என்னைக் கவர்ந்த இன்னுமொரு முக்கியமான நாவல் எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை'. சி.ஏ.பாலனின் சிறப்பான மொழிபெயர்ப்பில் , இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதெமி வெளியிட்ட நாவல். எஸ்.கே.பொற்றேகாட்டிற்கு சாகித்திய, ஞானபீட விருதுகளைப் பெற்றுக்கொடுத்த நாவல்.
'ஒரு கிராமத்தின் கதை' நாயகனான சீதரனோ சமூக, பொருளியற் சூழல் காரணமாக நீங்கினான். வடக்கு இந்தியா தொடக்கம் ஐரோப்பா வரையில் அலைந்து திரிந்து முதியவனாக மீண்டும் தன் கிராமத்துக்கு வருகின்றான். அவன் மீண்டும் ஊர் திரும்பியபோது அவன் கண்ட அவனது கிராமமான 'அதிராணிப்பாடம்' முற்றிலும் மாறிப்போயிருந்தது. அவன் பால்யப் பருவத்து நினைவுகளைத் தாங்கி நின்ற பகுதிகள் எல்லாம் காணாமல் போயிருந்தன. அவ்வூரின் உயிர்த்துடிப்பாக விளங்கிய மனிதர்கள், அவன் வாழ்வின் பால்ய, பதின்மப் பருவத்தில் இடம் பெற்றிருந்த மனிதர்கள் பலரும் காணாமல் போயிருந்தார்கள். அவனது நினைவெல்லாம் நிறைந்திருந்த மண்ணைக் காண அவன் எத்துணை ஆர்வத்துடன் மீண்டும் திரும்பி வந்தான். வந்தபோதுதான் உணர்ந்தான் அவன் நினைவில் நிற்கும் அவனது அதிராணிப்பாடம் அங்கில்லை. அங்கிருந்தது உலகமயமாக்கலின் விளைவாக உருவான கால மாறுதல்களைத் தாங்கி நிற்கும் அவனுக்கு அந்நியமான அதிராணிப்பாடம்.
| எஸ்.கே.பொற்றேகாட் |
இந்த நாவல் புகலிடம் நாடி , சொந்த மண்ணை விட்டு நீங்கிய இலங்கைத்தமிழர்களின் உணர்வுகளுடன் ஒரு விதத்தில் நெருங்கிய தொடர்பினை உடையது. இலங்கைத் தமிழர்கள் நாட்டின் அரசியற் சூழலினால் நாட்டை விட்டு நீங்கினார்கள். அவர்கள் வாழ்ந்த மண்ணில் கழித்த நினைவுகளுடன் மண்ணைப்பிரிந்து சென்றார்கள். அந்நினைவுகளைத் தாங்கியபடியே புகலிடத்தில் தம் வாழ்க்கையை நடத்தினார்கள். பலர் நாவலின் நாயகன் சீதரன் போல் முப்பதாண்டுகள் கழிந்து ஊர் திரும்பியபோது அவர்கள் வாழ்ந்த கிராமங்கள், ஊர்கள் எல்லாம் மாறியிருந்தன. அவர்களுடன் பழகிய மனிதர்கள், பருவத்தில் கனவுகளை விதைத்த பாவையர்கள் எல்லாம் அற்ற ஊர்களையே அவர்கள் எதிர்கொண்டார்கள். பலரின் வாழ்ந்த வீடுகள் படையினரின் பாதுகாப்பு வலையங்களில் இன்னும் விடுபடாமல் இருந்தன. அம்மண்ணில் தலைமுறைகள் மாறியிருந்தன. சொந்த மண்ணில் அந்நியர்களாக உணர்ந்தார்கள். இந்த விடயத்தில் சீதரன் அவர்களில் பலருக்கும் உளரீதியாக மிகவும் நெருக்கமாகவிருக்கிறான்.
