Sunday, September 6, 2026

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'எழுத்தாளர் அரங்கம்' மெய்நிகர் வழி நிகழ்ச்சியில் எழுத்தாளர் தமிழ்நதி! - வ.ந.கி -


எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) 

எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) பங்கு பற்றிய  , கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நடந்த 'எழுத்தாளர் அரங்கம்' மெய்நிகர் வழி நிகழ்ச்சி!

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் இம்மாத எழுத்தாளர் அரங்கம் நிகழ்ச்சியில்  எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) பங்குபற்றினார்.  எழுத்தாளர் அகணி சுரேஷ் நெறிப்படுத்தினார்.  நிகழ்ச்சி முழுவதையும் உள்ளடக்கிய காணொளியை அகணி சுரேஷ் தன் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.  நான் சந்தர்ப்ப, சூழ்நிலை காரணமாக மேற்படி மெய்நிகர் வழி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபற்ற முடியவில்லை. அதை நிவர்த்தி செய்தது மேற்படி காணொளி.

அண்மையில் நான் பார்த்த சிறநத , இலக்கியம் சார்ந்த காணொளிகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிடுவேன். இதில் தமிழ்நதி தன் எழுத்துலக அனுபவங்களை, தன் குடும்ப வாழ்க்கை அனுபவங்களை எவ்வித பாசாங்குத்தனமுமற்று , வெளிப்படையாகப் புறவுலகுக்குத்  திறந்து காட்டியிருக்கின்றார். தமிழ்நதி என்னும் ஆளுமையைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு உதவும் முக்கிய சான்றாக இக்காணொளியைக் கருதலாம். தமிழ்மொழியின் படைப்புகளை ஆய்வு செய்யும் திறனாய்வாளர்கள், பட்டப்படிப்பு மாணவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய காணொளி.

காணொளி  எழுத்தாளர் தமிழ்நதியின் நான்கு  முக்கிய காலகட்டங்களைப் பற்றிப் பேசுகின்றது. இலங்கையில் வசித்த காலப் பால்யம் பதின்மப் பருவக் காலகட்டம், கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பின் 2004 வரையிலான அவரது இலக்கியச் செயற்பாடுகளைப் பற்றிய காலகட்டம் , 2004 - 2006 வரையிலான மீண்டும் இலங்கை திரும்பிய காலகட்டம், 2006 ஆண்டிலிருந்து இன்று வரையிலான காலகட்டம் என அவற்றைப் பிரித்துப் பார்க்கலாம்.  

இவற்றில் 1992 - 2004 வரையிலான காலகட்டம்  கலைவாணி ராஜகுமாரனாகக் கனடாவில் இலக்கியச் செயற்பாடுகளில் மூழ்கியிருந்த காலகட்டம். ஆரம்பத்தில் இளையபாரதி அவர்கள் நடத்தும் 24 மணி நேர் வானொலியில்  வானொலி நாடகங்கள் எழுதுவதன் மூலம் அவரது எழுத்துலக அனுபவம் தொடங்கியதாகத் தமிழ்நதி குறிப்பிடுகின்றார்.  தொடர்ந்து கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவராகக் கவிஞர் வி.கந்தவனம் இருந்தபோது தமிழ்நதி செயலாளராகச் செயற்படுகின்றார். கனடாக் கலைப்பண்பாடு அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார். கனடாவில் அக்காலகட்டத்தில் வெளியான பத்திரிகைகள் பலவற்றில் கதைகள்,கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். பத்திரிகைகளில் நம்நாடு பத்திரிகை முக்கியமானது என்கின்றார். அப்போது வெளிவந்த ரோஜா சஞ்சிகையைத்  தானும் சேர்ந்து வெளியிட்டதாகக் குறிப்பிடுகின்றார்.  மேலும் அமரர்  வர்ண ராமேஸ்வரன்  குரலில் நன்கு அறிமுகமான 'மறைந்து போகுமோ மண்ணின் வாசனை' அக்காலத்தில் இவர் எழுதிய பாடல்களில் மிகுந்த வரவேற்பைப்பெற்றது என்பதை அறிந்துகொள்கின்றோம்.

2004 - 2006 காலகட்டத்தில் அவரது அக்கா ஒருவர் மறைந்து விட , அவரது மூன்று பதின்மப்பருவக் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக இலங்கை திரும்புகின்றார். 2006 ஆம் ஆண்டில் சென்னையில் தனிமையில் மூழ்கியிருந்த சமயத்தில் , கவிஞர் குட்டி ரேவதியைச் சந்திப்பு தமிழ்நதியின் வாழ்க்கையைப் புதிய பாதைக்குத் திருப்பி விடுகின்றது.  அவரது  கவிதைகளால் கவரப்பட்ட குட்டி ரேவதியின் முயற்சியால் பனிக்குடம் பதிப்பகத்தால் 'சூரியன் தனித்தலையும் பகல்' என்னும் கவிதைத்தொகுப்பு வெளியாகிப் பலரதும் கவனிப்பைப் பெறுகின்றது.  இத்தொகுப்பைத் தனது கையெழுத்துடன் பதிவுகள் இணைய இதழுக்கும் அனுப்பியிருந்தார். இன்னும் அத்தொகுப்பு என்னிடமுள்ளது. தமிழகத்தில் முக்கிய இலக்கிய ஆளுமைகளுடனான தொடர்புகள் ,  வெகுசன ஊடகங்களில்  அக்காலகட்டத்தில் எழுதிய  எழுத்துகள்  தமிழ்நதி என்னும் எழுத்தாளரை முக்கிய நட்சத்திர எழுத்தாளராக அடையாளம் காட்டின.

