந்த இளைஞர் கள்ள வழியில் கனடா செல்ல முற்பட்டு அழைந்த இன்னல்களை, இழந்த சொத்துகளைப் பற்றி இதில் விபரிக்கின்றார். இவ்வகையில் இது பயனுள்ள காணொளி. காணொளிக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=q4Y5Z-JdscU

ஆனால் முடிவில் இவர் கூறுகின்றார் வெளிநாடு  போவதானால்  சட்டபூர்வமான வழிகளில் செல்லுங்கள் என்று. அது சரியானது. ஆனால் இவ்வளவு இன்னல்களை அடைந்த பின்னும் இவருக்கு  வெளிநாடு செல்லும் ஆசை நீங்கவில்லை என்பதையும் அது புலப்படுத்துகிறது.

போர்ச்சூழல் நிலவிய காலத்தில் ஒருவரின் இருப்பே கேள்விக்குரியதாக மாறிய சூழலில் மக்கள் அகதிகளாக வெளியேறினார்கள். கிடைத்த வழிகளில் வெளியேறினார்கள். அச்சூழலின் விளைவு அது. 

Thursday, April 10, 2025

ஸ்டார் வெளியிட்ட Brand New Planet சிறுவர் பத்திரிகை!


என் மூத்த மகள் தமயந்தி எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த  சமய்ம் டொராண்டோவிலிருந்து வெளியாகும் டொராண்டோ ஸ்டார் பத்திரிகை Brand New Planet என்னுன் சிறுவர்களுக்கான பத்திரிகையை வாரந்தோறும் வெளியிட்டு வந்தது. அதில் அவர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அதற்கான ஊதியத்தையும் பத்திரிகை நிறுவனம் அனுப்பி வைத்துக்கொண்டிருந்தது, ஒரு தடவை அவரை வைத்துக் Cover Story  செய்ய வேண்டுமென்று ஸ்டார் பத்திரிகை விரும்பியது. அதற்காக ஒரு புகைப்படக்காரரையும் அனுப்பி வைத்தது.  

கனடாவில் வெளியான முதலாவது தமிழ்ச் சஞ்சிகை 'நிழல்'!

கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவ...

பிரபலமான பதிவுகள்