சீதரனின் அதிராணிப்பாடத்தில் காலம் ஏற்படுத்திய மாற்றத்தை வாசித்தபோது எனக்கு என் மனக்கண்ணில் என் பால்ய பருவம் கழிந்த வவுனியாவின் குருமண்காட்டுப் பிரதேசம் நினைவுக்கு வந்தது. இன்று அந்தக் குருமணகாடு முற்றாக மாறி விட்டது. அது வனமும், பல்வகை மிருகங்களும் நிறைந்த கிராமம் அல்ல. பரபரப்பான நகரம். சீதரனுக்கு அதிராணிப்பாடம் போல் எனக்கும் என் குருமண்காடு நினைவுகளில் வாழும் கிராமம். நாவல் எனக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது இதனால்தான்.
நாவலை மிகவும் சிறப்பாகக் கட்டமைத்திருக்கின்றார் பொற்றேகாட். நாவலின் நான்கு பாகங்களும் தொடங்குவதற்கு முன்வரும் முதற்பகுதி நாவலின் முழு உள்ளடக்கத்தையும் தாங்கி நிற்கின்றது. அம்முதற்பகுதி வாசிப்பவர்கள் எவர் உள்ளங்களையும் உலுப்பாமல் போகாது. நாவலின் முதலாவது பந்தி பின்வருமாறு தொடங்குகின்றது:
"சீதரன் பாதையோரத்திலிருக்கும் அந்தப் பகுதியை விழித்துப் பார்த்தான். வெண்ணிற வர்ணம் பூசப் பெற்ற மிகப்பெரியதொரு பெட்ரோல் டாங்க் வானளாவ உயர்ந்து நிற்கிறது. 'CAPACITY 10000 GALLONS' என்று அதன் விலா பகுதியில் கறுத்த பெரிய எழுத்துகளில் வரைந்து வைத்திருக்கின்றனர்.'
இந்த வசனங்கள் நாவலின் முழு நோக்கத்தையும் மிகவும் எளிதாகத் தெரிவித்து விடுகின்றன. அடுத்து வரும் வரிகள் வாசிப்பவர் நெஞ்சில் ஓர் அதிர்வை ஏற்படுத்துவன.
"அம்முக்குட்டியின் ஓலைக்குடிசை அமைந்திருந்த பகுதி அது. தனது இளைமைப்பருவத்தின் துவகத்தில் முதன் முதலாய்த் தோன்றிய காதலுக்குப் பாத்திரமானவள்தான் அம்முக்குட்டி."
அவன் வாழ்வில் பல பெண்கள் வந்து போயிருக்கின்றார்கள்.ஆனால் அவனுடன் தொடர்ந்து நிலைத்து நிற்பவள் அம்முக்குட்டி. நாவல் மேலும் தொடர்கிறது.
"முக்கோண வடிவில் அமைந்திருந்த அந்த மனையின் வேலியருகே பெரியதொரு பாதாம் மரமும் முள்மரமும் நின்றிருந்தது மிகத்தெளிவாக நினைவிற்கு வருகிறது. அவை வெட்டியகற்றப்பட்டுள்ளன. வேலியிருந்த இடத்தில் வெள்ளை பூசப்பெற்ற பெரியதொரு கற்சுவர்தான் இப்போது காணப்படுகிறது. நீண்ட கூரிய இலைகளும், சின்னச் சின்ன சிவப்புப் பூக்களுமுடைய புதிய ரகத்தைச் சேர்ந்த ஒரு செடி மதிலோரமாய் நட்டு வளர்க்கப் பெற்றிருக்கிறது. அந்தச் செடியின் பூ, அம்முக்குட்டியின் மூக்குத்தியிலுள்ள சிவப்புக் கல்லினை நினைவு படுத்துகிறது. "
மானுடர் வாழ்வில் முதற்காதல் எவ்விதம் நினைவுகளில் பதிந்து கிடக்கின்றது என்பதை எவ்வளவு அற்புதமாக பொற்றேகாட் வெளிப்படுத்துகின்றார். காதலுக்குரியவளின் மூக்குத்தியிலுள்ள சிவப்புக் கல் கூட நினைவில் நிற்கிறது. அவள் வீட்டு வேலியோர மரங்களின் பெயர்கள் கூட நினைவில் நிற்கின்றன.
"முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர்தான் சீதரன் அந்தக் கிராமத்திடமிருந்து விடைபெற்றுச் சென்றது. அந்த முப்பத்தைந்து வருடங்களில் எத்தனையோ மாறுதல்கள்! மாறுதல்களின் ஒரு மகாயுத்தமே அங்கு நடைபெற்றிருக்கிறது."
அவனுக்குக் கவிதை எழுத உற்சாகமளித்தவள் அம்முக்குட்டி. அதைப் பொற்றேகாட் பின்வருமாறு விபரிப்பார்: "அவள் உயிர் வாழ்ந்தபோது அல்ல - உயிர் நீத்த பின்னர்"
அப்பொழுது அவனுக்கு அன்று அம்முக்குட்டியின் தம்பி அவளது நோட்டுப்புத்தகத்தைக் கொண்டு வந்து தந்த சாயங்காலப்பொழுது நினைவுக்கு வருகின்றது. அவள் காச நோயால் எதிர்பாராத விதமாக இறந்து விடுகின்றாள். தான் இறந்தால் தன் நோட்டுப்புத்தகத்தை சீதரனிடம் கொடுக்கும்படி தன் தம்பியிடம் கூறியிருக்கின்றாள் அம்முக்குட்டி. அதில் அம்முக்குட்டியின் காதல் ஏக்கக்கவிதைகள் நிறைந்திருந்தன.
உண்மையில் சீதரன் அம்முக்குட்டியிடம் ஒரு நாள் கூட அவள் மீதான தன் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தியதில்லை. அவனை வெட்கமும், தயக்கமும் ஆட்கொண்டிருந்தன. அவளை அவன் ஒரு மழைநாளில் சந்திக்கின்றான். அவளது பழைய குடையைக் காற்று தூக்கி எறிந்ததில் அதன் கம்பிகள் உடைந்து விட்டன. அவளுக்குத் தன் புதுக்குடையைக் கொடுத்து உதவுகின்றான் சீதரன். அப்பொழுது அவளுடன் ஓரிரு வார்த்தைகள் கதைத்திருக்கின்றான். அவளது நினைவால் அவளது வீட்டுப் பக்கமெல்லாம் அலைந்திருக்கின்றான். ஆனால் அவளுடன் பேசும் சந்தர்ப்பம் கிட்டியதில்லை:
"பல மாதஙகளுக்குப் பின் அவள் வீட்டோரமாய் சில சந்தர்ப்பங்களில் நடந்து போயிருக்கிறான். அவர்களிருவரும் பாதையில் கூடச் சந்தித்திருக்கின்றனர். ஆனால், ஏனோ, பின்னர் அவளிடம் ஏதேனும் பேசுவதற்கு தைரியமே ஏற்படவில்லை - வெட்கம் - ஐயம் - யாராவது அறிந்து விட்டால்?.. இவ்வாறாக விலகப்போவதை அ றியாமலேயே அவன் விலகிப் போய் விட்டான் என்றே சொல்ல வேண்டும். பின்னர் மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டன. அப்போதுதான் அவளுடைய தம்பி , அவள் கவிதைப் புத்தகத்தை அவனிடம் ஒப்படைத்தான்.