தனது உரையில் தமிழ்நதி இலங்கையில் படையினரின் (இலங்கை & இந்திய) அடக்குமுறைகள் அவருக்கு , தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புகளை விபரித்திருக்கின்றார்.  ஒரு சமயம் தமிழ்நதி பயணித்த பஸ்ஸுக்கு  முன்னால் சென்ற பஸ்ஸில்   பயணித்தவர்கள்  காடையரால் வெட்டிக்கொல்லப்பட்ட சமயம், இவர் பயணித்த பஸ்ஸின் சாரதி விரைவாக பஸ்ஸைத்திருப்பி அனைவரையும் காப்பாற்றியதாகவும் தனதுரையில் பதிவு செய்கின்றார். 

மேலும்  வாசிப்பு , எழுத்து மீதான , குறிப்பாக வாசிப்பு மீதான ஈடுபாட்டை விரிவாக விபரிக்கின்றார்.  வாசிப்பு எவ்வளவு முக்கியம் தனக்கு என்பதை எடுத்துக்காட்ட அவர் குறிப்பிட்ட , தன்னைத் தற்கொலையிலிருந்து காப்பாற்றியது வாசிப்பே என்னும் கூற்று பலரையும் அதிர வைத்திருக்கும். மேலும்  அவர் எழுதிய நூல்கள்  பற்றிய அறிமுகக் குறிப்புகளை விபரிக்கின்றார். தனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் உமாமகேசுவரி எனத் தெரிவிக்கின்றார். யாழ் பொதுசன நூலகம் எரியுண்டது பற்றி எடுத்துரைத்தபோது மீண்டும் அதுபோன்றதொரு நிலை ஏற்படாதிருக்கும் வகையில்  டிஜிட்டல் நூலகமான நூலகம் செயற்படுகின்றது   என்று எண்ணிம நூலகத்தின் பங்களிப்பை விதந்தோடுகின்றார்.

 எழுத்தால் பெரிதாக வருமானம் ஈட்ட முடியாது. இந்நிலையில் ஏன் எழுததாளர்கள்  ஏன் எழுதுகின்றார்கள்?  என்று கேள்வியைக் கேட்டு விட்டு எல்லாம்  ஆத்ம திருப்திக்காகத்தான் என்கின்றார். புதிய நாவலான 'அம்மன் மரம்'  நாவலுக்காக டிஸ்கவரி சானல் பதிப்பகம் அவருக்குக் கணிசமான பணத்தொகையினை வழங்கியதாகவும்  மேற்படி நிகழ்ச்சியில் குறிப்பிடுகின்றார். அத்துடன் தன் நூல்கள் எவற்றையும் தான் பணம் கொடுத்து வெளியிடவில்லை என்கின்றார். 

தமிழ்நதி எழுத்தாளர் பிரபஞ்சன் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். பிரபஞ்சன் மிகச்சிறந்த மனிதர் என்று மீண்டும இந்நிகழ்ச்சியில் குறிப்பிடுகின்றார். தான் அப்போதும், இப்போதும் தேசியவாதிதான் . அதில் மாற்றமில்லை. தனது தேசியப்பங்களிப்பு பற்றித் தான் பெருமைப்படுவதாகவும் குறிப்பிடுகின்றார். எழுத்தைப் பொறுத்தவரையில்  2006 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ்நதியாக அறியப்பட்ட காலகட்டம் முக்கியமானது  என்னும் சாரப்படத் தன் கருத்தினை  முன்வைக்கின்றார். அத்துடன் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இனப்படுகொலைகளே என்றும் தன் கருத்தை எடுத்துரைக்கின்றார்.

இன்னுமொரு முக்கிய விடயத்தையும் தமிழ்நதியின் உரை அறியத்தந்தது. அது - அவர் திருமலையில் பிறந்திருந்தாலும் அவரது குடும்பத்தினரின் பூர்விகம் மாதகல்தான். யாழ்ப்பாண வைபவமாலை எழுதிய மாதகல் மயில்வாகனப் புலவரின் ஊர் தன் பூர்விகம் என்பதில் பெருமை என்றும் அவர் கூறினார்.

தமிழ்நதியின் உரையினைத் தொடர்ந்து இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் பலர் தமிழ்நதியின் படைப்புகளைப் பற்றிய தம் கருத்துகளை முன் வைத்தார்கள். 'எழுத்தாளர் அரங்கம்' என்னும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் இம்முயற்சி பாராட்டுதற்குரியது. எழுத்தாளர்களின் எழுத்துலக அனுபவங்களை வெளிப்படுத்தும் நல்லதொரு நிகழ்ச்சி 'எழுத்தாளர் அரங்கம்' நிகழ்ச்சி.

காணொளியைப் பார்க்க - https://www.youtube.com/watch?v=HuSUZ8KivUY

[ * டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி ]

No comments:

மூலதனத்தின் மூலக்கூறுகள்: மார்க்சிய தத்துவமும் அதன் வரலாற்றுப் பயணமும்! - நுண்ணறிவு எந்திரன் -

[ கார்ல் மார்க்சின் மூலதனம் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை பற்றிய சுருக்கமான புரிதலை , இலகுவாக , எளிமையாக நாம் அறிவது அவசியம் . அதற்காக இது ப...