அவள் ஏன் இந்த உலகத்தில் பிறந்தாள்? பளு மிக்க புத்தகச் சுமையேந்திச் சிறிது காலம் டிரெயினிங் பள்ளிக்குச் செல்லவும், யாருக்கும் தெரியாமல் சோக கீதங்கள் படைத்துத் தன்னை அழவைக்கவும் மட்டும்தானா? மேலுகத்திலிருக்கும் அவளுக்காக எத்தனையோ காதல் கீதங்களை எழுதி , அவற்றை அக்கினியிலே ஹோமமாய் அர்ப்பணம் செய்திருக்கின்றான் சீதரன். அழியாக் காதல் என்னவென்று சீதரனுக்கு அனுபவமாகியிருக்கிறது. மேலுலகத்திற்கு பறந்து சென்ற அந்தப் பூங்குயில் உயிர் வாழ்ந்திருந்த அந்த இடத்தில்தான் பத்தாயிரம் கேலன் உட்கொள்ளுகிற எண்ணெய் சேமிப்புக் கலன் உயர்ந்து நிற்கிறது."
இவ்விதம் நாவலின் முன்னோட்டம் ஆரம்பமாகின்றது. தன் முதற் காதலுக்குரியவள் வாழ்ந்த இடத்தில் ஏற்பட்ட மாறுதல் தந்த உணர்வுகளுடன் தான் தன் பால்ய,பதினம் & இளமைப்பருவங்களைக் கழித்த மண்ணை, தன்னுடன் வாழ்ந்த பல்வகை மானுடர்களை நினைவு கூர்கின்றான்.அதுவே 900 பக்கங்கள் உள்ள பெரு நாவலாக விரியும் 'ஒரு கிராமத்தின் கதை'. மண் வாசனையுடன், உயிர்த்துடிப்புடன் மிளிரும் நாவல்.
கல்விப்பொதுத் தராதரப் பரிட்சையில் தூய கணிதம் , பிரயோக கணிதம் போன்ற பாடங்களில் வினாக்களில் முதலில் தேற்றமிருக்கும். அதன் பின் அத்தேற்றத்தைப் பாவித்து செய்தால், இலகுவாகச் செய்யக்கூடிய வினா இருக்கும். அந்தத்தேற்றம் போன்றதுதான் ஒரு கிராமத்தின் கதை நாவலில் வரும் அம்முக்குட்டி பற்றிய முதற் பகுதி. அது நாவல் முழுவதையும் மிகவும் இலகுவாக அணுக வழியை ஏற்படுத்திக்கொடுக்கிறது. அவன் வாழ்வில் இழந்த அம்முக்குட்டிதான் அவன் வாழ்ந்த அதிராணிப்பாடமும். அம்முக்குட்டி வசித்த வீட்டை 10000 கலன் எண்ணெய்த்தாங்கி மூடி விட்டது. அதுபோல் உலகமயமாக்கலின் விளைவுகள் அதிராணிப்பாடத்தையும் மூடி மறைத்து விட்டன. அம்முக்குட்டி அவன் முதற்காதலி மட்டுமல்ல முழுநாவலையும் பிரதிபலிக்கும் குறியீடும்கூடத்தான்.
இந்நாவல் கதாசிரியர் பொற்றேகாட்டின் சுயசரிதைக் கூறுகளைக் கொண்டது. சீதரனுக்கும் அவருக்குமிடையில் இருக்கும் ஒற்றுமை இவ்விதம் சந்தேகிக்க வைக்கின்றது.
மொழிபெயர்ப்பாளர் சி.ஏ.பாலன் சிறப்பாக நாவலைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கின்றார். தகழி சிவசங்கரன் பிள்ளையின் கயறு நாவலையும் தமிழுக்குக் கொண்டு வந்தவரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் எனக்கு முதலில் அறிமுகமானது ,ராணிமுத்துப் பிரசுரமாக வெளியான இவரது 'தூக்கு மர நிழலில்' நூல் மூலம்தான். மரண தண்டனை பெற்ற அரசியல் கைதியாக இருந்து மீண்டவர் சி.ஏ.பாலன். அது பற்றிய நினைவுக்குறிப்பே 'தூக்கு மர நிழலில்'.
girinav@gmail.com

No comments:
Post a Comment